’அமெரிக்க நாட்டில் அதிகம் வெறுக்கப்படும் பெண்மணி’ என்று முத்திரை குத்தப்பட்டவர் மேடலின் முர்ரே ஓ`ஹேர் (Madalyn Murray O’Hair). ஆனால், இவரை மனித குலத்தின் மீது பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவராகத்தான் நான் பார்க்கிறேன்.
இவர் அமெரிக்க நாத்திகர்கள் அமைப்பை நிறுவியர். ’த மோஸ்ட் ஹேட்டட் உமன் இன் அமெரிக்கா’ (The Most Hated Woman in America) திரைப்படம் மேடலினின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. தீவிர மத நம்பிக்கையுள்ள கிறிஸ்துவ குடும்பத்தில், 1919இல் பிறந்தவர் மேடலின். முதல் இணையருக்குப் பிறந்த மகன் பில், இரண்டாவது இணையர் மூலம் பிறந்த குழந்தை ஜான் கார்த்துடன், பால்டிமோரில் பெற்றோருடன் வசிக்கிறார். மேடலினுக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. அதனால் அவர் அப்பாவுடன் முட்டலும் மோதலுமாக இருக்கிறார். மேடலினின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மகன் பில், “நீ மற்றவர்களைப் பற்றி புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறாய், செயலில் இறங்குவதில்லை” என்று குறை சொல்ல, மகனுடன் சென்று நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்கிறார். சமத்துவத்திற்காக குரல் கொடுக்கிறார்.
மகன் பில் படிக்கும் பள்ளியில் பிரார்த்தனையிலும் பைபிள் வாசிப்பிலும் மாணவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பில் கூற, பள்ளி மறுக்கிறது. மேடலின், மகன் பில் சார்பில் அரசுப் பள்ளிகளில் கட்டாயப் பிரார்த்தனையை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறார். கட்டாயப் பிரார்த்தனை என்பது அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தச்சட்டத்திற்கு எதிரானது என்று வாதிடுகிறார். 1963இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு, பொதுப் பள்ளிகளில் கட்டாயப் பிரார்த்தனைக்கும் பைபிள் வாசிப்பிற்கும் தடை விதிக்கிறது. மேடலினுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் செல்லும் இடமெல்லாம் அவதூறுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகிறார். அவரது வீட்டையும் தாக்குகிறார்கள். பகுத்தறிவாளர்கள் பலரிடமிருந்து ஆதரவும் கிடைக்கிறது. அமெரிக்க நாத்திகர்கள் அமைப்பைத் தொடங்குகிறார். அதன் தலைவராகத் தனது பகுத்தறிவுப் பணிகளை முனைப்புடன் செய்கிறார்.
மேடலினின் கொள்கை மிகத் தெளிவானது. “மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், அரசு சார்ந்த பணிகளிலும் அலுவலகங்களில், நிறுவனங்களில் மதத்தின் தலையீடு இருக்கக் கூடாது. ஏனென்றால், அமெரிக்கா மதச்சார்ப்பற்ற நாடு என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசு, கிறிஸ்தவ மதத்தைத் தூக்கிப் பிடிப்பதையோ தேவாலயங்களுக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் நிதி உதவி செய்வதையோ அனுமதிக்க முடியாது” என்று கூறிய மேடலின் அரசாங்கத்தையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுக்கப் போராடினார். இதற்காகப் பல வழக்குகளைத் தொடுத்தார். வெள்ளை மாளிகையில் நடக்கும் வழிபாட்டுக் கூட்டங்கள், அமெரிக்க கரன்ஸியில், ’நாம் நம்பும் கடவுளின் பெயரால்’ என்ற சொற்றொடரைச் சேர்த்தது, அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் முன்பு பைபிளை வாசிக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, போராடினார். தேவாலயங்கள், கிறிஸ்துவ மத அமைப்புகளுக்கு, அரசு பல்வேறு வரிவிலக்குகள் அளிப்பதையும் எதிர்த்தார். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதைச் சுட்டிக் காட்டினார்.
நாத்திகர்களின் உரிமைகளுக்காக மேடலின் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். “உங்களுக்கு மதத்தை நம்புவதற்கு உரிமை இருக்கிறது என்றால் எங்களுக்கு மதத்தை நம்பாமல் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது” என்று ஆணித்தரமாக உரைத்த மேடலின் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார். ’கொன்று விடுவோம்’ என்ற மிரட்டல்கள் தினமும் வந்தவண்ணம் இருந்தன.
தீவிர பெண்ணியவாதியான அவர், மதம் எப்படிப் பெண்ணுக்கு எதிராக இருக்கிறது; பெண்ணை இழிவாக நடத்துகிறது என்று எடுத்துரைத்தார். மதம் என்பதே ஆண் மையமானது, அங்கு பெண்ணுக்கோ அவள் உரிமைகளுக்கோ இடமில்லை என்று சுட்டிக்காட்டினார். பல நூல்களை எழுதிய மேடலின், 1979இல் பெண்களும் நாத்திகமும் என்ற தலைப்பிலேயே ஒரு நூலை எழுதினார்.
இவரது கருத்துகளை ஆதரித்து இவரைப் பலர் பின்பற்றினர். அமெரிக்க நாத்திகர்கள் அமைப்புக்கு நிறைய நிதி சேர்ந்தது. இந்த அமைப்பின் சார்பில் பத்திரிகை நடத்தினார். வானொலி ஒலிபரப்புகள் செய்தார். நூல்களை வெளியிட்டார். பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றார். கல்லூரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று உரையாற்றினார். அறிவைப் பயன்படுத்தி, அறிவியலைக் கொண்டு மதத்தைக் கேள்வி கேளுங்கள் என்று இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தினார்.
லைஃப் இதழ் 1964இல் ’த மோஸ்ட் ஹேட்டட் உமன் இன் அமெரிக்கா’ – அமெரிக்க நாட்டில் அதிகம் வெறுக்கப்படும் பெண்மணி என்று இவரைப் பற்றி எழுதியது. இந்தப் பட்டத்தை மேடலின் விரும்பவே செய்தார். கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் நிறைந்த அன்றைய காலகட்டத்தில், மதத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறுவதற்கும், மதத் தலைவர்களையும், மத அமைப்புகளையும் விமர்சிப்பதற்கும் அபாரத் துணிச்சல் வேண்டும். ஆணாதிக்கம் நிறைந்த அமெரிக்கச் சமூகத்தில் ஒரு பெண் மதத்தை எதிர்த்தது அந்த நாட்டையே அதிர வைத்தது. ’அராஜகமாக நடப்பவர்’, ’திமிர்பிடித்தவர்’, ’கெட்ட வார்த்தைகளுடன் மோசமாகப் பேசுபவர்’, ’சாத்தான்’ என்றெல்லாம் மோசமாகத் தூற்றப்பட்டார்.
எண்பதுகளில் இவரது மூத்த மகன் பில் இவரை விட்டுப் பிரிந்து கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தார். மனமுடைந்தாலும், மேடலின், “அவன் இனி தன் மகனல்ல” என்று அறிவித்தார். 1995இல் தனது 76ஆவது வயதில், பணம் பறிப்பதற்காக, முன்னாள் ஊழியரால் கடத்தப்பட்டு, மேடலின் கொலை செய்யப்பட்டது மிகத் துயரமானது. அவருடன், இரண்டாவது மகனும் பேத்தியும் கொலை செய்யப்பட்டார்கள். தன் இறுதி வரை, மனிதத்திற்கு எதிரான மதத்திற்காகவும் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காவும் சமத்துவத்துக்காகவும் போராடிய அந்தப் பெண்மணியின் மனவுறுதி அபாரமானது.
1995 செப்டம்பர் 29இல் அவர் இறந்து, இந்த மாதத்துடன் 26 ஆண்டுகளானாலும், இன்றும் மதங்களைப் பொருத்தவரை, பெண்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மதங்களைக் கட்டிக்காக்கும் பெண்கள், கடவுளின் கருவறைக்குப் போக முடியாது, பூஜிக்க முடியாது, சில வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைய முடியாது, மாதவிடாய் நேரத்தில் பல தலங்களுக்குப் போக முடியாது, குருமார் ஆக முடியாது, மதத்தலைவராக முடியாது, பங்குத்தந்தைதான் – தாயாக முடியாது, கூட்டு வழிபாட்டுக்குத் தலைமையேற்க முடியாது என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும்.
“என்னை மதிக்காத, சுயமரியாதையுடன், சமத்துவத்துடன் நடத்தாத மதம் எனக்குத் தேவையில்லை” என்று இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண்ணால் துணிந்து சொல்ல முடியுமா? பெரும்பாலான பெண்களால் முடியாது. மதத்தை மதிக்காத பெண், அதில் நம்பிக்கை இல்லாத பெண், ஆணாதிக்கச் சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறாள். ’நான் நாத்திகர்’, ’நான் பகுத்தறிவாளர்’, ’எனக்குக் கடவுள் நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லை’ என்று ஒரு பெண்ணால், இன்றும் வெளிப்படையாகச் சொல்லக்கூட முடியுமா என்பதே சந்தேகம் தான்.
கல்யாணமாகாத பெண்ணுக்குக்கூட நாத்திகராக இருப்பது கடினம். அதுவும் பெற்றோருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்து மகளுக்கு இல்லையென்றால், எதிர்ப்பும் மூளைச்சலவையும் வலுக்கும். அவள் கல்யாணத்தின் போதும், அவள் பகுத்தறிவாளர் என்பது பிரச்னைக்குள்ளாக்கப்படும். காதல் திருமணமாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். இரண்டு தரப்பும் பகுத்தறிவாளர்கள் என்றாலும் எந்தச் சிக்கலும் இல்லை. அப்படி இல்லாமல், ஏற்பாட்டு கல்யாணத்தில், கல்யாணப் பெண் மட்டுமே பகுத்தறிவாளர் என்றால், சடங்குகளில் ஆரம்பித்து எல்லா நிகழ்வுகளிலும் பிரச்னை செய்வார்கள். பெண் சுயமாகச் சிந்தித்து தன்னுடய நாத்திக நிலையை வெளிப்படுத்துவதையே ஆணாதிக்கப் பொதுப்புத்தியால் சகித்துக்கொள்ள இயலாது.
கல்யாணத்திற்கு முன்பு பகுத்தறிவாளராக இருக்கும் பல பெண்கள், கல்யாணத்திற்குப் பிறகு கணவனுடனும் அவன் வீட்டாருடனும் இணக்கமாகப் போவதற்காகச் சமரசம் செய்துகொள்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. சமரசம் செய்து கொள்ளவில்லையென்றால் அன்றாட வாழ்வே போராட்டமாகிவிடுகிறது. மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், பேருக்காவது ’சாமி கும்பிட’ ஆரம்பித்து விடுகிறார்கள். அப்போதுதான் குடும்பச் சூழல் அமைதியாக இருக்கிறது.
அன்புத் தோழர்களே, வழிபாட்டு உரிமை என்பது பெண்ணின் அடிப்படை உரிமை. இதில், அவள் எந்த மதம் சார்ந்தும் வழிபடாமல், பகுத்தறிவாளராக இருக்கும் உரிமையும் அடங்கும். அவள் உரிமையை மதிப்போம். குடும்பத்தின் நம்பிக்கைகளைப் பெண்ணின் மீது திணிக்காதீர்கள். அடுத்த தலைமுறையாவது சொந்தமாகச் சிந்தித்து, சுயமரியாதையுடன், ஆரோக்கியமாக வளரட்டும்.
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.