Site icon Her Stories

கலி தீர்த்தல்

மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்.

பிரசவ காலம் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் திவ்யாவுக்கு மூச்சு முட்டும் போதெல்லாம் ஒரு போன் கால் ஜன்னலைத் திறந்துவிட்டுக்கொள்வாள்.

மெதுவாக நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தாள். அத்தை வைத்து விட்டுச் சென்றிருந்த டீ ஆறி இருந்தது. மெதுவாக அதைக் குடிக்கத் தொடங்கினாள். மூன்று வயது மகள் ஜியாவைக் கணவன் ஜெய் வெளியில் அழைத்துச் சென்றிருந்தான். இரவு முழுவதும் தூக்கமில்லை. கொஞ்சம் உறங்கட்டும் என்று எல்லாரும் மெனக்கெடும் நேரத்திலா உறக்கம் சொல்லிக் கொண்டு வருகிறது?

கைக்குழந்தை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். துவைத்துக் காய்ந்திருந்த நேப்பித் துணிகளைக் குவியலாக அள்ளிவந்து படுக்கையில் போட்டு மடிக்கத் தொடங்கினாள். குழந்தை இருக்கும் வீட்டின் காலை நேரப் பரபரப்பு ஓய்ந்து அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்ட முற்பகல் நேரம். மாமியார் போனில் யாரிடமோ பேசிக் கொண்டே சமையலறையில் மும்முரமாக இருந்தார். அவரும் மாமனாரும் இரண்டொரு நாள்களில் ஊருக்குப் போய் விடுவார்கள் என்பது அச்சத்தைத் தருகிறதா, நிம்மதியைத் தருகிறதா எனும் கேள்விக்கு அவள் விடை தேட விரும்பவில்லை. எப்படியோ எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் போல மனதை விடுவித்திருந்தது மதுவுடனான உரையாடல்.

அதில் முக்கியமானது,

“மூன்று தையல்தானா? வாவ் நீ செம்ம லக்கி.”

“ஏன் உனக்கு?”

“ஐயோ ஏன் கேட்குற‌, எனக்கு 13. ஹாரிபிள். அதுக்கு சிசேரியனே பண்ணி இருக்கலாம்.”

“பதிமூணா? மூணுக்கே உயிர் போகுது மது. தூங்கக்கூட முடியல.”

“கவலைப்படாதே. மூணெல்லாம் ஜுஜுபி சீக்கிரம் சரியாயிடும். ரொம்ப நடக்காதே.”

சுகப்பிரசவம் என்று சொல்வதில் சுகம் எங்கே என்று யோசித்த போது அந்தத் தருணம் நினைவுக்கு வந்தது. எபிசியோடோமி என்றால் என்ன தெரியுமா? குழந்தை பிறக்கும் தருணம், குழந்தையின் தலை வெளியே வரும் வேகத்தில் பிறப்புறுப்பு கண் மண் தெரியாமல் கிழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் தாமே சின்னதாகக் கிழித்து விடுவது. பின்பு குழந்தை பிறந்ததும் அதைத் தைத்தும்விடுவார்கள்.

முதல் குழந்தை பிறந்தபோதே இது திவ்யாவுக்குத் தெரிந்திருந்தது. மூன்றாண்டுகள் முடிவதற்குள் இதோ அடுத்த குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக லேபர் ரூமில் படுத்திருக்கிறாள்.

வந்து படுத்த பத்தே நிமிடங்களில் குழந்தை பிறந்துவிட்டது.

“பையனா, பொண்ணா?”

அமைதி.

“கேட்குறென்ல பையனா, பொண்ணா?

“பொண்ணு.”

திவ்யா நம்பவில்லை. இரண்டே முக்கால் வயதில் மூத்த மகள் ஜியா இருக்கிறாள். அடுத்தது ஜீவன்தான் என்று ஏனோ உறுதியாக நம்பினார்கள். அலுவலகத்துக்குத் தினமும் செல்லும் வேனில் இருந்த மாமா, மாமிகள் எல்லாம் ’குட்டி கிருஷ்ணன்’ பிறக்க வாழ்த்துவார்கள்.

கூட வேலை பார்த்த ராஜிக்கு இவள் மீது என்ன கடுப்போ, “மூஞ்சி அவலட்சணமா மாறிட்டு வருது. கண்டிப்பா பையன்தான். அழகா இருந்தாதான் பொண்ணு.” 

“வயிறு ஃபுட்பால் மாதிரி உருண்டு இருக்கா. இப்டி இருந்தா பையன்னுதான் சொல்வாங்க. பொண்ணுன்னா இவ்ளோ பெருசா தெரியாது.”

விஞ்ஞானமும் ஆரூடமும் கரைத்துக் குடித்தவர்கள் எங்கெங்கிருந்தோ வரிசைகட்டி வந்தார்கள்.

பக்கத்து வீட்டுப் பேராசிரியர்கூட‌, உலக அரசியல் முதல் உள்ளூர் சமூகவியல் வரை எல்லாம் பேசுவார். அவரும்கூட,                    “ஒரு பையன், ஒரு பொண்ணு இருந்தாதான் பெர்ஃபெக்ட் ஃபேமிலி. டோன்ட் வொர்ரி இந்தத் தடவை நிச்சயம் பையன்தான்” என்றார்.

எது எப்படியோ, ஒரு மகள் இருப்பதால் அடுத்து மகன் இருந்தால் நன்றாக இருக்கும் எனும் இயல்பான ஆசை, அப்படித்தான் இருந்தாக வேண்டும் எனும் வேட்கையாக மாறியது நிச்சயம் இயல்பான நிகழ்வில்லை.

*

மறுபிறப்பு என்று சொல்லக்கூடிய அளவில் தொடை நடுங்கி குருதியனைத்தும் வியர்வையாகப் பெருகி ஓர் உயிரை உலகுக்குக்கொண்டு வரும் தருணத்தில் பெண்களின் மனதில் இனம்புரியாத துணிச்சலும் நாவில் வன்மையும்கூடும்.  முதல் குழந்தை பிறந்தபோது வலி இன்னும் நீண்ட நேரத்துக்கு இருந்தது. ஒருவழியாகக் குழந்தையைப் பெற்ற பிறகு டாக்டரம்மா அவள் அப்பா பெயரைச் சொல்லி தனக்கு அவரைத் தெரியுமே ஏன் சொல்லவில்லை என்றார்.

“சொல்லி இருந்தா வலியே தெரியாம பொறக்க வெச்சிருப்பீங்களா? பேசாம போங்க டாக்டர்” என்று விட்டு மயங்கிவிட்டாளாம். சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.

இப்போதும் அதேபோல, “எவ்ளோ நேரம் டாக்டர். எம்பிராய்டரியா போடுறீங்க. போதும் போங்க.” எபிசியோடமி  செய்து கொண்டிருந்த டாக்டரிடம் எரிந்து விழுந்தாள். உடல் துவண்டு ஈரத்துணியாகக் கிடந்தது. டாக்டரும் இவளுக்குச் சரிக்குச் சரியாக, “ம்… எனக்கு எம்ப்ராய்டரி போட வேற எடம் கிடைக்கல. இங்க போட ஓடோடி வந்தேன்” என்று திருப்பிக் கொடுத்தார்.

குழந்தையைத் துணியில் பொதிந்து வைத்த பின் இரண்டு செவிலிமார் வந்தனர். அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடைகளைக் களைந்து பக்கெட் பக்கெட்டாக வெந்நீரை அடித்து அடித்து உடலின்மீது ஊற்றினார்கள். முழுநிர்வாணத்தைப் போர்த்தி ஒருக்களித்துப் படுத்திருந்தாள் திவ்யா. வெட்கம் நாணம் போன்ற உணர்வுகளுக்கெல்லாம் அப்போது ஏது இடம்? உடலின் மீது வீசப்பட்ட சுடுநீர் குழந்தையை வெளியே தள்ளிய உடலுக்கு அவ்வளவு இதமாக‌ இருந்தது. சுத்தமானதொரு துணியைக் கொண்டு வந்து போர்த்தினார்கள். வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்டு தரும் வரையில் அப்படியே கிறங்கிக் கண்ணுறங்கி விட்டாள்.

*

“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்டி. பத்து நிமிஷம் பார்த்துட்டுப் போயிடுறோம்னு சொல்றாங்க.” கெஞ்சலுடன் சொல்லிக் கொண்டிருந்தான் திவ்யாவின் கணவன் ஜெய்.

வீட்டுக்குத் திரும்பி ஒரு வாரம்கூட ஆகவில்லை. இன்னும் நிற்கும் போதெல்லாம் பிறப்புறுப்பைக் கொக்கி போட்டு இழுப்பது போல் வலி எடுத்தது. நான்கு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. பெரும்பாலும் படுத்தோ அமர்ந்தோ தானிருந்தாள். மாமியார் உதவ வந்திருந்தாலும், அவர்களை எல்லாமே செய்யவிட்டுப் படுத்துக் கிடக்க முடியவில்லை. அது வரை அம்மாவின் சிறகிலேயே அண்டிக் கொண்டிருந்த‌ குட்டிப் பறவை ஜியா சட்டென்று பறக்க முடியாமல் பார்ப்பவர்களை எல்லாம் கொத்தத் தொடங்கி இருந்தாள். குழந்தை மனம் சுணங்கிவிடக் கூடாதே என்று அவளையும் அருகில் படுக்க வைத்து அணைத்துக் கொண்டுதான் கைக்குழந்தைக்குப் பாலூட்ட முடிந்தது.

இதில் குழந்தையைப் பார்க்க வருகிறோம் என்று யாராவது சொன்னாலே கடுப்பாக இருந்தது.

புதிதாகப் பிறந்த குழந்தையை அதன் ரோஜா நிறம் மாறுவதற்குள் பார்க்கத் துடிக்கும் அழகியல் வாய்ந்த இதயங்களை நினைத்து இவளுக்கு அதிசயமாக இருந்தது. என்ன பெரிய அதிசயம். ”பொறந்த குழந்தை என்னதான் பண்ணுது? மூஞ்சியே ஒரு ஷேப்பா இல்ல. பொட்டேட்டோ மாதிரி இருக்கா.” கணவனிடம் சொல்லிச் சிரித்தாள்.

பையன்தான் என்று எதிர்பார்த்திருந்த எல்லாரையும் ஏமாற்றி விட்டுக் கெத்தாகப் பிறந்திருக்கும் மகள் மீது  உலகில் யார் மீதும் இதுவரை உணர்ந்திராத பேரன்பு பொங்கியது. தன்னை மட்டுமே நம்பிக் கைகாலை அசைத்துக் கொண்டு இருக்கும் புதிய ஜீவன்.

“பேரன் கிடைக்கக் கொடுத்து வைக்கல. ஹும். இட்ஸ் ஆல்ரைட். நீ நல்லா ரெஸ்ட் எடும்மா.” தனக்கு வேண்டிய மருந்து, ஹார்லிக்ஸ், கறிக்கடையில் ஈரல் எல்லாம் அன்போடு வாங்கி வந்தாலும் பெருந்தன்மையுடன் இருப்பதாக எண்ணி மாமனார் உதிர்த்த அந்தச் சொற்கள் மண்டையில் ஓடிக் கொண்டே இருந்தன.

“ரொம்ப சென்சிடிவா இருக்காதே. பையன் வேணும்னு நாமளும்தான் ஆசையா இருந்தோம். பெரியவங்க இதுகூட சொல்ல மாட்டாங்களா?” என்று அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தன்னையும் தேற்றிக் கொண்டான் ஜெய்.

ஆனால் இவளுக்குத்தான் என்னவோ எல்லாரையும் ஏமாற்றி விட்டோம் என்கிற உணர்வு மனதைப் பிடுங்கிக் கொண்டே இருந்தது.  போஸ்ட் பார்டம் டிப்ரெஷன் தவணை முறையில் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தது.

இந்த நிலையில்தான் ஜெய்யின் நண்பன் கார்த்தியும் மனைவி ஷர்மிளாவும் குழந்தையைப் பார்க்க வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்களாம். அவர்கள் நல்ல பழக்கம்தான். அவர்களுக்கும் ஒரு மகளுண்டு. ஷர்மிளாவைப் பிடிக்கும் என்றாலும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வருவது, வந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்வது, எப்போதும் தற்பெருமை பேசுவது என்று திவ்யாவுக்கு நேரெதிர் சுபாவம். சிரிக்க வைப்பதற்கோ யோசிக்க வைப்பதற்கோ எதையும் பேசத் தெரியாதவள் என்பது திவ்யாவின் எண்ணம். என்ன செய்வது அவள் கணவன் கார்த்தி கணவன் ஜெய்யின் உயிர் நண்பன் என்பதால் அவளுடன் நட்பு பாராட்டியே ஆக வேண்டும்.

அத்தை டீ போட்டு டிபனும் செய்து வைத்துவிட்டார். அதையும் ஒரு காரணமாகக் காட்டித்தான் ஜெய் அவளைச் சம்மதிக்க வைத்திருந்தான். “அம்மா இருக்கும் போதே வந்துட்டாங்கன்னா நல்லதுதானே.  நமக்கு வேலை மிச்சம்தானே?”

“ஆஹா, என்ன ஒரு சாமர்த்தியம்!”

முறைத்தாலும் சரியென்று சொல்லி விட்டாள்.

ஆறு மணி போல் ஆரவாரமாக வந்தார்கள் கார்த்தியும் ஷர்மிளாவும். அவர்களின் சிறிய மகள் ரஞ்சனாவுடன் ஜியா விளையாடத் தொடங்கிவிட்டாள். ரப்பர் பந்து போல் குதித்துக் கொண்டு அவள் போட்ட கூச்சலில் திவ்யாவின் மனம் மலர்ந்ததென்னவோ உண்மை. சிறு குழந்தைகள் சேர்ந்து விளையாடுவதைப் பார்ப்பதற்காகவே எந்த அறுவையையும் பொறுத்துக் கொள்ளலாம் போல!

ஷர்மிளாவும் திவ்யாவின் மாமியாரும் ஒரே ஊர். சிறிது நேரம் ஊர்க்கதைகளை அளவளாவினார்கள். பின்பு அத்தை சீரியல் பார்க்கப் போய்விட்டார். ஜெய்யும் கார்த்தியும் ஏதோ வாங்க வெளியே போனார்கள்.

தனியே விடப்பட்ட ஷர்மிளா, திவ்யா இடையே ஓரிரு நொடிகள் அசௌகரியமான மௌனம் நிலவியது.

மாமியாரின் ஊர்க்காரி, அதே மாதிரிதான் பேசுவாள், யோசிப்பாள். இரண்டாவதும் மகள் என்பதை எப்படியாவது சொல்லிக் காட்டுவாள். மாமனார் மாமியாரிடம் வாயை மூடிக் கொண்டு இருப்பது போல் இருக்கத் தேவையில்லை. அப்படி ஏதும் சொன்னால் நறுக்கென்று பதில் கொடுத்துவிட வேண்டும் என்றும், அப்படி எதுவும் அவள் சொல்லக் கூடாதே என்றும் ஒருவிதப் பதற்றத்துடன் என்னென்னவோ எண்ணமிட்டாள் திவ்யா.

“எனக்கு ரொம்ப ஆசை.”

திவ்யாவின் எண்ணவோட்டத்தைக் குறுக்கே புகுந்து வெட்டியது ஷர்மிளாவின் ஏக்கக் குரல்.

“என்னா ஆசை?”

“ரெண்டு பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசை.”

இன்னொரு குழந்தை பிறந்தாலும் பொண்ணாவேதான்பா இருக்கணும். பேர்கூட முடிவு பண்ணி வெச்சிட்டேன். ரஞ்சனாவுக்கு அடுத்தது ரசிகான்னு. எப்போ கைகூடும்னு தான் தெரியல.”

திவ்யாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சற்று முன் தனது எண்ணவோட்டத்தை எண்ணிக் கொஞ்சம் அல்ல நிறையவே வெட்கமாக இருந்தது.

“என்ன ஷர்மி, திரும்பச் சொல்லு!”

“ரஞ்சனா ரசிகா. பேர் நல்லாருக்கா. எனக்கும் இன்னொரு பொண்ணுதான் வேணுங்க‌ திவ்யா. நீங்க‌ ரொம்ப லக்கி.”

இவளின் திடீர்ப் பரவசத்தைக் கவனிக்காமல் அதன் ரோஜாப்பூ நிறக் கன்னத்தைத் தடவிக் கொண்டே தன் ஆசையைச் சொல்லிக் கொண்டேபோன‌ ஷர்மியைச் சட்டென்று தாவி அணைத்துக் கொண்டாள் திவ்யா.

எல்லா வலியும் பத்து மடங்கு குறைந்திருந்தன.

*

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’, ‘ஆண்கள் நலம்’ ஆகிய நூல்களாக ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.

Exit mobile version