Site icon Her Stories

இலக்கணம் மாறுதே… 11

“நீ ரொம்ப அழகா பேசுற நித்யா. ஷாலினி நீயும்கூட நல்லா பேசுற. ஆனா, நீங்க பேசுறது எல்லாம் எனக்குப் புதுசா இருக்கு…” என்று இழுத்தாள் கவிதா.
“கவிதா, நீயும் காலேஜ் படிக்கும்போது நல்லாதான் பேசிட்டு இருந்த… ஏன் கவிதைகூட எழுதுன. உனக்கு நெறைய ஃபேன்ஸ் வேற இருந்தாங்க. லவ்லெட்டர்கூட வந்துச்சு” என ஷாலினி சொன்னவுடன் கவிதாவுக்கு வெட்கம் வந்தது.

“ஆமா, அதெல்லாம் ஒரு காலம். விவரம் இல்லாமல் சுத்திட்டு இருந்த காலம். ஆனா, இப்ப காலேஜ் போற புள்ளைங்க பாரு. நல்ல விவரமா இருக்குறாங்க. எவ்வளவு சுதந்திரமா வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணுறாங்க. நாம எல்லாம் எவ்வளவு இன்னசென்டா இருந்தோம்… நான் இன்னுமே இன்னசென்ட் தான்… அப்படியேதான் இருக்கிறேன்” என்றாள் கவிதா.
“ஆமா, இன்னசெண்ட், அப்பாவி, வெகுளி, ஒன்னும் தெரியாத நல்ல பொண்ணு அப்படியெல்லாம் சொல்லி, நம்மள அப்படியே கூண்டுக்குள்ள வச்சிருந்தாங்க. நாமளும் அதையே நம்பிட்டு இருந்தோம்” என நித்யா சொன்னதும் கவிதா புரியாமல் விழித்தாள்.

நித்யா தொடர்ந்தாள், ”இந்த மாதிரி இன்னசென்ட்ன்னு சொல்றது எல்லாம் உண்மையில் வெண்ணெய் தடவிய அடக்குமுறைதான். 18 வயது நிரம்பியவுடன் நமக்கு ஓட்டுரிமை வந்துவிடுகிறது. அடோலசன்ஸ், 18 இல் ஆரம்பிப்பதாக இருக்கிறது. அதனால், 18 வயதுக்கு மேல் இன்னொசென்ட் என்று சொல்வதைவிட அறியாமை என்பதே சரியாக இருக்கும். முக்கிய விஷயங்களைக் குறித்தாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் கவிதா. அந்த அந்த வயசுல தெரிய வேண்டியதைத் தெரிஞ்சிக்க வேண்டியது நமது கடமை. அப்படித் தெரியாமல் இருந்தால் அதன் பெயர் ஒன்றும் இன்னசெண்ட் இல்லை. அதன் பெயர் அறியாமை.”

“சரி, 18 வயதைவிட இப்போது முப்பதுகளிலாவது வீட்டில், சமுதாயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற புரிதல் வேண்டும்தானே? நமக்கான சவால்கள் என்ன எனத் தெரிந்திருக்க வேண்டும்தானே?”

“எல்லாம் கணவனுக்குத் தெரிந்தால் போதும் என்றும் எல்லாவற்றையும் வாழ்க்கைத்துணை பார்த்துக்கொள்வார் எனவும் நினைப்பது நமது வாழ்க்கையும், நமது வாழ்க்கைக்கான பொறுப்பையும் அடுத்தவரிடம் கொடுப்பதுபோல தானே?”

“தனக்கான விஷயங்களை, தனது உடல் குறித்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். நான் வாழும் சமுதாயம் குறித்த புரிதலும், சமூகக் கட்டமைப்புகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு முன்னால்கூட ஒருவேளை தெரியாமல் போயிருக்கலாம். பரவாயில்லை. இப்போதாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்.”
“யாரும் எல்லாம் தெரிந்துகொண்டு இங்கு பிறக்கவில்லை. ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்வதுதான். நீயும் கற்றுக்கொள், இன்னொரு முறை இன்னெசென்ட் என்று சொல்லாதே.”

“நிறைய பெண்கள், அப்படித் தாங்கள் இன்னெசென்ட் அல்லது வெகுளி என அழைக்கப்படுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அது எப்படி அவர்களை, அவர்கள் சார்ந்த சமுதாயத்தை முன்னேற்றும்? ஒரு திருமணம் முடிந்த பெண்களுக்கான உரிமைகள் என்ன என்பது குறித்துக் கண்டிப்பாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கைக்கான பொறுப்புணர்வு, நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியம்.”

“ஆமா, நீ பழையது போலப் புத்தகங்கள் வாசிக்கிறாய்தானே?” எனக் கவிதாவிடம் கேட்டாள்.

“அதெல்லாம் வாசித்தே நிறைய நாட்கள் ஆகிவிட்டது. புத்தகங்களை நான்நான் கண்களால் பார்த்தே, நாட்கள் ஆகிவிட்டது. ஏன் வருடங்கள் ஆகிவிட்டது. காலேஜ் கடைசி செமஸ்டரின் போது என் அப்பா தவறியது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுனால எனக்கு பாஸ் பண்ண முடியல. அப்புறம் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. அக்காவுக்குத் திருமணம் முடிந்து, அக்காவையும் அவ குழந்தையும் கவனிச்சிக்கிட்டது, அப்புறம் அண்ணன் குழந்தைகள் என வீட்டுப் பொறுப்புகளில், வாசிக்க நேரமே கிடைக்கவில்லை. அரியர்ஸ் பேப்பர்ஸ் முடிக்கவே கஷ்டப்பட்டேன். அப்படியே வருஷங்கள் போய்விட்டது” என வருத்தத்துடன் சொன்னாள் கவிதா.

அட்டைப்பெட்டி ஒன்றைத் திறந்த நித்யா, சில புத்தகங்களை எடுத்து ஒரு சிறிய துணிப் பையில் போட்டபடியே, கவிதா வெகுளியாக இருப்பதுதான் பெண்களுக்கு அழகு என நம்ப வைத்த சமுதாயத்தை வேண்டுமானால் குறைப்பட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் ஏன், எதற்காக, எப்படி என எதிர்க் கேள்வி கேட்டாலே நம்மை முடக்கி வைக்கிற சமூகம்தான் இது. நாம் கற்றுக்கொள்ள வசதிகள் செய்து தராத குடும்பச் சூழ்நிலைகளுக்காக வருத்தப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், மாற்றம் நிகழ வேண்டியது நம்மிடம் தானே?”

“சில பெண்களிடம், உனக்கு அறிவு கிடையாது, உன்னால் முடியாது என்று சொன்னால் அதை என்னால் முடியும் எனச் செய்து காட்டுவார்கள். ஆனால், இந்த வெகுளி அல்லது இன்னசன்ட் என்கிற சொல்லுக்குக் கட்டுண்டுவிடுவார்கள்.”

“நீ, புத்தகங்கள் வாசிப்பை நிறுத்தாதே” என்றபடி புத்தகங்கள் இருந்த பையைக் கவிதாவிடம் நீட்டினாள்.

“இப்பதான் நீ இருக்கல்ல நித்யா… நீயே சொல்லித் தாயேன். நீ இருக்கிறதே பெரிய பலம் கிடைச்ச மாதிரிதான் இருக்கு. உங்கிட்ட இருந்தே தெரிஞ்சுக்கிறேன்.”

“அவரவர்களுக்கான பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது மிக முக்கியம். நானும்கூட உன்னை மாதிரி இருந்து கற்றுக் கொண்டவள்தான்.”

“எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கும், இந்த ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது, உனக்கு வழிகாட்ட முடியுமே தவிர உனக்காக ஓடுவது இயலாத காரியம். நீதான் ஓட வேண்டும். எனவே நீதான் முயற்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்தப் புத்தகங்களை வாசி. மேலும், ஜாதி எந்த அளவிற்கு மனிதகுல மாண்பைச் சீரழிக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், மத ஒற்றுமை, அரசியல் குறித்த, நமது உரிமை குறித்த புரிதல்களை ஏற்படுத்தி தருபவர்கள் என இணையத்தில் விழிப்புணர்வையும், தர்க்க சிந்தனைகளையும் நிறைய பேர் ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே தெரிந்து கொள்வது எளிதுதான். ஹெர் ஸ்டோரிஸ் இணைய தளத்தின் கட்டுரைகளையும் வாசிக்க தவறாதே.”

“ஹெர் ஸ்டோரிஸ் என்கிற வலைத்தளம், பெண்கள் எழுத, தங்கள் கருத்துகளைச் சொல்ல வாய்ப்பு கொடுக்கிறது. நீயும் கல்லூரி காலத்திலிருந்த எழுத்து திறமையைப் புதுப்பித்துக்கொள்ளலாம், மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம்.”

“சரிடி… நானே கத்துக்கிறேன். படிக்கிறேன். எழுதவும் முயற்ச்சிக்கிறேன்” எனப் புத்தகங்களை வாங்கிக்கொண்டாள்.

“பொது வேலை அல்லது சமுதாயப் பங்களிப்பு செய்கிறவர்களின் சுமையைக் கூட்டவோ கேள்வி கேட்கவோ இந்தச் சமுதாயம் தவறுவதே இல்லை. ஆனால்தான் என்ன செய்தோம் என்று தன்னைக் கேட்கத் தவறிவிடுகிறது. பொதுவாகப் பொறுப்பு உணர்வோடு இருப்பவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டேதான் இருக்கிறார்கள்.”

“பெண்ணுரிமை பேசுகிறவர்கள், சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், தங்களால் முடிந்ததைச் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். அதை அவரவர் வாழ்வில் செயல்படுத்த வேண்டியது அவரவர்களுக்கான தனிநபர் பொறுப்புதான்.”

(தொடரும்)

Exit mobile version