Site icon Her Stories

இப்போ யாருங்க சாதி பார்க்கிறாங்க?

‘இப்போ எல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க?’

இல்லைங்க, ரத்தம்தான் பார்க்குறாங்க! அதுவும் இளைய தலைமுறையினரின் சூடான ரத்தம் பார்ப்பதில்தான் குதூகலம் அடைகிறார்கள் இந்த ஜாதி வெறியர்கள்.

ஆகஸ்ட் 9 அன்று தமிழ்நாட்டின் தென் மாவட்டமான நாங்குநேரியில் நிகழ்ந்து முடிந்துவிட்ட கோரச் சம்பவமே அதற்கு சாட்சி.

அரசுப் பள்ளியில் படிக்கும் அந்த மாணவர் சின்னதுரை.

“சின்னதுரையை மாதிரி படிங்க. அப்போதான் உருப்படுவிய” என்று ஆசிரியர்கள் மற்ற மாணவர்களுக்கு உதாரணம் காட்டும் அளவுக்குப் படிப்பில் திறமையானவர்.

“பெருந்தெரு பைய எங்களவிட ஒசத்தியா?” என்று குமுறியுள்ளனர் சின்னத்துரையுடன் படிக்கும் சகமாணவர்கள். ஆம், பெருந்தெருவில் வசிப்பவர்கள் பட்டியலின மக்கள். ஒரு பட்டியலின மாணவர் தங்களைவிடப் படிப்பில் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை, இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்களால்.

‘சார்பு பிரிவினை அரசியல்’ சகமாணவர்களைத் தோழர்களாகப் பழகவிடாமல், சாதிகளாகப் பிரித்துப் போடும் சாதனையை, தமிழ்நாட்டிலும் நிகழ்த்தி வென்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சின்னதுரை பள்ளிக்கு நடந்து வரும் வழியில் ஆதிக்க சாதி மாணவர்கள் தங்கள் புத்தகப்பைகளையும் சுமக்கும்படி, சின்னதுரையைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். சிகரெட் வாங்க சின்னதுரையைக் கடைக்கு அனுப்புவதும், அவன் எழுதும் விடைத்தாள்களைப் பிடுங்கி வைத்துக்கொள்வதும், நீயெல்லாம் எங்களுக்குப் போட்டியா என்று கெட்ட வார்த்தைகள் பேசி துன்புறுத்துவதுமாக இருந்திருக்கிறார்கள், அந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்கள். சின்னத்துரை இனி பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று வீட்டில் சொல்லி, ஒரு வாரமாகப் பள்ளிக்குப் போகாமலும் இருந்திருக்கிறார். பள்ளி ஆசிரியர்கள், சின்னத்துரை நன்றாகப் படிக்கும் மாணவர், அவரைப் பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டதன் பேரில், சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதி பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

பள்ளிக்கு வர மறுத்ததன் காரணத்தைத் தலைமை ஆசிரியர் சின்னத்துரையிடம் கேட்கவே, அவர் சக மாணவர்கள் தன்னை அச்சுறுத்தியதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

இரவு 10.30 மணி அளவில் ஒரு கும்பல் சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டியுள்ளது. தடுக்கச் சென்ற சின்னதுத்ரையின் தங்கை சந்திராதேவிக்கும் (வயது14) அரிவாள் வெட்டுகள் விழுந்தன. அக்கம்பக்கத்தினர் அண்ணன், தங்கை இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் என்றால் எல்லாருக்கும் ரத்தக்காயங்களுடன் கிடப்பவர்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் வந்துவிடாது. சின்னதுரைக்கு தாத்தா முறை கொண்ட ஒருவர் முன்னின்று அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அந்தத் தாத்தா முறை கொண்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சின்னதுரையின் அப்பா முனியாண்டி குடும்பத்தைப் பிரிந்து, வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். அம்பிகாபதி பிள்ளைகளுடன் தன் அப்பா கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மாரடைப்பால் இறந்து விட்டார்.

இத்தனைக்குப் பிறகும் கிருஷ்ணனின் உடலைத் தெருவில் போட்டு, நியாயம் வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கிய பிறகே போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

இதுபோல் அன்றாடம் செய்தித்தாள்களும் இணையதளங்களும் சுமந்துவரும் ஜாதிவெறி சம்பவங்கள் ஏராளம். ஆனால், இவற்றின் வீரியத்தை உணராமல், இன்னும் தெரு முச்சந்திகளில், “இப்போலாம் யாருங்க சாதி பாக்குறாங்க” என்று பேசுவதைப் போல் அயோக்கியத்தனம் இருக்க முடியாது.

டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் பேசுபொருளாகிவிட்ட இந்தச் சம்பவம், நிச்சயம் ஒரு வாரத்திற்காவது பேசப்படும். போன வாரம் மணிப்பூர், இந்த வாரம் நாங்குநேரி. மொத்தத்தில் தீர்வு காணும் களத்தை நோக்கி நகர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

வரலாற்றைப் புரட்டினால், பல நூற்றாண்டுகளாக உயர்வகுப்பென்று தங்களைக் கருதிக்கொண்டவர்கள், மற்ற சாதியினரைப் படிக்கவிடாமல், கட்டுக்குள் அடக்கி, பகிரங்க அடிமைகளாக வைத்திருந்தார்கள். அந்த அடிமைத்தளைகளை அறுத்து, சாதியரீதியாகப் படிப்பு மறுக்கப்பட்டவர்களுக்குச் சாதியரீதியாகவே படிப்பைக் கொடுக்க நம் வரலாறு தந்துள்ள விலை சொல்லி மாளாது. இன்றும் சாதியரீதியாகக் கொடுக்கப்படும் கல்விக்கான இடஒதுக்கீடுகளுக்கு எதிராக ஒலிக்கும் எதிர்ப்புகளின் வீரியத்தை நாம் அறிவோம்.

காலங்காலமாகத் தங்களால் தாழ்த்தியே வைக்கப்பட்டிருந்த மக்கள், திடீரென்று தலைதூக்கக் காரணமாக இருப்பது படிப்பறிவு என்பதை உணர்ந்து கொண்ட ஆதிக்க சாதியின் வெறியாட்டம், இன்று பள்ளிச் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களைத் திணித்துள்ளது.

“அந்தப் பாழாய்ப்போன அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சாசனம் மட்டும் தடையாக இல்லாமல் இருந்திருந்தால், சின்னத்துரையை பள்ளிக்கூடத்தின் வாசலைக்கூட மிதிக்க விடாமல் செய்திருக்கலாமே” என்கிற ஆதிக்க சாதியின் அங்கலாய்ப்பு, சின்னதுரையை வெட்டியாவது வென்றுவிட துடித்திருக்கிறது.

இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதைக் கொள்கையாகக் கொண்ட ‘பாரதீய ஜனதா கட்சி’ ஒருபுறம், ‘இந்துக்களே ஒன்று கூடுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக்கொண்டிருக்க, எங்களுக்குச் சாதிகள் கிடையாது, ‘குடிகள்தாம் உண்டு’ நாங்கள் ‘தமிழ்க்குடிகள்’ என்று குடியாலும் மொழியாலும் மக்களைப் பிரித்து, டி.என்.ஏ சோதனை செய்து கொண்டிருக்கிறது ‘நாம் தமிழர் கட்சி.’

இதற்கிடையில், “சாதி என்பதொரு அழகியல் சொல், அது கெட்ட வார்த்தை அல்ல” என்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்.

மதம், சாதி, குடி, இனம், மொழி பேதங்களை மறந்தும், பேசச் தயங்கியும், பேசப் பயந்தும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குச் சாதி, மத, இன, குடி, மொழி பேதங்களைப் பேசும் தைரியத்தை ஊட்டி எழுப்புகின்றனர் இவர்கள். “நீ என்ன சாதி?” என்று கேட்க வெட்கப்பட்டவன், நான் இன்ன சாதி என்று அறிவிக்க சாதிக்கயிறு கட்டிக்கொள்ளும் துணிச்சலை உண்டாக்கியிருக்கிறது இவர்கள் செய்யும் அரசியல்.

இந்த அரசியல் வெட்கக்கேடு இப்படியிருக்க, இதோ நேற்று இணையவாசிகளும் பத்திரிகையாளர்களும் தேடிக் கண்டுபிடித்த கூடுதல் தகவல், சின்னத்துரையை வெட்டிய கும்பலில் இருந்த ஒரு சிறுவனின் தாய்மாமன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு என்பது. இவர்களின் துப்பறியும் திறனையும் பாராட்டி விடுவோம். சுடலைக்கண்ணுவும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருப்பார் என்றால் அவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே.

அன்றாடம் அரசியல்வாதிகளையும் அரசியலையும் அரசியல் சித்தாந்தங்களையும் கலந்துதான் நம் வாழ்க்கை நகர்கிறது. இந்த ஒரு நிகழ்வில் பங்காற்றிய அரசியல் கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். மக்கள் அரசியலைப் படிக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக, இணையத்தில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பேசும் ஆண்ட சாதிப் பெருமையும் இது போன்ற குற்றங்களுக்கான தூண்டுதல் என்பதை மறுக்க இயலாது.

இன்றைய காலக்கட்டத்திலும்கூட, இன்ன சாதிக்காரன் இன்ன சாதிக்காரனை வெட்டிவிட்டான் என்று வெளிப்படையாகச் செய்தித்தாள்கள் செய்தி வெளியிடுவதில்லை. செய்தி சாதிய வெறியைத் தூண்ட காரணமாக இருந்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வே அதற்கு காரணம். ஆனால், இணைய தளங்களைத் திறந்தால், தேவர்மகன், வன்னிய நண்பர்கள், வீர வன்னியச்சி, வீர வன்னியக் கவுண்டன், நாடார் சக்தி, கொங்கு வேளாள கவுண்டன், தமிழ் கவுண்டன், பறையன், புறனானூற்று பறையன், கோனார் மீடியா போன்ற தத்தம் சாதிப்பெருமை பேசும் இணையப் பக்கங்களைப் பார்க்க முடிகிறது.

இது போன்ற இணையப் பக்கங்களைத் தடை செய்யவோ, இது போன்ற இணைய பக்கங்களைச் செயல்படுத்துவோரைத் தண்டிக்கவோ, இன்னும் சட்டங்கள் இயற்றப்படாமல் இருப்பது, ஆட்சியாளர்களின் பொறுப்பில்லாத்தனமாகத் தெரிகிறது.

நாம் படித்தென்ன? அறிவியல் வளர்ச்சி வந்தென்ன? ஈரலழுகிப் போன சாதியச் சமூகத்தால் நாம் பின்னோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த மதச்சார்பு, சாதி சார்பு, குடி சார்பு, இன சார்பு, மொழி சார்பு பேசும் அரசியல் நம்மைக் காட்டுமிராண்டியாகத்தான் மாற்றிக்கொண்டிருக்கிறது.

இப்போது பெரியார் உயிரோடிருந்திருந்தால், பள்ளிக்கூடங்களில் சாதிப்பெருமை பேசும் மாணவனின் பெற்றோரையும் ஆசிரியரையும் தண்டிக்கச் சட்டம் ஒன்று இயற்ற ஆவண செய்திருப்பார்.

இப்போது அம்பேத்கர் உயிரோடிருந்திருந்தால், மேற்கூறிய சட்டத்தோடு, இணையங்களில் ஆண்ட சாதி, குடி, இன, மொழிப் பெருமை பேசி, வன்முறையைத் தூண்டுபவர்களைச் சிறையிலடைக்கவும் சட்டங்கள் வகுத்திருப்பார்.

பெரியார், அம்பேத்கரின் சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்காததன் விளைவுதான் இந்த ரத்தத்துளிகளின் சிதறல்கள் என்று திடமாக நம்புகிறேன். பெரியாரும் அம்பேத்கரும் விட்ட இடத்திலிருந்து அவர்களது பணிகளை முன்னெடுக்க நாம் தவறிவிட்டோம். வெட்கித் தலை குனிவோம்.

சில்லறைத்தனமான ‘சார்பு அரசியல்’ பள்ளிக்கூட புத்தகப்பையில், புத்தகங்களுக்குப் பதிலாக, ரத்தம் தோய்ந்த அரிவாள்களை நிரப்பியுள்ளது. எத்தனையோ பெருந்தலைவர்கள் பாடுபட்டு கொடுத்த கல்வியில் சாதி சாக்கடையைக் கலப்படம் செய்துள்ளது.

சின்னத்துரை வெட்டப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டது சின்னத்துரை மட்டும்தானா? அவனது குடும்பம் மட்டும்தானா?

சாதியவெறிக்குப் பலியாகி, அரிவாள் தூக்கி, தங்கள் எதிர்கால வாழ்வை அழித்துக்கொண்ட மாணவர்களும்தாம்.

சின்னதுரையை வெட்டி தங்களை அழித்துக்கொண்ட ஆறு பேர்:

1. சுப்பையா, வயது 17

2. செல்வ ரமேஷ், வயது 16

3. சுரேஷ்வானு, வயது 16

4. செல்வதுரை, வயது 17

5. வான்முத்து, வயது 17

6. கல்யாணி, வயது 17

இவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளில் அடைக்கப்படுவார்கள். மைனர் குற்றவாளிகள் என்பதால், விரைவிலேயே ஜாமீனும் விடுதலையும் பெறுவார்கள். சட்டம் அதற்கு வழிவிடும்.

இனி இந்த ஆறு பேரும் இந்தச் சமூகத்தில், தன் ஜாதிக்காகத் தங்கள் படிப்பையும் வாழ்வையும் தொலைத்த தியாகிகளாக கம்பீரமாக வலம்வருவார்கள். மேலும் இது போன்ற தியாகிகளை உருவாக்கி அவர்கள் கைகளில் ஆயுதங்களைத் திணிப்பார்கள். சமுதாயம் எதை நோக்கி நகரும்?

சாதி என்பது சிக்கலான வடிவம் என்கிறார் அம்பேத்கர். ஆம், எவ்வளவு பேசினாலும் சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டேயிருக்கும் பிசாசு சாதி. இப்போது மக்களுக்குச் சாதி பற்றிய சரியான அரசியல் அறிவை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அடுத்த தலைமுறையும் சாதிப் பிசாசுக்குள் அழிந்து போகவிருக்கும் இந்தப் பேராபத்திலிருந்து, இளைஞர்களை மீட்க பல அம்பேத்கர்களும் பல பெரியார்களும் தலையெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சாதியெனும் பேய்க்கு எதிரான மாபெரும் ஆயுதங்கள் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே! சாதிப்பேயால் தீண்ட முடியாத தீப்பிழம்புகள் பெரியாரியமும் அம்பேத்கரியமும் மட்டுமே! இவ்விரு கூர் ஆயுதங்களையும் கையிலெடுத்து தீட்டுங்கள்!

நீங்கள் சிறிதளவேனும் சமூகப் பொறுப்புள்ளவர் எனில் அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர்காலத் தலைமுறையிடம் கொண்டுபோய்ச் சேருங்கள்!

படைப்பாளர்:

சக்தி மீனா

பிரதிலிபி, வைகை தமிழ் ஆகிய இணையதளங்களில் நாவல் எழுதி வருகிறார்.

Exit mobile version