நாம் அனைவரும் புதிய தொடக்கங்களைக் கொண்டாடுவோம்.
புதிய வேலை
புதிய உறவு
புதிய வாழ்க்கை
அந்தத் தொடக்கங்களில் இனிமையும் நம்பிக்கையும் நிரம்பியிருக்கும்.
’இனி எல்லாம் சுகமே…’ என்கிற அழகான எதிர்பார்ப்பு இருக்கும்.
அதை கொண்டாடுவது இயல்பே.
ஆனால்…
ஒரு சாதாரண நாளில், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நம்பியிருக்கும் நேரத்தில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும்.
நம் கனவுகள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள்.
ஒரே நொடியில் சிதறிப் போகும்.
அப்போதும் அந்த நாளை ’புதிய தொடக்கம்’ என்று பார்க்க முடியுமா?
மாலினி ராகுலின் காதலை முழு மனதோடு நம்பினாள்.
அவனுக்காகத் தனது நேரம், கனவுகள், விருப்பங்கள் எல்லாவற்றையும் மெதுவாக மாற்றிக் கொண்டாள்.
ராகுலுக்குப் பிடிக்கும் நிறம்.
அவனுக்குப் பிடிக்கும் பாடல்கள்.
அவனுக்குப் பிடிக்கும் வாழ்க்கை முறை.
ஒரு கட்டத்தில் அவளுடைய உலகமே அவனைச் சுற்றி இயங்க ஆரம்பித்தது.
ஒருநாள் இரவு பழைய சாட்tகளை ஸ்க்ரோல் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஃப்யூச்சர்ல நம்ம வீடு எப்படி இருக்கணும் தெரியுமா?” என்று அவன் அனுப்பியிருந்த மெசேஜைப் படித்தபோது, அவளது கண்கள் கலங்கின.
ஏனெனில் அந்த ஃப்யூச்சரில் இப்போது அவள் மட்டும்தான் இருந்தாள்.
மெதுவாக விலக ஆரம்பித்த ராகுல், ஒருநாள் முழுமையாக மறைந்துவிட்டான்.
அவளை ஏமாற்றினானா?
அவன் தவறா ? அவள் தவறா ?
ஒரு வேளை இருக்கலாம். ஆனால் அந்த நொடியில் மாலினிக்கு அது முக்கியமல்ல.
ஓர் உறவில், எந்த நேரத்திலும் ஒருவருக்கு அது சரியாக இல்லை என்று தோன்றலாம்.
விலகும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.
ஆனால்….
’இதற்காகவா நான் இவ்வளவு நேசித்தேன்?’ என்பதே மாலினியின் வலி.
அவளுக்குள் திரும்பத்திரும்ப மோதிய கேள்வி:
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?”
அதேபோல் ஒரு சாதாரண நாளாகத்தான் மீனாவுக்கும் அன்று விடிந்தது.
லேசான வயிற்று வலி.
“ஏதாவது சாப்பிட்டது ஒத்துக்கல போல…” என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டாள்.
வலி குறையாமல் இருந்ததால் மருத்துவரிடம் சென்றாள்.
சில பரிசோதனைகள்.
சில காத்திருப்புகள்.
பிறகு மருத்துவரின் அமைதியான குரல்:
“சில கேன்சர் சிம்ப்டம்ஸ் இருக்கு… இன்னும் கன்ஃபார்ம் பண்ணணும்.”
அந்த நொடி அவள் காதுகளில் சத்தமே கேட்கவில்லை.
வீட்டிற்கு வந்த பிறகு, குழந்தைகளின் பள்ளிப்பைகளை மெதுவாக தொட்டுப் பார்த்தாள்.
மகனின் வாட்டர் பாட்டில் சிங்கில் இருந்தது.
மகளின் ஹோம்ஒர்க் டேபிள் மேல் திறந்து கிடந்தது.
அதைப் பார்த்தவள் சுவரில் சாய்ந்து அமைதியாக அழுதாள்.
’இன்னும் எவ்வளவு நாள் இருக்கும்?’ என்று பயந்தாள்.
மருத்துவர் நம்பிக்கைக் கொடுத்தார்.
“ட்ரீட்மெண்ட் இருக்கு… நல்லா ஆகலாம்…”
ஆனால் அவள் மனதில் ஓடிய கேள்வி வேறு.
“நான் என்ன தவறு செய்தேன்?”
இது யாரோ மாலினி, மீனா மட்டும் அல்ல தோழிகளே. நாம் அனைவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நொறுங்கியிருக்கிறோம்.
’நான் மட்டும் ஏன் இவ்வளவு சிரமப்படுறேன்?’ ’என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?’ ’நான் தவறு செய்தேனா?’ என்று நம்மை நாமே விசாரித்திருக்கிறோம். அந்த நொடிகளில் வாழ்க்கை நியாயமில்லாததாக தோன்றும்.
உண்மையாகவே… வாழ்க்கை எல்லா நேரமும் நியாயமாக இருக்காது. ஆனால் அர்த்தமில்லாததுமில்லை. பிரச்னை நடந்த நிகழ்வில் மட்டும் இல்ல. அதை எதிர்கொள்ளும் விதத்திலும் இருக்கிறது.
நாம் சந்திக்கும் வலிகள், நம்மை தண்டிக்க வரவில்லை.
நம்மை மாற்ற வருகிறவை.
சில நேரத்தில் பழைய வாழ்க்கை உடையாமல், புதிய வாழ்க்கை பிறக்கவே முடியாது.
ஆனால் பலர் உடைந்த இடத்திலேயே நின்று விடுகிறார்கள்.
அங்கே ஒரு கேள்வி வாழ்க்கையை மாற்றும்.
’அடுத்து என்ன?’
அந்தக் கேள்வி வந்த நொடியிலிருந்து இரண்டு வழிகள் திறக்கும்.
ஒன்று, அதே வலியில் தங்கி விடுவது.
மற்றொன்று அந்த வலியோடு இருந்தபடியே மெதுவாக முன்னே நகர்வது.
அந்த இரண்டாவது வழியின் பெயர் தான்…
மீண்டெழுதல்.
மீண்டெழுதல் என்றால், எல்லா நேரமும் வலிமையாக இருப்பதல்ல.
எதுவும் நடக்காதது போல நடிப்பதல்ல.
’இனி எல்லாம் சரியாகிடும்’ என்று பொய்யாக நம்மை ஏமாற்றிக் கொள்வதுமல்ல.
என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, மீதமுள்ள வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயற்சிப்பது.
வாழ்க்கை ஒரே நாளில் மாறாது.
சிறிய மாற்றங்கள்தான் மெதுவாக மனிதர்களைக் காப்பாற்றும்.
இன்று படுக்கையிலிருந்து எழுவது. இன்று ஒருவரிடம் மனம் திறந்து பேச முயற்சிப்பது. ’என்னால் முடியாது’ என்பதற்குப் பதில் ’முயற்சி பண்ணலாம்’ என்று சொல்வது.
அதுவே தொடக்கம்.
நீங்கள் இப்போது எந்த நிலையில் இருந்தாலும் தோழிகளே…
சோர்வாகவோ, உடைந்துபோன உணர்வோடோ,
பயத்தோடோ இருந்தாலும், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது முடிவல்ல. ஒருநாள், ’அடுத்து என்ன?’ என்று யோசிக்க ஆரம்பிக்கும் அந்த நொடி. உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் அமைதியாக திறக்க ஆரம்பிக்கும்.
இந்தத் தொடக்கம் ஆரவாரமாக இருக்காது. ஆனால் ஆழமாக இருக்கும்.
இந்தத் தொடரின் நோக்கம் உங்களுக்குப் பொய்யான நம்பிக்கைகள் தருவது அல்ல.
உங்களின் மீண்டெழும் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவூட்டும் ஒரு தோழியாக இருப்பது மட்டுமே.
நீங்கள் நினைப்பதற்கும் மேலான வலிமை உங்களிடம் இருக்கிறது.
அதை நினைவுபடுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
இது முடிவல்ல…
தொடக்கம்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.


