Site icon Her Stories

காதலை எப்படிச் சொல்வது? காதல் மறுக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்வது?

love breakup hour glass

கேளடா, மானிடவா – 5

அது ஆண்கள் பெண்கள் இணைந்து படிக்கும் ஒரு தனியார் கல்லூரி. நான் அறிமுகவுரையும் தோழி சிறப்புரையும் ஆற்றப் போயிருந்தோம். உரை முடிந்து, கலந்துரையாடல். பேச்சு காதல், காதல் முறிவு, ஆசிட் வீச்சு பற்றித் திரும்பியது.

minimal line heart background with text space

காதல் தோல்வியில் தற்கொலை, காதலை மறுத்த பெண்ணின் மேல் அல்லது காதலித்து பிறகு காதல் முறிவு செய்யும் பெண்ணின் மேல் வன்முறை நிகழ்த்துவது பற்றிப் பேசுகையில்…
‘ஏன் அவள் போனால் என்ன? விருப்பமில்லாத ஒரு பெண்ணை வற்புறுத்துவது விட, இன்னொரு நமக்குச் சரியான பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்யலாமே’ என்றதற்கு, ‘நாலைந்து வருடம் கஷ்டப்பட்டு ஒரு பெண்ணை ‘கரெக்ட்’ பண்றோம்; அதெப்படி அவளை அப்படியே விடுவது? அவள் எப்படி எங்களை ‘அம்போ’ என்று விட்டு விட்டுப் போகலாம்? அவ தப்புக்கு சரியான தண்டனை தர வேண்டாமா, அதனால்தான் ‘ஆசிட்’ அடிக்கிறோம்’ என்று ஒரு மாணவர், அப்படியே இளைஞர்களின் கண்ணோட்டத்தை மனம் திறந்தார்.|

‘நீங்கள் கேட்ட காலேஜில் இடம் கிடைக்க வில்லை, என்ன செய்தீர்கள்?’

‘பரீட்சையில் ஃபெயிலாகிறீர்கள். என்ன செய்வீர்கள்?’

‘நீங்கள் ஆசையாகக் கேட்ட பைக் அம்மா அப்பா வாங்கித் தரவில்லை. என்ன செய்வீர்கள்?’

‘நீங்கள் ஓட்டு போட்டு உட்கார வைக்கிறீர்களே, அரசியல்வாதி; அவர் தன் கடமை தவறினால் என்ன செய்கிறீர்கள்?’

வேற காலேஜில் இடம் தேடினீர்கள்; மறுபடி பரீட்சை எழுதினீர்கள்; அம்மா அப்பாவிடம், அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கையில் திரும்பவும் கேட்பீர்கள்; அடுத்த தேர்தலில் அதே அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போடமாட்டீர்கள் அல்லது போராட்டத்தை முன்னெடுப்பீர்கள்…



ஏன் ஒரு பெண் காதலை மறுத்ததும், வன்முறையை நிகழ்த்துகிறீர்கள்? காதலித்து பின் ஏதோ ஒரு காரணத்திற்காக மறுத்ததும்
ஆசிட் அடிக்கிறீர்கள்???
இது சரிதானா?

கனத்த மௌனம்…


சிறு வயதிலிருந்தே, நமது பிள்ளைகள் தோல்விகளை எவ்வாறு கையாள வேண்டும் எனப் பழக்கப்படுத்தப் படவில்லை. எதிலும் வெற்றியடைந்தே தீர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும்; வெளிப்படுத்தப்படுகிற காதலை, எதிராளியின் மனம் நோகாமல் எப்படி மறுக்க வேண்டும் அல்லது ஏற்க வேண்டும்; பின்னும் அந்த உறவை மரியாதை குறையாமல் எப்படிப் பேண வேண்டும்; எதையும் யாரும் கற்றுத் தரவில்லை, தானாகவும் இல்லை, சமூக ஊடகமோ முற்றிலும் எதிராகச் செயல்படுகிறது.

நட்பைப் போலவே, காதலை அணுகும் முறை வேண்டும். காதலைச் சொல்ல, கடிதத்தைவிடச் சிறந்த முறை எதுவாக இருக்க முடியும்? ஆனால், கடிதம் கொடுத்தால், செருப்பாலடிக்கச் சொல்கிறது சினிமா. மூஞ்சியில் எச்சில் துப்பச் சொல்கிறது. பதிலுக்கு இவன்களை கையைப் பிடித்து இழுக்கச் சொல்கிறது. அறையச் சொல்கிறது. எந்தப் படத்திலாவது, இதற்கு மாற்றாக, இதுவரை ஏதாவது காட்சி இருக்கிறதா?

படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், படிக்காதவர்களும் இவற்றை எல்லாம் இவ்விதம் தப்பிதமாகக் கற்றுக் கொள்வது சினிமா எனும் சமூக ஊடகங்களிலிருந்துதானே?!

அவற்றைச் சரி செய்யாமல், இவற்றை எப்படி சரியாக்க முடியும்?

இந்தியர்கள், பெண்களைத் தெய்வம் என்று சொல்கிறார்கள்; தெய்வங்களைக் கால் அமுக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களை விளக்குமாறு வைத்துப் பெருக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களைச் சமைக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களைத் துவைக்கச் சொல்கிறார்கள்; தெய்வங்களை அடிக்கிறார்கள்; தெய்வங்களை ‘வன்புணர்வு’ம் செய்கிறார்கள். இவை எல்லாம்தான் ஆகச் சிறந்த முரண்கள்!!!

பொதுவாக நாம் எல்லாருமே – நமக்கு நாமே முரணாக வெளிப்படுகின்ற விஷயங்களைப் பார்ப்போம். நாம் நமக்குள்ளாகவே சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக முன்னுக்குப் பின் முரணாக இருந்தால், எப்படி எதையும் சீர் செய்ய முடியும்?

நாம் நமது தவறுகளை எல்லாம் சரி’ செய்வதற்கு முன்னால், சரிகளை எல்லாம் இன்னும் சரியாகச் செய்தாலே போதுமானது.

செய்ய வேண்டியவை என்னென்ன?

எதையும் கேள்வி கேள்!

படைப்பாளரின் முந்தைய கட்டுரை

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.

Exit mobile version