இருள் பிரிந்தும் பிரியாமலும் புலர்ந்துகொண்டிருக்கும் அதிகாலை. இரு சக்கர வாகனமொன்றில் இரண்டு வளர்ந்த மகன்கள் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு கரும்புக்காட்டுச் சாலையை விளக்கொளியில் ஊர்ந்து செல்லும் காட்சி திரையில் விரிகிறது. சில ஆண்டுக்குமுன் சொற்களாக வாசித்து மனதில் இருத்திய காட்சி, அப்படியே கவிதையாக திரையில் விரிகிறது. கண்கள் என்னையறியாமல் நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கின்றன. மனதில் பிரம்மாண்ட வடிவம் எடுக்கிறார் வாகனத்தில் அமர்ந்திருக்கும் செல்வி.
மிக சமீபமாக தமிழ் சினிமாவில் ‘நல்ல படங்கள்’ வரத்தொடங்கியிருக்கின்றன. வழமையான மசாலா படங்களில் செவிப்பறை கிழியும் சத்தத்துக்கு இடையே பறந்துபறந்து தாக்கும் சூப்பர் ஹீரோக்கள் இவற்றில் இல்லை. இந்தப் படங்களின் ஹீரோ – பேனா. ஆம், பேனாவேதான். பேனா எழுதும் நல்ல கதை ஒரு நல்ல சினிமாவுக்கு விதையாகிறதோ இல்லையோ, ஒரு நல்ல சமூக மாற்றத்துக்கு வித்தாகிறது. அதுவும் நமக்கு வகுப்பெடுக்கும் விதமாக இல்லாமல், கதையோட்டத்துடன் செய்தியை நாம் கத்தமுடியாமல், கதறமுடியாமல் அடிவயிற்றில் சொருகிச் செல்வது பெரும் கலை. அந்தக் கலை கைவரப்பெற்ற சில இயக்குநர்களில் சசி மிக முக்கியமானவர்.
அவரின் திரைப்படங்கள் பேசும் காத்திரமான பெண் மொழி எனக்கு மிகவும் அணுக்கமானது. சரியோ, தவறோ (அதை முடிவு செய்ய நாம் யார்?), சசி காட்டும் சுயமரியாதைமிக்கப் பெண்கள், உயிரோட்டமுள்ளவர்கள், ஒப்பனையற்றவர்கள், திரையில் இரண்டரை மணிநேரம் நம்முன் வாழ்ந்துவிடுபவர்கள். பூ படத்தின் மாரிபோல… இப்போது நூறு சாமியின் செல்விபோல…
2021 என்று நினைவு. தோழர் சித்தார்த்தனின் ஆங்கில நூலை வாசிக்கும் வாய்ப்பு, தோழர் கீதா இளங்கோவன் மூலம் ஏற்பட்டது. வாசிக்கத் தொடங்கியதும் கண்முன் விரிந்த செல்வியின் வாழ்க்கை அவரை எனக்கு இன்னும் நெருக்கமாக்கியது. கொரோனா காலகட்டத்தில் அவருடன் புலனவழிக் கூட்டமொன்றை நடத்தியே ஆகவேண்டும் என்று எப்படியோ அடித்துப் பிடித்து, அந்த குக்கிராமத்திலிருந்து அவரை வலைவழி பிடித்து நிறுத்திப் பேசினோம். நிறையப் பேசினோம். கொஞ்சம் அழுதோம். உள்வாங்கினோம். மிக வெள்ளந்தியான அந்த கிராமத்துப் பெண்மணியின் வாழ்க்கை திரைப்படமாக மாறும்; அதன் பிரிவியூ ஷோவை இயக்குநரும் எழுத்தாளரும் அழைத்து பார்க்கவைப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. கனவுகள் கரைசேரும் காலமிதுபோல!
தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழும் வாய்ப்பு இங்கு எல்லோருக்கும் அமைவதில்லை. அது பெரும் சலுகை. ஆனால் கிடைத்த வாழ்க்கையில் தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் பெண்கள் யாருக்கும் விட்டுத்தரவேக்கூடாது என்பதே நூறு சாமியின் ஒன்லைனர். ஒரு பெண்ணின் திருமணம் என்பது அவளின் தெரிவு மட்டுமே என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்கிறது நூறு சாமி.
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்கின்றனர் (27%). ஆனால் கல்வியில், அறிவில் மேம்பட்டுவிட்டதாகச் சொல்லப்படும் தென் மாநிலங்களில் இந்த சதவிகிதம் வெறும் 11.75% மட்டுமே. அதிலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 13.52% மட்டுமே மறுமணம் செய்துகொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தென்னிந்தியப் பெண்களில் வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழும் பெண்கள் அதிக மணமுறிவுகக்கு ஆளாகிறார்கள் என்றும் இதே ஆய்வு குறிப்பிடுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக, தென்னிந்தியப் பெண்களில் நடுத்தர வர்க்கத்துப் பெண்களைவிட ஏழ்மையில் உழலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் மறுமணம் செய்துகொள்கிறார்கள்.
தமிழ்ச் சமூகம் பெரும்புரட்சிகளைக் கண்ட சமூகம். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பே, 1936ஆம் ஆண்டு ‘மாதர் மறுமணம்’ என்கிற மறுமணத்தை ஆதரிக்கும் மாத இதழை காரைக்குடியைச் சார்ந்த மு. மரகதவல்லி மற்றும் மு. சின்னையா நடத்திவந்தது வரலாறு. தந்தை பெரியார் முதல் கலைஞர் வரை பெண்களின் மறுமணத்தை ஆதரித்து, பொதுவெளியில் இயங்கிவந்த தலைவர்களைக் கண்டவர்கள் நாம். ஆனாலும்,பெண்ணின் திருமணத்தில் முடிவெடுக்கும் உரிமையை வென்றெடுக்க பெரும் போராட்டங்கள் வீடுகளில் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. சாதித் தூய்மையைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அகமண முறையை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்கச் சமூகம், பெண்ணுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து, அவளை பொம்மைபோல ஆட்டிவைக்கவே முயல்கிறது. திருமணம் என்கிற ஒரு விஷயத்தில் மட்டும் அம்மா அப்பா சொல்வதைக் கேட்டேயாகவேண்டிய கட்டாயத்தில், சமூக அழுத்தத்தில் இளம்பெண்கள் புதையுண்டு கிடக்கின்றனர். இந்தச் சூழலில் 45 வயதைத் தாண்டிய பெண்ணுக்கு மறுமணமா என்கிற கேள்வியை முன்வைத்தே நூறு சாமி எடுக்கப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சியின் கிராமப்புறத்தில், புழுதியடிக்கும் கரும்புக்காடுகளுக்கு இடையே தொடங்குகிறது செல்வியின் பயணம். ஒற்றைப் பெற்றோராக மகன்களைக் கையில் பிடித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஆதரவுகேட்டு அவர் வந்து நிற்கும் காட்சியில், நறுக்குத் தரித்தாற்போல அவரின் தாய், தந்தையின் அந்நியோன்னியத்தைக் காட்சியாகவே காட்டி பதில் சொல்கிறார் இயக்குநர். உடன் வரும் ஏழ்மையையும், அதையொட்டிவரும் பாலியல் சீண்டல்களையும் செல்வி சமாளிக்கும் விதம் வெகு இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. எரவாணத்தில் சென்று பதியும் அரிவாள்மனை, செல்வியின் மன திடத்தை முதலிலேயே நமக்குச் சொல்லிவிடுகிறது. காலைக்கடன் கழிக்கக்கூட வாய்ப்பும் வசதியுமற்ற சூழலில் இருக்கும் கைம்பெண்களுக்கு கழிவறை எவ்வளவு அவசியம் என்பதைக்கூட மிக நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
கணவர் இறந்துவிட்டால் என்ன? ‘பிள்ளைகளுக்காக வாழவேண்டியதுதான்’ என்று பெண்களுக்கு வகுப்பெடுக்கும் இதே சமூகம்தான், மனைவி இறந்துவிட்டால், ‘புள்ளைங்க பாவம், அவன் சோத்துக்கு என்ன செய்வான்?’ என்று கேள்விகேட்டு ஆணின் மறுமணத்தை நியாயப்படுத்துகிறது. வயிறு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான் என்றாலும், ஆண் என்ன செய்வான் என்று பதைபதைக்கும் சமூகம், பெண்ணின் பசியை ‘சமாளிக்கச்’ சொல்கிறது. வயிற்றுப் பசியை ‘சமாளிக்கலாம்’. ஆனால் மற்ற பசியை? பசி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான் என்பதை மட்டும் நம் சமூகம் ஏற்க மறுக்கிறது. அதுகுறித்த திறந்த உரையாடல்களை நடத்த இன்னமும் நாம் முன்வரவில்லை. நம் வீடுகளில் வரவேற்பறைகளில் நடைபெறவேண்டிய முக்கியமான உரையாடலை திரையில் தொடங்கிவைத்திருக்கிறார் சசி. அம்மா என்பதைத் தாண்டி, பெண்ணை பெண்ணாக மட்டுமே பார்க்கச் சொல்லித் தருகிறது இந்தப் படம். நம் சமூகத்தில் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக மோசமான வன்முறை, அம்மா என்கிற பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடுமையே. அந்த ஃபர்னிச்சரைத்தான் சல்லிசல்லியாக உடைக்கிறது நூறு சாமி.
கள்ளக்குறிச்சி தமிழ் படம் நெடுக கொஞ்சிப் போகிறது. ‘ஆவட்டுங்க’, ‘ஆவட்டுங்க’ என்று கதாநாயகன் தலையசைக்கும் ஒவ்வொரு முறையும் அனிச்சையாக நம் தலையும் அசைகிறது. வலிந்து திணிக்கப்பட்ட சண்டைக்காட்சி, பாடல் காட்சிகள் போன்ற கொடுமைகள் படத்தில் இல்லை. அண்ணனும் தம்பியும் பத்துக்குப் பத்து அறைக்குள் முட்டிமோதி, கட்டிப்புரண்டு போடும் சண்டைக் காட்சி புதிது, உண்மையைச் சுமப்பது. சின்மயி குரலில் ‘மாயக் கனவோ’ பாடல் மரபுக்கவிதையென்றால், ‘ரீங்காரா’ பாடல், புதுக்கவிதையாக மனதில் சமைகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகுக்கு ஓரழகிய அம்மா பாடல் ‘அம்மா அம்மாதான்’ மூலம் கிடைத்திருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் ‘ அம்மா என்றழைக்காத’ பாடலை ஸ்டேட்டஸ் வைப்பதாம்? பின்னணி இசை மிகக் கச்சிதமாகக் காட்சிகளுடன் பொருந்திப் போகிறது.
கதாநாயகியாக ஸ்வாசிகா அருமையானத் தேர்வு. படம் நெடுக அவரே தெரிகிறார். முகத்தின் மரு தொடங்கி, உழைக்கும் வர்க்கப் பெண்ணின் உடல்மொழி வரை கடுமையான உழைப்பு தெரிகிறது. பூ படத்தின் மாரிபோல, செல்வியும் சிரித்துக்கொண்டு, நடப்பதையெல்லாம் உழைத்துக் கடந்துபோகிறார். மாரிபோலவே ஒரேயொரு காட்சியில் உடைந்து அவர் அழும்போது, இயக்குநர்மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது. ஏனய்யா அழவிடுகிறீர்?
கதாநாயகன் என்று சொன்னாலும் ஐந்தாறு காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் விஜய் ஆன்டனி மனதைக் கொள்ளைகொண்டுவிடுகிறார். கதாநாயகன் வைக்கும் குழம்பை ருசித்துப் பார்க்கும் கதாநாயகியும், தண்ணீர் தூக்கிக்கொண்டுவந்து வைத்துவிட்டு, துண்டால் முகம் துடைத்தபடி அவரை முதல்முறையாகப் பார்க்கும் கதாநாயகனும் என அந்தக் காட்சியே காலம் வரைந்த ஒரு ஓவியமாகிறது.
எஜமான் படத்தில் மீனா ஒருகை பொத்தி ரஜினியைப் பார்க்கும் காட்சி மனக்கண்முன் விரிகிறது. தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு நெடிய பயணம் இது? ஆணை ரசிக்க, அவனின் அன்றாடத்தை வியந்துபார்க்க பெண்ணுக்கும் அத்தனை ஆவலுண்டு என்பதை இத்தனை ரசனையாக நானறிந்து வேறு யாரும் காட்டியதில்லை. கதையினூடாக வரும் செல்வியின் மகன்கள் இருவரின் காதல்களும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கின்றன.
பாஸ்கர் கதாபாத்திரமாக நடித்திருக்கும் அஜய் திஷன், அதற்குரிய நியாயத்தைச் செய்திருக்கிறார். அம்மாவின் தனிமையை உணரும் இடத்தில், தன்மீதான கோபத்தில் உடைந்து அழும்போது கைபற்றிக்கொள்ளத் தோன்றும் அளவுக்கு உணர்வைக் கடத்திவிடுகிறார். ஸ்வாசிகாவின் தோழியாக வரும் மோட்சராணி தோன்றும் காட்சி ஒவ்வொன்றும் கதையில் அவரின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. மாதா சப்பரப் பவனியில், தேவாலய வழிபாடொன்றில் என முக்கியத் திருப்புமுனைக் காட்சிகள் வருவது இயக்குநரின் டச் எனலாம்.
ஆங்… படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் அந்த மின்விசிறிக்கு நான் விசிறியாகிவிட்டேன். கண்ணாடியைப் பார்த்து அவ்வப்போது தனியே பேசிக்கொள்வது உண்டுதான் என்றாலும், இந்த உத்தி புதிது. எழுதிய முதல் புத்தகத்தையே திரைப்படமாகக் காணும் வாய்ப்பு சித்தார்த்தனுக்குக் கிடைத்திருக்கிறது. கள்ளக்குறிச்சியின் பின் தங்கியப் பகுதியிலிருந்து முதல் தலைமுறைப் பட்டதாரியாக, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும், சமூக நீதி, பெண்ணியம் குறித்த வாழ்வியல் உண்மைகளைப் உள்வாங்குவதும், அதை நடைமுறைப்படுத்த முயல்வதும் அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் இந்தத் திரைப்படம் வெளியாவதில் மிக அதிக மகிழ்வை அடையப்போகும் அன்புத் தம்பி சித்தார்த்தனுக்கு என் பேரன்பு. செல்வியின் மகனைத் தெரிந்துகொண்டிருப்பதில் அத்தனை பெருமை எனக்கு!
பெண் தன் சுயவிருப்பத்தை நிறைவேற்ற முற்படும்போது ‘குடும்பம்’ என்கிற அமைப்பு எவ்வளவு கீழ்மையாகச் செயல்படுகிறது என்று காட்டியிருக்கும் ஒரு காட்சி போதும், இங்கு இன்னும் என்னவெல்லாம் மாறவேண்டும் என்பதைச் சொல்ல… நூறு சாமி பேசும் அரசியலும் அதுதான். பெண் சுதந்திரமானவள். அவளின் தெரிவின்பால் அவளுக்கு உரிமையுண்டு. அது திருமணம், மறுமணம் என எதுவாகிலும்…
உண்மைக் கதைகளைத் திரைக்குக் கொண்டுவருவதில் எப்போதுமே ரிஸ்க் அதிகம். கரணம் தப்பினால் மரணம்தான். ஆனால் மிகத் துல்லியமாக திரைக்கதையை வடிவமைத்து, காட்சிப்படுத்தியதற்கு படக்குழுவுக்கு பாராட்டைச் சொல்லியே ஆகவேண்டும். சசி எனக்கு எப்போதுமே ஆதர்சம். நாங்கள் இருவருமே பூ காலம் தொடங்கி இதோ நூறு சாமி வரை ‘வளர்ந்திருக்கிறோம்’, வெவ்வேறு பாதைகளில். ஆண் இயக்குநர்கள் (இயக்குநர்களில் ஆணென்ன பெண்ணென்ன என்று சொல்பவர்கள் மன்னிக்க) இயல்பிலேயே பெண் விரோதக் காட்சிகள், கொச்சையான கவர்ச்சி, பாலின சமத்துவமென்றால் கிலோ என்ன விலை பாணியிலேயே படம் சொல்வதுண்டு. அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பெண் மொழியை அறிந்து, உணர்ந்து படங்கள் இயக்குவது சசியின் சிறப்பு. பெண்ணின் ஆண் பார்வையை எந்த இடத்திலும் படத்தில் விட்டுத்தராமல், சமரசமின்றிப் பதிவு செய்திருப்பதற்கு என் அன்பும் நன்றியும், சசி!
செல்வி திரைப்படத்தைப் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் செல்விகள் பலருக்கு பெரும் ஊக்கமாக இருப்பார் என்பது உண்மை.
டீம் நூறு சாமிக்கு என் அன்பும் வாழ்த்துகளும். யதார்த்த சினிமா இனி வாழும். மக்களின் வாழ்க்கையை அச்சு அசலாகப் பிரதியெடுக்கும் இந்த முயற்சிக்கு என் மனம் கனிந்த பாராட்டும், வாழ்த்தும்.
நாளைமுதல் உங்கள் அருகமைந்தத் திரையரங்குகளில்…
#Noorusami
#sasi
#righttomarry
படைப்பாளர்
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், இணை நிறுவனர் – ஹெர் ஸ்டோரிஸ், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்.


