Site icon Her Stories

இறைமறுப்பாளராக ஒரு பெண் வாழ முடியுமா?

இறைமறுப்பு காலங்காலமாகச் சாத்தானின் வேலை என்று பழிக்கப்பட்டே வருகிறது. அதிலும் மதங்கள் தங்கள் விதிகளைக் கடத்த முக்கியமென நினைக்கும் பெண்கள் இறை மறுப்பாளர்களானால்?

இன்றைய தமிழ்ச்சூழலில் ஒரு பெண் நாத்திகராக இருக்கும் அனுபவம் பற்றிச் சிலரிடம் விசாரித்தேன்.

மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

மிகக் குறைவான பெண்கள்தாம் சிறு வயதிலிருந்தே நாத்திகர்களாக வளர்கிறார்கள். பெரும்பான்மையான குடும்பங்கள் இறை நம்பிக்கையுடன் இருக்கும் போது, அங்கு வளரும் குழந்தைகளும் அப்படித்தான் வளர்கிறார்கள். கல்லூரி முடிக்கும் நிலையில், அல்லது பணிபுரிய ஆரம்பிக்கும் போது, அதாவது அவர்களின் இருபதுகளின் தொடக்கத்தில்தான் பல பெண்கள் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள். அது வரை அவர்களுக்குள் புகுத்தப்பட்ட பலவற்றையும் பற்றிக் கேள்விகள் பிறக்கும் போது, தங்கள் மதங்களைப் பற்றி அவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது. விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து சரி, தவறு என்று பகுத்து பார்க்கத் தொடங்குகிறார்கள். நான் பேசிய பல பெண்களும் பெண்ணியத்திலிருந்துதான் நாத்திகத்திற்கு வந்திருக்கிறார்கள். கடவுள் எதிர்ப்பு சாங்கிய சம்பிரதாயங்களின் எதிர்ப்பாகத்தான் தொடங்கி இருக்கிறது. “மாதவிடாய் நாட்களில் வீட்டுக்குள் புழங்கக்கூடாது” போன்ற பெண் மைய பழமைவாத விதிகளை எதிர்த்துதான் பல பெண்கள் முதலில் நாத்திகம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். படித்த படிப்பையும் பகுத்தறிவையும் பயன்படுத்தி கேள்வி கேட்ட போது அதற்கான பதில்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக “வாயை மூடு” என்பதே பதிலாக இருந்திருக்கிறது.

மதங்களில் பெண்களுக்கான இடம்

பெரும்பாலான மதங்கள் பெண்களை இரண்டாம் தர மக்களாகவே பாவிக்கின்றன. கடவுளர்களாகப் பெண்களை வழிபடுவதாகச் சொன்னாலும், அவர்களுடைய கோட்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் பெண்ணே வழிபாட்டுக்குரியவர்; அடங்காத பெண் கொல்லப்பட்டு வேண்டுமானால் சிறு தெய்வமாகலாம் என்பதே நடைமுறை. மதங்கள் பெண்ணை ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு தாரைவார்க்கப்படும் பொருளாகவே பார்க்கின்றன. ரத்தமும் சதையும் உள்ள சக உயிரினமாக மதிப்பதில்லை. ஒன்று புனிதப்படுத்தப்பட்டு தெய்வமாக வேண்டும். இல்லையேல் கேடு கெட்டவளாக மிதிக்கப்பட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட முடியாது.

பெரிதாகப் பேசப்படும் சிறுதெய்வ, குலதெய்வ வழிபாட்டிலும் பெண்தான் பிறந்த வீட்டை, அதனுடைய தெய்வத்தை விட்டுத் திருமணம் ஆனதும் திடீரென்று ஒரு தெய்வத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. மதத்தின் பல சடங்குகளும் பெண்ணின் சுயமரியாதையைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகவே இருக்கின்றன. இதை உணரும் பல பெண்களும் மதங்களுக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.

பக்தியா, கீழ்ப்படிதலா?

தனக்குக் கோயிலுக்குப் போக விருப்பம் இல்லை என்றோ குறிப்பிட்ட சடங்குகளைச் செய்ய விருப்பம் இல்லை என்றோ பெண்கள் சொன்னால் அவர்கள் குடும்பங்கள் அதை ஏற்பதில்லை. மாறாத நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கும்பிடும்படி நடிக்கவாவது வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். கடவுள் என்ற ஒருவர் இருந்தால், நம்பிக்கை இல்லாமல் தன்னை நொந்து கொண்டு ஒருவர் கும்பிடுவதை ஏற்பாரா? குடும்பங்கள் இதைச் சற்றும் கருத்தில்கொள்ளாமல் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் இவர்கள் எதிர்பார்ப்பது உளப்பூர்வமான பக்தியையா, அல்லது கண்மூடித்தனமான கீழ்ப்படிதலையா?

இவர்கள் சொல்வதைக் கேட்காத, கீழ்ப்படியாக ஒரு பெண்ணைப் பார்க்கும் போது அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. மதம், சாதி போன்ற கட்டமைப்புகளைப் பெண்கள் தகர்க்க, தளர்த்த தொடங்கி விட்டால், அடுத்தடுத்த தலைமுறைக்கு அவற்றைக் கடத்த முடியாது என்ற பயமே உள்ளூர அவர்களை அச்சுறுத்துகிறது.

ஒரு பெயரற்ற பதிவு ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது. ஒரு திருமணமான ஆண் தன் மனைவி இறைநம்பிக்கையற்றவர் என்றும், ஆனால் தனக்காகத் தன் அம்மா நம்பும் சடங்குகளைச் செய்ய திருமணத்திற்கு முன் ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் அதன்படி அவர் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார். அந்த அம்மா என்ன எதிர்பார்க்கிறார் என்றால், பேரக் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது குழந்தையின் தாயும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது ஏதோ எங்கோ ஒன்று நடைபெறுகிறது என்று நினைத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால் தங்கள் குடும்பங்களிலும் இப்படியான வலியுறுத்தல் இருந்தது என்று பல பெண்களும் கூறுகிறார்கள். அந்த மாமியாரின் வலியுறுத்தலை எதிர்க்கிற எல்லாரும் கூறுவது அது புற அழகு சம்பந்தப்பட்டது என்பதால் அந்தப் பெண்ணுக்கு மறுக்கும் உரிமை இருக்கிறது. அதை மீறி அவரைக் கட்டாயப்படுத்துவது குற்றம் என்கிறார்கள். இவ்வளவு பொங்குகிறார்களே என்று யோசித்துப் பார்த்தால் ஆணாதிக்கத்தை உள்வாங்கி இருக்கும் மனங்களுக்கு ஒரு பெண் முடியோடு இருப்பதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிகிறது. நீளமான முடியை பெண்மையின் அடையாளமாகக் கருதுகிறார்கள். இதுவே பல வீடுகளில் நடப்பது போல அந்தப் பெண்ணின் மாமியார் முடியை நீளமாக வளர்த்துக் கொள்ளச் சொல்லி, அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லை, வெட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தால் அனைவரும் இவ்வளவு பொங்கி இருப்பார்களா? ஆக பெண்ணை கட்டாயப்படுத்துவது இவர்களுக்கு உரைக்க அது பொது விதியோடு ஒட்டிய ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தனி விருப்பம் என்று வாதிட வேண்டிய இடங்களுமே ஆண்மைய சமூகத்தின் பெண் பற்றிய பார்வைகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோன்று பல இறை நம்பிக்கை அற்ற பெண்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒவ்வாத, விருப்பமில்லாத பலவற்றையும் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதில் எது ஒப்புக்கொள்ளத்தக்கது, எது ஒப்புக்கொள்ளப்படமாட்டாது என்று நாம் எதை வைத்து தீர்மானிக்கிறோம்?

நாத்திகத்தில் ஆணும் பெண்ணும்

ஓர் ஆண் சமயம் சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுக்காமல் பல குடும்பங்களில் இருக்க முடிகிறது. குடும்பத்தினரைத் தடுக்க முடிகிறது. சிலர் தனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் தன் வீட்டில் பெண்கள் வழிபடட்டும் என்று ஒதுங்கி இருக்கிறார்கள். சில நேரம் அந்த வழிபாடுகளை கேலியும் செய்கிறார்கள். ஆனால், இறை நம்பிக்கையற்ற பெண் அவள் வீட்டு மற்றவர்களுக்காக வழிபாடுகளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லை, அதனால் நான் செய்ய மாட்டேன் என்று ஒரு நோன்புக்கான சமையலைத் தவிர்க்க முடிவதில்லை.

குறிப்பாகத் திருமணத்திற்குப் பின் மருமகள் என்கிற இடத்தில் இருந்து குடும்பத்தின் எல்லாச் சடங்குகளையும் செய்ய வேண்டிய, கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத்தில் பெண் தள்ளப்படுகிறார். தனக்கு விருப்பமில்லாத குங்குமத்தை வைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குகூடப் பல பெண்களுக்கு வழி இருப்பதில்லை. நாத்திக ஆண்கள் பலரும்கூட திருமணத்திற்கு பின், தன் மனைவி நாத்திகர் என்று தெரிந்தே திருமணம் செய்திருந்தாலும், தன் பெற்றோர் விருப்பத்திற்காக அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வெளிப்படுத்திக் கொள்தலும் விளக்கங்களும்

இந்த நாட்டில் எவருக்கும் தன் நம்பிக்கைப்படி மதத்தைப் பின்பற்ற உரிமை இருக்கிறது. பிற மதங்களைப் பின்பற்றி தன் மதத்தைச் சாடுபவர்களைக்கூடக் கேள்வி கேட்காதவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றாத நாத்திகர்களைக் கேள்வி கேட்கிறார்கள். அதிலும் ஆண்களைவிடப் பெண்கள் தங்கள் நம்பிக்கையின்மைக்கு அதிகம் விளக்கம் அளிக்க வேண்டி இருக்கிறது.

பெண்கள் எந்தச் சமூக விதிகளை மீறும் போதும் அது பூதாகரமாக்கப்படுவது வழக்கம். இறை நம்பிக்கையும் அப்படியே. நம்பிக்கைக்கு எவரும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை, மீறி கேள்வி எழுப்பினால் மனம் புண்படும், ஆனால் நம்பிக்கை இன்மைக்கு விளக்கம் கொடுத்தே தீர வேண்டும். இந்த வம்புகளில் மாட்டாமல் இருக்க பல பெண்களும் குழுக்களில் தங்கள் நம்பிக்கையின்மையை மறைக்கப் பழகுகிறார்கள். வழிபடாத ஒரு பெண்ணைப் பார்த்தால் இன்னொரு பெண்ணுக்கு ஓர் ஊக்கம் கிடைக்கும். தன்னைப்போல் ஒருவர் இருப்பதாக உணர்வார். ஆனால், அதை மறைப்பதால் நாத்திகராக இருக்கும் பெண்கள் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். அண்மையில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தோழி எப்படி மத நம்பிக்கை இல்லாததால் அங்கு தனக்கென ஒரு விழாவோ கூடுதலோ இல்லாமல் தனித்து விடப்படுவதாகக் குறைபட்டுக் கொண்டார்.

நாத்திகராக வாழவும் அதை விளக்கமின்றி வெளிப்படுத்தவும் பெண்களுக்கு வெளிகள் வேண்டும்!

(தொடரும்)

படைப்பாளர்:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். 

Exit mobile version