Site icon Her Stories

மனைவியை இழந்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை

Fitness. Man in the gym

வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்தான் வருண். மகன் வேந்தன் கவலையாக அமர்ந்திருந்தான்.

“வேந்தா, படிக்காம என்ன பண்றே? புக்கை எடு.”

சோஃபாவின் அடியில் முந்தைய நாள் இரவு சரக்கடிக்கும் போது நிலா விட்டெறிந்திருந்த பியர் பாட்டில் மூடிகளை எக்கிப் பொறுக்கி எடுத்தான். காலி சிப்ஸ் பாக்கெட்டுகளும் தூசியோடு கையில் கிடைத்தன.

“காலைத் தூக்குடா? அப்பா பெருக்கிட்டு இருக்கேன்ல? பதிமூணு வயசாச்சு; ஆம்பளப் புள்ள வீட்டு வேலைல கூடமாட ஒத்தாசை செய்யுதான்னு பாரு.”

அப்போது நிலா அங்கு வந்தாள்.

“ஐயோ வேர்க்குது… ஃபேனைப் போடேன்!”

“ஒரு நிமிஷம் இருங்க. நீங்க வேற!” செல்லக் கோபத்துடன் நிலாவைத் திட்டினாலும், அவசர அவசரமாகப் பெருக்கி முடித்துவிட்டு ஃபேனை ஓட விட்டான் வருண்.

”வருண், டீ போட்டியா?”

”இருங்க கொண்டு வரேன்.” வியர்க்க விறுவிறுக்க கிச்சனுக்குள் போனான் வருண்.

படித்துக்கொண்டிருக்கும் வேந்தனின் அருகில் அமர்ந்து அவனைக் கொஞ்சத் தொடங்கினாள் நிலா.”

“அம்மா…”

“சொல்லுடா குட்டி,”

“என் ஃப்ரெண்ட் வசந்த் இருக்கான்ல…”

“ஆமாம்.”

“அவங்கம்மா போன மாசம் இறந்துட்டாங்கம்மா.”

“அச்சச்சோ… எப்படி?”

“அவங்களுக்கு ரொம்ப நாள் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. நேத்திக்கு ஸ்கூல்ல அவங்கப்பாவைப் பார்த்தேன். ஷாக் ஆயிட்டேம்மா.”

“ஏன்பா?”

“அவர் செம்ம ஸ்மார்ட்டா இருப்பார்மா. மீசை தாடி, அழகான ஹேர்ஸ்டைல்னு. இப்ப முழுக்க மொட்டை அடிச்சு, தலையைச் சுத்தி ஒரு துணி. அப்புறம் மீசை தாடி எல்லாம் மழமழன்னு ஷேவ் பண்ணி, வெள்ளை வேட்டி சட்டையோட இருந்தார்மா. எங்க கண்ணுலலாம் தண்ணியே வந்துடுச்சு.”

“ஹும்… என்ன பண்றது வேந்தா. பாவம் அவன் தலைவிதி அப்படி” என்று பெருமூச்சு விட்டாள் நிலா.

“என்னம்மா இப்படிச் சொல்ற?”

“என்னடா பண்றது. ஆம்பளையாப் பொறந்தா அதான் தலையெழுத்து. இப்பலாம் கொஞ்சம் காலம் மாறிட்டு வருது. வேலைக்குப் போற ஆண்கள் இந்தச் சடங்கை எல்லாம் செஞ்சுக்கிறதில்ல. ஓரளவு அடக்கமா ட்ரஸ் பண்ணிட்டுப் போறதோட சரி. உன் ஃப்ரெண்ட் வசந்தோட அப்பா உண்மையில நம்ம கலாசாரத்தைக் காப்பாத்துற க்ரேட் மேன். கையெடுத்து, கும்பிடணும்.”

”ஆமாம்மா. அவர் டெந்த்கூடப் படிக்கலையாம். வேலையும் இல்ல. வசந்த் அம்மாவோட ஆபிஸ்ல அவருக்கு ஹவுஸ் கீப்பிங் வேலை போட்டுத் தரதா சொல்லி இருக்காங்க போல.”

”ஹும்… இதுக்குத்தான் ஆண்களைக் கொஞ்சமாச்சும் படிக்க வெக்கணும். இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது படிப்பாவது கை கொடுக்கும் இல்லியா?”

வருண் கொண்டு வந்த டீயை வாங்கிக் கொண்டாள் நிலா.

வேந்தனுக்கு டீயைக் கொஞ்சம் ஆற்றிக் கையில் கொடுத்துவிட்டு, ”என்னங்க, என்னங்க, நான் துணி காயப் போட்டு வந்துடுறேன்” என்று இருவருக்கும் கேட்கும்படி கத்தி சொல்லிவிட்டு வெளியேறினான் வருண்.

வேந்தனும் நிலாவும் அவன் போனதையே கவனிக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை.

“அம்மா, ஒய்ஃப் இறந்ததே மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும். அதுல இப்படி மொட்டை அடிச்சு, ட்ரஸ், ஹேர்ஸ்டைல எல்லாம் மாத்தச் சொல்றது எவ்ளோ பெரிய கொடுமை. ஏன்மா இப்படிப் பண்றாங்க?”

”என்னடா பண்றது, எல்லாம் ஆண்களோட பாதுகாப்புக்காகத்தான்.”

“எப்படி?”

“மனைவி இறந்தப்புறமும் அழகா இருந்தா மத்த பொண்ணுங்க தொல்லை கொடுப்பாங்கல்ல? அதுக்காக அப்படி ஒரு பழக்கம் நம்ம முன்னோர்கள் வெச்சிருந்தாங்க. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இது கலிகாலம் நிறைய கெட்டுடுச்சு. நிறைய பழக்கமும் மாறிடுச்சு. பொண்டாட்டி செத்தாகூட மீசையும் தாடியும் கலர் ட்ரெஸ்ஸுமா ஹாட்டா சுத்துறாங்க. பழகிக்க வேண்டியதுதான். சரி, நீ போய்ப் படி.”

“சரிம்மா.” இருவரும் குடித்து வைத்த டீ டம்ளர்களை எடுத்துப் போய்க் கழுவி வைத்துவிட்டுப் படிக்க உட்கார்ந்தான் வேந்தன்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.

Exit mobile version