சக்கர நாற்காலி
நான் அமெரிக்கா வந்த புதிதில், என் மகளை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு சென்ற போதும், வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்த போதும், நான் தவறாமல் பார்த்த காட்சி, ஒரு சிறுவன் சக்கர நாற்காலியில் செல்வான். பின்னால் அவனது தந்தையார் அமைதியாக நடந்து போய்க் கொண்டிருப்பார். பள்ளி தொடங்கும்வரை மகன், தன்னுடன் பயின்று வரும் மாணவர்களுடன் விளையாடுவதைக் கவனிப்பார். பள்ளி தொடங்கியதும், மீண்டும் வீட்டிற்கு நடப்பார்.
சிறிது காலத்திற்குப் பின் நான் பள்ளியில், மதிய உணவு விநியோகிக்கும்,
தன்னார்வ பணியாளராக சேர்ந்தேன். அதனால் பள்ளியில் கூடுதல் நேரம்
செலவழிக்க வேண்டியதானது. அப்போது கவனித்தது, அந்த தந்தை மதிய உணவு இடைவேளைக்கும் வருவார். மகன் சாப்பிடுவதை கவனிப்பார். மகன் விளையாடுவதைக் கவனிப்பார். பள்ளி தொடங்கியதும், மீண்டும் வீட்டிற்கு நடப்பார். மகனின் விளையாட்டுப் பாட வேளையிலும் வருவார். மகன் விளையாடுவதைக் கவனிப்பார். மீண்டும் வீட்டிற்கு நடப்பார்.
அவர் வந்தது, மகனுக்கான சிறு சிறு தேவைகளைக் கவனிக்க. ஆனால் அவனுடன் படிக்கும் குழந்தைகள் அவனுக்கான அனைத்து உதவிகளையும் செய்து விடுவார்கள். அவர் அருகில் நின்று கவனிப்பார். அவ்வளவுதான். மாணவர்கள் அவனை கழிவறை அழைத்து செல்வார்கள், சாப்பிட்ட பிறகு, குப்பையை குப்பைத் தொட்டியில் போட உதவுவார்கள். விளையாடுவதற்கு உதவுவார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், கால் பந்து விளையாடுவதாக இருந்தால்,அந்த சிறுவன், தனது கைகளைக் கால் போல பயன்படுத்துவான். மாணவ மாணவியரின் யாராவது, அவனது சக்கர நாற்காலியை இயங்குவார்கள்.
ஓரிரு ஆண்டுகள் கழித்து அவன் வேறு பள்ளிக்கு, கல்லூரிக்கு படிக்க
சென்றான். இப்போது அவன் தனியாக செல்வதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.
இங்கு உள்ள சாலைக் கட்டமைப்பைப் பற்றி பலரும் வியந்து பாராட்டுவார்கள். ஆனால், எனக்கு மிகவும் வியப்பாக இருப்பது, நடைபாதைக் கட்டமைப்பு தான். நடைபாதையில், குறிப்பிட்ட இடைவெளியில் சாய்தளம் கண்டிப்பாக இருக்கும். அது, இவ்வாறு சக்கர நாற்காலியில் வர வேண்டியவர்களுக்கு மிகவும் உதவியாக
இருக்கும். குழந்தையை ஸ்ட்ரோலரில்(stroller) வைத்து வருபவர்கள், சக்கரம் வைத்த சிறு கார்ட்டில் (cart) கடையிலிருந்து பொருட்கள் வாங்கி வருபவர்கள், வாக்கர் (walker) வைத்து நடந்து வரும் முதியவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் என அனைவருக்கும் இந்த சாய் தளம் பயன்படும்.
பேருந்துகள் என எடுத்துக் கொண்டால், அனைத்துப் பேருந்துகளிலும், நடக்க இயலாதவர்கள் ஏறி இறங்குவதற்கான வசதி உண்டு. பேருந்து ஓட்டுநர் படிக்கட்டுகளை சமதளமாக மாற்றி சக்கர நாற்காலி ஏறுவதற்குரிய வசதியை செய்து கொடுப்பார். பயணி ஏறி இறங்க முடியாத அளவிற்குப் பாதிக்கப் பட்டவராக இருந்தால், ஓட்டுநர் இறங்கி வந்து, அவர்களை பேருந்தில் ஏற்றி விடுவார். பேருந்தில் முதல், இரண்டு, மூன்று இருக்கைகளை மடக்கி வைத்து விடலாம். அதனால் பயணி தனது சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து பயணம் செய்யலாம். பயணி இறங்கும் போதும் இதே வழிமுறைதான்.
இது போக மாற்றுத் திறனாளிகளுக்காக ரெடி-வீல்ஸ் எனப்படும் சேவை உண்டு. இது ஏறக்குறைய uber போன்றது. ஆனால் கட்டணம், பேருந்து கட்டணம் போல குறைவாக இருக்கும். மேலும் பல தன்னார்வ அமைப்புகளும் இலவசமாக கோவில், கடை போன்றவற்றிற்கு அவர்களை வீட்டிலிருந்து அழைத்து சென்று மீண்டும் கொண்டு வந்து விடும்.
மிகப் பெரிய வணிக வளாகமாக இருந்தாலும் சிறு மளிகைக் கடையாக இருந்தாலும் சரி, கழிவறை இல்லாமல் இருக்காது. அவற்றுள் ஒன்றாவது நடக்க இயலாதவர்கள் பயன்படுத்தும் விதமாகத் தான் இருக்கும். பெரும்பாலான கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதியுடன் சக்கர நாற்காலிகள் உண்டு. தானியங்கி கதவுகள் உண்டு. தானியங்கி கதவு இல்லையென்றாலும், அமர்ந்தவாறே திறந்து மூடும் வசதி கண்டிப்பாக இருக்கும்.
ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப் படும்.
ரயிலில் நிலையத்தில் குறிப்பிட்ட பகுதி அவர்களுக்காக ஒதுக்கப்
பட்டிருக்கும். அந்த இடத்தில் (blue boarding assistance) அவர்கள் தங்கள்
சக்கர நாற்காலியில், அல்லது அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து
கொள்ளலாம். ரயிலில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் ரயிலிலிருந்து
இறங்கி வந்து அவர்களை ரயிலில் ஏற்றி விடுவார். இறங்க வேண்டிய இடத்தில் இறக்கியும் விடுவார்.
அமெரிக்காவில் இவ்வாறு பலவிதமான வசதிகளும் இருப்பதால் பெரும்பான்மையான மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்வினால் சிரமப் படுபவர்கள் தனியாக செயல்பட முடிகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம் ஊரில் இப்படியெல்லாம் இல்லையே என ஒரு ஏக்கம் வரும்.
கட்டுரையாளரின் பிற படைப்புகள்:
கட்டுரையாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.