Site icon Her Stories

கமலி

fineartandyou.com

“அய்யோ அந்த கொள்ளிக்கண்ணு பாத்துருச்சா…எங்க சுத்துனாலும் புதுசா ஒண்ணு வாங்குறோம் வெக்கிறோம்னு எப்பிடிதான் மூக்குல வேர்க்குமோ வந்து நின்னுடறாளே ….”

நேரில் சொல்லாவிட்டாலும் ஒவ்வொருவரும் இதையேதான் தன்னைப்பற்றி நினைக்கிறார்கள்; பேசுகிறார்கள் என்று கமலிக்கும் தெரியும். அதற்காக என்ன செய்வது என்பாள். இதுவே போன தலைமுறையாக இருந்தால் நடக்குமா என்பாள் அம்மா. ” நீ பட்டாமணியம் பெருமையவே பேசியிட்டிரு…அதயெல்லாம் ஊரு மறந்து குப்பகுழியில பொதச்சிருச்சு…தோண்டி எடுத்தாலும் மணக்காதும்மா”, என்று அலட்சியமாகச் சொல்வாள் கமலி.

பட்டாமணியார் மகனுக்கு வாக்கப்பட்டு வந்து, பத்தாயமும், வைக்கப்போரும், மாட்டுக்கொட்டகையுமாக பராமரிக்க முடியாமல் திணறியதெல்லாம் மிகச்சில ஆண்டுகள்தான். பெரியவர் இறப்புக்குப்பின் கமலியின் அப்பா என்ற தெரவுசு கெட்டவன் குடியில் மட்டும் திறமையாக இருந்து, மண்ணும் பொன்னும் கரகரவெனக் கரைத்து முடித்து வயிறு வீங்கிச் செத்தும் போனான்.

கமலியுடன் பிறந்த இரண்டு பையன்களையும் சேர்த்து நாலு பேர் வயிறு வாடாமல் காப்பதற்கே அம்மாவுக்கு சரியாகப்போயிற்று. இதில் எங்கே அவன்களைக் கண்டிப்பது?
‘ மேம்பார்வை பாத்து வளக்குறதுக்கும் ஒரு பவுசு வேணும்’ என்ற ஏசலைக் கவனிக்கவும் இல்லை. தத்திக்குத்தி என்னவோ செய்து பிழைக்கத் தொடங்கியதும் பெரியவன் எங்கோ போய்விட்டான். சின்னவன் ஊர்மந்தைக்கூட்டத்தில் ஒருவன் ஆனான். அப்புறமென்ன ஒரு வாய் நல்ல சோற்றைப்பற்றியே கவலைப்பட்டுக் கிடந்த நாட்களில் கல்யாணத்தைப்பற்றி யார் யோசிப்பார்கள். திடுதிடுவென்று கமலியின் வயசு மட்டும் இரட்டை இரட்டையாய் ஓடிவிட்டது போல…

fineartandyou.com

கொஞ்ச வருஷம் ஊர் வழக்கப்படி வயசுக்கு வந்த பொண்ணாக லச்சணமா வீட்டுக்குள்ளேயே புழங்கிக்கொண்டு இருந்தவள்தான் கமலி. அப்புறம் அந்த சொகுசெல்லாம் கட்டுப்படியாகாத சூழலில் ஒரு பெட்டிக்கடை வைத்தாள். வீட்டுக்குக் காவல் என்று நம்பிக்கொண்டிருந்த சின்னவன் அந்தக் கல்லாப்பெட்டியை அடிக்கடி திறக்க, அந்தக் கதையும் முடிந்தது. அப்புறம்தான் பக்கத்து ஊர் ஜவுளிக்கடைக்கு ஆள் வேண்டுமெனக் கேள்விப்பட்டு போய்ச் சேர்ந்தாள். இப்போது கமலியின் தயவு சிலருக்குத் தேவையானது. மருந்து வாங்கிவர, அவசரத்துக்கு மளிகையோ காயோ வாங்கிவர, சீட்டுகட்ட என்று கொஞ்சம் பேர் கமலியைத்தேடி வரலானார்கள். கமலிக்கு இதெல்லாம் ரொம்ப பிடிச்சுப்போச்சு.

எதிர்வீட்டு சித்ராதான் கமலியின் பார்வையில் ஏதோ குற்றமிருப்பதாக முதலில் கண்டுபிடித்தவள். மாதாமாதம் கமலி மூலம் சீட்டு கட்டி ஒரு ஏழுகல் மூக்குத்தி வாங்கியிருந்தாள். எப்படியோ சுவர் அலமாரியில் துணிகளுக்கு நடுவே வைத்திருந்த டப்பாவுக்குள்ளிருந்து மூக்குத்தி காணாமற் போச்சு. அதுக்கென்ன கால் முளைச்சா போயிருக்கும்…?

சித்ராவின் புருஷனுக்குப் பணமுடை வந்தால் இப்படித்தான் போகும். ஆனாலும் எப்போதும் ஒரே மாதிரி சண்டை போட்டு அலுத்துப்போனதாலோ என்னவோ, இம்முறை சித்ரா புதிய காரணம் கண்டுபிடித்தாள்.
” எனக்கு அப்பயே தெரியும் இந்த விடியாமூஞ்சி பொங்கிப்பொங்கிப் பாத்து அளகாயிருக்குக்கா, அளகாயிருக்குக்கான்னு நூறு வாட்டி சொன்னாள்ள…அப்பவே அவ காலடி மண்ண எடுத்து சுத்திப் போட்டுருக்கணும்..கண்ணு காணாம்ப பொயிருச்சே பொருளு..”

இரண்டுநாளுக்கு ஒருமுறையாவது சித்ரா இப்படி ஏதாவது கத்திக்கொண்டே கிடப்பதால் கமலி அம்மா உட்பட யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் தெய்வானையின் மாமா வாங்கிக்கொடுத்த புதிய தாவணி காயப்போட்ட கொடியிலிருந்து பறந்து வேலிக்காத்தானில் மாட்டி கிழிந்து கிடக்க, தெய்வானை அம்மாவுக்கு ‘ இந்தக்கலரே கெடைக்காதுங்குறன்…நல்லா பாத்து எடுத்துருக்காவோ ஒங்க தம்பி ‘ என்று தன் ஜவுளிக்கடை அனுபவத்தோடு கமலி பாராட்டியதுதான் நினைவுக்கு வந்தது. அப்புறமென்ன ஒவ்வொருவருக்கும் கமலியின் பார்வை சரியில்லை என்பதைச் சொல்லிக்கொள்ளும் விதமாக ஏதாவது ஒரு சம்பவமாவது நடந்துகொண்டிருந்தது.

போட்டுவைத்த தேநீர் ஆறிப்போனாலோ அடுப்பில் வைத்த பருப்பு தீய்ந்து போனாலோ கூட கமலி இதன் பின்னணியில் என்ன வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். கமலிக்கும் இது சுவாரசியமாக மாறிவிட்டது.

அவள் அம்மாவுக்கு இப்போதெல்லாம் எதற்கும் எரிச்சல்படாத மோனநிலை வாய்த்து விட்டது. நல்லது கெட்டது என்று இரண்டு தனித்தனியாக கோடு போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதாக யோசிக்க ஆரம்பித்தால்தான் பிரச்சினை. அப்புறம் நல்லதுதான் வேண்டும் என்ற பேராசை. நான் இருக்கிறேன். நீயும் இருக்கிறாய். இந்த உலகும் இருக்கிறது என்று பொதுவாகப் பார்க்கத் தெரியாவிட்டால், கவலைக்கு வேட்டைதான்.

அவசர அவசரமாக ஒரு சமையலை முடித்து இரண்டாம் நம்பர் பஸ்ஸை சரியாகப்பிடித்து உட்கார ஒரு இடமும் கிடைத்துவிட்டால் அப்புறமென்ன…இன்னிக்கி எந்த செட்டு பாட்டு போடப்போறாரோன்னு ஒரு எதிர்பார்ப்பு.. பழைய சுசீலா பாட்டாகப்போட்டால் சாவித்திரி சரோஜாதேவி விஜயகுமாரி எல்லாருமாக மாறிமாறி உதடு பிரியாமல் கூடவே பாடிக்கொண்டு போகலாம். வரும் ஆளைப்பொறுத்து எருக்கஞ்செடிக்குள்ள மாதிரி ஒரு செட், பச்சைக்கிளி முத்துச்சரம் மாதிரி ஒரு செட்.

வீடு திரும்பும்போது பெரும்பாலும் தத்துவப்பாட்டுதான் அவனவனும் வேலைப்பளுவில் நொந்து வரும்போது இது எதற்கு என்று ஒருநாள் எரிச்சலாக இருந்தது. கண்டக்டரிடம் வாய்விட்டே சொல்லிவிட்டாள்…’ ஏண்ண…ஒரு நாளப்பாத்தாப்ல எதுக்கு இந்த செட்டு…செத்த நல்ல பாட்டா போடலாம்ல…?’

மறுநாள் பாட்டே ஓடக் காணோம். ‘ என்னண்ணே நேத்து எதோ சொல்லிட்டனேன்னு கோவமா ‘ தினம் பார்க்கும் உரிமையில் கேட்க, ‘ இல்லம்மா செட்டு ரிப்பேருக்கு குடுத்திருக்கு ‘ என்றபோதுதான் கமலிக்கு சட்டெனத் தன் கண்ராசியோ என்று ஒரு சந்தேகம் ஓடியது. நல்லவேளை இந்த விவகாரம் புரிந்த ஆட்கள் யாரும் பக்கத்தில் இல்லை. பேசுவார்களே தவிர தெருப்பெண்களுக்கும் கமலியைவிட்டால் வேறு பாதுகாப்பான வழி கிடையாது.

சீட்டுப்பணம் சேர்ந்துவிட்டால் தேதிக்காக காத்திருக்காமல் கூடக் கமலியிடம் கொடுத்துவிடலாம். அவளே ஞாபகமாக கட்டிவிடுவாள். இந்த கடமைக்காக எடுத்த தோட்டையோ மூக்குத்தியையோ தன்னிடம் காட்ட வேண்டும் என்றுகூடக் கேட்க மாட்டாள். பானுமதியும், மல்லிகாவும் மட்டும் இந்தக் கவலையைத் தள்ளிவிட்டு கமலியையே கடைக்கு அழைத்துப் போவார்கள். இடைநிலை நகரந்தானே…வாடிக்கையாளர் கூட்டம் ஒன்றும் அப்படியே நெரிபடாது. ஓனரும் கமலி மாதிரி நம்பிக்கையான ஆளுக்குத் தரும் சிறு சலுகை என்று வெளியில் போய்வர அனுமதிக்கும் நேரத்தில், தான் பார்த்துக் கொள்வார். குறைந்த சம்பளத்தில் இப்படி நம்பிக்கையான ஆள் யார் கிடைப்பார்கள். இதற்கு முன் இருந்தவன் ரோலில் கிழித்தது போகத் துண்டு விழுவதையெல்லாம் சொன்னது பாதி சொல்லாமல் பாதியாக எடுத்துப் போய்விடுவான். தனியாக அவன் வீட்டில் கட்பீஸ் வியாபாரமே நடத்துகிறான் என்று கேள்விப்பட்டுதான் நிறுத்தினார்.

தனக்குக் கொஞ்சம் தையல் பரிச்சயம் உண்டு. சில நாட்கள் கற்றுக்கொண்டால் கடையிலேயே ரவிக்கை தைத்துத்தர ஆர்டர் எடுக்கலாம் என்ற அவள் கோரிக்கையைத்தான் காதில் வாங்காமற் போய்க் கொண்டிருக்கிறார். சொல்வது சரிதான். ஆனால், கடை நேரத்தில் தைக்கச்சொல்லி கூலியை அவளுக்குக் கொடுப்பதா, தான் வாங்குவதா, அட….சம்பளமாக கொஞ்சம் அதிகம் கொடுத்துவிடலாம் என்றால் தையலில் தேர்ச்சி பெற்றால் அவள் அதையே வீட்டில் செய்துகொள்ள நினைக்கலாம் என்பது போன்ற நியாய, அநியாய சந்தேகங்கள் அவருள் ஓடிக்கொண்டிருந்தன.

பானுமதியின் சீட்டு முடிந்து இரண்டு வாரமாகிவிட்டது. மதிய சாப்பாட்டு வேலைகளை முடித்துவிட்டு, ”நாலுமணி பஸ்ஸ புடிச்சா கட தொறக்குறப்ப கூட்டம் இல்லாத இருக்கும்லந்த” , என்று பானு திட்டமிட, விளக்குவைக்கும் நேரம் கடையைவிட்டுப்போக ஓனர் சம்மதிப்பாரா என்று கமலிக்கு சந்தேகம். என்னவோ அவருக்கு வெளிவேலை எதுவும் இல்லை போல…சரி என்றுவிட்டார்.

மகளின் அறுந்த கொலுசைப்போட்டு மாற்றுவது, போட்ட சீட்டில் தனக்கு ஒரு பூத்தோடு என்று யோசித்து வந்திருந்தாள் பானு. எத்தனை வகையான தோடுகள்…. சங்கிலி சரப்புலின்னு அதெல்லாம் இருக்கட்டும்…தோட்டுல இவ்வளோ டிசைனா இருக்கு….
சீட்டு கட்ட வழக்கமாக வரும் கடைதான் என்றாலும் நுழைந்தவுடன் உள்ள கவுண்டரில் அவசரமாக மதிய உணவுக்கு கடை சாத்துமுன் ஓடிவந்து கட்டிவிட்டுப் போகும்போது இதையெல்லாம் உற்றுப்பார்க்க வாய்ப்பிருக்காது.
”இஞ்சேருந்த…இந்த பூத்தோடு நல்லாருக்குல்ல…”
கடை விற்பனையாளர் திருத்தினார்,
”அது ஆராதனா தோடு பாப்பா”
தன் அம்மாவின் காதில் கிடக்கும் தேய்ந்த ஏழுகல் தோடு மாதிரி ஒன்றுகூட அங்கு இல்லை.

fineartandyou.com

தான் எப்போது தங்கத்தோடு போட்டிருந்தோம் என்று யோசித்துப் பார்த்தாள் கமலி. பள்ளி சென்றபோது போட்டிருந்த பாகப்பிரிவினை தோடு, கடை வைக்க முதல் தேவைப்பட்டபோது விற்க வேண்டி வந்தது. அதிலிருந்து சாந்தி கடை அட்டையில் தொங்கும் வளையங்கள்தான்…மூன்று நான்கு மாதம் தாங்கும். கொஞ்சம் கொஞ்சமாகப் பாசி பிடிக்க ஆரம்பிக்கும்போது கவனமாக அடுத்தது வாங்கிவிட்டால் காதில் புண்வராமல் ஓட்டிவிடலாம். சற்றே தாமதமானால் அப்புறம் இரண்டு நாள் வேப்பங்குச்சி, தேங்காயெண்ணெய் என்று பரிகாரம் செய்ய வேண்டிவரும்.

கமலி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை மாமா வீட்டுக்குப் போயிருந்தாள். மாமி நன்றாகச் சமைப்பாள். அம்மா செய்வதைவிட வித்தியாசமாக இருக்கும். அதற்காகவே எப்படா லீவு விடுவார்கள் என்று காத்திருந்த நாட்கள்… நாகப்பட்டினத்தில் படித்துக்கொண்டிருந்த மாமன்மகள் ரேவதி சின்னதாகக் கல் பதித்து வளையமும் இல்லாமல் தொங்கலும் இல்லாமல் ஒரு புது மாடல் தோடு போட்டிருந்தாள். அந்த கெம்பு சிவப்புக்கல்லை ஆவல் மீற லேசாகத் தொட்டுப் பார்த்தாள் கமலி.
‘ அத்தாச்சி இது எத்தினி பவுனு’
லேசாக வாய்பிளந்து கேட்ட விதம், இவள் அழைப்பு எதுவுமே தனக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காதில் விழாததுபோல நகர்ந்து உணர்த்தினாள் அவள்.

ஊரிலிருந்து வந்தபின் வெறுப்பாக அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்..”.ஏம்மா நம்ம மட்டும் ஒண்ணுகூடப் புதுசா வாங்குறதே இல்ல…” வீட்டின் இயலாமையை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது அம்மாவுக்கு அலுத்துப் போய்விட்டது.

பின் எப்போதோ அந்த கெம்புத்தொங்கல் திருகாணி கழன்று எங்கோ விழுந்துவிட்டபோது கூட கமலி தொட்டுப்பார்த்ததும், அவள் பார்வையில் இருந்த ஏக்கமும், அதன் தீவிளைவும் பேசப்பட்டது அரசல்புரசலாகக் காதில் விழுந்தது. அம்மா அதைச்சொல்லிக் குறைப்பட்டபோது கூட கமலி அலட்டிக்கொள்ளாமல்..’ ஆமா…ஒன்னப்பாத்து இதயெல்லாம் சொல்றதுக்குன்னு ஆரு வந்தா…எனக்கு அதெல்லா ஞாவுகமே இல்ல…மாமி ஒருநாளு நீரு உருண்டை செஞ்சு குடுத்துச்சு பாரு…தண்ணியில போட்டு கொதிக்கவுட்டு…அந்த தண்ணி…ப்பா நெனச்சாகூட அவ்வுளோ ருசி…அதயெல்லாம் செஞ்சு கத்துக்குறியா…அதச்சொன்னாங்க இதச்சொன்னாங்கன்னு நல்லா பொரணி பேசு…’ என்று உருட்டிவிட்டுப்போய்விட்டாள்.

சுற்றிச்சுற்றிப் பார்த்தாலும் நாலு கண்ணாடி அலமாரிகள் மட்டுமே கொண்ட அந்த சின்ன நகைக்கடையின் வெல்வெட் அட்டையில் எடுத்து வைக்கப்பட்ட நாலைந்து பூத்தோடுகளும் ஒரே மாதிரிதான் இருந்தது கமலிக்கு. பொன் பூக்கள்…புதுக்கருக்கின் மின்னல்கள் …. சாந்தி கடையில் அட்டையில் மாட்டி வைத்திருக்கும் வேறு டிசைன் தோடுகளில் தேடிப் பார்த்தாலும், இந்த மின்னல் இருக்காது…தான் ஏன் திரும்பத் திரும்ப இந்த வளையங்களையே வாங்கிக் கொண்டிருக்கிறோம்…

எப்போதோ முதன்முதலில் பவுனில்லாத ஏதோ ஒன்றைப் போடுவது இழுக்கு என்ற அசட்டுத் தனமும் பழம்பெருமைக் கந்தலைத் தைத்தது தெரியாமல் மறைக்கும் மன நிலையுமாக அம்மா சொன்ன அறிவுரையை இவ்வளவு தீவிரமாகப் பின்பற்ற வேண்டியதில்லை… அடுத்தமுறை…. தொட்டுத்தொட்டு எடுத்துப் பார்த்துக்கொண்டாள். போட்டுக்கொள்ள வேண்டும் என்றுகூட இல்லை..இப்படி எடுத்துப் பார்க்க வாய்த்திருப்பதே கூட நன்றாகத்தான் இருக்கிறது.

அது ஒரு அரைமணி நேரத்துக்குமேல் நீடிக்க முடியாத கனவு . வழக்கம்போலக் கடைக்குத் திரும்பி ஓனரிடம் சொல்லிக்கொண்டு அவசரமாகப் பஸ்ஸைப் பிடித்து….நெரிசலும் தத்துவப் பாட்டுமாக வந்து இறங்கி அம்மா சுடவைத்துக்கொடுத்த குழம்பை ஆறிய சோற்றில் ஊற்றி விழுங்கிவிட்டுத் தூங்கிப்போன பிறகு கனவாகக்கூட வராத கனவு. மறுநாள் கிளம்பியபோது அம்மா என்னவோ குழப்பமாக மாறிமாறி நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தாள். சோறு அடிப்பிடித்து விட்டது என்றால் இவளிடம் திட்டுவாங்கப் பயந்துகொண்டு முழிப்பாள். தானே சாப்பாடு கட்டிக்கொள்ளலாம் என்று பார்த்தால், அடிப்பிடிக்கவெல்லாம் இல்லை. குழம்பை ஊற்றிக்கிளறி டப்பாவில் அடைத்துக்கொண்டு இறங்கப்போகும்போது தயங்கியபடியே…’ பாப்பா’ என்று ஒரு பொட்டலத்தை நீட்டினாள்.
‘ என்ன’
‘ இல்ல…நன்னிலத்துல ஆத்தா செத்துருச்சுல்ல…நாளான்னிக்கி எட்டு படைக்கிறாவோ…நம்மளும் பலகாரம் சுட்டுப்போடணும்…ஒண்ணும் பெரட்ட முடியில…”
‘ அதுக்கு…’
‘ இதக்குடுத்தாதான் எதாச்சும் கெடக்கிம். பாப்பொம்..ஒனக்குத் தீவாளிக்கி பணங்குடுத்தா வாங்கியிர்லாம்…’
‘ எனக்குத் தீவாளிப்பணத்துல… தோடு வாங்கப்போற…வருசாவருசம் வாங்குன அனுபவம் பாரு’ கோபமேயில்லாமல் நகைச்சுவை போலச் சொல்லிவிட்டு பொட்டலத்தைத் தன் பர்சுக்குள் வைத்துக்கொண்டு விரைந்தாள்.
இன்னிக்கி எந்த டிரைவரோ…சுசீலா பாட்ட போடற ஆளு வந்தா தேவலாம்….

நீர் உருண்டை, படம்: உமா மோகன்
நீர் உருண்டை, படம்: உமா மோகன்

நீர் உருண்டை
கால் கிலோ புழுங்கலரிசி
ஒரு மூடி தேங்காய்
அரிசியை இரண்டுமணிநேரம் ஊறவைத்து அரைக்க வேண்டும். துருவிய தேங்காயில் பாதியை அரைக்கும்போது சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். இதை, நீர்க்க கரைத்து வைத்துக்கொள்ளவும். அடி கனமான
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், வற்றல், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவை ஊற்றிக்கிளறவும். மீதமுள்ள தேங்காயும் இதில் சேர்த்து விடலாம். வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி இட்டிலித்தட்டில் வேகவைத்து எடுக்கவும். தேங்காய் சட்டினி தொட்டுக்கொள்ளலாம்.
இதிலேயே இன்னொரு வகை
எவ்வித தாளிப்பும் இல்லாமல், நீர்க்க கரைத்த மாவை வாணலியில் கொதிக்கவிட்டு திரண்டு வந்தபின் உருட்டி கொதிக்கும் நீரில் போட்டு வேகவிட்டு எடுப்பது. இம்முறையில் அரைத்த மாவு கழுவிய நீர்த்த கரைசலையும் சேர்க்கலாம். கூடவே தேங்காயும். தண்ணீரில் வெந்த உருண்டையும் சுவை. கொதித்த நீரை தேங்காயும் மாவுமாக மணக்க மணக்கப் பருகலாம்.

படைப்பாளரின் முந்தைய கதை:

மலர்

படைப்பு:

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Exit mobile version