தமிழகத்தின் தொன்மையான கலைகளுள் ஒன்று கும்மி ஆட்டம். கைகளைக் கொட்டி, பாடல் பாடியவாறு ஆடும் இந்த ஆட்டத்துக்கு இசைக் கருவிகள் எதுவும் இல்லை. அதனால் இசைக் கருவிகள் கண்டறியப்படுவதற்கு முன்னரே இந்தக் கும்மியாட்டம் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பைப் போக்கவும், உழவுத் தொழில் குறித்த விவரங்களை அடுத்தவருக்கு எளிமையாக எடுத்துரைக்கவும் இந்தக் கும்மியாட்டம் ஆடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கேரள நாட்டில் இந்த ஆட்டம் ‘கைகொட்டிக்களி’ என்றும், ‘திருவாதிரைக்களி’ என்றும் அழைக்கப் படுகிறது. ’குரவை’ என்று முதலில் தோன்றிய ஆட்டத்தில் இருந்து பிரிந்ததாகக் கருதப்படும் கும்மி சங்க இலக்கியங்களில் ’கொம்பை’ என்கிற பெயரில் குறிக்கப்படுகிறது. இந்தக் கொம்பைக் காலப்போக்கில் கொம்மை, கொம்மி, கும்மி என்று மருவியிருக்க வாய்ப்புகள் உண்டு.
ஆதிகாலத்தில் பெண்களால் மட்டுமே கும்மி ஆடப்பட்டது. கால மாறுதலில் ஆண்களும் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்ளத் தொடங்கினர். குழுவில் ஒருவர் பாட, மற்றவர்கள் பின்பாட்டுப் பாடிக்கொண்டே வட்டமாக நின்று கைகளைக் கொட்டி, வளைந்து, நெளிந்து ஆடுவர். இத்தகைய கும்மிப் பாட்டுகள் செவிவழியாகத் தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. கும்மி அடிக்கும் முறை மெல்ல நடந்து, நடந்து நின்று, குனிந்து நிமிர்ந்து, குதித்து குதித்து, தன் கையைக் கொட்டி, அருகில் ஆடுபவர்கள் கையைத் தட்டி என்று ஆறு முறைகளில் ஆடப்படுகிறது. தமிழகத்தில் ஆடும் கும்மி விரல் தட்டு, உள்ளங்கைத் தட்டு, அஞ்சலித் தட்டு, முழங்கைத் தட்டு என்று பல நடைமுறைகள் உண்டு. அது மட்டுமன்றி பூந்தட்டு கும்மி, தீபக் கும்மி, குலவைக் கும்மி, கதிர் கும்மி, முளைப்பாரி கும்மி என்று பலவகை உண்டு.
சங்க இலக்கியங்களில் இந்தக் கும்மி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த ஆட்டத்திற்கான பாடல்கள் பெரும்பாலானவை இன்று நம் கைவசம் இல்லை. இவை எழுதி வைக்கப்படாததாலும், செவிவழிப் பாடல்களாக அமைந்ததாலும் இந்தப் பாடல் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிட்டவில்லை. பல ஆண்டுகளாக வாய்வழி பாடல்களாகப் பாடப்பட்டு வந்த இந்தக் கும்மி பின்னர் கும்மி இலக்கியம் என்கிற பெயரில் அச்சில் ஏறத் தொடங்கியது. வள்ளியம்மன் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, பஞ்ச பாண்டவர்கள் கும்மி, வைகுந்த கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபதேச கும்மி என்று பலவகையான கும்மி இலக்கியங்கள் தோன்றின. கும்மி பாடல்களுக்காகத் தனி இலக்கணம் வகுக்கப்பட்டது. கோயில் திருவிழாக்களில் வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கும்மி இடம்பெற்றது. இறை உணர்வைத் தூண்டும் வகையிலும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான பிரச்சாரத்துக்கும் இந்தக் கும்மி ஆட்டம் ஆடப்பட்டது. மிக எளிதாக அனைத்துத் தரப்பு மக்களையும் இந்தக் கும்மி ஆட்டம் சென்று சேர்கிறது. மகாகவி பாரதியார்கூட தம்முடைய கும்மிப்பாடல் மூலமாக விடுதலைக் கனலை மக்கள் நெஞ்சில் விதைத்தார்.
உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் கும்மி ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். தமிழ்க் கடவுளாகக் கருதப்படும் முருகனின் மனைவி வள்ளி. இந்த வள்ளியின் பிறப்பு முதல் முருகனுடனான திருமணம் வரை பாடி ஆடப்படுவதுதான் வள்ளிக் கும்மி. என்னுடைய சிறுவயதில் எங்கள் ஊர்ப் பிள்ளையார் கோயிலில் சில அக்காக்கள் கும்மி ஆடியதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதன்பின் கும்மி என்கிற ஒன்றே கிட்டத்தட்ட எல்லாருக்கும் மறந்து போயிருந்தது. இன்று திடீரென்று எழுந்த ஞானோதயத்தால் இந்த வள்ளிக் கும்மி கொங்கு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களால் மீண்டும் பரவலாக அறிமுகம் ஆனது. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கூட்டம் கூட்டமாக இந்த வள்ளிக் கும்மியைப் பயில்கிறார்கள். வெகு சில இடங்களில் மட்டுமே இதர சமுதாயத்தினரும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், பட்டியல் இனத்தவர்களுக்கு இந்தக் கலை போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. ஆய்வாளர்கள் இந்த வள்ளிக் கும்மியைக் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கானது என்று சொல்ல இயலாது. ஏனென்றால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல சமுதாய மக்களும் வள்ளிக் கும்மி ஆடிவந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 2023 நவம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு வள்ளிக் கும்மி நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொருளாளர் ஒருவர், “சத்தியம் சத்தியமே.. சின்னமலை சத்தியமே.. கல்யாணம் கட்டிக்கிறோம்.. கவுண்டரூட்டுப் பையனையே.. இது போதும் இது போதுமே.. எனக்கு வேறேதும் வேண்டாமம்மா.. சத்தியம் சத்தியமே..” என்று பாட்டெல்லாம் பாடி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் குழந்தைகளிடம் சுய சாதித் திருமணத்துக்குச் சத்தியம் செய்யச் சொன்னது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து விளக்கமளித்த அந்த நபர், “இது பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பதனமாக (அதாவது கவனமாக) இருந்து கொள்ள வேண்டும் என்றும் எங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எங்கள் குழந்தைகளை நாங்கள் காப்பாற்றவும் எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சி இது” என்று விளக்கமளித்துள்ளார்.
கலப்பு மணம் என்பதை அந்தக் குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்கள் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்றுதானே இப்படிச் சத்தியம் வாங்கியிருக்கிறார். பொதுவெளியில் சாதிக் கட்சிகள் ஆரம்பித்து, சுய சாதித் திருமணத் திணிப்புக் கலையின் பெயரால் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த மாதிரி சிந்தனை கொண்ட மனிதர்கள் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னால்தான் நம்மை இழுக்கிறார்கள்.
இதில் ஆகச் சிறந்த நகைச்சுவை என்னவென்றால், இந்தக் கும்மியின் ஆதார நாயகனான முருகன், காதல் கடிமணம் செய்தவன். அதுவும் வேற்றினப் பெண்ணான வள்ளியைக் களவு மணம் புரிந்தவன். அப்படிச் சாதி மறுப்புத் திருமணம் புரிந்தவர்களின் கதையைச் சொல்லித் தருவதாகச் சாதிவெறியை ஊட்டி வருவது நகைப்புக்குரியது. கலைக்குப் புத்துயிர் ஊட்ட கும்மியை நடத்துகிறோம் என்று சொன்னாலும் இந்தக் கும்மியின் தாத்பரியத்தை இவர்கள் உணரவில்லை என்பதுதான் உண்மை. கலப்பு மணம் புரிந்த கதை சிதைந்து போனதுதான் வேதனை.
பாரம்பரியத்தைச் சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பொழுதுபோக்காகவும் ஆடப்பட்டு வந்த இந்த வள்ளிக் கும்மி இப்போது சாதிப் போர்வைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில்தான் இந்த வள்ளிக் கும்மி எழுச்சி பெற்றிருக்கிறது. இது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகவே இருக்கிறது. மட்டுமன்றி சுய சாதிப் பெருமிதத்தை அவர்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் இப்போது முகநூலில் சாதிப் பெயர், குலப் பெயர் தாங்கிய இளையோர்களின் முகநூல் கணக்குகள் பல்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம். மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்தக் குறிப்பிட்ட இனப் பெண்களிடம் மட்டுமே சத்தியம் வாங்கப்பட்டது. அந்த இனத்தைச் சார்ந்த இளைஞர்களிடம் ஏன் சத்தியம் வாங்கப்படவில்லை என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அப்போது கலப்பு மணம் செய்து கொள்ள ஆண்களுக்கு இருக்கும் உரிமை இன்னும் பெண்களுக்கு இல்லை என்று அப்பட்டமாகச் சொல்கிறது இந்தச் சத்தியம்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு வள்ளிக் கும்மி ஆட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். கேட்டதற்கு நாட்டுப்புறக் கலையை வளர்க்க ஓர் ஏற்பாடு என்றார்கள். அதே நாட்டுப்புறக் கலையான பறையாட்டம் ஏன் இங்கே இடம் பெறவில்லை என்கிற கேள்விக்குப் பதில் இல்லை. அதுவும் ஒருகலைதானே? பொது நிகழ்வுகளில் குறிப்பிட்ட இனத்தவரின் ஆட்டம் என்று ஒன்றை மட்டும் உயர்த்திப் பிடிப்பது ஏன்?
படைப்பாளர்:
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.