தீபா வீட்டுக்குள் நுழைந்தபோது ஹாலில் டிவி அலறிக்கொண்டிருந்தது. அந்த வீட்டில் ஒரு விநோதமான விதி இருந்தது. சத்தம் அதிகமாக இருந்தால் வெங்கட் கோபத்தில் ருக்கிறான். அமைதியாக இருந்தால் அது இன்னும் ஆபத்து. அவள் செருப்பைக்கூடச் சத்தம் வராமல் கழற்றினாள். வெங்கட்டுக்குச் சத்தம் பிடிக்காது. அதாவது… மற்றவர்களால் சத்தம் வருவது பிடிக்காது. அதனால், தன் வீட்டிலேயே தன் குரலை இழந்து வாழ தீபா கற்றுக்கொண்டாள்.
குக்கர் விசில் அடிக்கும் முன்பே கேஸை அணைத்துவிடுவாள். போன் எப்போதும் வைப்ரேஷனில்தான் இருக்கும். காபி டம்ளரை மேசையில் வைக்கும் போதும் அது சத்தம் போடக் கூடாது என்று
மெதுவாக வைப்பாள்.
ஒருமுறை டம்ளர் கொஞ்சம் சத்தமாக வைத்ததற்கே, “கொஞ்சம் கவனமா இருக்க முடியாதா?” என்று வெங்கட் எரிந்து விழுந்தான். சத்தம் போடுவதற்கான முழு உரிமை அவனுக்கு மட்டும் இருந்தது. தட்டைத் தூக்கி அடிப்பது… கரண்டியை மேசையில் ஓங்கி தட்டுவது… கையில் இருக்கும் பொருளைச் சுவரில் வீசி எறிவது… இவையெல்லாம் மட்டும் எந்தக் கணக்கில் வரும் என்று தீபாவுக்கு ஒருபோதும் புரிந்ததில்லை.
அன்பும் மரியாதையும் நிறைந்த வீட்டில் வளர்ந்தவளுக்கு, இப்படி ஒரு மனிதருடன் வாழ்வதே ஆரம்பத்தில் புரியாத புதிராக இருந்தது.
திருமணமான சில நாட்களிலேயே அம்மாவிடம் அழுதுகொண்டே சொன்னாள்.
“அம்மா… நான் அங்க போகல… இங்கேயே வந்துடறேன்… அவருக்கு ரொம்ப கோபம் வருது…”
அம்மா சிரித்தாள்.
“சீ… அசடு… ஆம்பளைன்னா கொஞ்சம் அப்படித்தான். உங்கப்பா மட்டும்
கோபப்படலையா? இப்போ பாரு… எப்படி அமைதியா இருக்காரு.
கல்யாணம் ஆன உடனே திரும்பி வந்துட்டான்னு சொன்னா,
‘கமலா என்ன பொண்ணு வளர்த்தா’ன்னுதான் என்னைப் பேசுவாங்க.
ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்.
கொஞ்சம் பொறுத்துக்கோ.”
அன்று தீபாவுக்கு ஓர் உண்மை புரிந்தது. திருமணமான பெண்ணுக்குப் பிரச்னை வந்தால், பிறந்த வீடு கதவுகள் சுலபமாகத் திறக்காது, சில சமயம் இறுக்கமாக பூட்டிக்கொள்ளும். அதற்குப் பிறகு, அம்மாவிடம் சொல்லுவதை நிறுத்தினாள். அங்கே போவதையும் மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டாள்.
‘செத்தாலும் இங்கேதான்’ என்பது விதியென்றால் பிறகு, எதற்காகப் போக வேண்டும்? ஒரு நாள் சாம்பாரில் உப்பு கொஞ்சம் அதிகமாகிவிட்டது.
வெங்கட் சாப்பிட்டுக்கொண்டே கரண்டியை மேசையில் ஓங்கி போட்டான். அவ்வளவுதான். ஆனால், அந்தச் சத்தம் கேட்ட நொடியில்,
தீபாவின் தோள்கள் தானாகச் சுருங்கின. கையில் இருந்த டம்ளரை அறியாமலே இன்னும் இறுக்கமாகப் பிடித்தாள். இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஏனெனில், அந்தச் சத்தத்திற்குப் பிறகு என்ன வரும் என்று அவளுக்குத் தெரியும்.
“ஒரு வேலையையாவது ஒழுங்கா செய்யத் தெரியுமா? நாளெல்லாம்
என்ன பண்ணிட்டு இருப்ப?”
வார்த்தைகள் அவளைத் தாக்கியதா… அல்லது அந்த வார்த்தைகளை
எதிர்பார்த்து வாழ்ந்த பயமா… எது அதிகம் காயப்படுத்தியது என்று
அவளுக்கே தெரியாது. சில நாட்கள், எந்த வசவுமிருக்காது.
ஆனால், ஒரே ஒரு சத்தம் போதும். கேட்காத திட்டுக்களைக்கூட அது நினைவூட்டிவிடும். அடுத்த நாள் காலை… எதுவும் நடக்காதது போல
வெங்கட் காபி கேட்டான். அதுதான் தீபாவை இன்னும் குழப்பியது. சில நேரம் கோபத்தில் கத்துவான். சில நாட்களுக்குப் பேசவே மாட்டான்.
சில நேரம் எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக நடந்துகொள்வான்.
ஒரு மனிதனுக்கு இத்தனை முகங்களா? காய்ச்சல் வந்த இரவு தூங்காமல்
அவளருகிலேயே உட்கார்ந்து நெற்றியில் ஈரத் துணி வைத்தவனும் அவன்தான். அவள் பிறந்தநாளை ஒருமுறைகூட மறந்ததில்லை.
அவள் விரும்பிய புத்தகங்களை எந்தக் காரணமும் இல்லாமல் வாங்கி வந்த நாட்களும் உண்டு. அதனால்தான் தீபாவால் அவனை வெறுக்க முடியவில்லை. அவன் முழுக்கக் கெட்டவன் இல்லை. ஆனால்…
அவனுடைய கோபம், அவளுடைய வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.
ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் அவனுடன் வாழும் ஒருவர்
எப்போதும் பயந்துகொண்டே இருக்க வேண்டியிருந்தால்… அந்த நல்லவனாக இருப்பதில் என்ன பயன்? ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் நுழையும் முன் அவள் மனதில் ஒரே ஒரு கேள்விதான்.
’இன்று எந்த வெங்கட்? கோபமானவனா? அமைதியானவனா அன்பானவனா? பதில் தெரியாததால், எப்போதும் எச்சரிக்கையுடனே வாழ்ந்தாள். ஒருமுறை… தோழியுடன் போனில் பேசிக்கொண்டு வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள். வெங்கட் அறைக்குள் வந்தான். அவள் தன்னையறியாமலே சிரிப்பை நிறுத்திவிட்டாள். அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்த வீட்டில் இயல்பாக, சந்தோஷமாக இருப்பதே ஒரு தவறுபோல அவளுக்குத் தோன்றியது. மற்றொரு நாள்… மழையால் அலுவலகத்தில் இருந்து தாமதமாகக் கிளம்ப வேண்டியிருந்தது. பஸ் கிடைக்காமல் நெடுநேரம் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு மழையைப் பற்றிய கவலை இல்லை. பஸ் கிடைக்காததைப் பற்றியும் இல்லை. வீட்டுக்குப் போனதும்… “என்ன கேள்வி கேட்பாரோ?” என்பதுதான் முழு வழியிலும் அவளைப் பின்தொடர்ந்த பயம்.
வீட்டுக்குள் நுழைந்ததும் வெங்கட் கடிகாரத்தைப் பார்த்தான். “டைம் தெரியும்ல?”. ஒரே ஒரு வாக்கியம், அவ்வளவுதான். ஆனால், அந்த ஒரு வாக்கியத்திற்காகத்தான் முழு வழியிலும் இதயம் படபடத்துக்கொண்டே வந்திருந்தாள். அன்றுதான் ஓர் உண்மை புரிந்தது. அவள் ஒரு வீட்டில் வாழவில்லை. ஒரு தேர்வு அறையில் வாழ்ந்துகொண்டிருந்தாள். எப்போதும் கவனமாக… எப்போதும் எச்சரிக்கையாக… எந்தத் தவறும்
செய்யக் கூடாது என்கிற பயத்துடன். அப்படி வாழும் இடத்தை வீடு என்று சொல்ல முடியுமா? அதிலும் மோசமானது, இத்தனை வருடங்களுக்குப் பிறகு… அமைதியே அவளுக்குப் பயமாகிவிட்டது. அமைதியான வீடு கூட,
எப்போது வெடிக்கும் என்று தெரியாத டைம் பாம்பின் மேல் உட்கார்ந்திருப்பது போல இருந்தது.
அன்று மதிய உணவு இடைவேளையில், அலுவலக தோழிகள்
பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சுதா தன் கணவருக்கு போன் செய்தாள்.
“மேட்… நான் பாத்ரூம்ல நாப்கின் கவர் பண்ணி வச்சேன். அவசரத்துல குப்பைல போட மறந்துட்டேன். பசங்க வரதுக்கு முன்னாடி
டஸ்ட்பின்ல போட்டுடுறியா? தேங்க்ஸ்…” என்று சிரித்தபடி
போனை வைத்தாள்.
தீபாவால் நம்பவே முடியவில்லை. “இப்போ… உன் ஹஸ்பெண்ட் கிட்ட
நாப்கின் போடச் சொல்லிட்டியா?”
“ஆமா.”
“அவர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?”
“இல்ல.”
தீபா தயக்கத்துடன் கேட்டாள். “அது இல்ல… உன்னைத் திட்ட மாட்டாரா?”
சுதா சிரித்தாள். “அவர் என்ன ஸ்கூல் வாத்தியாரா? எல்லாத்துக்கும் திட்ட?”
அந்த ஒரு வாக்கியம் தீபாவின் மனதில் ஏதோ ஒன்றை உடைத்தது.
அந்தக் கேள்வி… தீபாவை விடாமல் துரத்தியது. ஒரு வாரம் கழித்து
வெங்கட் வெளியூருக்குச் சென்றான். முதன்முறையாக தீபா
டிவி ஒலியைச் சத்தமாக வைத்தாள். சமையலறையில் பாடல் கேட்டுக்கொண்டே சமைத்தாள். காபி குடித்த டம்ளரை உடனே கழுவாமல் சிங்க்கில் வைத்தாள். இரவு இரண்டு மணி வரை
விழித்திருந்தாள். யாரும் கேள்வி கேட்கவில்லை. யாரும் முகம் சுழிக்கவில்லை. யாரும் அவளைக் கவனித்துக்கொண்டே இருக்கவில்லை. மூன்றாவது நாள் இரவு… சோபாவில் அமைதியாக உட்கார்ந்திருந்தவள், திடீரென்று அழ ஆரம்பித்தாள். அப்போதுதான் அவளுக்கு ஓர் உண்மை புரிந்தது. இத்தனை வருடங்களாக
தான் ஏங்கியது காதலுக்காக அல்ல. சுதந்திரத்திற்காக. வீட்டில் இந்த மூன்று நாட்களாக அவள் சிரித்த சிரிப்பு… பல வருடங்களுக்குப் பிறகு மனதிலிருந்து வந்த சிரிப்பு. அவள் அப்பாவை நினைத்தாள்.
அம்மா தவறு செய்த நாட்களில்கூட அவர் ஒருமுறைகூட குரலை உயர்த்தியதில்லை. அப்போது அது சாதாரணமாகத் தோன்றியது.
இன்றுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அது அன்பு மட்டுமல்ல.
பாதுகாப்பு. தவறு செய்தாலும் பயப்பட வேண்டாத இடம்.
சத்தமாகச் சிரிக்கக்கூடிய இடம்.
போன் அடிக்கும் சத்தம் கேட்டாலே இதயம் படபடக்காத வாழ்க்கை.
’நான் இங்கே பாதுகாப்பாக இருக்கிறேன்…’ என்று உடம்பே நிம்மதியாக
சொல்லும் உணர்வு. பல பெண்கள் அன்பு இல்லாமல் வாழ்வதால் அல்ல…
பாதுகாப்பு இல்லாமல் வாழ்வதால்தான் மெதுவாகச் சோர்ந்து போகிறார்கள். ஏனெனில் பயம்… மனிதனை ஒரே நாளில் உடைக்காது.
ஒவ்வொரு நாளாக… கொஞ்சம் கொஞ்சமாக… உயிரோடே காலி பண்ணிவிடும். அன்று கண்ணாடி முன்னால் நின்று தீபா
தன்னைத்தானே கேட்டாள்.
“நான்… இவ்வளவு மெதுவா பேச ஆரம்பிச்சது எப்போ?”
பதில் தெரியவில்லை. வெங்கட்டால்தான் அந்தப் பயம் வந்தது.
ஆனால்… அந்தப் பயத்தோடு வாழப் பழகிக்கொண்டதுதானே.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டே மீண்டும் கேட்டாள்.
“இத்தனை வருடங்களாக… நான் எதைக் காப்பாத்திக்கிட்டிருந்தேன்?
இந்த வாழ்க்கையையா? இல்ல… இந்தப் பயத்தையா?”
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால்,
ஒரு பதில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. ஒரு மனிதனின் கோபத்திற்காக… தன் குரலை இழந்த வாழ்க்கை வாழ்க்கையாக இருக்க முடியாது. ஒருமுறை தன் மனதில் இருப்பதைச் சொல்லிப் பார்த்தால்
என்ன ஆகிவிடும்?
மிஞ்சி போனால் இந்த வாழ்க்கை மாறிவிடும். மாறட்டும். வேலை இருக்கிறது. தன்னைப் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன?
அந்த எண்ணம் மனதில் தோன்றிய நொடி, பல வருடங்களாக
அவள் முதுகை வளைத்து வைத்திருந்த ஒரு பாரம்… மெதுவாக
இறங்க ஆரம்பித்தது.
பல வருடங்களுக்குப் பிறகு… அவள் நிமிர்ந்து நின்றாள். அந்த இரவு,
தீபா ஒரு முடிவு எடுத்தாள். இனிமேல்… பயம் இருக்கும் இடத்தை
வீடு என்று அழைக்க மாட்டேன். இதுதான் வீடென்றால்… இனி
பயப்பட மாட்டேன். உடல் முழுவதும் புது ரத்தம் ஓடுவதுபோல
ஒரு சிலிர்ப்பு. அவள் வெங்கட்டிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
இந்த முறை… பயத்தோடு அல்ல. பல வருடங்களாகச்
சொல்லாமல் விட்ட சில வார்த்தைகளைச் சொல்வதற்காக.
இந்த முறை கதவைத் திறக்கப் போவது பழைய தீபா இல்லை.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.


