Site icon Her Stories

எல்லாம் பய மயம்!



கோபத்தின் ஆணிவேர் பயம்.

பயம், கோபம், குற்றவுணர்வு, வெறுப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தீவிரத் தொடர்புடையவை.

நமக்கு எதற்கெல்லாம் பயம்?

மேனேஜரிடம் லீவ் கேட்க பயம். இருட்டைக் கண்டால் பயம். யாராவது சத்தமாகப் பேசினால் பயம். பாம்பைக் கண்டால் பயம். பூச்சிகளைப் பார்த்து பயம். உயரத்தைக் கண்டால் பயம். புகையைப் பார்த்தால் பயம். புழுதிக்குப் பயம்.

தனிமைக்குப் பயம். வேலை போய்விடுமோ என்கிற பயம். இந்த வாழ்க்கை போய்விடுமோ என்கிற பயம். நாம் நேசிப்பவர்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பயம். நமக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று பயம்.

எதிர்காலம் குறித்த பயம். செய்யும் வேலைகள் தவறாகி விடக் கூடாது என்கிற பயம். ஓட்டும் வாகனம் எதிலும் இடித்து விடக் கூடாது என்கிற பயம். யாரும் நம்மை எதுவும் சொல்லிவிடுவார்களோ என்கிற பயம்.

எதிர்காலம் குறித்த பயங்கள், பணம், குழந்தைகளின் ஆரோக்கியம், படிப்பு, திருமணம் ஆகியவை குறித்த பயங்கள், ஆபத்து வலி கவலை குறித்த பயங்கள். விபத்து குறித்த பயங்கள்.

இறந்த காலத்தில் நிகழ்ந்த பயங்கர நிகழ்வுகளால் ஏற்படும் பயங்கள்;
அவை நிகழ்ந்து எவ்வளவோ காலங்கள் ஆன பின்பும், அவற்றின் கோர நினைவுகளைவிட முடியாமல் இருப்பதாலான பயங்கள்.

இப்படிச் சூழ்நிலைகள் – காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், இவை எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது பயம் என்கிற ஒரே உணர்வுதான்.

உண்மையில் பயம் என்பது நமக்குள் இருக்கும் வெறும் எண்ணத் தோற்றம் மட்டுமே. பயத்தின் அடிப்படை, எதையோ நாம் இழந்து விடுவோமோ என்கிற கவலைதான். நம்முடைய பொருள்கள், உறவுகள், சுயமதிப்பு, இப்படி ‘நான்’ என்ற எண்ணத்தின் சேகரிப்புகள் மற்றும் பரிமாணங்கள் ஆகியவற்றை இழந்து விடுவோமோ என்கிற கவலை. மரணபயமும் இதில் சேர்த்தி – ஆழ்ந்து யோசித்தால், மரண பயம் என்பது இந்த உடலை இழந்தால் என்ன ஆகுமோ என்ற பயம்தான்; மற்றவர் மரணம் குறித்துப் பயப்படுவதும் கவலைப்படுவதும் – அவரை இழந்தால், நாமடையக் கூடிய இழப்புகள் சார்ந்த பயங்களே.

பயத்தைப் போக்க என்ன செய்யலாம்?

நாம் ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம், அதன்பின் நடக்கப் போவது என்ன என்று தெரியாததால், பதற்றம் ஏற்படுகிறது. இதை நேர்மறையாக எதிர்கொண்டு, நடப்பது எதுவாக இருந்தால் என்ன, இதைத் தைரியமாக எதிர்கொள்வேன் என்று துணிந்தால் பயம் ஓடிவிடும்.

விளைவுகளைப் பற்றிப் பெரியதாகக் கற்பனை செய்துகொண்டு பயப்படாமல், இந்தச் சூழலில், இந்தத் தருணத்தில் நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்தால், சூழ்நிலையை அது எத்தகையதாக இருக்கிறதோ அத்தகையதாகவே எதிர்கொள்ள முடியும்.

இப்படி, எதைக் கண்டு, யாரைக் கண்டு, எந்த சூழலைக் கண்டு எல்லாம் பயப்படுகிறோமோ – அவற்றை எதிர்கொண்டு விடுவது அவை மீதான பயத்தைப் போக்கி விடும். உதாரணமாக நீரைக் கண்டு பயமா, நீச்சல் கற்றுக்கொள்வது; மலை உச்சிக்குப் போக பயமா, மலை ஏற்றம் செய்வது; சிறுவயதில் மிரட்டிய சித்தப்பாவைக் கண்டு இப்போதும் உதறல் ஏற்படுகிறதா, அவரிடம் சென்று எதற்கு மிரட்டினாரோ அந்த விஷயத்தைப் பேசி விடுவது; இருட்டைக் கண்டு பயமா, கண்ணை மூடி அமர பயமா, இருளில் கண்மூடி அமர்ந்திருக்கப் பழகுவது.

இன்னொன்று மார்கஸ் அரேலியஸ் சொல்வார், ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லையா, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்கிற முதல் நிலை எண்ணத்தில் மட்டும் மனதை நிற்கச் செய்ய வேண்டும்; இப்படியே நலக்குறைவு அதிகமாகி, குழந்தை இறந்துவிடுமோ என எண்ணங்களின் அடுத்த நிலைக்குப் போகக் கூடாது. இது தேவையற்ற பயங்களிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்யும். நிகழ்வதின் உள்ளபடியேயான தன்மையை உணரச் செய்யும். வேண்டாத, விபரீத கற்பனைகளைக் கட்டுப்படுத்தும்.’

ஏனெனில், நமது கற்பனைகள்தாம் பயத்தைப் பெரிதாக்குகின்றன; பயத்திற்கு பலமூட்டுகின்றன.

நாம் அறிந்திருப்போம். சிறுவயதில் சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டு, அதற்குப் பயந்து பழகிய யானை, பெரிதான பின்பும் அந்தச் சங்கிலியைவிட பலம் வாய்ந்ததாக ஆன பிறகும், அந்தச் சங்கிலிக்குக் கட்டுப்பட்டு நிற்கும். அதைப் போலவே நாம் சிறுவயதில் யாரிடம் எதற்காகப் பயந்தோமோ, அவர்களிடம் அதற்காக இன்றும் பயம்கொண்டிருப்போம். எல்லாமே மனம் செய்யும் கற்பனைகள்தாம். துளியை ஊதிப் பெருக்க வைப்பது நம் மனம்தான்.

பயத்திற்கு காரணமான இன்னொன்று எதிர்பார்ப்பு. மற்றவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்; துளி குறைபாடில்லாமல் வேலைகள் நாம் நினைத்தது போலவே நடக்க வேண்டும்; நாம் நினைத்தபடியே இந்த உலகம் இயங்க வேண்டும் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்ப்புகள்.

இவை எல்லாம்விட, நாமே நம் மீது கொள்கிற கூடுதல் எதிர்பார்ப்புகள் இன்னும் கொடுமையானவை; சில நேரம், தானறியாமல் தன்னையே வதைத்துக்கொள்பவை. இந்த வாழ்வு ‘பிஸ்கெட் மேக்கிங்’ கிடையாது, இவ்வளவு மாவு இவ்வளவு சர்க்கரை இந்தளவு நீர் என வேக வைத்து எடுக்க. அது ஒரு பூ மலர்வது போன்ற படைப்பாற்றல் நிகழ்வு ஆகும்.

எதிர்பார்ப்புகள் எங்கு முடிவடைகின்றனவோ, அங்கு அமைதி தானாக வருகிறது என்பார் புத்தர். அமைதியான மனம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. இது நடந்தேயாக வேண்டும் என எதையும் கட்டாயப்படுத்துவதில்லை. இப்படிச் செய்தேயாக வேண்டும் என யாரையும் நிர்பந்திப்பதில்லை.

பயத்தை ‘ப்ரேக் த்ரூ’ பண்ணி வருவது நம்மையே நமக்கு யாரென்று காட்டும். எதெல்லாம் பயம் என்று ஒரு லிஸ்ட் போடுங்கள். ஒவ்வொன்றாக அதைக் கடந்து வாருங்கள். நமக்குப் பிடித்த புத்தகம் தயாரித்ததைவிட, இந்த ‘எதிர்மறை உணர்வுகளை’ லிஸ்ட் போட்டு, அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து வருவது, நாம் யார் – நம்மால் என்னவெல்லாம் முடிகிறது – இதை நாமா செய்தோம் – என நாமே வியக்கும்படி நமதின் உன்னதங்களைச் சிறப்பாக அறியத் தரும்.

(தொடரும்)

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

Exit mobile version