Site icon Her Stories

அமெரிக்காவின் முதல் தொழில்முறைப் பெண் வானவியலாளர் மரியா மிட்செல்

இன்று அமெரிக்காவின் முதல் தொழில் முறை வானவியலாளர் மரியா மிட்செல் (Maria Mitchell) பிறந்த நாள். அவர் 1818ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று அமெரிக்காவில் பிறந்தார். அவர்  பிரபலமான வானவியலாளர், கல்வியாளர், நூலகர், இயற்கை ஆர்வலர் மற்றும் பெண்ணுரிமைப் போராளி.

மரியா 1847ஆம் ஆண்டு தொலைநோக்கி மூலம் ஒரு வால்மீனைக் கண்டுபிடித்தார். அதன் பெயர் C/1847 T1. அதற்காக 1848ஆம் ஆண்டில் அவருக்கு டென்மார்க் மன்னர் கிறிஸ்டியன் VIII தங்கப் பதக்கம் வழங்கினார். அவரது கண்டுபிடிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அவர் கண்டுபிடித்த  வால்மீனுக்குப் பின்னர் அவரது நினைவாக ’மிஸ் மிட்செல்ஸ் வால்மீன்’ (Miss Mitchell’s Comet) என்று பெயர் சூட்டப்பட்டது.

அவரது தந்தையின் பெயர் வில்லியம் மிட்சல். பள்ளி ஆசிரியர், வானவியலாளர். அவரது அன்னை லிடியா கோல்மேன் மிட்செல். அன்னை நூலகத்தில் பணிபுரிந்தார். மரியா மிட்செல் பெற்றோரின் 10 குழந்தைகளில் 3வது குழந்தை. பெற்றோர் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வியும், இயற்கை அறிவும், வானவியலும் கற்றுக் கொடுத்தனர். மரியா கணிதத்திலும், வானவியலிலும் சிறந்து விளங்கினார். மரியாவுக்கு அவரது தந்தைதான் தொலைநோக்கிப் பயன்படுத்துவதைக் கற்றுக்கொடுத்தார்.

அவர் தனது தந்தையால் நடத்தப்பட்ட பள்ளி உட்பட, மாசசூசெட்ஸின் பள்ளிகளில் கல்வி கற்றார். வானியலில் அவருக்கு இருந்த ஆர்வம் அவரது தந்தையால் தூண்டப்பட்டது. அவர் திமிங்கிலக் கப்பற்படைக்கான காலமானிகளை மதிப்பிடும் பணியில் அவருக்கு உதவினார். அவர் தனது தொலைநோக்கியின் பயன்பாட்டை ஊக்குவித்தார். 1836 முதல் 1856 வரை மரியா பகலில் நூலகராகப் பணிபுரிந்தார் (பெரும்பாலும் முறைசாரா ஆசிரியராகச் செயல்பட்டார்). இரவில் வானியல் ஆய்வாளராகத் திகழ்ந்தார்.

மரியா மிட்செல் வாசார் கல்லூரியில் பதவி ஏற்ற பிறகு, தொழில்முறை வானியலாளராகவும் வானியல் பேராசிரியராகவும் பணிபுரிந்த முதல் சர்வதேசப் பெண்மணி. 1865ஆம் ஆண்டில் அவர்  அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாடமி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

பெண்களின் வாக்குரிமை இயக்கத்தில் (women’s suffrage movement) தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் கல்விக்கான ஆதரவாளராக இருந்தார். 1873ஆம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கான சங்கத்தின் (Association for the Advancement of Women) இணை நிறுவனர் ஆனார்.

சூரியப் புள்ளிகளின் தினசரி ஒளிப்படம் எடுப்பதில் மிட்செல் முன்னோடியாக இருந்தார். சூரியப் புள்ளிகள் அதனைச் சுற்றியுள்ள இடங்களைவிட செங்குத்து துவாரங்களில் சுழல்வதை அவர் முதலில் கண்டுபிடித்தார். அவர் வால்மீன்கள், நெபுலாக்கள், இரட்டை விண்மீன்கள், சூரிய கிரகணங்கள், சனி மற்றும் வியாழனின் துணைக்கோள்களையும் ஆய்வு செய்தார். 1869இல் அமெரிக்கன் தத்துவவியல் சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பெண்கள் முன்னேற்றத்திற்கான சங்கத்தை (AAW; 1873) நிறுவ உதவினார் மற்றும் அதன் தலைவராகப் பணியாற்றினார் (1875-76). AAW இல் அவரது ஈடுபாடு வாக்குரிமை உட்பட பெண்களின் உரிமைகளுக்கான மிட்செலின் ஆதரவைப் பிரதிபலித்தது. அவர் 1888ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் வாஸரில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவர் அவரது 70 வயதில் மூளை நோயால் 1889ஆம் ஆண்டு, ஜூன் 28ஆம் நாள் மரணித்தார்.

மரியா மிட்சல் ஆய்வகம் மற்றும் மரியா மிட்சல் சங்கம் போன்ற பல மரியாதைகள் அவர் மறைவுக்குப் பிறகு உருவாக்கப்பட்டன.

ஆகஸ்ட் 1, 2013 அன்று, கூகிள் மரியா மிட்செலை கூகுள் டூடுல் மூலம் கௌரவித்தது.

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

Exit mobile version