Site icon Her Stories

ராதாவும் சுமதியும்

அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் வரிசை நீண்டிருந்தது. டோக்கன் வாங்கி விட்டு அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாள் சுமதி.. காய்ச்சல் நெருப்பாகக் கொதித்தது. பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள். அரசாங்கமே காலை, மதியம் உணவு வழங்குவதால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, மருத்துவமனைக்கு வந்துவிட்டாள்.. அவள் கணவன் சிதம்பரம் கார் டிரைவராக வேலை பார்க்கிறான். முதலாளியுடன் வெளியூருக்குச் சென்று விட்டான்.

காதலித்துக் திருமணம் செய்ததால் உறவுகள் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. இருவரின் பெற்றோரும் தொடர்பில் இல்லை. பொருளாதார நெருக்கடியால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே சண்டை வரும். பள்ளியில் படிக்கும் போதே காதலித்து, திருமணம் செய்ததால் படிப்பை முடிக்கவில்லை. படிப்பு இல்லாததால் வேலைக்குப் போக முடியவில்லை. வீட்டு வேலை போன்றவற்றிற்குச் செல்ல சிதம்பரம் அனுமதிப்பதில்லை. மனைவி கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் நினைக்கிறான்.

பள்ளிப் படிப்பையாவது முடித்திருந்தால் தானும் ஒரு வேலைக்குப் போய் குடும்பக் கஷ்டத்தைக் கொஞ்சமாவது குறைத்திருக்கலாம். அவன் ஒருவனே குடும்ப பாரத்தைச் சுமப்பதால் அவ்வப்போது கோபப்பட்டுக் கத்துகிறான்.  பிரசவத்தின் போதும், உடம்பு முடியாமல் போகும்போதும் பெற்றவர்களை நினைத்து சுமதியின் மனம் ஏங்கும்.. இத்தனை வருடங்களாகியும் அவர்கள் கோபம் குறையவில்லை. ஜாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

தன் நிலையை எண்ணி பெருமூச்சு விட்டாள் சுமதி. இவளது டோக்கன் நம்பரைக் கூப்பிட்டவுடன் எழுந்து டாக்டரைப் பார்க்கப் போனாள். புதிதாக இந்த மருத்துவமனைக்கு மாற்றலாகி வந்த லேடி டாக்டர். பார்த்த உடன் இவளுடன் படித்த ராதா என்று புரிந்தது. நம்மைப் பார்த்தால் எப்படி அடையாளம் தெரியப்போகிறது என்று ஒன்றும் பேசவில்லை. ஆனால், பேரைப் பார்த்து விட்டு இவளைப் பார்த்த டாக்டர்  சிறிது யோசித்துவிட்டு, ”ஏய் நீ சுமதிதானே, என்னைத் தெரியுதா? நான்தான் ராதா” என்று சொன்னாள். ”தெரியுது டாக்டர் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குதோ இல்லையோன்னுதான் நா ஒண்ணும் பேசல” என்றாள் சுமதி.

“ஏய் சுமதி எப்பிடி உன்ன மறப்பேன். ஸ்கூல்ல படிக்கும் போது நாம ரெண்டு பேரும் எப்பிடி ஒண்ணா சுத்துவோம். நீயும் எவ்ளோ நல்லாப் படிப்ப . சொல்லச் சொல்லக் கேட்காம படிக்கிறத விட்டுட்டு லவ் பண்ணி வீட்டை விட்டுட்டுப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்ட.  நீ எப்பிடி இருக்கன்னு அப்பப்போ யோசிப்பேன் தெரியுமா? நீ ஏண்டி இப்பிடி இருக்க?”  என்று கேட்டாள் ராதா.

“அந்த வயசில படிப்பு எவ்வளவு முக்கியம்னு புரியாமல் போச்சு. படிச்சு முடிச்சுட்டுக் கல்யாணம் பண்ணியிருந்தா வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கும்.. ம்ம்… காலங்கடந்து யோசிச்சு என்ன செய்ய?. ஆமா நீங்க எப்பிடி இங்க?” என்றாள் சுமதி.

“என்னதான் கூடப்படித்த தோழி என்றாலும், இப்போது  டாக்டர். நீ போ என்று பேச முடியுமா?”

“எனக்கு கல்யாணம் பண்ணது இந்த ஊர்லதான். ஆனா போன மாசந்தான் இந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வந்தேன். நீ எப்பிடி இருக்க, உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?”

இரண்டு பேரும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் பேசிக் கொண்டு இருக்கும் போது நர்ஸ் வந்து, ”மேடம் நிறைய பேர் வெயிட் பண்ணுறாங்க” என்றாள்.

”சரி சுமதி, ஒரு நாள் வீட்டுக்கு வா , பொறுமையா உட்கார்ந்து பேசலாம்” என்று சொன்ன ராதா ஊசி, மாத்திரை எழுதிக் கொடுத்தாள்.  வெளியில் வந்த சுமதி ஊசி போடும் இடத்துக்குப் போனாள். அங்கும் கூட்டமாக இருந்தது. மயக்கமாக வந்தது. வாய் கசந்ததால் கஞ்சியும் குடிக்கவில்லை. பிஸ்கட்டாவது வாங்கிச் சாப்பிட்டுத் தண்ணீரைக் குடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். வரிசையை விட்டுட்டுப் போக முடியாது. துணைக்கு வருபவர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். நமக்குத் துணை யாருமில்லையே என நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

ஊசி போடும் போது நர்ஸ் சாப்பிட்டியாம்மா என்று கேட்டாள். கொஞ்சம் கஞ்சிதான் குடித்தேன் என்று சொன்னாள் சுமதி.  ”ஊசி போட்டா மயக்கம் வந்துடும், ஏம்மா சாப்பிடாம வந்து எங்க உயிரை வாங்குற?” என்று திட்டிக் கொண்டே ஊசி போட்டுவிட்டாள்.

வெளியில் வந்து பக்கத்தில் இருந்த கடையில் பன் வாங்கி டீயில் முக்கிச் சாப்பிட்டு, தண்ணீர் வாங்கிக் குடித்ததும் கொஞ்சம் தெம்பாக இருந்தது. வீட்டிற்குப் போய் படுத்துவிட்டாள். நாமும் ஒழுங்காகப் படித்திருந்தால் வேலை பார்த்து சம்பாதித்திருக்கலாமே என்று நினைத்து நினைத்து வருத்தப்பட்டாள்.

அடுத்த வாரம் சிதம்பரம் அவன் முதலாளி வீட்டுக் கல்யாணத்திற்குப் போக வேண்டும் என்று சொன்னான். நல்ல சேலைகூட இல்லை. நகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சேலையாவது வேண்டும். அப்படி இல்லை என்றால் கல்யாணத்துக்கு வர முடியாது என்று சண்டை போட்டாள் சுமதி. வீட்டு நிலைமை தெரியாமல் கேட்பதாகச் சத்தம் போட்டான் சிதம்பரம். கடைசியில் சுமதியின் பிடிவாதம் ஜெயித்தது. எப்படியோ பணத்திற்கு ஏற்பாடு செய்து சுமதிக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தான். அடுத்த வாரம் சுமதி குடும்பம் கல்யாணத்திற்குக் கிளம்பிச் சென்றார்கள்.

கல்யாண மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிதம்பரம் சுமதியையும் பிள்ளைகளையும் மண்டபத்தில் நுழையும் இடத்தில் ஒரு பக்கமாக உட்கார வைத்துவிட்டு, கல்யாண வேலைகளைப் பார்க்கப் போய்விட்டான். சுமதி அங்கு வந்திருந்த பெண்கள் அணிந்திருந்த புடவைகளையும், நகைகளையும் பார்த்து வியந்து போய் உட்கார்ந்து இருந்தாள். நமக்கும் இப்படிச் சேலை, நகை போடும் நாள் வராதா என்று ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சிதம்பரத்தின் முதலாளி பரபரப்பாக கல்யாணத்துக்கு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது  ராதாவும் அவள் கணவர் டாக்டரும் வந்தார்கள். முதலாளி அவர்களை வரவேற்று மேடைக்கு வரச் சொன்னார். நடந்து வரும் போது ராதா சுமதியைப் பார்த்துவிட்டாள். சுமதியின் கையைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தாள்.  ராதாவின் கணவன் மேடையை நோக்கி நடந்தவன், ராதா வரவில்லையே என்று திரும்பிப் பார்த்தான். ராதா யாரோ ஒரு பெண்ணிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் கோபத்துடன் ராதாவை நெருங்கிவந்து, “ஏய், ராதா உனக்கு அறிவிருக்கா? நான் மேடைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு யார் கூடவோ இளிச்சுப் பேசிக்கிட்டு இருக்க. வா சீக்கிரம்” என்று சத்தம் போட்டான். ராதாவின் கண்கள் சட்டெனக் கலங்கிவிட்டன.

ஒன்றுமே பேசாமல் சுமதி கையை அழுத்திவிட்டு, விறுவிறுவென்று கணவன் பின்னால் தலையைக் குனிந்து கொண்டே சென்றாள். மேடையில் போய் துக்கத்தை மறைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு சிரித்து போட்டாவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கணவனுடன் கிளம்பிப் போய்விட்டாள்.

சுமதிக்கு வருத்தமாக இருந்தது. ஆயினும் ராதாவின் மேல் கோபமும் வந்தது. ’படித்து வேலை பார்க்கும் ஒரு பொண்ணுக்குக் கொஞ்சமாவது தைரியமும் தன்மானமும் வேண்டாமா? இப்படியா பதில் பேசாமல் கலங்கும் கண்ணை மறைத்துக்கொண்டு, ஆட்டுக்குட்டி மாதிரி பின்னாடி போறது’ என்று நினைத்தாள். சென்ற வாரம் ராதாவைப் பார்க்கும்போது இருந்த பெருமிதம் கரைந்துபோயிருந்தது.

படைப்பாளர்:

சிவசங்கரி மீனா

தீவிர வாசிப்பாளர். ஏராளமான நூல்களை வைத்திருக்கிறார். ஹெர் ஸ்டோரிஸ் ஆடியோ நூலுக்குப் புத்தகங்களை வாசிக்கிறார். மதுரையில் வசிக்கிறார்.

Exit mobile version