Site icon Her Stories

இலக்கணம் மாறுதே… 9

ட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலே, தூங்க ஆரம்பித்த அவினாஷை மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் கவிதா. ஆரஞ்சு நிற ஷூவுடன் தொங்கிக் கொண்டிருந்த அவினாஷின் கால்களை எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டாள் ஷாலினி. மூவரும் ஆர்டர் செய்து வைத்திருந்தவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஷாலினியின் போன் அழைத்தது.

நித்யா எழுந்து போய் ஷாலினியின் கைப்பையில் இருந்து போனை எடுத்துக் கொடுத்தாள்.

“நித்யா, போனை நீயே ஆன் பண்ணு… அவினாஷ் தூங்குறான்… ஸ்பீக்கரில் வை” என்றாள் ஷாலினி.

“அக்கா… சொல்லுக்கா…”

“ஷாலினி நீ எங்க இருக்க?”

“உன்கிட்ட சொல்லிட்டுதானேக்கா வந்தேன்…”

“நீ அருண் கிட்ட சொல்லலையா? அருண் கால் பண்ணி இருந்தாரு… நீ ஆபிஸ் போயிட்டு வந்து டயர்டுல தூங்கிட்டன்னு சமாளிச்சேன்.”

“ம்…”

“உனக்கும் அருணுக்கும் என்ன சண்டைன்னு எனக்குத் தெரியல. ஆனால், அதுக்காக நீ அருணை அப்படியே தனியா விட்டுட்டு வர்றதெல்லாம் சரி இல்லை.”

“ஏங்கா… நான் உங்கூட தங்குறதுல, உனக்கு ஏதாச்சும் பிரச்னையா?”

“ஐயோ இல்லடி… எப்போதுமே இல்லை.. நீ நல்லா இருக்கணும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்.”

“சரி, அப்போ நான் விட்டுட்டு வந்ததில வேற என்ன பிரச்னை? இல்ல நான் வேற என்ன பண்ணனும்னு நினைக்குற?”

“நீ இப்படித் தனியா விட்டுட்டு வந்தா, அவர் எங்க போறாரு? என்ன பண்றாருனு உனக்கு எப்படித் தெரியும்?”

“அக்கா, டெய்லி நான் வேலைக்கு வந்துடுறேன். அவர் எங்க போறாரு? என்ன பண்றாருன்னு எனக்கு இதுக்கு முன்னாடியும் தெரியாது.”

“ஷாலினி, இங்க பாரு… அருண் காலேஜ் படிச்சப்போ ஒரு கேர்ள் பிரண்ட் இருந்தான்னும், இப்போ அவகிட்ட பேசிட்டு இருக்காருன்னும் வருத்தப்பட்ட…”

“ஆமா, ஆனா மொபைல் காலத்துல யாரு எப்ப வேணும்னாலும் யார் கூடவும் பேச முடியும். 24 மணி நேரம் அப்படி யாரையும் பார்த்துக்கிட்டே இருக்க முடியாது அக்கா.”

“24 மணி நேரமும் நீ பாத்துக்கிட்டு இருன்னு சொல்லல… ஆனா, நீ இங்க வந்து உட்கார்ந்து இருந்தா, இன்னும் பேசுவாங்க… நீயே வாய்ப்பு ஏற்படுத்தி தந்த மாதிரிதானே?”

“அவுங்க அப்படிப் பேசிக்கிட்டா, எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இதுக்கு மேல பொறுமையும் இல்லை.”

“ஆமா, அப்புறமா ஏதாச்சும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆனதுக்கப்புறம், உட்கார்ந்து பொறுமையா கவலைப்படு…”

“அக்கா, இப்போ நான் என்ன செய்யணும்ங்கிற? எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு, நான் அருண் கூடவே இருக்கணும்னு சொல்றியா?”

“ஷாலினி, இந்தக் காலத்துல என்னென்னமோ நடக்குது… உனக்குத் தெரியாதது இல்ல… அருண் வேற யார் கூடயாவது போனா நீ என்ன செய்வ? நீ கூடவே இருந்தா, இது மாதிரி எல்லாம் நடக்கிறதுக்கு வாய்ப்பு கம்மி தானே? கொஞ்சம் சூதனமா நடந்துக்கோ.”

“ஆமாக்கா, நான் படிச்சதெல்லாம் மறந்துட்டு, நான் பாக்குற வேலை எல்லாம் விட்டுட்டு, அவனுக்கு செக்யூரிட்டி வேலை செய்றேன். சூதனமா இருக்கிறதா நினைச்சி, பேண்ட் ஸிப்புக்குக் காவல் காக்கிற வேலைய என்னால செய்ய முடியாது.”

மறு முனையில் மெளனம்.

“அக்கா, நான் நாளைக்குப் பேசுறேன்” என்றாள் ஷாலினி.

கவிதா கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நித்யா எதையும் கேட்காதது போல் சாப்பாட்டைச் சுவைத்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு உங்க இரண்டு பேர் கிட்டயும் ஷேர் பண்ணிக்கிறதுல எந்தத் தயக்கமும் இல்லை” எனச் சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தாள் ஷாலினி.

“நான் காலேஜ் முடித்த பிறகு, கவர்மெண்ட் எக்ஸாம் எழுத கோச்சிங் சென்டரில் சேர்ந்தேன். அங்கு நோட்ஸ் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்வதில் ஆரம்பித்தது எனக்கும் அருணுக்குமான பழக்கம். அப்படியே மனசும் எக்ஸ்சேஞ்ச் ஆகிவிட்டது எங்களுக்குள். இரண்டு பேர் வீட்லயும் எங்க காதல் பிரச்னையா உருவாகத் தொடங்கியவுடன் இருவரும் சென்னைக்கு வந்து, பிரெண்ட்ஸ் உதவியுடன் திருமணம் செய்துகொண்டு, சேர்ந்து வாழத் தொடங்கிட்டோம். ஆனா, அருணுக்கு வேலை கிடைச்சி செட்டில் ஆன பிறகுதான் குழந்தை என முடிவு செய்தோம். நான் செலவுகளைச் சமாளிக்க ஒரு தனியார் கம்பெனியில் உடனே வேலைக்குச் சேர்ந்துட்டேன். அருண் எக்ஸாமுக்கு பிரிப்பேர் செய்வதாகச் சொல்லி, வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தான். அவன் பிரிப்பேர் செய்ய ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லா வேலைகளையும் நானே பார்க்க வேண்டியிருக்கு. ஆபீஸ்க்குப் போயிட்டு வந்து, வீட்டிலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருக்கு. எல்லா செலவுகளையும் நானே பாத்துக்க வேண்டி இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு.”

“புரியுது. இப்ப திடீர்னு எதுக்குடி வீட்டை விட்டு வந்த? உன் அக்கா வீட்டில எதுக்காக இருக்கிற ? உனக்கும் அருணுக்கும் என்னதான் பிரச்னை?”

“வீட்டில இருந்த அருண், அவனோட காலேஜ் டேஸ் கேர்ள் பிரெண்டோட பேச ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் அனுப்பியிருந்த மெசேஜை வாசிச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அருண் கிட்ட சண்டை போட்டு அழுது புரண்டேன். வீட்ட எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்குத் தாங்க முடியாத வலியா இருந்திச்சி. அந்தப் பொண்ணு கிட்ட பேசவே கூடாதுனு சத்தியம் வாங்குனேன்.

ஆனா, ஒரு கட்டத்துல யார் மனசையும் மாத்தி, நாம நினைக்கிற மாதிரி அவங்க மனச யோசிக்க வைக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டேன். கொஞ்சம் யோசிச்சு பாரேன், நான் 24 மணி நேரமும் அருண் பக்கத்திலே உக்காந்திருக்க முடியாது. அப்படியே உட்கார்ந்து இருக்கேன்னு வச்சுக்குவோம். அருண் யாரை நினைச்சிட்டு இருக்கான்னு எனக்கெப்படித் தெரியும்? அதெப்படி கண்ட்ரோல் பண்ண முடியும்? கண்ட்ரோல் பண்ணணும்னோ அல்லது கண்காணிக்கணும்னோ நெனைக்குறதே சின்னப்புள்ள தனமா எனக்குத் தோண ஆரம்பிச்சுது.

நீதான் என் ஹஸ்பண்டு, நீ என்னை லவ் பண்ணித்தான் ஆகணும்னு சொல்வது என் அறிவுக்கு குழந்தைத்தனமாபட்டது… 24 மணி நேரமும் யாரையும் யாரும் காவல் காக்கவும் முடியாது. அப்படிக் காவல் காத்தா நம்ம வாழ்க்கைய, நாம வாழ முடியாம போயிரும்னு புரிஞ்சது. அதுனால ஒரு கட்டத்துல சண்டை போடுறதை நானே நிப்பாட்டிட்டேன். என்னோட ஆசைகள், என்னோட கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்.

எல்லாம் சரியாயிடுச்சுனு நினைக்கும் போது,

அந்த ஆண் மனம் சும்மா இருக்க முடியாம, என்ன சந்தேகப்பட ஆரம்பிச்சது. போன வாரம் நடந்த சண்டையில, நான் ஆபிஸ்ல பாய் பிரெண்ட் வைச்சிருக்கிறதா திட்டுறான்… இல்லைனா குழந்தை பெத்துக்கிறதுக்கு என்னனு கேக்குறான்… என்னைக் கெட்ட வார்த்தை சொல்லிப் பேசுறான். என்னால கெட்ட வார்த்தை எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது. நானே வேலைக்குப் போய், குழந்தை பெத்து, குழந்தையையும் பாத்துட்டு, வீட்டு வாடகைல இருந்து, கரண்ட் பில் வரை கட்டி, கடைசில அவன் கிட்ட இருந்து இந்த மாதிரி கெட்ட வார்த்தையும் கேக்கணும்னா… யோசிக்கவே முடியல.”

“அதான் அக்கா வீட்டுக்கு வந்துட்டீயா?”

“ஆமா, நேசத்தை வற்புறுத்த முடியாதுதானே? அதுவும் நான் உன் மனைவி அதனால் என்னை நேசி எனச் சொல்லி அவன் முன்னால் உரிமை கோருவது போல, அன்பை யாசிப்பது எனக்கு அபத்தமாகப்படுது… அவன் என் கணவன் என்பதற்காக, என்னை அவன் தேவைகளுக்கு எப்படி வற்புறுத்த முடியாதோ, அது போலத்தான் இதுவும் என நினைக்கிறேன்.”

கவிதாவுக்கு இந்தப் பதிலைக் கேட்டதும் தலை சுற்றியது. மடியில் இருந்த அவினாஷின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என அவள் உள்மனம் சொன்னது.

“அவினாஷ் தூங்கிட்டான். பெட்ல படுக்க வைச்சிடு” என்றபடி நித்யா எழுந்து அவினாஷைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு, ஹாலில் ஆளுக்கு ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள்.

(தொடரும்)

Exit mobile version