Site icon Her Stories

மாற்றி யோசி

Young Indian business woman wearing a pink suit isolated relaxed thinking about something looking at a copy space.

ஒரு கதை. சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் சிறிய சவால். சோப்பின் மேல் உறை தயாராகி, அதில் சோப்புக் கட்டியை நிரப்பும் இயந்திரம் சில உறைகளை நிரப்பாமல், உறையை ஒட்டும் இயந்திரத்திற்குள் அனுப்பி விடுவதால், வியாபாரிகளுக்குச் சில காலி உறைகளும் விற்பனைக்குச் சென்றுவிடும். இது சிறிய இயந்திர தவறு எனினும் அவர்களின் பெயர் கெட்டு விடுமென ஓர் அவசர ஆலோசனை செய்து, ஓர் ஆளை வேலைக்கு அமர்த்தி, சோப்பின் உறையை ஒட்டும் இயந்திரத்தில் போகும் முன் காலியான சோப்பு உறைகளை நீக்கப் பணித்தனர். சவால் தீர்ந்தது. அனைவரும் ஹேப்பி. ஒருநாள் தொழிற்சாலையில் புதிதாகச் சேர்ந்த இளைஞன் இந்த ஏற்பாட்டைப் பார்த்து, இதற்கெதற்கு ஒருவர், இங்கு ஒரு பெரிய நிற்கும் மின் விசிறியை வைத்தால் காலியாக இருக்கும் உறைகள் பறந்து விடும், சோப்பு உள்ள உறைகள் மட்டும் பேக் செய்யும் இயந்தரத்திற்குள் செல்லும் என்றான். அந்த யோசனை அமோக வெற்றியும் பெற்றது.

இத்தனை நாளாக இங்கே வேலை செய்த அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தோன்றாத யோசனை அந்தப் புதியவருக்குத் தோன்றிய காரணம் அவரின் புதிதான பார்வைதான். அவர் சவாலை வெளியில் இருந்து பார்த்ததால்தான் மாற்றி யோசிக்க முடிந்தது.

அனைவரின் மேலும் விழுந்த ஆப்பிள்தான் நியூட்டன் தலையிலும் விழுந்தது. ஆனால், அவர் மட்டும்தான் அதை அப்படியே விட்டுவிடாமல் ஏன் என்று கேட்டு புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தார்.

குயவர்கள் உபயோகித்த சக்கர வடிவத்தை முதன்முதலில் வண்டிக்குச் சக்கரமாக உபயோகப்படுத்தலாம் என்று யோசித்த ஒருவரால்தான் நமது அத்தனை முன்னேற்றமும்.

மனித இனம் உருவாகிய நாளில் இருந்து இன்று வரை நாம் அடைந்த அத்தனை முன்னேற்றமும் வசதிகளும் யாரோ ஒருவர் ஆழமாகச் சிந்தித்து மாற்றி யோசித்ததால்தான் கிடைத்தது. அப்படி இருக்கும் போது நீங்கள் புதிது புதிதாக யோசிக்கா விடில் வாழ்வில் முன்னேற்றம் ஏது? ஆனால், நாம்தான் அதற்குப் பழகவே இல்லையே. நமது மூளையும் மனமும் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாமல் சமூகம் நம்மைப் பதப்படுத்தி (Conditioning) இருக்கிறது. இது போல out of box thinking சிலருக்குப் பிறவியிலேயே அமையும் என்றாலும் முயன்றால் தேர்ச்சி நிச்சயம்.

மாற்றி யோசிக்கிறேன் என்று சொல்லி எல்லாவற்றையும் மாற்றிச் செய்துவிடாதீர்கள். தெளிவாகவும் எந்தச் சார்பற்றும் எந்த முன் அனுமானமும் இன்றி, ஒரு குழந்தையின் கற்றுக்கொள்ளும் மன நிலையோடு சவாலை அணுகி, அனைத்துத் தீர்வுகளையும் ஆராய்ந்து, சிறந்த ஒன்றினைச் செயல்படுத்துவதுதான் கூர் சிந்தனைத் திறன் எனும் மாற்றி யோசித்தல்.

முதலில் மாற்றி யோசிக்க கற்க வேண்டியதைப் பார்ப்போம்.

  1. முடிவு

முதல் தகுதியே இனி நான் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளப் போவது இல்லை என்கிற தீர்மானம்தான்.

  1. ஏன்?

அடுத்தது ஏன் என்கிற கேள்வி. பல நேரம் நாம் நமது பெற்றோர், சமூகம், ஆசிரியர், பெரியவர்கள் சொல்வதைக் கேள்வியே கேட்காமல் செய்யப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். நீங்களும் இதுவரை அப்படி இருந்தால் அது உங்கள் தவறல்ல, இனியும் இருந்தால் நிச்சயம் உங்கள் தவறே. உடனே எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டுமென்பதல்ல. ஆனால், எது செய்தாலும் எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்துகொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு. ஏனென்று தெரிந்தால்தான் அதைத் திறந்த மனதோடு அலச முடியும். அதைவிடச் சிறப்பான அடுத்த யோசனை உண்டா என யோசிக்க முடியும்.

“ஏன் என்கிற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.”

இதை எப்போதும் மனதில் வையுங்கள், செயல்படுத்துங்கள்.

நீங்கள் உங்கள் வீட்டில் நின்று சுற்றிப் பார்த்தால் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் ஏன் இப்படிச் செய்து பார்க்கக் கூடாது என யோசித்ததால் வந்த விளைவுதானே! நீங்களும் ஏன் எனக் கேட்டுப் பழகுங்கள்.

  1. அனுமானம் இல்லாத நேர் பார்வை.

உங்களிடம் மிகவும் நெருக்கமான தோழி அவருடைய தனிபட்ட வாழ்வில் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உள்ள சவால்களைப் பற்றிப் பேசுகிறார் என வைத்துக் கொள்வோம். உங்கள் சரியான ஆலோசனை அவர் வாழ்வை மாற்றக்கூடும். ஆனால், அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஆலோசனை தருவதற்கு முன்பே உங்கள் மனதில் இவருக்கு எப்போதுமே வாய் அதிகம் / இவள் கணவர் எப்போதும் கொஞ்சம் முரடுதான் / இவளுடைய மாமியாருக்குத் தலைக்கனம் அதிகம் எனச் சம்பந்தபட்ட ஒருவரையோ அல்லது அனைவரையோ பற்றிய உங்களது அபிப்பிராயம் பிரச்னையின் நிஜமான ஆணிவேரை உங்கள் கண்களில் இருந்து மறைத்துவிடும். ஆலோசனையும் சரியாக இருக்காது. இங்கே உங்களுக்குத் தேவை அவர்களைப் பற்றி நீங்கள் கேட்ட, மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, ஒரு மனைவி, மாமியார், கணவருக்குச் சமூகம் வைத்துள்ள எதிர்பார்ப்புகள், கட்டுபாடுகள் எல்லாம் மனதில் இருந்து எறிந்துவிட்டு, திறந்த மனதோடு கேட்கும்போதுதான் சரியான ஆலோசனை தர இயலும்.

  1. ஒரே மாதிரியான எண்ணப்போக்கு (Stereo type thinking)

சமூகத்தால் பல சிந்தனைகள் நம்மை அறியாமலேயே நம் மனதில் விதைக்கபட்டுள்ளது. பெண்ணியம் பேசும் ஒரு பெண்கூடப் பெண் குழந்தைக்கு இயந்திரம் சம்மந்தபட்ட பொருளைப் பரிசளிப்பதில்லை, ஏனென்றால் அது ஆண்கள் விளையாட்டு என்கிற மனப் பதிவு. பெண் குழந்தைகளுக்கு உடை எடுத்தால் பிங்க் நிறத்தில்தான் எடுப்பது வழக்கம். ஏனென்றால், இந்த நிறம் பெண்களுக்கானது என்கிற மனப் பதிவு. ஆண்கள் ஆடையில் பிங்க் வருவது அபூர்வம்.

இது போல காலை எழுந்தது முதல் தூங்கச் செல்லும் வரை செய்யும் பல செயல்களில் இது போன்ற மனப் பதிவுகளின் ஆதிக்கம் மிக அதிகம். இந்த stereo type thinking இல் இருந்து விலகி யோசிக்கும் போதுதான் புது புது கோணங்கள் கிடைக்கும்.

  1. ஆராய்ச்சி மனபான்மை

எல்லாரும் சொல்கிறார்கள், புத்தகத்தில் எழுதி உள்ளார்கள் என எதையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் உங்களின் அறிவின் துணை கொண்டு தெளிந்த மனதோடு ஒரு விஷயத்தை ஆராயும் போது தான் நமக்கு சரியான பாதை புலப்படும்.

இந்தப் பண்புகள் முழு உணர்வோடு நாம் பழகப் பழக நம் மனத்தில் பதிந்து முதலில் உணர்வோடு மாற்றி யோசிப்போம் ( conscious thinking ), இது பழகப் பழக நாம் இதை ஓர் அனிச்சை செயலாகச் செய்ய முடியும்.

இது போக புதிர் விளையாட்டுகள் சுடோஃகு (Sodoku), சதுரங்க விளையாட்டு, தனியாகச் செய்யும் பயணம், புதிய நபர்களுடன் பழக்கம், சிறுவர் சிறுமியருடன் செலவழிக்கும் நேரம் போன்றவை நம் மனத்தைப் புத்துணர்வுடன் யோசிக்க வைக்கும், நமது பார்வையை விசாலமாக்கும்.

மனம் திறந்து பார்வை விசாலமாகும் போது, அழகே அழகே எல்லாம் அழகே!

வாருங்கள் எதையும் ஆழமாக யோசித்தால், அரைத்த மாவையே அரைக்காமல் மாற்றி யோசித்தால் வாழ்வு உங்கள் வசம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

Exit mobile version