Site icon Her Stories

 வரதட்சிணை இல்லாத கல்யாணமா?

(கல்யாணமே வைபோகமே – 2)

திருமணத்தின்போது பெண்ணுக்காகப் பொன்னும் பொருளும் கொடுப்பது உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சட்டங்கள் இதைத் தடை செய்தாலும், இன்றளவிலும் இது ஒழியவில்லை என்பது நாம் அறிந்ததே.

‘Dowry’ என்கிற வார்த்தையை ஆராய்ந்து பார்த்தால் இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.

//The word dowry comes from the French word dowarie and was first used in the Middle English period (1150—1500). The earliest known use of the word was in the writing of Robert Mannyng, a poet and historian, around 1330.

A dowry is a gift of property or money given by either the bride or groom to their future spouse upon marriage. It can also refer to the property or savings a woman brings into a marriage.//

இதே விஷயத்தைதான் மநுஸ்மிருதியும் சொல்கிறது.

ஆனால் Dowry என்கிற சொல்லுக்கு இணையான சொல் என்று பார்த்தால் சீதனம் என்பதே சரியாக இருக்கும். வரதட்சிணை என்பது இதிலிருந்து சற்று மாறுபடுகிறது.

தட்சிணை என்றால் காணிக்கை என்பதை நாம் அறிவோம். அதுவும் தட்சிணை என்பது அவரவர் வசதிக்குத் தகுந்தபடி இயன்றதைக் கொடுப்பதுதான். குறிப்பிட்ட தொகையைக் கட்டாயமாக வசூலிப்பதற்குப் பெயர் கட்டணம். Fees, service charges, Commission இப்படி.  

கலைகளைக் கற்றுக் கொடுக்கும் குருவுக்குத் தொடங்கி, வீட்டு விசேஷங்களைச் செய்துவைக்கும் பார்ப்பனர் வரை, இங்கே எல்லாவற்றுக்குமே இப்பொழுது ‘Fixed Rate’தான் இல்லையா?

அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில் தட்சிணை என்கிற சொல்லை நாம் உபயோகிக்கவே கூடாது. 

இதில் வரதட்சிணை என்றால்? 

வரன் என்றால் மணமகன் அல்லது கணவன் என்று பொருள். தங்கள் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள, வரனுக்குக் கொடுக்கும் கட்டணத்தையே வரதட்சிணை என்று கௌரவமாகச் சொல்லிக்கொள்கிறோம்.

(வது என்கிற சொல்தான் மணப்பெண்ணைக் குறிக்கும். அது தெரியாமல், மகனுக்குப் பெண் பார்ப்பவர்கள்கூட வரன் பார்க்கிறோம் எனது சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.) 

பெண்ணை மணப்பதற்கு ஒருவனுக்கு எதற்குத் தட்சிணை / கட்டணம் அளிக்க வேண்டும்? பரிசம் கொடுத்து ஒரு பெண்ணை மணந்தது போய், இந்தத் தட்சிணை கொடுத்து மணப்பது என்பது எப்படி வந்திருக்கும் என்று யோசித்தால், ‘உயர் சாதி இந்துப் பெண்’ணில் அதற்கான பதில் இருக்கிறது.

ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்வது,  சீர் வரிசைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொள்வது, திருமணமான இளம் மனைவியைக் கைவிட்டுவிடுவது, வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டு மறுபடியும் மணம் செய்து கொண்ட எவரையும் பெயருக்குக்கூட எட்டிப் பார்க்காமல் இருப்பது எனப் பத்து, பதினொன்று, இருபது அல்லது நூற்று ஐம்பது பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொண்டு பின்பு அதையே வியாபாரம் ஆக்கிவிடுவர். 

இப்படித்தான் இது தொடங்கி நாடு முழுவதும் பரவியிருக்கக்கூடும். இன்றுவரை இந்தியா முழுவதும், எந்த ஒரு சாதி மத வேற்றுமையும் இல்லாமல் இதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

பெண்கள் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது என்பதற்காகவே அவர்களுடைய கல்வி மற்றும் பொருளாதார நிலையை ஒடுக்கி வைத்திருக்கும் மனுதர்மம், பெண்களுக்கான சொத்துகள் பற்றி ஆங்காங்கே சொல்லி வைத்திருக்கிறது. 

அந்தச் சொத்துக்குப் பெயர்தான் ஸ்த்ரீதனம். அதைத்தான் நாம் சீதனம் என்கிறோம்.

இப்படிப்பட்ட சீதனமானது பெண்களுக்கு ஆறு வகையில் கிடைக்கும். 

திருமணச் சமயத்தில் அக்கினியின் முன்னிலையில் தந்தையினால் வழங்கப்படுவது பெண்ணின் சொந்தச் சொத்தாகிறது. இதற்கு ‘அத்யாக்கினி’ என்று பெயர்.

திருமணமான பெண்ணைப் புகுந்த வீட்டிற்குக் கணவனுடன் அனுப்பி வைக்கும்போது அவளுக்குக் கொடுத்த பொருள், இதற்கு ‘ஆத்யாவாஹனிகம்’ என்று பெயர். 

திருமணச் சமயத்தில் மற்றவர்கள் அன்புடன் அவளுக்குக் கொடுத்த பொருட்கள். 

கூடப்பிறந்த சகோதரர்கள் அவள் தங்கள் இல்லத்துக்கு வரும்போது அல்லது அவர்கள் இல்லத்துக்கு இவர்கள் போகும்போது மற்றும் விசேஷ நாட்களிலோ அவளுக்கு வழங்கியவை. 

தந்தை மூலமாகக் கிடைத்த தனம். 

தாய் மூலமாகக் கிடைத்த தனம். 

(தாய் தந்தை இறந்த பிறகு, குடும்பச் சொத்தைப் பிரிக்கும் போது பெண்கள் திருமணம் ஆகாமலிருந்தால், அவர்களுக்கு இந்தக் கடைசி இரண்டு தனமும் கிடைக்கலாம் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்). 

இந்த ஆறு வகைகளில் பெண்களுக்குக் கிடைக்கும் தனமானது அவளுடைய சொந்தச் சொத்தாகும்.

திருமணத்திற்குப் பிறகு கணவனின் வீட்டுச் சொத்திலிருந்தோ, தாய் வீட்டுச் சொத்திலிருந்தோ கிடைத்தவையும் கணவன் அன்போடு அவளுக்கு அளித்தவையும், முதலில் சொன்னபடி ஆறு வகைகளில் அவளுக்குக் கிடைத்தவையுமான சொத்துகள் முழுவதும் கணவன் உயிரோடு இருந்து இவள் இறந்து விட்டாலும் இவளது சந்ததியினரையே சேரும். கணவனுக்கு அந்தச் சொத்தில் உரிமை இல்லை.   (மநு – 9 : 195) 

பாகப் பிரிவினைச் செய்துகொள்ளும்போது, திருமணமாகாத சகோதரிகள் இருந்தால், சகோதரர்கள் அவரவர் பங்கிலிருந்து நான்கில் ஒரு பங்கை அந்தப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் (மநு – 9 : 118)

தாயும் தந்தையும் இறந்த பிறகு சகோதரர்கள் சொத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போது சொத்தில் பிள்ளைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது.  (மநு – 9 : 104)

ஒரு பெண் இறந்தால் அவளுடைய சீதனப் பொருள் அவளுடைய மணமாகாத பெண்களுக்குச் சேரும்  (மநு – 9 : 131)

ஆசுர விவாகம் பற்றிச் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அதன்படி, பசு, காளை போன்றவற்றை ஒன்றோ இரண்டோ (சுல்கம் / பரிசம்) வரனிடமிருந்து  பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கலாம். ஆனால் இதுவும்கூடப் பெண்ணை விற்பதற்குச் சமமே! (மநு – 3 : 53)

பெண்ணுக்கு ஈடாகப் பணம் வாங்காமல், அந்தப் பரிசப் பணத்தைப் பெண்ணுக்காகக் கொடுப்பது விற்பனை இல்லை. அப்படிப் பெண்ணை மணம் செய்து கொடுப்பவரே அவளிடம் அன்பும் கருணையும் உடையவர்.  (மநு – 3 : 54)

தந்தை, கணவன், உடன் பிறந்தவர்கள், மைத்துனர் ஆகியவர்கள் திருமணத்தின்போது பெண்ணுக்கு ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றைக் கொடுத்து அவளை மகிழ்வுறச் செய்வது கடன். (மநு – 3 : 55)

//அட, மநு பெண்களிடம் நீதி தவறாமல் பரிவுடன்தானே தருமங்களை வகுத்திருக்கிறார் என்றுதானே தோன்றுகிறது?  பெண்களை மநு தர்மம் எவ்வளவு கேவலமாகச் சித்தரிக்கிறது என்று தொடர்ந்து வருவதைக் கவனித்தால் புரியும்.//

ஆடை அணிகளால் மகிழ்வுற்று விளங்கும் பெண் உள்ள வீடுதான் செழிப்பாக இருக்கும், பிறந்த வீட்டை எண்ணி பெண் மனம் நொந்தால், அதுவே சாபம் ஆகும். அந்தக் குலம் நாசமடையும்,

அதனால் பண்டிகை நாள் கிழமைகளில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு ஆடை ஆபரணங்களைக் கொடுத்து சந்தோஷப் படுத்த வேண்டும். 

ஆடை  அணிகலன்களால் திருப்தியுறாத மனைவி, கணவனுக்கு மகிழ்ச்சி தரமாட்டாள். அவளிடம் சந்ததி உண்டாகாது. கணவனால் விரும்பப்படாத பெண் பிறரால் தீண்டப்பட்டு அதனால் அந்தக் குலமே தாழ்ந்து போகும். (மநு – 3 : 54 – 62)

ஆக, பெண்கள் ஆடை ஆபரணங்களுக்கு அலைபவர்கள் என மநுதர்மம் அனைவரையும் நம்பவைக்கிறது. சகோதரி மீது உள்ள அன்பால் அவளுக்குச் செய்வது போக, சாபத்துக்குப் பயந்து செய்தாக வேண்டிய கட்டாயத்தை உடன் பிறந்த ஆண்களுக்கு உருவாக்குகிறது. அவளை முறையாகக் கவனிக்கவில்லை என்றால், அவள் தடம் மாறிப் போவாள் என்கிற பயத்தைக் கணவனுக்குள் விதைக்கிறது.

தொடக்கக் காலத்தில் பரிசப் பணம் பெற்றுக்கொண்டு பெண்களைத் திருமணத்துக்குக் கையளித்தது போக, வரதட்சிணைக் கொடுத்து பெண்களைத் திருமணம் செய்துகொடுக்கும் நெருக்கடியையும், இந்த மனுதான் ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்தடை வசதிகள் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில், ‘எட்டு நாயும் பொட்டைக் குட்டியும்’ என வசனம் பேசிக்கொண்டே, பத்து, பன்னிரண்டு, ஏன், பதினான்கு பதினைந்து பிள்ளைகளைக் கூடப் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உணவு கொடுத்து, பேணி வளர்ப்பதே சவாலான விஷயம்தான். குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனால், நிலைமை பரிதாபம்தான்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் வரன் தேடி திருமணம் முடிப்பதற்குள், யாரவது ஒரு பெண் (மணமாகாமல்) பூப்படைந்துவிட்டால் அவ்வளவுதான்!

இந்த அழகில், தாய் தந்தை மறைவுக்குப் பிறகு, சொத்தைப் பிரிக்கும்போது திருமணமாகாத சகோதரிகள் வீட்டில் இருப்பின், அவர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க, எத்தனை சகோதரர்கள் தயாராக இருப்பார்கள்? கூடுமானவரை, கிடைத்த வரன்களுக்கு அவர்களைத் தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள்.

‘கலம் புடைத்தால் பதுக்கு தேறாது’ எனும் பழமொழி ஒன்று உண்டு. அது போல, குடும்பச் சொத்துகள், மிக மிகச் சொற்பமானதாகவே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டிருக்கும். அதைப் பங்குபோட எக்கச்சக்க அடிதடி தகராறுதான் நடந்திருக்கும். 

‘புத்’ எனும் நரகத்தில் வீழாமல் காப்பதால், குடும்பத்தில் முதலாவதாகப் பிறந்த ஆண் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறான். சொத்தில்கூட அடுத்தடுத்த பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பங்கை விட அவனுக்கு அதிகம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது மநு. அதற்கு உத்தாரபாகம் என்று பெயர்.

ஒரு பெண்ணுக்குச் சேரும் பங்கை நேரடியாக அவளால் அனுபவிக்க இயலாது. எப்படி இருந்தாலும் அது மாப்பிள்ளையையே போய்ச் சேரும். சுற்றி வளைத்து, மகன்களுக்குச் சேர வேண்டிய சொத்தில் மாப்பிள்ளைக்குப் பங்கு கொடுப்பதா? 

அதனால் தந்தையுமே, தான் உயிருடன் இருக்கும்போதே பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்து அனுப்பிவிடத் துடிப்பார். 

தந்தைக்கு அடுத்து மூத்த மகன்தான் என்கிற நிலைமை இருந்ததால், மொத்தக் குடும்பமும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். பெற்ற தாயே ஆனாலும் இதற்கு விதிவிலக்கில்லை.

மூத்த மகனைப் பெயர் சொல்லி அழைக்கக் கூட தயங்கிய நிலையெல்லாம் இருந்திருக்கிறது. 

ஆனால் மகன்கள் அம்மாவை ‘டீ’ போட்டு ஒருமையில் அழைப்பதும், ‘பட்டி முண்ட’ ‘படவா முண்ட’ என இகழ்வதும் கூட சகஜமாக இருந்திருக்கிறது.

அப்படி இருக்கும்போது, பெற்ற மகள்களின் வாழ்கையை முடிவு செய்யும் உரிமை, அவர்களுக்கு எங்கே இருந்திருக்கும்? மனம் தாங்காமல் ஏதாவது சொன்னால்கூட, ‘உனக்கு என்ன தெரியும், மூலையில் கிட’ என்று ஒடுக்கிவிடுவார்கள். தன் விருப்பத்தை வாய் திறந்து பெண்களால் சொல்லவே இயலாது.

‘சொத்து இருந்தால்தானே இதெல்லாம், இல்லாமல் போனால்?’ என்கிற கேள்வி எழலாம். உண்மையில், சொத்துபத்து இல்லாமல் போனாலும்கூட, வேறு ஒரு நெருக்கடியும் இருந்தது.

வீட்டுப் பெண்களுக்குத் திருமணம் முடிக்காமல், மூத்தவர்களாக இருந்தாலும்கூட மகன்களைத் திருமணம் செய்துகொள்ள நம் குடும்ப அமைப்பு சுலபத்தில் அனுமதிப்பதில்லை. அதனால்கூட பெண்பிள்ளைகளுக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொடுக்கும் கட்டாயம் இருந்தது.

ஸ்திரீதனம் எனப் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், அப்படி ஒரு தனம் பெண்ணுக்குக் கிடைத்தாலும், அந்தத் தனத்தால் அவளுக்கு எந்த ஒரு பயனும் இருந்திருக்காது. அதைச் சுயேச்சையாக உபயோகப்படுத்த நம் குடும்ப அமைப்பு ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அனுமதித்திருக்கும் என்பது கேள்விக்குறியே.

நகை, புடவைகளைக்கூட மாமியாரிடம் கொடுத்துவிட்டு, அவர் அனுமதித்தால் மட்டுமே போட்டு அழகு பார்க்க முடியும். அடுத்து, அவளுக்கு கொடுத்த செல்வத்தைத் தங்கள் வீட்டுப் பெண்களின் திருமணச் சீதனத்துக்குக் கூசாமல் உபயோகித்துக்கொள்வர். 

மேலும், திருமணமான பெண்ணுக்கு, அவர்களுடைய பிறந்தவீட்டுச் சொத்தில் பங்கே கிடையாது, அது அவளது தாய்வழி சீதனமாக இருந்தால்கூட!

வைரத் தோடு, வைர மூக்குத்தி, கணிசமான அளவில் நகைகள், குடம், குத்துவிளக்கு உட்பட, வெள்ளிப் பாத்திரங்கள், அத்துடன் ரொக்கத்துடன் கூடிய பேரம் இல்லாமல் நல்ல பணியில் / செல்வ நிலையில், வயதுப் பொருத்தத்துடன்  உள்ள மணமகன் ஒரு பெண்ணுக்குக் கிடைக்க மாட்டான்.

இப்படிப்பட்ட பேரம் பேசாத ஆண் மகன் / அவனது குடும்பம் கிடைப்பது அரிதினும் அரிது.

உண்மையில் சொல்லப்போனால், சொந்த அத்தை மகன், மாமன் மகன் என்றாலும்கூட, வாய்க் கூசாமல் வரதட்சிணை கேட்டு, கழுத்தில் கத்திவைத்தவர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.

கேட்பதையெல்லாம் கொடுத்து, நல்லவிதமாகத் திருமணம் செய்துகொடுத்தலும்கூட, இது நொள்ளை, இது நொட்டை என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

சம்பந்தி சண்டை இல்லாத கல்யாணம் என்பதே அரிதினும் அரிது.

சொத்து சுகத்துக்குக் குறைவில்லாமல் இருந்தால், ஓரளவுக்கு எல்லாமே நன்றாக அமையும். இல்லாமல் போனால், வறுமையில் வாழ்பவனுக்கோ, நல்ல நடத்தை இல்லாதவனுக்கோ, தோற்றப்பொலிவு இல்லாதவனுக்கோ, நோயுற்றவனுக்கோ, கிழவர்களுக்கோ இரண்டாம் தாரமாகவோ மூன்றாம் தாரமாகவோ வாழ்க்கைப்பட வேண்டியதுதான். வறிய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்காவது இத்தகைய பாக்கியம் கிட்டாமல் போகாது.

எப்படிப்பட்டவனையும் ஒரு பெண் நினைத்தால் நல்வழிப் படுத்திவிட முடியும். (பாணி) பானை பிடித்தவள் பாக்கியசாலி போன்ற வசனங்களை வேறெதற்காகக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்? சாவித்திரி, நளாயினி கதைகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? பெண்கள் மனமுவந்து இத்தகைய படுகுழிக்குள் போய் விழத்தானே!

கிழவர்களைத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் எல்லோருமே பணக்கார கிழவர்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டார்கள் என்றும் சொல்ல இயலாது. இரண்டாம் தாரமாக மணந்தும்கூட வறுமையில் உழன்றவர்கள் ஏராளம்.

உண்மையில், மூத்த தாரம் இறந்து, இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருந்த வயது கடந்த ஆண்களுக்கு, அவர்களது வயதை ஒத்தப் பெண்கள் கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்பதும், கைம்பெண்களை மணக்கும் அளவுக்கு ஆண்களுக்கு மனமுதிர்ச்சி இல்லை, அதைச் சாஸ்திரங்களும் அனுமதிப்பதில்லை என்பதெல்லாமும் இத்தகைய அவலத்துக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கும்.

திருமணம் செய்து அனுப்பிய பிறகு, பிறந்த வீட்டுடனான குறிப்பாகச் சகோதரிகளுடனான சுமூகமான உறவு என்பது பெண்களுக்கு அரிதாகவே வாய்க்கப் பெறுகிறது.

பெண்களுக்குப் பிறந்த வீட்டுடனான உறவு கெட்டுப்போவதற்குப் பெரும்பாலும் ஆண் அகங்காரமே காரணமாக இருந்திருக்கிறது. அத்தகைய நீயா, நானா போட்டியானது, மாமனார் மாப்பிள்ளைக்குள்ளே இருக்கலாம், மைத்துனன், சகோதரியின் கணவனுக்குள் மூளுவதாக இருக்கலாம், ஒரே வீட்டில் பெண் எடுத்த சகலைகளுக்குள் மூளுவதாகவும் இருக்கலாம் (மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் இதை அருமையாகக் கையாண்டிருப்பார்கள்). எது எப்படியோ, எல்லா உறவுகளையும் உதறித் தள்ளிவிட்டு, கணவன் ஒருவனே சாஸ்வதம் என வாழ்ந்த பெண்கள் இங்கே அதிகம்.

‘பெண்ணைப் பெத்தோமோ பீயைத் தின்னோமோ’ எனும் சொலவடை ஒன்று இருந்தது என்றால், பெண்களைப் பெற்றவர்கள் எந்தளவுக்கு அவமதிக்கப் பட்டிருப்பார்கள் எனப் புரிந்து கொள்ளலாம்.

‘ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டு, மாப்பிள்ளை என்றாலும்கூட அது துள்ளிக் குதிக்குமாம்’ என்கிற சொலவடை இன்றுவரை கூட நம் பேச்சில் இருக்கிறதே!

கணவனும் சரி, பிறந்த வீட்டு ஆண்களும் சரி ஒருவருக்கு இன்னொருவர் சளைத்தவரில்லை என்பதாக, ஒரு பெண்ணைப் பாசபந்தம் உள்ள ஒரு மனுஷியாகவே கருதியதில்லை.

//இந்தத் தொடரில் நான் சொல்லும் விஷயங்கள் பலவும் இதற்கு முன்பே பலரும் அறிந்திருக்கலாம். இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று தோன்றலாம். அறியாத சிலர், ‘அட இப்படியெல்லாம்கூட நடந்திருக்கிறதா?’ என்று வியக்கலாம். 

அந்தக் காலப் பெண்கள் அனுபவித்த இன்னல்களை ஒருமுறை, யோசிக்க இது வித்திடலாம் இல்லையா?

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, தன் எழுத்தின் மூலம் பெண்களுக்கான நீதியை, சமூக முற்போக்கைப் பேசியவர் வை.மு.கோதைநாயகி. பல இன்னல்களுக்கு நடுவில் திறம்பட ஒரு பத்திரிகையை நடத்தி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, நாவல் ராணி என்கிற கம்பீரத்துடன் தலை நிமிர்ந்து நின்றவர். பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்திருந்த பல பெண்கள் அவரைப்போலச் சுதந்திரமாக வாழ்ந்திருக்கின்றனர்.

இன்றளவும்கூட கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் கிடைக்கப் பெறாமல் குடும்ப அமைப்புக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகும் பெண்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள்.

மொத்தத்தில் பார்த்தால் இவர்கள் எல்லோருமே ஆபத்தானவர்கள்தான்.

‘கல்யாணமே வைபோகமே!’ பகுதியின் மூன்றாம் பாகம் அடுத்த பதிவில் தொடரும்.

Exit mobile version