நான் திருமலைச்செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பெரியவன் இளமதிவாணன். இளையவன் பெருஞ்செழியன்.
இளமதிவாணனுக்கு 6வயது. பெருஞ்செழியனுக்கு 3.5 வயது. இளமதிவாணனை வளர்க்கும்போது நான் கற்றுக்கொள்ளாததை, பெருஞ்செழியனிடம் கற்றுக்கொண்டேன். அவன் 2 வயது வரை பேசவே இல்லை. ஆனால், 2.5 வயதிலிருந்து அவன் வாக்கியங்களாகவே பேச ஆரம்பத்துவிட்டான்.
அவன் அடிக்கடி என்னிடம், “அம்மா, நான் யாரு வயத்துல இருந்தேன்” என்று கேட்பான். சிறிது நேரத்தில், “அம்மா நான் உன்னோட வயத்துல இருக்கும் போது நீ சாப்பிட்ட சோறு எல்லாத்தையும் நானே சாப்பிட்டேன். உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்பான்.
இருவரையும் உள்ளூரிலேயே ஒரு தமிழ்வழிப் பள்ளியில் சேர்த்தோம்.
ஜீலை15 காமராஜர் பிறந்த நாள். பள்ளியில் மதியம் பாயசம் கொடுத்துள்ளனர்.
அன்று அவன் வீட்டிற்கு வந்ததும், “அம்மா, எங்க ஸ்கூல இன்னைக்கு பாயசம் தந்தாங்க” என்றான்.
“இன்னிக்கு காமராஜர் பிறந்த நாள், அதனால்தான்” என்றேன்.
“ஆனா, காமராஜர் ஸ்கூலுக்கு வரல” என்றான்.
அப்பொழுதுதான் காமராஜரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். மதிய உணவுத்திட்டத்தை அவர்தான் கொண்டுவந்தார் என்றும் அவருக்கு அந்த எண்ணம் வரக் காரணமாக இருந்த நிகழ்ச்சி பற்றியும் கதையாகக் கூறினேன். இப்பொழுது கேட்டாலும் அவன் அதைக் கூறுவான்.
பெரியவனுக்குச் சாமி, பேய், மந்திரம் பற்றி எல்லாம் கேட்க ஆர்வம் அதிகம். ஒருநாள் தொலைக்காட்சி செய்தியில், ‘சிவகளை’ பற்றி வந்துகொண்டிருந்தது. அங்கு கண்டுபடிக்கப்பட்ட பானை ஓடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான். நானும் அவனுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களையும் கூடுதலாக you-tupe வீடியோக்களையும் காண்பித்தேன். அவனுக்கு ஆர்வம் அதிகமாயிற்று.
இந்த இடங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், கட்டிடக்கலை, நாகரிகம் பற்றிச் சொன்னேன். எப்பொழுதும் ஒரு நாகரிகம் ஆற்றங்கரையோரம்தான் ஆரம்பிக்கிறது. ஏனென்றால் மனிதனின் அன்றாடத் தேவைகள், வசதிகள் என அனைத்திற்கும் மூலஆதாரமாக நதிகளே விளங்குகின்றன. அவர்களுடைய வியாபாரம், தேவையான நீர், இருப்பிடத்திற்கான சமவெளி என அனைத்தும் எளிதில் அணுக முடிகிறது என்று சொன்னேன்.
சிந்துவெளி நாகரிகம் என்பது சிந்து நதிக்கரையிலும் , ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை போன்ற இடங்கள் தாமிரபரணி நதிக்கரையிலும் ஆரம்பிக்கப்பட்டவைதான் என்றேன்.
அவன் உடனே, “அம்மா அப்போ நம்ம பெரியண்ணா கோயிலயும் ஒரு ஆறு ஓடுது. அது பக்கத்துலேயும் தோண்டினா நமக்கு நிறைய பொருள் கிடைக்குமில்ல” என்றான்!
சின்னவனிடம், “செழியன், நம்ம எல்லாரும் கப்பல்ல போய்க்கிட்டு இருக்கோம். அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, நீ எல்லாரும் கடல்ல விழுந்துட்டோம். நீ மட்டும்தான் கப்பல்ல இருக்க. நீ யாரையாவது ஒருத்தரைதான் காப்பாத்த முடியும். நீ யாரைக் காப்பத்துவ?” என்று கேட்டேன்.
நான் எதிர்பார்த்தது அவன் மாமா என்றுதான் சொல்வான் என்று. ஆனால், அவன் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.
“அம்மா, நான் ஒருத்தரைக் காப்பாத்திட்டு அவங்க மூலமா எல்லாரையும் காப்பாத்திடுவேன்!”
என்னிடம் இதே கேள்வியைக் கேட்டிருந்தால் நான் இதே பதில் கூறியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.
அப்பொழுதுதான் தோன்றியது. குழந்தைகளிடம் நாம் நிறைய பேச வேண்டும். அது அவர்களது சிந்தனைத் திறனைப் பல கோணங்களில் யோசிக்க வைக்கும்.
குழந்தைகளிடம் சிறிது நேரம் செலவிட்டு பேசினால் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. நாம் கேட்கும் கேள்விகளால் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் மேம்படும். அவர்களின் பதில்களால் நாமும் நம்மை மேம்படுத்திக்கொள்ள இயலும்.
தொடர்ந்து பேசுவோம்…
படைப்பாளர்:
திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.