இரண்டாம் நாள்.
காலையில் எனக்கு வழக்கமான நேரத்திலேயே விழிப்பு தட்டியது. இருந்தாலும் இரவு நெடுநேரமானதால் கொஞ்சம் சோம்பலுடனே படுத்திருந்தேன். வெயில் உறைக்க ஆரம்பித்ததும் எழுந்து வெளியே உலவப் போனோம். சமையலறையில் ஃப்ரீசரில் பால் இருந்தது. எலிசபெத் அக்கா எல்லோருக்கும் தேநீர் தயாரித்தார். நான் ‘சுகர் கட்’ டில் இருந்தாலும் தேநீருக்குப் பெயர் போன கேரளா போய் டீ குடிக்காமல் வருவதா என்று அன்று டயட்டை ஒத்தி வைத்து விட்டு அந்த அருமையான தேநீரை ரசித்து, ருசித்துக் குடித்தேன். மீண்டும் எல்லோரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டு இருந்தோம். பதினோரு மணிக்கு அறையைக் காலி செய்துவிட்டுப் புறப்பட வேண்டும் என்று ப்ரியா நினைவூட்டினார். எல்லோரும் மடமடவென்று குளித்து, தயாராகி பெட்டிகளை எல்லாம் கட்டிக் கொண்டு வெளியே வந்து சிறிது நேரம் காத்திருந்து ஜேசி டென்வில்லாவுக்கு டாட்டா காட்டிவிட்டு இரண்டு ஆட்டோக்களில் பயணித்து ஃபோர்ட் கொச்சின் (Fort Cochin) வந்தடைந்தோம். இது நவீன கேரளாவிற்குள் இருக்கும் ஒரு குட்டி ஐரோப்பா என்று சொல்லலாம். கி.பி.1503இல் போர்த்துகீசியர்கள் இங்கு இமானுவேல் கோட்டையைக் (Fort Emmanuel) கட்டினார்கள். பின்னர் இந்த இடம் டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசமானது. இதனால் இங்குள்ள கட்டிடங்களில் போர்த்துகீசிய, டச்சு, பிரிட்டிஷ் கலாச்சாரங்களின் தாக்கத்தைக் காணலாம்.
அங்கே நேப்பியர் ஹெரிடேஜ் என்னுமிடத்தில் இரண்டு அறைகளை ப்ரியா புக் செய்திருந்தார். வரவேற்பறையில் காத்திருந்தபோது அங்கே இளநீர் மற்றும் தேங்காய் ஓடு கொண்டு அழகழகான கலைப் பொருட்களைச் செய்து விற்பனைக்கு வைத்திருந்தனர். என் அம்மா கைப்பையை அவ்வை சண்முகி ஸ்டைலில் தோளில் தூக்கிப் போட்டதில் ஓர் அழகான கலைப் பொருள் கீழே விழுந்து உடைந்துவிட்டது. (அதன் விலை ரூ.1600 என்று மறுநாள்தான் தெரிந்தது).நாங்கள் கதகளி என்கிற கட்டிடத்தில் தங்கினோம். வெயில் அதிகமாக இருந்ததால் அங்கேயே சிறிது நேரம் கழித்துவிட்டுச் சாப்பிடப் போகலாம் என்று முடிவு செய்துவிட்டு நேரத்தைக் கழிக்க கார்ட்ஸ் விளையாடினோம்.
இரண்டு மணிக்குப் பசிக்கத் தொடங்கவே சாப்பிடப் புறப்பட்டோம். இங்குள்ள பிரின்சஸ் ஸ்ட்ரீட்டில் (Princess Street) கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கேரள மற்றும் ஐரோப்பிய உணவுகளின் கலவையாக இருக்கின்றன. மெல்ல நடந்து பந்தல் என்கிற கஃபேக்கு வந்தோம். போர்ட் கொச்சியின் உண்மையான அழகை ரசிக்க நடந்தோ அல்லது சைக்கிளிலோ பயணிக்க வேண்டும். இங்குள்ள குறுகிய தெருக்களில் சுற்றித் திரிய வேண்டும். ஒவ்வோர் இடமும் ஒரு கதையை நமக்குச் சொல்கிறது. கஃபேக்குள் வந்து அமர்ந்தோம். ஐரோப்பிய உணவுகளைச் சாப்பிட்டுப் பார்ப்போம் என்று மார்கரீட்டா பீட்ஸா, ஜெலப்பினோ சிக்கன் பீட்ஸா, சாண்ட்விச், ஃப்ரெஞ்ச் ஃப்ரை, தர்பூசணி ஜூஸ் தருவித்து சுவைத்தோம். சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை.
அங்குள்ள தெருக்களில் நடைபாதையின் இருபுறமும் நூற்றாண்டுகள் தாண்டிய மிகப் பழமையான மரங்கள் கிளைக் கரங்களை நீட்டி நிழலைப் பரப்பியிருந்தன. சிறிய சதுரங்களான கருங்கற்களை வட்ட, வட்டமாகப் பாவி அழகாக நடைபாதைகளை நிர்மாணித்திருந்தார்கள். சிறிது நேரம் நடந்து இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான செயின்ட் பிரான்சிஸ் சர்ச்சுக்கு வந்தோம். கி.பி. 1503இல் போர்த்துகீசியர்களால் இந்தத் தேவாலயம் கட்டப்பட்டது. முதலில் இது மரத்தால் கட்டப்பட்டது. பின்னர் 1516இல் கற்களைக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த சர்ச்சின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு என்னவென்றால் இந்தியாவிற்குக் கடல்வழி கண்டறிந்த புகழ்பெற்ற போர்ச்சுகீசிய கடற்பயணியான வாஸ்கோடகாமா டிசம்பர் 24, 1524இல் தனது மூன்றாவது இந்தியப் பயணத்தில் கொச்சியில் காலமானபோது அவரது உடல் இங்குதான் முதலில் அடக்கம் செய்யப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1539இல் அவரது மகன் மூலமாக அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஓர் அழகான கல்லறைப் பலகை (Gravestone) இன்றும் உள்ளது. சிறிய இரும்புக் கம்பிகள் சூழ்ந்த இந்த இடத்தில் வாஸ்கோடகாமாவின் பெயர் மற்றும் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வாஸ்கோடகாமா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமாக இது அறியப்படுவதால் நிறைய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
காலப்போக்கில் கொச்சி பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்த சர்ச்சும் பலவிதமான மாற்றங்களைக் கண்டது. கி.பி. 1503லிருந்து 1663 வரை போர்த்துகீசியர்களின் கத்தோலிக்க தேவாலயமாக இருந்தது. கி.பி.1663 – 1795 வரை டச்சுக்காரர்கள் கைப்பற்றி சீரமைத்தனர். கி.பி. 1795லிருந்து ஆங்கிலேயர்கள் காலத்தில் இது செயிண்ட் பிரான்சிஸ் சர்ச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சர்ச்சின் உள்ளே மரத்தால் செய்யப்பட்ட கூரைகளும், பழங்கால ஓவியங்களும் மிக அழகாக உள்ளன. சர்ச்சின் உள்ளே வீடியோ எடுக்க அனுமதியில்லை. காலணிகளை வெளியிலேயே கழற்றி வைத்துவிட்டு, உள்ளே நுழைய வேண்டும். அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார்கள். வாஸ்கோடகாமாவின் சமாதியைத் தவிர இந்த சர்ச்சின் சுவர்களில் பழங்கால டச்சு மட்டும் போர்த்துக்கீசிய கல்வெட்டுகளையும் நாம் பார்க்கலாம். அவை அந்தக் காலத்து வரலாற்றை அமைதியாகப் பேசுகின்றன. போர்த்துக்கீசிய பாணியிலான எளிய மற்றும் அழகான கட்டிடக் கலைக்கு இந்த தேவாலயம் அருமையான சாட்சி.
அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். வழியில் அழகழகான கட்டிடங்கள் ஒன்றை மற்றொன்று விஞ்சின. வழியில் இருபுறம் இருந்த கடைகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர நிறையப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. வெயில் வேறு மண்டையைப் பிளந்தது. ஒரு சிறிய கடையில் போய் காரமோர் குடித்தோம். பச்சை மிளகாய், இஞ்சி அரைத்துப் போட்டு அளவாக உப்பு கலந்து சில்லென்று மோர் தொண்டையில் இறங்கியதும் வயிறெல்லாம் குளிர்ந்தது. அங்கே அன்னாசி, மாங்காய், நெல்லிக்காய், கேரட் என்று உப்பிலிட்டவற்றைக் கண்ணாடி ஜார்களில் வைத்திருந்தார்கள். நீர் நிறைய ஊற்றிய ஜாரில் வினிகர், கல் உப்பு கலந்து பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு வேண்டிய காயை வெட்டிப் போட்டு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு கை படாமல் கரண்டியை வைத்து எடுத்துச் சாப்பிட்டால் சுவை அள்ளும். உப்பிலிட்ட மாங்காயை வாங்கி ஆளுக்கொரு துண்டு சுவைத்தோம்.
மீண்டும் நடந்து கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தொலைவில் அமைந்த கடற்கரைக்கு வந்தோம். பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மாலை நேரத்தில் உலவி விட்டு வரவும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கவும் சிறந்த இடமாக இருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் கொச்சி திருவிழா, ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய நாளிலும் ஃபோர்ட் கொச்சி கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் அணிவகுப்புகள், இசை, நடனம் மற்றும் வாணவேடிக்கைகள் இடம்பெறுவதால், இது கடற்கரைக்குச் சென்று வர ஒரு பண்டிகைக்காலமாக அமைகிறது. அங்கே சிறிது நேரம் அமர்ந்து கடலை ரசித்துக் கொண்டிருந்தோம்.
பின்னர் ப்ரியா வாட்டர் மெட்ரோ படகில் பயணிக்க அழைத்துச் சென்றார். மிகவும் குறைந்த கட்டணத்தில் (ஒரு ஆளுக்கு ரூ.50) கிட்டத்தட்ட ஒருமணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு படகில் ஏறினோம். எர்ணாகுளம் ஹைகோர்ட் சந்திப்பிற்கு அருகில் உள்ள டெர்மினலில் இருந்து ஃபோர்ட் கொச்சிக்கு நேரடியாகச் செல்லலாம். சுமார் இருபது முதல் இருபத்தைந்து நிமிடங்கள் மட்டுமே பயண நேரம். சாலை வழியாகச் சென்றால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை இது முற்றிலும் தவிர்க்கிறது. முழுவதும் குளிரூட்டப்பட்ட மின்சாரப் படகில் சத்தமில்லாமல், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பயணித்தோம். படகின் பெரிய சன்னல்கள் வழியாகக் காயலின் அழகையும், கப்பல்களையும் ரசித்ததுப் பார்த்தோம். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தப் படகுகள் இயக்கப்படுகின்றன. சில படகுகளில் இரண்டு சக்கர வாகனங்களையும் ஓட்டுநர்களோடு ஏற்றிச் சென்று மறுகரையில் இறக்கி விடுகிறார்கள். பொதுவாக ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை படகுகள் இயக்கப்படுகின்றன. பிரம்மாண்டமான சரக்குக் கப்பலை அருகில் பார்த்த அனுபவம் அருமையாக இருந்தது. மறுகரையில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.
வழி நெடுக கடைகள் வரிசையாக அமைந்திருந்தன. ஓர் இடத்தில் அரைமணி நேரத்தில் பென்சில் ஓவியத்தில் நம்மைக் கிட்டத்தட்ட அதேபோல் வரைந்து தருகிறார்கள். மகள் அங்கே தன்னை வரைந்து வாங்கிக் கொண்டார். பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. மாம்பழக் குலுக்கி சர்பத் குடித்துவிட்டு, நாங்கள் கடற்கரையில் இருந்த திண்டுகளில் அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்த்து ரசித்தோம். ஒரு பெரிய ஆரஞ்சுப்பழம் போலச் சூரியன் மேகக் கூட்டத்தில் இருந்து நழுவி விழுந்தது. இருட்டும் வரை இருந்துவிட்டு, மீண்டும் பயணச் சீட்டு வாங்கி இக்கரைக்குத் திரும்பினோம். நடந்தே மீண்டும் நேப்பியர் ஹெரிடேஜ்க்குத் திரும்பினோம். இரவு உணவுக்கு வெளியே போக வேண்டாம் என்று முடிவு செய்து ஸ்விகியில் மந்தி ரைஸும் ஆல்ஃபமும் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டு, மீண்டும் சீட்டு விளையாடிக் கொண்டு உற்சாகம் குறையாமலே உறங்கச் சென்றோம்.
(தொடரும்)
படைப்பாளர்
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.


