Site icon Her Stories

விழுவதும் எழுவதும் இயல்பானதே!

ஒரு கண்ணாடி உடைந்தால் அதை ஒட்டி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், உடைந்த இடத்தின் கோடுகள் மறையாது. மனித மனமும் அப்படித்தான். சில சம்பவங்கள் மனிதர்களைப் பழையபடி வாழ விடாது. ஆனால்… உடைந்த மனம் மடிந்து போவதில்லை.

சில நேரத்தில் அது தன்னைத் தானே மீண்டும் புதுப்பித்து கொள்ளும். முன்னைவிட வலிமையாக, அழகாக!

மணமான புதிதில் எடுத்த ஓளிப்படத்தை நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராஜி. அந்த ஒளிப்படத்தில் இருந்த அவளின் சிரிப்பு முழுமையாக இருந்தது. அன்பான கணவன் ராகேஷ். அவளை மகளாகப் பார்த்த மாமியார், மாமனார்.

“என் பொண்ணு வாழ்க்கையில ஜெயிச்சுட்டா…” என்று பெருமையாகச் சொல்லும் பெற்றோர்.

அவளுக்கு வாழ்க்கை பாதுகாப்பான இடமாகத் தோன்றியது. அந்த இரவு வரும்வரை. திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழிப்பறி கும்பல் அவர்களை மறித்தது. செல்போன், பணம், நகை, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு…

ராஜியின் வாழ்க்கையை இரண்டு பகுதிகளாகப் பிரித்த அந்தச் சம்பவம் நடந்தது. ராஜி கணவனின் கண் முன்னே பாலியல் வன்முறைக்கு ஆளானாள். அதற்கு பிறகு போலிஸ்  விசாரணை, வழக்கு எல்லாம் நடந்தது. ஆனால், அவள் எதிர்பார்த்த ஒன்று மட்டும் நடக்கவில்லை. ராகேஷ் அவளை அணைத்து ஓர் ஆறுதல்கூடச் சொல்லவில்லை.

முதலில் அவன் அமைதியாக இருந்தான். பிறகு தூரமாக ஆரம்பித்தான். ஒரே படுக்கையில் படுத்தாலும் நடுவில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவர் இருந்ததை அவளால் உணர முடிந்தது.. முன்பு தூக்கத்தில்கூட அவள் கையைப் பிடித்துத் தூங்கியவன், இப்போது தவறுதலாக அவள் கை பட்டாலும் விலகிக்கொள்கிறான்..

அந்தச் சிறிய சம்பவங்கள் ராஜியின் மனதைத் தினமும் கிழித்தன.

ஒருநாள்  சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள். ராகேஷின் அம்மா ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ராகேஷ் போன் பார்த்துக் கொண்டிருந்தான்.ராஜி மட்டும் அங்கே இல்லாதவள் போல இருந்தாள்.

அந்த வீட்டில் உயிரோடு இருக்கும் நிழலாகத் தான் வாழ்கிறோம் என்று அப்போதுதான் தோன்றியது. யாரும் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை. ஆனால் வீட்டுக்குள்ளேயே வேண்டாதவளாகி விட்டாள். இது வீட்டை விட்டுத் துரத்துவதைவிடக் கொடூரமானது என்று தோன்றியது.

ஒருநாள் ராகேஷும் அவன் அம்மாவும் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் ராஜி ஏதோ வேலையாக  சென்றாள். அவள் உள்ளே வந்த நொடி பேச்சு நின்றது. அந்த அமைதி… அவளை ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் காயப்படுத்தியது.

அவளால் ராகேஷை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எப்போதும் சுத்தம், ஒழுங்கு பார்க்கும் மனிதன். மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களைத் தொடக்கூட விரும்பாதவன். ஆனால்…

ராஜி பொருளல்ல. உயிருள்ள மனுஷி. மூன்று ஆண்டுங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்த மனைவி. அவளையும் ‘தொட்டுப் பழுதானது’ போல பார்க்க முடிகிறதா? அந்த எண்ணமே அவளை உடைத்தது.

“அம்மா வீட்டுக்குப் போயிடலாமா?” என்று நினைத்தாள். ஆனால் அங்கேயும் வரவேற்பில்லை.

“மாப்பிள்ளை வீட்டார் உன்னை வைத்திருக்கிறதே பெரிய விஷயம்…” என்றார்கள்.

அந்த நொடி ராஜிக்குப் புரிந்தது. எல்லாப் பெண்களுக்கு இரண்டு வீடுகள் உண்டு. ஆனால் எந்த வீடும் அவளுடையது இல்லை.

தனக்கென்று ஓர் இடத்தை, ஒரு வாழ்க்கையை, ஒரு பாதுகாப்பை ஒரு பெண் தானேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் அவளுடையது. அதற்குப் பொருளாதாரச் சுதந்திரம் மிக முக்கியம்.

ராஜி தன்னை பிஸியாக வைத்துக்கொள்ள முயன்றாள். நிறைய வேலைகள் பார்த்தாள். டிவி பார்த்தாள். சமையல் செய்தாள். ஆனால் உள்ளே இருந்த வலி மட்டும் குறையவில்லை.

வலியைத் தவிர்க்க முயன்றாள். ஆனால் அது அவளை விடவில்லை. ஒரு கட்டத்தில் அவளுக்கு வாழ்வதற்கே அர்த்தம் இல்லாததுபோலத் தோன்றியது.

சிறு வயது முதல் ‘நல்ல மனைவி’ ஆக வளர்க்கப்பட்டவள். இன்று அதிலேயே தோல்வியடைந்து நிற்கிறாள். வேறு என்ன தெரியும்? எதற்காக வாழ வேண்டும்? வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கப் போனாள்.

அங்கேதான் மாலாவைச் சந்தித்தாள். கல்லூரித் தோழி. ராஜியைப் பார்த்ததும் அவளை காபி ஷாப்க்கு அழைத்துச் சென்றாள்.

மாலா உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் ராஜியால் எதையும் கேட்க முடியவில்லை.

“இன்னும் அந்தப் பாதிப்புல இருந்து வெளியே வர முடியலையா ராஜி?” மென்மையான அந்தக் கேள்வி கேட்ட நொடி, ராஜி உடைந்து அழுதாள்.

நீண்ட நேரம். மாலா அவளை நிறுத்தவில்லை. சில அழுகைகள் வெளியே வந்த பிறகுதான் மனம் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும்.

“நடந்ததை மாற்ற முடியாது ராஜி…” என்றாள் மாலா மென்மையாக. “ஆனா தினமும் அதே காயத்துல விரலை வச்சிக்கிட்டே இருந்தா எப்படி ஆறும்?”

ராஜி அமைதியாக அழுதாள். “அடுத்து என்ன பண்ணப் போற?” அந்தக் கேள்வி ராஜியை ஏதோ செய்தது..

 “எல்லாம் முடிந்துவிட்டது.  அடுத்து என்ன, என் முடிவுதான்” என்று மனம் அழுதது.

“இதுல உன் தப்பு எதுவும் இல்லை ராஜி. இது ஒரு விபத்து.”

“ஆனா நான் பழைய மாதிரி இல்லையே…”

“விபத்துல கை உடைஞ்சா வாழ்க்கை முடிஞ்சிடுமா?”

“அது சரியாகும்… இது அப்படி இல்ல…”

மாலா அவள் கையைப் பிடித்தாள்.

“இது உன் உடம்புல நடந்த விஷயம் மட்டும் இல்ல ராஜி. உன் மனசுக்குள்ள நீ உன்னை எப்படிப் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேங்கிறதுதான் பிரச்னை.”

அந்த வார்த்தை ராஜியை அமைதியாக்கியது.

“உயிரோட இருக்கேன்தான்… ஆனா யாருக்கும் நான் தேவையில்ல…”

“ராகேஷுக்குத் தேவையில்லன்னா உலகத்துக்கே தேவையில்லையா?”

ராஜி அமைதியாக அவளைப் பார்த்தாள்.

“உன் தேவை இருக்கும் இடத்துக்கு நகர்ந்து போ.”

அன்று இரவு ராஜிக்குத் தூக்கமே வரவில்லை. கையில் பூச்சி மருந்து பாட்டிலை வைத்துக் கொண்டு நெடு நேரம் அவளது கல்யாண ஒளிப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆமாம், ராஜேஷுக்குத் தேவையில்லை என்றால் அவளது தேவை இருக்கும் இடத்திற்குப் போனால் என்ன தவறு?

ராஜேஷ் அவளை வெளியேயும் அனுப்பாமல் வீட்டுக்குள் அப்படி ஒருவர் இருப்பதையே நினைவில்லாதது போல் நடப்பதும் அவளுக்குச் செய்யும் கொடுமைதானே? தவறு செய்பவர்கள் எல்லாம் வாழும்போது தான் ஏன் சாக வேண்டும் என்று பலவிதமான யோசனைகள் வந்தன.

 சாவதைப் பற்றி யோசிக்காமல்…

முதல்முறையாக வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். பயம் வந்தது. தெரியாத வாழ்க்கை. தனியாக நிற்க வேண்டிய நிலை. ஆனால் அந்தப் பயத்துக்குள் ஒரு சிறிய நிம்மதியும் இருந்தது.

“இங்கிருந்து வெளியே போகலாம்…”

அடுத்த நாள் மாலாவை மீண்டும் சந்தித்தாள்.

“எனக்கு ஒன்றும் தெரியாது, தெரியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“சமைக்கத் தெரியும்… வீட்டைப் பார்த்துக்க தெரியும்… வயசானவங்களைக் கவனிக்க தெரியும்…”

மாலா சிரித்தாள்.

“அதெல்லாம் சின்ன விஷயமா நினைக்காத. அது ஒரு திறமை.”

தனது உறவினர் வீட்டில் வயதான அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஒருவரைத் தேடுவதாகச் சொன்னாள்.

“அங்கே தங்கி இருக்கலாம். சம்பளமும் கிடைக்கும்.”

ராஜியின் கண்கள் மெதுவாகக் கலங்கின. யாரோ இன்னும் தன்னைப் பயனுள்ள மனிதராகப் பார்க்கிறார்கள். அதுவே அவளுக்கு அந்த நேரத்தில் உயிர் கொடுத்தது.

“உன் அப்பா, அம்மா ஒத்துக்குவாங்களா?”

ராஜி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

இத்தனை நாள் மற்றவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்று காத்திருந்தாள். இன்று முதல் தன் வாழ்க்கையைப் பற்றித் தானே முடிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. “நான் கேக்கப் போறதில்லை… சொல்லப் போறேன்.”

அந்த நொடி பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக அவள் குரலில் உயிர் இருந்தது. சில நாட்கள் கழித்து, சிறிய பையில் தனது துணிகளை மடித்து வைத்தாள் ராஜி. அலமாரியை மூடியாள். அந்த வீட்டைக் கடைசியாக ஒருமுறை பார்த்தாள். பிறகு மெதுவாக வெளியே நடந்தாள்.

வாழ்க்கை இனி எளிதாக இருக்குமா என்று தெரியாது. ஆனால்… அந்த நாள் முதல், ராஜி சாகாமல் வாழ முயற்சிக்க ஆரம்பித்தாள்.

அதுவே மீண்டெழுதலின் முதல் வடிவம்.

ஒருநாள், மிகவும் தைரியமான பெண்ணாக நாம் அவளைச் சந்திக்கலாம்.

அதற்கான விதை, அவள் ‘எனக்கு மட்டும் ஏன்?’ என்பதிலிருந்து
‘அடுத்து என்ன?’ என்று நகர்ந்த அந்த நொடியில் விதைக்கப்பட்டது.

‘கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் திறக்கும்…’

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

Exit mobile version