ஓர் ஒற்றைப் பெற்றோருக்கு மகளாக வளர்வது அவ்வளவு ஒன்றும் கடினம் கிடையாது; அது எல்லாவற்றையும்விட இன்னும் எளிமையாக வளரலாம். அதாவது ஒரு குடும்பத்தில் மகள் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க, பிறரிடமோ மற்றவர்களிடமோ கலந்து ஆலோசிக்கத் தேவை இல்லை.
ஓர் ஒற்றைப் பெற்றோரின் மகளாக நான் இழந்தது அப்பா என்கிற உணர்வை, ஆனால் என்னுடைய அப்பாவை இல்லை. எனது குடும்பம் நானும் பிருந்தாவாலும் ஆனது.
சில நேரம் அப்பா என்கின்ற உறவு இல்லை என்று வருத்தமாக இருக்கும்; நிஜத்தில் அப்பா இருந்திருந்தார் எனில் பிருந்தா இருந்திருக்க மாட்டார்; அதனால் அப்பா இல்லாமல் போனதே நன்று.
நாம் ஒரு விஷயம் நமக்கு இல்லை என்பதில் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எது இருக்கின்றதோ அதில் கவனத்தைச் செலுத்தலாம்.
ஒற்றைப் பெற்றோரின் மகளாக இந்தச் சமூகத்தில் நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள்:
நான் சிறிய பிள்ளையாக இருக்கும்போது சில பெரியவர்களும் சரி என் வயதுடையவர்களும் சரி, என் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்பார்கள். அவர்கள் பொதுவாகத்தான் கேட்பார்கள். முதலில் நான் ‘அவர் வெளியூரில் இருக்கிறார்’; இல்லையென்றால் ‘வெளிநாட்டில் இருக்கிறார்’ என்று சொல்லிச் சமாளித்து விடுவேன்.
பிரைமரி வகுப்பிற்கு வந்ததும், ‘என்னுடைய பெற்றோர் பிரிந்து விட்டார்கள்’ என்று கூறினேன். செகண்டரி பள்ளியில் இருந்து, யாரும் அப்பாவைப் பற்றிக் கேட்டால், ‘அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை’ என்று கூறி விடுவேன்.
அப்புறம், அப்பா இல்லாமல் அல்லது அம்மா இல்லாமல் அல்லது இருவரும் இல்லாமல் வளரும் வாழும் குழந்தைகளைப் பரிதாபப்பட்டு அல்லது ஏளனமாகப் பார்ப்பது, நடந்து கொள்வதைப் பார்த்தால், உண்மையில் அப்பா இல்லை என்கிற துன்பம் சிறிதாகத் தோன்றும். மற்றவர்கள் அந்தக் குழந்தைகளை நடத்தும் விதம்தான் கடினமாக இருக்கும்.
சில பேரிடம் அப்பாவைப் பற்றிக் கூற விருப்பமில்லை என்று கூறினால், அதை அப்படியே விட மாட்டார்கள். தொல்லை செய்து அதையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிச் சொல்லி விட்டீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்தது. நீங்கள்தான் வகுப்பில் தலைப்புச் செய்தியாகப் போய்க்கொண்டிருப்பீர்கள்.
நிறைய பேருக்கு வரலாற்றைப் படிப்பதற்குப் பிடிக்காது. அதில் படிக்க என்ன இருக்கிறது என்பார்கள். ஆனால் ஏன் ஒருவர் வாழ்வில் நடந்த / நடக்கிற நிகழ்வுகளை மட்டும் ஆர்வத்துடன் கேட்கிறார்கள்?
என்னுடைய இதுவரைக்குமான வாழ்க்கையில், என்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு தோழிதான், ‘அப்பாவைப் பற்றி எனக்குச் சொல்ல விருப்பமில்லை’ என்று நான் சொன்னபோது, அதைப் பற்றிக் கேட்டுத் தொல்லை செய்யவில்லை. இப்படி நான் கூறும்போது, ‘ஆமாம் உனக்கு விருப்பமில்லை என்றால் அதை விட்டுவிடலாம். அது எப்படி இப்படி என்று தொல்லை செய்யக் கூடாது’ என்று இவள்தான் முதல்முறையாகப் பதில் கொடுத்திருக்கிறாள்.
அப்புறம், ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் இருக்கிற குடும்பம் நன்று அல்லது ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிற குடும்பம் நல்ல குடும்பம் என்பதெல்லாம் இல்லை. ஒரு குழந்தை ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறதோ அதை அப்படியேதான் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் அக்கா, தங்கை வளர்கிறார்கள்; இருவருக்குமே ஒரே மாதிரியான உணவு, ஆடை எல்லாம் கொடுக்கப்படுகின்றன. அவர்களது பெற்றோரும் ‘நாங்கள் இருவருக்குமே சமமான அன்பைத்தான் கொடுக்கிறோம்’ என்கிறார்கள்; அப்படி என்றால் இருவரும் குணத்தில் ஒரே போல இருக்க வேண்டும் அல்லவா?
இரண்டு வருடங்களுக்கு முன் பள்ளியில், எனது ஆசிரியர் மக்கள் தொகை பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கையில், ‘குறைந்தது இரண்டு பிள்ளைகள் இருக்கிற குடும்பம்தான் சிறந்தது; அந்தக் குடும்பத்தில்தான் பிள்ளைகளுக்கு மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கும்; ஒற்றைப் பிள்ளையாக வளரும்போது அது அவர்களிடம் இருக்காது’ என்றார்.
நான் என் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வது பற்றிக் கூறினேன். யாருடன் செய்தாலும் அந்தப் பழக்கம் பழக்கம்தானே?
இரு பிள்ளைகள் இருக்கிற குடும்பத்தில் பொதுவாக மூத்த குழந்தைதான் இளைய குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், மூத்த குழந்தையே குழந்தை வயதில் இருக்கும்.
சில குடும்பங்களில் இப்படி நடக்கும். இளைய குழந்தை, மூத்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று.
எனக்கு ஒரு தோழியைத் தெரியும். அவளுக்கு 12 வயது இருக்கும்போது அவளுடைய தங்கைக்கு 9 வயது. அவள் தங்கையால் தன்னைத்தானே பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் என் தோழி கூறுவாள், அவளுடைய பெற்றோர் தங்கையைத் தனியாக அவள் நண்பர்களுடன் விளையாட விடாமல் அவளைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவள் இருக்கிறதே டேக்கரில். ஆனால் இப்படி!
குடும்பம் என்கிற அமைப்பு – மலையேற்றத்தின்போது மனிதர்கள் எப்படித் தேவைப்படும்போது உதவுகிறார்கள்; தேவைப்படும் போது அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்கள்; நம்மால் செயல்பட முடியும் என்கின்றபோது, நம்மை நாமே செய்ய விட்டுவிடுவார்கள் – அப்படி இருக்க வேண்டும். நமக்குப் பிடித்ததை, நம்மால் முடிந்ததை, நாமே செய்ய வேண்டும்; நீங்கள் தடுமாறும்போது ஒரு தூணாக உதவுதல் வேண்டும்.
ஓர் ஒற்றைப் பெற்றோரின் மகளாக வளர்வதில் அப்பா, அவரது உறவினர்களின் தலையீடு இல்லை என்றாலும், அப்பா இல்லாத ஒரே காரணத்தால் இன்னும் நிறைய உறவினர்கள் நாம் எடுக்கும் முடிவுகளுக்குள் தலையிடுவார்கள்.
செய்கின்ற எல்லாச் செயலையும் மிகவும் கவனத்துடன் செய்தல் வேண்டும்; செயல் நன்றாக முடிந்தது என்றால், ‘எனக்கு அப்பவே தெரியும் அவளுடைய மகளை நல்லா வளர்த்து இருக்கா’ என்று கூறும் இந்த உலகம். அதுவே நீங்கள் சறுக்கி விட்டீர்கள் என்றால், ‘நான் அப்பவே சொன்னேன் நீ இப்படித்தான்’ என்று இகழும். மற்ற பிள்ளைகளைவிட, ஒற்றைப் பெற்றோரின் மகளாக வாழ்வதில் சமூகத்தின் அழுத்தம் மிகவும் அதிகம்.
எனக்கும் பிருந்தாவுக்கும் இருக்கும் உரையாடல்கள் நன்றாக இருக்கும். அம்மா என்கிற வகையில் நான் சில நேரம் தொல்லை செய்வது உண்டு. ‘நான் முக்கியமான வேலை செய்யப் போகிறேன்; ஏதாவது என்கிட்ட கேட்கணும்னா இப்பயே கேட்டுவிடு’ என்று பிருந்தா சொல்வார். நான் நினைப்பேன், ‘கேட்க எல்லாம் ஒன்றும் இல்லை’ என்று. ஆனால், நான் மற்றொரு வேலை செய்யப் போகும்போதுதான் பிருந்தாவிடம் இதைக் கேட்க வேண்டும் என்று நினைவு வந்து, அவர் வேலையில் இருக்கிறார் என்பதையே மறந்துவிட்டு, கேட்பேன். அவ்வளவுதான்… என் கதை முடிந்தது. அப்புறம் என் மனதில் நினைத்துக் கொள்வேன் ‘இனிமேல் நீ போய் ஏதாவது கேட்ப?’
பிருந்தா சமையல் அறையில் வாணலியில் எண்ணெயை ஊற்றி இருப்பார். ‘டேய் கிட்ட வந்துடாத’ என்பார். சரியாகக் கடுகைப் போடும்போது வாணலி கிட்ட வந்து நின்று, ‘பிருந்தா எனக்கு ஒரு சந்தேகம்’ என்று கேட்பேன். பிருந்தா அப்போது வாணலியை நிறுத்திவிட்டு, என்னைப் பார்ப்பதில் வரும் புகையிலேயே நான் ஓடிவிடுவேன்.
பொதுவாகக் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னுடைய செயலுக்குப் பொறுப்பு ஏற்கும் தன்மையுடனும் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சிறிய வயதில் இருக்கும் போது பெற்றோர் ஏன் கண்டிக்கிறார்கள் என்று நினைப்பார்கள். அது சிறிது வளர வளரப் புரியும். நல்ல பெற்றோருக்குத் தெரியும் ‘எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும் எப்போது கண்டிக்க வேண்டும்’ என்று.
படைப்பாளர்:
ரித்திகா
ரித்திகா (18.06.2005) வயது 18, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் இதுவரை ட்ரெக்கிங், ட்ராவல் சென்ற இடங்கள் : பல்லாவரம் இரண்டு முறை, வொய்ஹெச்ஏஐ வழியாக – இராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் (2015), கோவா (2016), இராஜஸ்தான் பாலைவன ட்ரெக்கிங்(2017); சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ வழியாக – ஜவ்வாது மலை ட்ரெக்கிங் (2017), பரம்பிக்குளம் பயணம்(2016), பாண்டிச்சேரி (2017), கோதாவரி பயணம் (2018) ஆகியவை.
ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். கல்லூரியில் படித்து வருகிறார்.