அப்போது நாங்கள் புதுச்சேரியில் முதல் மாடியில் குடியிருந்தோம், நானும் கணவரும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்தோம். ஒரு நாள் மாலை வங்கியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவரால் மாடி ஏற முடியவில்லை. கால்கள் பயங்கரமாக வீங்கியிருந்தமையால், நின்று நின்று மிகவும் சிரமப்பட்டு ஏறிவந்தார். காய்ச்சலும் இருந்தமையால் உள்ளூர் மருத்துவரிடம் காட்டினோம்.
சிறுநீரகத் தொற்றுக்கு மருத்துவர் மாத்திரை எழுதிக் கொடுத்தார். ஆனால் மூன்று நாட்கள் ஆன பின்னரும், குணம் ஏற்படாமல் முகமும் உடம்பும் நன்றாக வீங்கிவிட்டது. உடனே சென்னைக்குச் சென்று சிறுநீரகவியல் (Nephrology) மருத்துவரிடம் காட்டினோம். ஏற்கெனவே என் தந்தையின் சிறுநீரகப் பிரச்னைக்கு அவரிடம் சிகிச்சை எடுத்திருந்ததால் அவர் நல்ல பழக்கம். அவர் கணவரைப் பார்த்தவுடனே “சிறுவயதில் இதே மாதிரி எப்பவாவது உடம்பெல்லாம் வீங்கியிருக்கிறதா?” என்று கேட்டார்.
(குழந்தைகளிடம் சிறுவயதில் அவர்களுக்கு வந்த நோய்கள் பற்றிப் பெற்றோர் சொல்லி வைப்பது அவசியம்; ஒரு தனி கோப்பில் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட விவரங்களைப் பாதுகாக்கவும் செய்யலாம்).
“பத்து வயதில் ஒரு நாள் இவனுக்கு உடம்பெல்லாம் வீங்கிவிட்டது. அது ஒரு சின்ன கிராமம். வைத்தியரிடம் காட்டி மாத்திரை வாங்கிக் கொடுத்தோம். சரியாகி விட்டது” என்று என் மாமியார் சொன்னார்.
“இவருக்கு வந்திருப்பது ஐ.ஜி.ஏ நெப்ரோபதி IgA nephropathy (Berger’s disease) எனும் ஆட்டோஇம்யூன் சிறுநீரக வியாதி. இவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானோம்.
IgA (Immunoglobulin A) என்றால் என்ன?
இது நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உருவாகும் ஓர் எதிரணு (antibody). தொண்டை, மூக்கு, குடல் போன்ற பகுதிகளைப் பாதிக்கும் கிருமிகளை எதிர்க்கும் பாதுகாப்பு புரதம்.
ஐ.ஜி.ஏ நெப்ரோபதி (IgA nephropathy) என்றால் என்ன?
நாம் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் போது நம் உடலுக்குள் புகும் கிருமிகளை எதிர்த்துப் போராட, நோயெதிர்ப்பு மண்டலம் IgA எதிரணுவை உருவாக்குகிறது. சிலருக்கு மட்டும் IgA1 என்கிற எதிரணு அதற்குரிய சரியான அளவில் அமையாமல் தவறாக உருவாகிறது. அது ஏன் அப்படி உருவாகிறது என்பதற்கான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அந்தத் தவறான அமைப்புடைய IgA-ஐ நம் உடல் ‘அந்நியன்’ என்று நினைத்து, அதற்கு எதிராக எதிரணுக்களை உருவாக்குகிறது. அவை எல்லாம் சேர்ந்து சிக்கலாகிச் சிறுநீரக நெப்ரானில் உள்ள வடிகட்டியான குளோமெருலஸ் மேல் படிந்து வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன் காரணமாகச் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறைந்து முடிவில் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது. இவை மருத்துவர் மூலம் நான் தெரிந்து கொண்டவை.
மருத்துவர் சில ரத்தச் சோதனைகளைச் செய்யச் சொன்னதோடு பயாப்ஸி (Biopsy) செய்யவும் நாள் குறித்தார். ‘பயாப்ஸி’ என்பது ஊசி போட்டு சிறுநீரகத்திலிருந்து சதைத் துணுக்கை வெட்டியெடுத்து ஆராயும் சோதனை. சிறுநீரகப் பாதிப்பின் அளவு, சிறுநீரகத்தில் படிந்துள்ள புரத அளவு, சிறுநீரக வீக்கம் போன்றவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை அவசியமானது.
‘மருத்துவர் சொன்ன நோயாக இருக்கவே கூடாது’ என்கிற எங்கள் வேண்டுதலுக்கு எந்தப் பயனுமின்றி, எல்லாச் சோதனை முடிவுகளும் அவர் சொன்ன வியாதிதான் என்பதை உறுதிப்படுத்தின.
“இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்து முதல் பத்து ஆண்டுக்குள் சிறுநீரகம் முற்றிலுமாகச் செயலிழக்கும்” என்று அவர் சொன்னதைக் கேட்ட போது அதிர்ச்சியில் உறைந்து நின்றோம். சில நிமிடங்கள் கழித்து, “இரண்டுமேவா?” என்று நம்ப முடியாமல் கேட்டபோது “ஆமாம்” என்று தலையாட்டினார் மருத்துவர்.
“இதைக் குணப்படுத்தவே முடியாதா டாக்டர்?”
“இந்நோயை முற்றிலும் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் மருந்து மாத்திரைகள் மூலமும், உணவுக் கட்டுப்பாடு மூலமும் சிறுநீரகச் செயலிழப்பைச் சில ஆண்டுகள் தள்ளிப்போட முடியும்” என்றார் மருத்துவர்.
அதற்கு முன் இந்த நோய் பற்றி எங்குமே நான் கேள்விப்பட்டதில்லை. 47 வயதான கணவரின் உடல்நலத்தைக் குறித்து இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். நல்ல உடல் உழைப்பாளி. குடி, சிகரெட் என்று எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அதுநாள் வரை உடல்நலமில்லை என்று சொல்லி இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற்போல் படுத்ததில்லை; அசைவ சாப்பாட்டுப் பிரியர். அவருக்கு இவ்வளவு ஆபத்தான நோய் வரும் என்று யாருமே கனவிலும் நினைத்திருக்கவில்லை. கணவரும் அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டார். குடும்பம் அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நாட்கள் ஆயின.
“சிறுநீரகம் பழுதாகி இருப்பதால் அதற்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது. உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்” என்று சொன்ன மருத்துவர் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளைச் சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலை எழுதிக் கொடுத்தார்.
முக்கியமாகப் பொட்டாசியம் உள்ள உணவு வகைகளைத் தவிர்த்தாக வேண்டும். ஏனெனில் ரத்த்தில் பொட்டாசியம் அளவு ஐந்துக்குள் இருக்க வேண்டுமாம். அதைத் தாண்டினால் (Hyperkalemia) மாரடைப்பு வரக்கூடிய ஆபத்திருக்கிறது என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
அதுநாள் வரை நன்றாக வயிறு முட்டச் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட கணவருக்கு அவர் எழுதிக் கொடுத்த அளவுச் சாப்பாடு யானை பசிக்குச் சோளப்பொறி போல இருந்தது.
மருத்துவர் மூன்று மாதத்துக்கு ஸ்டீராய்டு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். “இம்மாத்திரை சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. ஒத்துக் கொள்ளாவிட்டால் உடனே நிறுத்த வேண்டும்” என்றார்.
“ஒத்துக் கொள்ளாவிட்டால், என்ன செய்யும் டாக்டர்? அதற்கான அறிகுறிகள் என்ன?” என்று அவரிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கத் தவறிவிட்டோம். மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்பினோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
ஞா.கலையரசி
புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.


