Site icon Her Stories

கனவு மெய்ப்பட வேண்டும்

Portrait of smiling loving woman doing heart symbol shape gesture with hands, showing kindness. Happy affectionate girlfriend doing tender love gesturing for boyfriend, studio background, camera A

ஹலோ தோழமைகளே, நலம். நலமா?

சென்ற அத்தியாயத்தில் எண்ணமும் பேச்சும் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்த்தோம். மகிழ்ச்சி, உற்சாகம், நன்றி உணர்வு போன்ற நல் உணர்வுகளின் முக்கியதுவத்தைப் பார்த்தோம். அதே நேரம் அது இயல்பாகவும் ஆழமாகவும் இருக்க வேண்டியதைப் பற்றியும் பேசினோம். ஆனால், அதை எப்படிச் செயல்முறையாக்குவது?

சிறு குழந்தைகளைச் சிறிது நேரம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புரியும். அவை மகிழ்ச்சியாக இருக்கக் காரணமே தேவை இல்லை. குழந்தைகள் எப்போதும் இயல்பாக, உற்சாகமாக இருப்பர். சிறிய பொருள் கிடைத்தாலும் அதை வைத்து மகிழ்ச்சியாக விளையாடுவர்.

வளர வளரதான் நாம் அதை இழந்துவிடுகிறோம், நம் இயல்பு உற்சாகத்தில் இருந்து மாறிவிடுகிறது. ஓர் ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட மனிதர்கள் ஒரு பண்டிகை, ஒரு சினிமா, கடற்கரை, புதிய உடை, நல்ல உணவு என்று பல விஷயங்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆனால், இன்று எல்லாமே சுலபமாகக் கைக்கெட்டும் தூரத்தில் வந்த பிறகு அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் காணாமல் போனது. இன்றுள்ள மனிதர்களுக்கு உற்சாகம் என்கிற வார்த்தையே மறந்து போனது. எல்லாமே சலிப்புதான் அல்லது சாதாரணம்தான். ஆங்கிலத்தில் சொல்வதானால் everything is taken for granted மனநிலை. பின் இயல்பான, ஆழமான மகிழ்ச்சியை எப்படிச் சாத்தியமாக்குவது?

அதற்கு சுலபமான வழிதான், சுயபிரகடனம்              (Self Talk).

நம்மிடம் நாமே பேசிக்கொள்வது. நல்ல வார்த்தைகளை, நல்ல எண்ணங்களை மனதில் விதைத்துக்கொள்வது. இதில் ஒரே ஒரு சவால், நம்மிடம் உற்சாகமும் மகிழ்ச்சியும் இயல்பாக இல்லாததால், இதை நாம் திருப்பித் திருப்பி சொல்லிதான் ஆழ்மனதில் பதிய வைக்க முடியும். இதனால் உங்களுக்கு வேண்டியவாறு எல்லாம் நடக்கச் சிறிது காலம் பிடிக்கும். எவ்வளவு காலம் என்பது நமது முயற்சியைப் பொறுத்தது.

நாமெல்லாரும் சிறு வயதில் வாய்ப்பாடு மனப்பாடம் செய்திருப்போம். ஒன்றிலிருந்து பதினாறாம் வாய்ப்பாடு வரை மனப்பாடமாகக் கற்றவர்கள் நாம். ஆனால் எல்லாருக்கும் இது ஒரே மாதிரி சாத்தியபட்டதா என்றால் இல்லை. நாம் எடுத்த முயற்சிக்கு ஏற்றவாறு ஆளாளுக்கு மனப்பாடம் செய்யும் காலமும் மனப்பாடமாகச் சொல்லும் வேகமும் மாறுபட்டது. அதே போல்தான் நல்ல எண்ணங்களை மனதில் பதிய வைப்பதும்.

இன்னோர் உதாரணம் காரோ அல்லது இரு சக்கர வாகனமோ ஓட்டிப் பழகுதல். ஆரம்பத்தில் பிரேக் போடுவதாகட்டும், கியர் மாற்றுவதாகட்டும் நாம் மிகக் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. நாளாக நாளாக நாம் இதை ஓர் அனிச்சை செயலாகச் செய்ய ஆரம்பித்து விடுவோம். அப்படியென்றால் வண்டி ஓட்டுவது நம் ஆழ்மனதில் பதிந்து விட்டதெனப் புரிந்துகொள்ளலாம். ஆழ்மனதில் பதிய வைக்க சுலபமான வழி அதைத் திருப்பித் திருப்பிச் செய்வது மட்டுமே. ஒரு முறை பதிய வைத்து விட்டால் அதை மிக அழகாகச் செயல்படுத்தும் திறமை கொண்டது ஆழ்மனம்.

சரி எப்படிப் பதிய வைப்பது என்பது தெரிந்து விட்டது. என்ன பதிய வைப்பது?

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லிச் சொல்லி பதிய வையுங்கள்.

சில எச்சரிக்கைகள்.

  1. சொல்லும் அனைத்தும் நேர்மறையாக இருத்தல் அவசியம்.

நீங்கள் மற்றவரைப் பற்றிப் பேசும் போதும் இதைக் கவனத்தில் வையுங்கள். ‘அவனெல்லாம் உருப்படவே மாட்டான்’ என்று யாரையாவது திட்ட தோன்றினால், நினைவில் வையுங்கள், உங்கள் ஆழ்மனதிற்கு அவனைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. நீங்கள் எது சொன்னாலும் அதை உங்களுக்குத்தான் பரிசளிக்கும். அப்போது உருப்படாமல் போக போவது யார்? சந்தேகமில்லாமல் நாம்தான். அதனால் எப்போதும் எல்லாரிடமும் நல்ல வார்த்தைகளை உபயோகம் செய்யுங்கள், நல்ல எண்ணங்களை மட்டுமே எண்ணுங்கள். சிலர் யாரை வாழ்த்தினாலும் ‘வாழ்க வளமுடன்’ என்பார்கள். இந்த வாழ்த்துகளின் பலன் வாங்குபவரை விட வாழ்த்துபரையே அதிகம் சேரும்.

இப்போது கூறுங்கள் இன்று நீங்கள் இருக்கும் நிலமைக்கு யார் காரணம்? சந்தேகமில்லாமல் நீங்கள் தான்…. என்ன கேட்டீர்களோ அதுதான் கிடைத்தது. எப்படிக் கேட்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டால் இனி எல்லாம் சுகமே.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

Exit mobile version