“நாங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவருகிறோம். எங்கள் வரலாறு எங்கள் வாழ்க்கை முறையிலும் அம்பு முனைகளிலும், மட்பாண்டத் துண்டுகளிலும்தான் எழுதப்பட்டுள்ளது.” – ஜெஃப் பிரவுன், பாமுன்கி (Jeff Brown (Pamunkey), 2001
1603ஆம் ஆண்டு முதலாம் ஜேம்ஸ் மன்னர் இங்கிலாந்தின் அரியணையேறினார். தொடர் போர்களால் இங்கிலாந்து கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. எனவே, வட அமெரிக்காவில் காலனிகளை அமைக்க முடிவெடுத்தார்.
1606ஆம் ஆண்டு கூட்டுப் பங்கு நிறுவனமாக (joint-stock company) உருவாக்கப்பட்ட ‘வெர்ஜீனியா’ கம்பெனியிடம் அப்பொறுப்பினை ஒப்படைத்தார். வணிக ரீதியாகத் தொடங்கிய இச்செயல்பாட்டால்தான், ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பழந்துணியாய் மிதிக்கப்பட்டனர்.
ஆங்கிலேய அரசுக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் இருந்தன:
- தங்கம் தேடுவது
- ஸ்பானிஷ் கப்பல்களை எதிர்த்து கப்பல் தளத்தை அமைப்பது
- ஸ்பெயினின் கத்தோலிக்க மதத்திற்கு போட்டியாக சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பரப்புவது.
ஐரோப்பா, பரந்துப்பட்ட அந்தப் புதிய நிலப்பரப்பை ‘புதிய உலகம்’ (New World) என அழைக்க முற்பட்டது. ஆனால் அது அவர்களுக்குத்தான் புதியது. அங்கு வாழ்ந்து வந்த பல்வேறு பூர்வீக மக்களுக்கு அது மிக மிகப் பழையது.
மானுடவியலாளர் ஹெலன் சி. ரவுண்ட்ரீயின் (Helen C. Rountree) ஆய்வுகளும் பிற தொல்லியல் சான்றுகளும், இன்றைய வெர்ஜீனியா பகுதிகளில் 3,000 ஆண்டுகாலப் பூர்வகுடி குடியேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், 2015ஆம் ஆண்டில் பொக்கஹான்டஸ் தீவில் (Pocahontas Island) மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள், அங்குச் சுமார் 6,500 (BCE) ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்து மனிதக் குடியிருப்புகள் அங்கு இருந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.
1607ஆம் ஆண்டு ஏப்ரல் 26இல் ஆங்கிலேயர்கள் செசபீக் வளைகுடாவை (Chesapeake Bay) வந்தடைந்தனர். ஜேம்ஸ்டவுனை (Jamestown) நிறுவினர். காலனிவாசிகளிடம் சுயசார்புடன் வாழ்வதற்கான ஆயத்தங்கள் ஏதுமில்லை. தங்கள் உணவுத் தேவைக்கு பழங்குடியினருடன் பண்டமாற்று செய்ய திட்டமிட்டிருந்தனர். பண்டமாற்றுக்கான பொருட்களும் இங்கிலாந்திலிருந்து வர வேண்டியிருந்தது. அவர்களின் பெரும் பொழுது, தங்க வேட்டையிலேயே செலவானது.
ஆங்கிலேயர்கள் வந்திறங்கிய வளைகுடா பகுதியில் பவ்ஹாட்டன் கூட்டமைப்பு (Powhatan Confederacy) கோலோச்சிக் கொண்டிருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்களை உள்ளடக்கி பெருங்குடித் தலைவராக (paramount chief) வாஹுன்சேனாகா (Wahunsenacawh) விளங்கினார். அவர் ‘பவ்ஹாட்டன்’ என்றும், அக்கூட்டமைப்பின் பூர்வகுடியினங்கள் ‘பவ்ஹாட்டன் மக்கள்’ என்றும் அறியப்பட்டனர். இயற்கையாகவே ஒரு நீர்ப்பிடிப்பு இடமாக அமைந்திருந்த வளைகுடாவில் பவ்ஹாட்டன் மக்கள் தங்களின் குடியிருப்புகளை அமைத்திருந்தனர்.
செசபீக் என்பது அங்கிருந்த இனக்குழுக்கள் பேசும் அல்கான்கியன் மொழிச் சொல்; இதற்கு ‘பெரிய சிப்பி வளைகுடா’ அல்லது ‘பெரிய நீர்நிலை’ என்று பொருள். இயற்கையின் கொடையால் கானகமும் மீன்வளமும் வேட்டைக்கான காட்டு விலங்குகளுமாகச் செழித்திருந்த அப்பகுதியில், பமுன்கி (Pamunkey) பழங்குடியினரும் பிற இனக்குழுக்களும் குறைவற வாழ்ந்து வந்தனர். தலைமுறைகள் கடந்தும் கவலையின்றி வாழ அங்கே நிறைந்திருந்த இயற்கை வளங்கள் அவர்களுக்குப் பெரும் நம்பிக்கை அளித்தன.
பவ்ஹாட்டன் பேரரசின் கீழிருந்த பழங்குடியினர், பாதுகாப்புக்கு ஈடாகத் தலைமைக்கு வரி செலுத்தி வந்தனர். மக்காச்சோளம், விலங்குத் தோல்கள், செம்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களே வரியாகச் செலுத்தப்பட்டன. இன்றைய வெர்ஜீனியாவின் பெரும்பான்மையான நிலப்பரப்பும் ஆறுகளும் இத்தகைய வலுவான பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தன. பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் பெருங்குடித் தலைவரின் இனமான பாமுன்கி (Pamunkey) பழங்குடியினர், தெற்கே இன்றைய புளோரிடா முதல் வடக்கே நியூயார்க் வரையிலான தொலைதூரப் பகுதிகளுடன் வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தனர்.
மீன் பிடித்தல் அவர்கள் நாகரிகத்தின் உயிர்நாடியாகவும் முதன்மையான உணவு ஆதாரமாகவும் இருந்தது. செசபீக் பகுதி மக்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வந்தனர். அதேவேளையில், ‘நீரிலிருந்து மீன்களை எடுத்தால், அதில் ஒரு பகுதியை மீண்டும் நீருக்கே திரும்ப அளிக்க வேண்டும்’ என்பது அவர்களின் நீண்டகால நம்பிக்கையாக இருந்தது. இயற்கையோடு அவர்கள் கொண்டிருந்த இந்த அறம் சார்ந்த பிணைப்பு, மீன் வளம் என்றும் குறையாமல் இருக்க உதவியது. அவர்கள் அந்த நிலப்பரப்பின் பருவகால மாற்றங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் ஏற்ப வாழ்ந்து வந்தனர்.
பவ்ஹாட்டன் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாகத் திகழ்ந்தது என்பது பலருக்கு வியப்பைத் தரலாம். பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் (Powhatan Confederacy) பெருங்குடித் தலைவரான வாஹுன்சேனாகா (Chief Powhatan) கூடத் தன் தாய்வழியிலேயே அந்தப் பதவியைப் பெற்றிருந்தார். இதனாலேயே, அவருக்குப் பிறகு அவரது பிள்ளைகளுக்குப் பதிலாக, அவருடைய சகோதரரான ஓபெசன்கானோ (Opechancanough) அடுத்த பெருங்குடித் தலைவராகப் (Paramount Chief) பொறுப்பேற்றார்.
பெருங்குடித் தலைவர்களுக்கு வழிகாட்டவும் ஆலோசனை வழங்கவும் மூத்தோர் மன்றம் (Elders Council) செயல்பட்டு வந்தது. முக்கிய முடிவுகள் அனைத்தும் சபைக் கூடத்தில் (Council House) வைத்து விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டன. ஆன்மீகச் சடங்குகளை முன்னின்று நடத்திய ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தலைவர்களின் முடிவுகளில் கணிசமான அதிகாரமும் மதிப்பும் இருந்தது. இத்தகைய வரலாற்றுத் தரவுகள், இப்பூர்வகுடி மக்கள் ஆட்சியமைப்பு மற்றும் நிர்வாகத் திறனிலும் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சாட்சியாக நிற்கின்றன.
தொடக்கத்தில் நட்புக் கரம் நீட்டிய பழங்குடியினர், தங்கள் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகளில் ஆங்கிலேயர்கள் வாழ்வதற்கு அனுமதி அளித்தனர். ஆங்கிலேயர்கள் இந்தச் சலுகையை அந்த நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையாகக் கருதினர். பழங்குடி மக்களோ, புதிதாக வந்தவர்களுக்குத் தங்களின் பூர்வீக நிலங்களை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று நம்பினர்.
இங்கிலாந்திலிருந்து அடுத்தடுத்துக் கப்பல்களில் மக்கள் வரத் தொடங்கியதால் ஆங்கிலேயர்களுக்குக் குடியேறுவதற்கும், வேளாண் நிலத்திற்குமான தேவைகள் நாளும் அதிகரித்தன. அடிப்படை சுகாதார வசதியின்றிக் கப்பலில் அடைபட்டு வந்த புதிய மக்களின் வரவால், பல்வேறு புதிய தொற்றுநோய்கள் உலா வரத்தொடங்கின. இவையனைத்தும் பூர்வகுடிமக்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தன. பழங்குடிகளுக்கு அம்மை முதலான நோய்களைத் தாங்கும் எதிர்ப்பாற்றல் இல்லாமை, நிலம், வேட்டை மற்றும் இயற்கை வள பங்கீட்டிற்கான ஓயாத போர் போன்றவை அமைதியான உறவுகளைக் குலைத்தன.
ஐரோப்பியர்களுடனான தொடர்பு ஏற்பட்ட முதல் 100 ஆண்டுகளில், அப்பகுதியில் இருந்த பழங்குடியினர் கடுமையான உயிரிழப்புகளைச் சந்தித்தனர். பொ.ஆ.1607ஆம் ஆண்டு ஜேம்ஸ்டவுன் குடியேற்றம் அமைக்கப்பட்டபோது, பவ்ஹாட்டன் தலைமையின் கீழ் சுமார் 12,000 மக்கள் இருந்ததாகவும், 1700ஆம் ஆண்டிற்குள் அவர்களின் எண்ணிக்கை வெறும் 1,000 ஆகக் குறைந்ததாகவும் ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர்.
1608ஆம் ஆண்டு, வெர்ஜீனியா கம்பெனியினர் பேரரசர் பவ்ஹாட்டனை இங்கிலாந்து மன்னரின் கீழ் இயங்கும் ஒரு சிற்றரசராக மாற்றும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். அவரோ இறுதிவரை இங்கிலாந்திற்கு தான் அடி பணிந்தவரல்ல என உணர்த்திக் கொண்டேயிருந்தார். வளமான காலங்களில் பகிர்ந்தளித்த பழங்குடிகளால், பஞ்ச காலங்களில் ஆங்கிலேயர்களுக்கு உணவளிக்க முடியவில்லை.
1609-1610களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின்போது, ஆங்கிலேயத் தளபதிகள் பவ்ஹாட்டன் கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிச் சோளக் களஞ்சியங்களைக் கொள்ளையடித்தனர். இந்த உணவுப்போர் முதல் ஆங்கிலோ – பவ்ஹாட்டன் போருக்கு (First Anglo -Powhatan War) விதையானது. பழங்குடியினரின் கிராமங்களும் விளைநிலங்களும் தீக்கிரையாயின. பவ்ஹாட்டன் இளவரசியான பொக்கஹான்டஸைக் (Pocahontas) கடத்தி, சிறை வைத்தனர்.
பெருங்குடித் தலைவர் பவ்ஹட்டனின் செல்லமகள் பொக்கஹான்டஸ் சிறுமியாக இருந்த நாள் முதல் காலனிக்கும் பூர்வகுடிகளுக்குமிடையே பாலமாகத் திகழ்ந்தவள். பல்வேறு தருணங்களில் ஆங்கிலக் குடியிருப்புகளுக்குச் சென்று உணவளிப்பது, உதவிகளைச் செய்வதென அவர்களுடன் அதிகம் பரிச்சமானவள். ஆனால் புதுப்புனலாய் கானகத்திற்கும் காலனிக்கும் குதித்தோடிக் கொண்டிருந்த இளவரசியின் கதை இரத்த சரித்திரமாயிற்று. மற்றொரு ஜான் மூலமாக பொக்கஹான்டஸின் வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது. அத்துடன் புகையிலை என்ற வணிக பூதமும் கைகோத்தது.
காலனியின் பொருளாதாரம் பெரும் பிரச்னையாக இருந்த காலகட்டமது. தங்கம் கிடைக்கவில்லை, லாபகரமான தொழில்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இறுதியாக, ஜேம்ஸ்டவுனை அடைந்த ஜான் ரோல்ஃப் என்பவர் இரண்டு வெளிநாட்டு வகை புகையிலைகளான ஒரினோகோ (Orinoco) மற்றும் ஸ்வீட் சென்டெட் (Sweet Scented) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இவை உள்ளூர் வகையைவிட சிறந்த மகசூலைக் கொடுத்தன. 1614இல் இவரது முதல் புகையிலை உறை, லண்டன் சந்தைக்குச் சென்றது. இதுவே வெர்ஜீனியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தூணாக மாறியது. இதன் மூலம் புகையிலை ஒரு பணப்பயிராக மாறி, வெர்ஜீனியாவின் பொருளாதார நிலைத்தன்மையை நிறுவியது.
ஜான் ரால்ஃப் புகையிலை சாகுபடி பற்றிய ரகசியத்தை பூர்வகுடிகளிடமிருந்து அறியும் நோக்கத்துடன்தான் பொக்கஹான்டஸ்ஸைத் திருமணம் செய்துகொள்ள முனைந்ததாக சில கதைகள் உலவுகின்றன. ஆனால் நில அரசியல் சதுரங்கத்தில் அவள் ஒரு பகடைக்காயாக உருட்டப்பட்டாள். வரலாற்று ரீதியாக அதுவொரு திட்டமிடப்பட்ட அரசியல் – பொருளாதார உத்தியாகும்.
கடத்திச் செல்லப்பட்ட பொக்கஹான்டஸ் பலநாள்கள் படகொன்றில் அடைக்கப்பட்டிருந்தாள். 1614இல் ஜான் ரோல்ஃப், பொக்கஹான்டஸை மணந்தபோது மதம் மாற்றப்பட்டு, ரெபெக்கா என பெயர் மாறி அடையாளம் அனைத்தையும் இழந்தாள் இளவரசி. அதன் விளைவாக முதலாவது ஆங்கிலோ – பவ்ஹாட்டன் போர் முடிவுக்கு வந்தது. அத்துடன் ‘போகாஹொண்டாஸ் அமைதிக்காலம்’ (Peace of Pocahontas) தற்காலிகமாக உருவானது. அந்த தற்காலிக அமைதியைப் பயன்படுத்தி, ஆங்கிலேயர்கள் பவ்ஹாட்டன் நிலப்பரப்பில் புதிய வணிகப் பயிரான ஒரினோகோ புகையிலைச் சாகுபடியைப் பெருமளவில் விரிவுபடுத்தினர். அதன் பிறகுதான் வெர்ஜீனியா காலனி முழுமையாக ஒரு ‘புகையிலை பொருளாதாரமாக’ (Tobacco Economy) உருவெடுத்தது. பூர்வகுடிகளின் நிலங்கள் மிக வேகமாகப் பறிபோகத் தொடங்கின.
காலனிவாசிகளுக்கும் பழங்குடிகளுக்குமிடையே நிலவுரிமை, வளங்களின் கட்டுப்பாடு, பரஸ்பர நம்பிக்கையின்மை போன்றவற்றால் விரைவில் மோதல்கள் வெடித்தன. புகையிலை பயிர் மண் வளத்தை விரைவாக இழக்கச் செய்தது. அதனால் ஏற்பட்ட அதிக நிலத்தேவையால் தொடர்ச்சியாகக் காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் அழியத் தொடங்கியது.
இந்நிலையில் திருமணமாகி மூன்றே வருடங்களில் பொக்கஹான்டஸ் மரணத்தைத் தழுவினாள். அருமை மகளை இழந்த சோகத்தில் பெருங்குடித் தலைவர் பவ்ஹாட்டன்னும் விரைவிலே உயிர் நீத்துவிட்டார்.
அவரின் தலைமையின் கீழ் பயிற்சி பெற்று ஒரு கொடூரமான போர்வீரராகப் பெயர் பெற்றிருந்த ஓபெசன்கனோ (Opechancanough) கூட்டமைப்பின் பெருங்குடித் தலைவரானார். பல்வேறு சவால்களுக்கிடையிலும் பவ்ஹாட்டன் மக்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். 1644இல் காலனியவாதிகள் தங்கள் வாக்குறுதிகளை மீறியதால், இவர் தலைமையில் பழங்குடியினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின்போது சிறைபிடிக்கப்பட்ட ஓபெசன்கனோ, சிறையிலேயே ஒரு காவலரால் படுகொலை செய்யப்பட்டார். தொடர் தாக்குதல்களாலும் நிகரற்ற தலைவரின் மறைவாலும் நிலைகுலைந்த பவ்ஹாட்டன் பழங்குடியினர், காலனியவாதிகளின் நிபந்தனைகளுக்குப் பணியவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
1610 மற்றும் 1646ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பூர்வகுடி தேசங்கள், நில ஆக்கிரமிப்புகளில் வெறிகொண்டிருந்த காலனி ஆதிக்கவாதிகளிடமிருந்து தங்களின் மண்ணையும் மக்களையும் தற்காத்துக்கொள்ள மூன்று பெரும் ஆங்கிலோ – பவ்ஹாட்டன் போர்களில் ஈடுபட்டுத் தங்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இறுதியாக, 1646இல் இங்கிலாந்துடன் ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை, இந்தப் போர்களுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது.
அமைதி உடன்படிக்கை என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் செய்த அத்துமீறல்களைப் பற்றிக் கூறுவதென்றால் அதற்கு பல அத்தியாயங்கள் நாம் பேசவேண்டியிருக்கும்.
பெட்டிச் செய்தி
📌 வரலாற்று ஆவணம்: சொந்த மண்ணில் பறிபோன உரிமை!
1677-ஆம் ஆண்டின் மிடில் பிளான்டேஷன் உடன்படிக்கை (Treaty of Middle Plantation) – பிரிவு VII:
“பாமுன்கி (Pamunkey) மற்றும் அப்பகுதியின் பிற பழங்குடி இனத்தினர், தற்போது ஆங்கிலேயக் குடியேறிகளுக்குச் சொந்தமாகியுள்ள நிலங்களில் சிப்பிகள், மீன்கள், தாவரங்கள் மற்றும் பிற உணவுகளைச் சேகரித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர்; ஆனால், அவ்வுணவுகளும் தாவரங்களும் ஆங்கிலேயர்களுக்குத் தேவைப்படாத பட்சத்தில் மட்டுமே இது செல்லுபடியாகும்.
இதற்குப் பாமுன்கி மக்கள் முதலில் ஆங்கிலேயர்களிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அதேவேளையில், பாமுன்கி மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளையும் தாவரங்களையும் மிக விரைவாகச் சேகரித்துக் கொண்டு, எவ்வித ஆயுதங்களையும் ஏந்தி வராமலும், குடியேறிகளின் வீடுகளுக்குள் நுழையாமலும் இருக்கும் பட்சத்தில், ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு இந்த அனுமதியை மறுக்கக் கூடாது.”
தொடரும் குரல்…
படைப்பாளர்
ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.


