Site icon Her Stories

விருந்து

“சப்பாத்தி உருட்டுவீங்களா?”

இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள்.

கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா அளவுக்காக உருட்டி வைத்திருந்த உருண்டைகளை ஒவ்வொன்றாகத் தேய்க்கத் தொடங்கினாள். எவ்வளவு மெலிதாகத் தேய்த்தாலும் அப்பளத்தை விட ஒரு சுற்றுப் பெரியதாக வந்தது.

பத்து உருண்டைகள். என்ன கணக்கு என்று தெரியவில்லை. எண்ணிச் சுட்டப் பணியாரம் என்பது போல, இது யார் வயிற்றுக்குப் போதும் என்று தெரியவில்லை. சாதாரணமாகச் சாப்பிடப் படுத்தி எடுக்கும் மகள், சப்பாத்தி என்றால் கொஞ்சம்கூடச் சாப்பிடுவாள். அதிலும், வெளியே விருந்துக்கு என்று வந்துவிட்டாலே பிள்ளைகளின் வயிறுதான் எப்போதும்விடக் கொஞ்சம் பெரிதாகிவிடுமே. நாம் அப்போதுதான் நம் பிள்ளைகள் சரியாகச் சாப்பிடுவதே இல்லை என்று அங்கலாய்த்திருப்போம். மிகச் சரியாக அப்போது என்று பார்த்துதான் பிள்ளைகள் எப்போதையும்விட அதிகமாகச் சாப்பிட்டு வைப்பார்கள். சொன்ன நாம்தான் அசடு வழிய நிற்க வேண்டும்.

தொட்டுக்கொள்ள என்ன செய்திருக்கிறாளோ, அல்லது அதையும் இனிமேல்தான் செய்ய வேண்டுமா தெரியவில்லை.

இவளும் மகளும் எல்லாச் சப்பாத்திகளும் போட்டு முடிக்கும் சமயம் போன் பேசியபடியே வந்தாள்.

“அவங்கப்பாதான். ஆபிஸ் விஷயமா டில்லிக்குப் போயிருந்தார். இந்நேரம் வந்திருக்கணும். ஃப்ளைட் ஏதோ டிலே ஆகிடுச்சு போல. இதோ இப்ப வந்துருவார்…”

“…”

“அச்சோ, நான் வர்றதுக்குள்ள நீங்களே எல்லாம் போட்டு முடிச்சிட்டீங்களா…”

“…’’

“தொட்டுக்க, காலைல தோசைக்குச் செஞ்சிருந்த தக்காளிச் சட்னி ஃப்ரிட்ஜ்ல இருக்கு. மதியம் வச்ச சாம்பார் கொஞ்சம் இருக்கு. சுட வைச்சுக்கலாம். ரெண்டு, மூணு தோசை மட்டும் போட்டுட்டம்னா சாப்பிட உக்கார்ந்துறலாம். தோசை போடறீங்களா? மழை வர்ற மாதிரி இருக்கு. நான் மொட்டமாடில காய்ற துணியெல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன். அதுக்குள்ள அவங்கப்பாவும் வந்துருவாரு.”

இவளுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. முன்னாடியே சொல்லியிருந்தால், தோசையை ஊற்றிய பிற்பாடு சப்பாத்தி போட்டிருக்கலாம். இப்போது சப்பாத்தி போட்ட கல்லில் தோசையை ஊற்றினால் எடுப்பது கஷ்டம். சாதாரணமாகவே ஒருவர் வீட்டின் தோசைக் கல்லில் இன்னொருவர் தோசை ஊற்றி எடுப்பதே கடினமானது. பழகிய கல்லிலேயே சப்பாத்தி போட்ட பிறகு தோசை ஊற்றினால் மாவு கல்லோடு ஒட்டிக்கொள்ளும். வெங்காயம் தேய்த்துக் கொஞ்சம் தாஜா பண்ணினால், சிறிது பிகு பண்ணியபடி வரும். அப்படியும்கூட முதல் தோசை எப்படியும் பிய்ந்துவிடும். வெங்காயத்திற்கும் மட்டுப்படாத கல்லுக்கு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி எடுத்தால், தோசை வாகாக வரும்.

ஒவ்வொருவரின் வீட்டுத் தோசைக் கல்லும் ஒவ்வொரு மாதிரி. தோசைக் கரண்டி அது இன்னொரு விதம். இவளுக்கு நல்ல அகலமாக தோசைக் கரண்டி இருந்தால்தான் கல்லிலிருந்து தோசையைத் திருப்ப வரும். இன்னொரு வித தோசைக் கரண்டி உண்டு; அதன் கைப்பிடி நீண்டு முடிவில் தேக்கரண்டி அளவு பட்டையாக இருக்கும்.  இவளது கணவன் வீட்டில் அதைத் ‘துடுப்பு’ என்பார்கள். கொஞ்சம் சரியாகப் பார்க்காமல் திருப்பினால், துடுப்பு தோசையைப் பதம் பார்த்துவிடும்.

மாமியார் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒரே வார்த்தையில் “தோசக்கூட ஊத்த தெரில; என்ன வளத்தி வச்சிருக்காங்க உங்க வீட்ல” என்பார். இட்லியும் அப்படித்தான். இவள் வீட்டில் அப்பாவின் நன்றாகத் துவைத்த தூயப் பழைய பருத்தி வேட்டியைச் சதுரமாக வெட்டி இட்லித் தட்டில் ஈரத்துணியாகப் பரத்தி, குழியில் அமிழ்த்தி, மாவை ஊற்றி, இட்லி குண்டானில் வேக வைப்பார்கள். மாமியார் வீட்டில் இட்லி குக்கர். இட்லி தட்டில் எண்ணெயைத் தடவி, மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். கல்யாணமான புதிதில் இது தெரியவில்லை என்று இவளை மாமியாரும், கணவரும் கொழுந்தனும் அவ்வளவு கேலி பேசுவார்கள். என்னவோ அவர்களுடையதுதான் நவீனமான வீடு என்பது போலவும், இவள் அம்மா வீடு ஏதோ குக்கிராம படிப்பறிவே இல்லாதவர்களுடையது போலவும்.

நினைவின் சுமையும் சேர்ந்துகொள்ள, இவளுக்குக் கடுப்பாக வந்தது. ஒரு வழியாக எப்படியோ தோசையைத் திருப்பி எடுத்துவிட்டாள்.

சுபத்ராவை இவளுக்கு முகநூலில்தான் அறிமுகம். இவளுக்கும் சுபத்ராவுக்குமான நட்பு, தோசை சாப்பிடுவது குறித்த பதிவில்தான் ஆரம்பித்தது. ஒரு தோசையைச் சுடச் சுடச் சாப்பிட்டு எத்தனை ஆண்டு காலம் ஆகிறது என்பது குறித்து இவள் ஒரு பதிவிட்டிருந்தாள்.

அம்மா வீட்டில் சிறுமி பருவத்தில் தவிர, வளர்ந்து தானே தோசை சுட ஆரம்பித்த பிறகு எல்லாருக்கும் ஊற்றி முடித்து, தான் சாப்பிட இரண்டு, மூன்று தோசைகளை ஒன்றாக அடுக்கி சாப்பிட அமர்வது என்பதுதான் பெரும்பாலும் வாய்க்கும்.  

கணவன் வீட்டிலோ இன்னும் கொடுமை. ஆறிய முதல் தோசையும் பிய்ந்த மற்ற தோசைகளும்தான். அதென்னவோ முதல் தோசையை யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி நன்றாக அமைந்துவிட்டால் போதும், மாமனாரும் கணவரும் கொழுந்தனும் நிறுத்தாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் மறுநாளைக்காக எடுத்து வைத்த மாவையும் ஊற்றித் தீர்க்க வேண்டியிருக்கும். மறுநாளைக்கான மாவு எடுத்து வைக்காத நாட்களில் தோசை மாவோடு கோதுமை மாவோ மைதாவோ கலந்து ஊற்றுவாள். அது இன்னொரு சுற்று செல்லும். ஆனால், மாமியாருக்கு அமிர்தமே என்றாலும் அளவுதான். இரண்டு அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் மூன்றிற்கு மேல் சாப்பிட மாட்டார்.

எப்படி என்றாலும், யாரும் இவளுக்குச் சுடச் சுடத் தோசை ஊற்றிச் சாப்பிடத் தர மாட்டார்கள். அது ஒரு கனவு. அவ்வளவுதான்.

தனிக்குடித்தனம் வந்த பிறகு, பாத்திரம் கழுவித் தருவது, அன்றாடம் காய் வெட்டித் தருவது, வீடு கூட்டித் துடைப்பது என்று சகலத்திலும் உதவுகிற கணவன்கூட தோசை ஊற்ற வர மாட்டான். ஒரு முறை கெஞ்சிக் கேட்டுக்கொள்ள என்னவோ தோசைக் கல்லுக்கும் இவனுக்கும் வாள்போர் நடப்பதுபோல சமையலறையே கிடுகிடுக்க ஒரே களேபரமாகியது. தோசையைத் துண்டாடினான். அன்றைக்கு அடுப்பைத் துடைத்து எடுக்க இவளுக்கு அரைமணியானது. அதற்குப் பேசாமல் அந்தத் தோசையை, தானே ஊற்றியிருக்கலாம் என்று தோன்றியது.

ஆனால், மாமியார் வீட்டிலோ அம்மா வீட்டிலோ சாத்தியப்படாத ஒன்று தனிக்குடித்தனத்தில் அவளுக்கேயான அவள் வீட்டில் சாத்தியப்பட்டது. தோசை ஊற்ற ஊற்றவே தட்டில் வைத்துச் சாப்பிட்டபடி அடுத்த தோசையை ஊற்றிக்கொள்வது; அதே கையால் வெந்த தோசையை எடுத்துக்கொள்வது.

மாமியார் வீட்டிலும் அம்மா வீட்டிலும் இது நடக்காது. இப்படிச் செய்தால், அது எச்சில். ஆனால் அதற்காக இவளை உட்கார வைத்து ஊற்றித் தர மாட்டார்கள். அம்மாவுக்குச் சன்னமாக ஊற்ற வராது; நாலைந்து கரண்டி மாவை ஒன்றாக ஊற்றி தடிமனாகச் சுட்டுவிடுவார். அவர் ஊற்றுகிற தோசையை அவருக்கே பிடிக்காது. ஒரு வாய் முழுங்கியதும் வெகு நிச்சயமாக விக்கல் வந்துவிடும்.

மாமியாருக்கோ அது அதிகாரப் பிரச்சினை. மருமகளை உட்கார வைத்து, தான் பரிமாறுவதாவது. உலகம் இடிந்துவிடாதா…

உடம்பு சரியில்லை என்றால்கூட, ஒரு பொரியல் ஒரு ரசம் என வேலை சுருங்குமே தவிர, மாறுமே தவிர, செய்துவிட்டு படுத்துக்கொள்ளலாமே தவிர, செத்துக்கூடப் போய்க்கொள்ளலாமே தவிர – வேலையற்ற ஒருநாள் என்பது இயலாது.

இதையெல்லாம் யாரையும் குறையாகவோ குறைவாகவோ சொல்லாமல், ஆனால், தோசையைச் சுடச் சுடச் சாப்பிட முடிவதில்லை என்று பதிவாகப் போட்டிருந்தாள். பதிவின் நீட்சியாக, ஒருநாள்கூடச் சமையல் செய்யாமல் இருக்க முடிவதில்லை என்பதையும் எந்த வேலையும் செய்யாமல் ஒருநாள் என்பது வாய்க்காமலிருப்பதையும் குறிப்பிட்டிருந்தாள்.

அந்தப் பதிவில தானும் இதைப் பற்றி நிறைய முறை யோசித்திருப்பதாகச் சுபத்ரா கருத்திட்டாள். இவள் விருப்பக் குறியிட்டு அவளிடம் பதிலுக்கு ஏதோ சொல்ல, அப்படியே பேச்சு தொடர்ந்தது; மனப் பகிர்தல்கள் தொடர்ந்தன.

அப்படியே தொடர்ந்து தொடர்ந்து, “எப்ப பார், நாமே சமைத்து அதை நாமே சாப்பிடுவது எவ்வளவு போர். நீங்க என் வீட்டிற்கு விருந்துக்கு வாங்க; உங்களை உட்கார வைத்துக் கவனிச்சுக்கிறேன்; நான் உங்க வீட்டுக்கு வரும்போது, நீங்க பாத்துக்கங்க’ என்பதில் முடிந்தது.

அப்புறம் போன் நம்பர் பரிமாறிக்கொண்டது; வெளியிடங்களில் சந்தித்தது; நட்பு நெருக்கமானது எல்லாம் பழைய கதை.

ஒருமுறை சுபத்ரா இவளது வீட்டிற்கு அருகிலுள்ள கல்லூரியில் ‘எக்ஸாமினரா’க வந்திருப்பதாகவும் சந்திக்க வரலாமா என்று கேட்க, இவள் தனது ‘ஹோண்டா ப்ளஷ’ரில் ஓடோடிப் போய்க் கூட்டி வந்தாள்.

இவள் பார்த்துப் பார்த்துச் செய்தது சுபத்ராவுக்குப் பிடித்திருந்தது. தேங்காய்த் துருவல் தூவிய புடலங்காய்ப் பொரியலும், எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பும், ரசமும் வைத்து வடகம் பொறித்திருந்தாள். கூடுதலாக, சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கிப்போட்டுச் செய்த ஆம்லெட்டும் பரிமாற, சுபத்ரா சொர்க்கமே இதுதான் என்றாள்.

பிறகும் பல தடவை இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ‘இந்தந்த நாள் வரப் போகிறேன், இன்னின்ன செய்து வைங்க’ என்று மெனு சொல்லி வருமளவு இவளது சமையல் ருசி அவளுக்கு அத்துப்படி ஆகியிருந்தது. இவளும் நிஜமாகவே  அவளைத் துளி நகர விடாமல் உட்கார வைத்து ராஜ உபசாரம் செய்தாள்.

திடீரென ஒருநாள், “ஏ, நானே வந்துட்டு இருக்கேன் நீங்க உங்க மகளோடு எங்கள் வீட்டுக்கு வரணும்; சாயந்திரம் காபிக்கே வந்துருங்க. அப்படியே டின்னர். சரியா? என் காபி குடிச்சதில்லையே நீங்க… அவங்கப்பா அவ்ளோ சிலாக்கியமாச் சொல்வார். உன் காபியாலதான் நான் உயிரோடவே இருக்கேன் என்று.”

சுபத்ரா அரசுக் கல்லூரியில் பேராசிரியர். கணவர் சொந்தமாகத் தொழில் செய்பவர். ஆனால் அந்த பந்தா படாடோபம் எதுவும் அவளது பேச்சில் இருக்காது. அவள் தமிழின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக, தான் வாசிக்கும் புத்தகங்களையும் அவை குறித்த தனது தனித்த பார்வையையும் முகநூலில் பதிவாள். எங்கும் எதிலும் மெத்தப் படித்த மமதை இருக்காது.

நேர்த்தியாக, கண்களை உறுத்தாத வண்ணங்களில் பருத்தியாடைகளை அணிவாள். அதற்குப் பொருத்தமாக அணியும் அணிகலன்களில் அவளது நுணுக்கமான ரசனை வெளிப்படும். வீட்டின் ஒவ்வொரு பொருட்களிலும் அப்படித்தான் அவளது தேர்ந்த ரசனை வெளிப்பட்டது. ஒவ்வோர் அறையும் கலைநயமும் கலாரசனையும் கொண்டு தேடித் தேடித் தேர்ந்தெடுத்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இங்கு வந்த பிறகுதான் இவளுக்குத் தெரியும், இது வீடல்ல, மாளிகை என்று. ஒப்பிட்டால், இவள் வீட்டை விடவும் நான்கு மடங்கு பெரியது.

சுபத்ரா எல்லா வேலைகளுக்கும் ஆள் வைத்திருந்தாள். கூட்டித் துடைக்க ஓராள்; காய்கறி வெட்டித் தர, பாத்திரங்கள் துலக்க ஓராள்; வெறும் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் துடைத்தெடுக்க வாரமிருமுறை ஆட்கள் வருவார்கள் என்றாள். ஆனால், சமையலுக்கு மட்டும் ஆள் வைக்கவில்லை.

“அவங்கப்பாவுக்கு நானே சமைச்சாதான் பிடிக்கும். அவருக்கு எல்லாமே என் கையால செஞ்சு தந்தாதான் திருப்தி. அதுமட்டும் இல்ல, வேலைக்காரங்கள இதில நம்ப முடியாது. திருடித் தின்பாங்க இல்ல. ஆனா, அது கூடப் பரவாயில்லை. பசின்னு விட்டுறலாம். துப்பித் தந்துட்டாங்கன்னா. இந்த பைவ் ஸ்டார் ஹோட்டல்ல எல்லாம் கோபப்படுத்துற கஸ்டமர் சாப்பாட்டில எச்சித் துப்பி தந்துருவாங்களாமே அந்த மாதிரி. அப்படிப் பண்ணிட்டா என்ன பண்றது. அதுதான்” என்றாள்.

இவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

“சாப்பிடலாமா?” என்று தட்டில் ஆளுக்கு இரண்டு சப்பாத்தி வைத்தாள். பிறகு, தோசை வைத்தாள்.

மறுபடியும் போன் அடிக்க, பேசச் சென்றுவிட்டாள்.

திரும்பி வரும்போது கடுகடுவென்றிருந்தாள்.

“என்னாச்சு?”

“ஒன்றுமில்லை.”

இவர்கள் கிளம்ப, சரியென்று வழியனுப்ப கதவைத் திறக்கவும் அவள் கணவன் வரவும் சரியாக இருந்தது.

“ஏன் லேட்?”

“அதான் சொன்னேன்ல…”

“நீ பொய் சொல்ற.”

“ஆமா பொய்தான்.”

“ஆறு மணிக்கு ப்ளைட்லருந்து இறங்கி, எங்க போயிட்டு வர்ற. இப்ப மணி ஒன்பது.”

“உனக்குத் தெரியாததா. அதான் எல்லா இடத்திலும் ஸ்பை வச்சிருக்க இல்ல. அவங்ககிட்டயே அதையும் கேட்டுக்கோ” என்றபடி, அவர் உள்ளே போனார்.

இவளுக்கு இசைகேடாய் இருந்தது. என்ன சொல்லிக் கிளம்புவது என்று புரியாமல் மகளுடன் வெளியேறினாள்.

கதவைச் சாத்திவிட்டு சுபத்ரா, உள்ளே வந்தாள்.

“காபி கொண்டு வரவா, இல்ல அங்கயே எல்லாம் ஆச்சா?”

“இல்ல. தா.”

சுபத்ரா தனக்குத் தானே முணுமுணுத்தபடி, காபி மக்கில் சர்க்கரை போட்டு, டிக்காஷன் ஊற்றி, பாலைச் சூடாக்கி நுரை வர ஊற்றி, தேக்கரண்டியால் கலக்கினாள்.

ஏதோ ஒருவித எச்சரிக்கை உணர்வுடன், அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் கணவன் பாத்ரூமில் ‘ப்ளஷ்’ அழுத்தும் சத்தம் கேட்டது. யாருமில்லை.

இவள் காபியை நோக்கிக் குனிந்தாள். துப்பினாள்.

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேளடா மானிடவா, கடல், அருவி முதல் அயலி வரை, கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வந்துள்ளன.

Exit mobile version