Site icon Her Stories

              சுருதி பேதங்கள்

சமீபத்தில் நடந்த ஓர் இளம் பெண்ணின் தற்கொலை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதே வேகத்தில் அமுங்கியும் போனது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் நாகர்கோவில் ஆணுக்கு மணமுடிக்கப்பட்டு ஆறே மாதங்களான நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தாயாருக்கு அனுப்பியுள்ள இறுதி வாக்குமூலச் செய்தியில் மாமியாரின் கொடுமைதான் காரணம் என்று சுட்டியிருக்கிறார். “என் புருஷன் பக்கத்தில் நான் உட்காரக் கூடாது. பக்கத்தில் உக்காந்து சாப்பிடக்கூடாது. கணவனுடன் சேர்ந்து வெளியே செல்லக் கூடாது. எச்சில் தட்டை எடுத்துச் சாப்பிடணும்னு சொல்றாங்க” என அவர் அழுதுகொண்டே பேசிய ஆடியோ கேட்போரை உலுக்கியது. அவரின் பெற்றோர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை விசாரணைக்குப் பயந்து அவரின் மாமியாரும் விஷமருந்தி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 45 பவுன் நகை, 5 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பாத்திரங்கள் என்று சீர்வரிசை வாங்கிய பின்னும், சீர் செய்தது போதவில்லை என்று மாமியார் தனது மருமகளைப் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்துள்ளார் என்பது இறந்த பெண்ணின் வாக்குமூலத்தில் தெளிவாகத் தெரிகிறது. தான் இறந்த பிறகு தன் மகனுக்கென்று யாருமில்லை என்கிற எண்ணம் அந்தம்மாவின் மனதில் இருந்திருக்கிறது.

மகனுக்குத் திருமணமாகி மனைவி இருக்கிறாள். அவனுக்கு நாளை குழந்தைகள் பிறந்து குடும்பம் உருவாகும் என்கிற எண்ணம் அந்தப் பெண்ணின் மனதில் இல்லை. இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்குச் சுத்தமாக இல்லை. தன் மகனின் வாழ்க்கையில் இன்னொரு பெண் வருவதை ஏற்றுக் கொள்ளாத ஒரு மனப்பான்மைதான் காரணம். அதனால்தான் மருமகளை மனரீதியாக வதைத்து, அந்த அப்பாவிப் பெண்ணின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறார். விஷயம் விபரீதமானதும் ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பொஸஸிவ்னெஸ் யாருக்கும் இருக்கக் கூடாது. பிடிவாதமாக ஓர் உறவைக் தக்க வைக்க நினைப்பது அந்த உறவையே மொத்தமாகத் துண்டித்து விடும். இப்போது அவரது மகன்தானே இரு இழப்புகளுடன் நிற்கிறார்? 

இந்த இரண்டு பெண்களின் மரணம் ஏதோ ஒரு குடும்பத்தில் நடந்ததாகக் கடந்துவிடக் கூடாது. நாம் வாழும் சமூகத்தின் சூழலே இத்தகைய சம்பவங்களைத் தீர்மானிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சமூகத்தின் அழுத்தம்தான் அந்தப் பெண்களின் மரணத்துக்குக் காரணம். திருமணம் என்கிற ஒன்றே ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் இறுதி இலக்கு என்கிற மனப்போக்கு இன்னும் சமூகத்தில் வேரூன்றிக் காணப்படுகிறது. பெண்ணுக்குத் திருமணம் ஆகாதது இங்கே பரவலாக எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. திருமணம் ஒன்றே அவளுக்குப் பாதுகாப்பு என்று  போதிக்கப்படுகிறது. எத்தனை கஷ்டங்கள், துயரங்களை எல்லாம் அனுபவித்தாலும் பிறந்த 

வீட்டுக்குத் திரும்பி வரக் கூடாது என்றுதான் சொல்லப்படுகிறது. வாழாவெட்டி, மலடி, ஓடுகாலி போன்ற சொற்கள் ஒருபால் சொற்களாகவே இருக்கின்றன. இத்தகைய வசவுகளுக்கு அஞ்சி அந்த நரகத்திலேயே உழலும் பெண்கள் இறுதியில் தற்கொலை என்கிற முட்டாள்தனமான முடிவையே எடுக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டு இறந்த பெண் திருமணத்துக்கு முன்பு கல்லூரியில் பணியாற்றியிருக்கிறார். பொருந்தாத திருமணம் என்கிற ஒன்று முதலில் அவரது வேலையைப் பறித்திருக்கிறது. அப்புறம் அவரது சந்தோஷங்களைப் பறித்திருக்கிறது. கடைசியில் அவரது உயிரையும் பறித்து விட்டது. சாவதற்கு அந்தப் பெண்ணுக்கு இருந்த மனத்துணிவு ஏன் வாழ்வதற்கு இல்லாமல் போனது? அக்கம் பக்கத்து வீட்டார்கள், ஊரார், உறவினர்கள் வம்பு பேசுவார்கள் என்கிற பயத்தில்தான் பிறந்த வீட்டுக்கும் வரத் துணியாமல் இறந்து போயிருக்கிறார்.  வாழ்வைத் துணிச்சலாக எதிர்கொள்ள பொருளாதார பலமும் அவசியம்தானே? யாரையும் அண்டியிராமல் தனது காலில்தானே நின்று சுயமரியாதையுடனும் முக்கியமாக மன நிம்மதியுடனும் வாழ ஒவ்வொரு பெண்ணும் வேலைக்குச் செல்ல வேண்டும். இந்தக் கருத்தை அந்தப் பெண்ணின் படிப்பு ஏன் அவருக்குக் கற்றுத் தரவில்லை?

பொதுவாக மாமியார் – மருமகள் பிரச்னை உலகளாவிய பிரச்னை என்று சொல்வார்கள். உண்மையில் மாமியாருக்கும் மருமகளுக்கும் பிரச்னைகள் வருவதில்லை. இருவருக்கும் இடையில் இருக்கும் ஓர் ஆண்தான் சகலத்துக்கும் காரணமாகிறான். தன் மகன் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாகப் பழகுவதை, அவன் வாழ்வில் அவள் பிரத்தியேகமாகத் தொடருவதை ஏற்றுக் கொள்ளாத ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் தாயாருக்கு உண்டு. அம்மாவைப் போல் பெண் வேண்டும் என்று தேடுகிற ஆண்பிள்ளைகள் உண்டு. தனக்குப் பதிலாக இன்னொருத்தியா என்கிற நோக்கில் மாமியார்கள் பார்க்கிறார்கள். இங்கே பாசம் என்பதைவிடச் சுயப் பாதுகாப்பு என்பதுதான் முக்கியமாகி விடுகிறது. தனக்கான ஆணின் அன்பைப் பங்கிட முடியாமல்தான் இந்த இரு பெண்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகிறது. அதைப் பக்குவமாகக் கையாளத் தெரியாத ஆணால்தான் பிரச்சினைகள் பெரிதாகின்றன. ஆனால், ‘இது பொம்பளைங்க பிரச்னை. மாமியார் மருமகள்னாலே பிரச்னைதானே?.’ என்று ஆண்களால் இது சாதாரணமாகக் கடக்கப்படுகிறது. அல்லது அவல நகைச்சுவை(?)யாக பகிரப்படுகிறது. 

நம் இந்தியச் சூழலில் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் எல்லாம் கிடையாது என்று சொல்பவர்களுக்காக ஒரு குட்டிக் கதை. நம் புராணப்படி (?) பார்வதி தேவி குளிக்கப் போகும்போது தன் உடலில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்கி காவல் வைத்து விட்டுப் போகிறாள். பெண்களைக் கண்களாக எண்ணும் நம் திருநாட்டில் ஒரு பெண் தெய்வம்கூடக் குளிக்கும் போது பயந்து கொண்டு காவல் வைத்து விட்டுத்தான் போக வேண்டுமா என்று யாரும் கேட்கக் கூடாது. அந்த நேரம் பார்த்து ஈசன் அங்கே வர, அந்தக் குழந்தை அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து சண்டையிடுகிறது. போரில் அந்தக் குழந்தையின் கழுத்து வெட்டி வீசப்படுகிறது. பிறகு யானையின் தலை பொருத்தப்படுகிறது. தாயின் மீது ஈர்ப்புள்ள குழந்தையாதலால் அது ஆற்றங்கரைதோறும் தன் அம்மாவைப் போன்று பெண் கிடைத்தால்தான் திருமணம் செய்து கொள்வதாகப் பிடிவாதம் பிடித்து அமர்ந்து கொண்டிருக்கிறது. சிக்மண்ட் பிராய்ட் கருத்தின்படி, இதுதான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்று சொல்லப்படுகிறது. 

இந்த காம்ப்ளெக்ஸினால்தான் ஓர் ஆணை இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடும்போது பிரச்னைகள் எழுகின்றன. எனது தோழி ஒருவர், “அன்னை தெரசாவே மாமியாரா வந்தாலும்.. அங்கயும் மாமியார் – மருமகள் பிரச்னை வரத்தான் செய்யும்” என்று சொல்வார். அதற்கேற்ப எங்கேயும் இதே பிரச்னைகள் தாம் இருக்கின்றன. இதை ஆண்கள்தான் பக்குவமாகக் கையாள வேண்டும். ஏனென்றால் பிரச்னையே அவர்களை மையமாக வைத்துதானே. பெண்களுக்கு இருக்கும் உடமை உணர்வே இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணம். இந்தப் பாதுகாப்பு உணர்வுதான் அடுத்த தலைமுறையை வளர்க்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்த உணர்வை பெண்கள் பக்குவமாக கடந்து விட வேண்டும். கடக்க இயலாமல் தேங்கி விடுபவர்களால்தான் பிரச்னைகள் எழுகின்றன.

ஒரு பெண் சமையலின் மூலம்தான் ஆணின் இதயத்தில் இடம்பிடிக்க முடியும் என்கிற பத்தாம் பசலித்தனமான கருத்தால்தான், ஆண்டாண்டு காலமாகத் தான் ஆட்சி செய்து வந்த சமையலறையில் இன்னொரு பெண் வந்து, நம்மை விட நன்றாகச் சமைத்து ‘நல்ல பெயர்’ எடுத்து விடுவாளோ, தனக்கான முக்கியத்துவம் குறைந்து தான் ஒதுக்கப்பட்டு விடுவோமோ, தன்னுடைய மரியாதை பறிபோய் விடுமோ என்கிற அர்த்தமற்ற பயங்களால்தான் மாமியார்கள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். அதன் பின் மூன்றாம் நபர்களால் தவறாக மூளைச்சலவை செய்யப்பட்டு கொம்பு சீவப்படுகிறார்கள்.

பெற்று, பெயர் வைத்து, இத்தனை ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக வளர்த்த மகன் திருமணம் முடிந்த அடுத்த நாளே மனைவியோடு இணைந்து வெளியே செல்வது, உணவருந்துவது, நெருக்கமாவது என்றிருப்பதைத் தாய்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது மகனாகப்பட்டவரும், அந்தப் பெண்ணின் கணவராகப்பட்டவரும் பக்குவமாகப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயல வேண்டும். அதை விடுத்து அவர்களும் சிடுசிடுக்கும் போதோ அல்லது கண்டுகொள்ளாமல் மிக்சர் சாப்பிடும்போதோதான் அந்தப் புறக்கணிப்பு அந்தப் பெண்ணுக்கு உறுத்தலாகி மனசு கடுத்து விடுகிறது. அந்தக் கடுப்புக்குப் பலியாவது அப்பாவி மருமகள்தான். அதற்காக எல்லா மருமகள்களும் அப்பாவிகள் என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக நம் இந்திய  ஆண்கள் பொறுப்பில் இருந்து கழன்று கொள்ளவே விரும்புவார்கள். அவர்களுக்குத் தேவை மூன்று வேளை உணவு, இரண்டு வேளை காப்பி, அவர்களது அன்றாடப் பணிகளுக்கு உதவி. இதை யார் செய்தால் என்ன? நமக்கு நம் வேலையானால் போதும் என்கிற சுயநலமான மனப்போக்கு. அப்படி இல்லையென்று சொல்பவர்கள் மிகக் குறைவே. இருதரப்பு வாதங்களையும் கேட்டு, யாருக்கும் பரிந்துரைக்காமல், இருவருக்கும் புரிய வைத்து இணக்கமாக்கும் ஆண்கள் இந்த நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். “எங்களுக்கு வேறு வேலைகள் இல்லையா?” என்று சண்டைக்கு வராதீர்கள் ஆண்களே. திருமணம் முடிந்ததும் ஓரிரண்டு வருடங்கள் நீங்கள் மெனக்கெட்டு இதைச் செய்துதான் ஆகவேண்டும். அப்புறம் அவர்களே ஒருவரை மற்றவர் புரிந்து கொண்டு விடுவார்கள். சில சின்ன சின்ன பிரச்னைகள் எழத்தான் செய்யும். அதையும் பக்குவமாக அவர்களே சரிசெய்து விடுவார்கள் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் பிற்பாதி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், முற்பாதியில் சில வேலைகளை அயராமல் செய்துதான் தீர வேண்டும். அதற்கெல்லாம் பொறுமை இல்லை என்று சொல்பவர்கள் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம்  சென்று விடுவது இரு தரப்புக்குமே நல்லது. இருதரப்பு பெற்றோரும் தனித்தனியே தூபம் போடாமல் அவர்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என்பதுதான் இங்கே மிகவும் முக்கியமானது.

ஆண்களும் அவர்களுக்குத் துணை தேடும் பெண்களும் வாழ்க்கைத் துணை வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் தேட வேண்டும். அதை விடுத்து ‘வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பா, அம்மாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.. நேரத்துக்குச் சாப்பாடு செய்து தர வேண்டும்.. உடம்பு சரியில்லை என்றால் கஞ்சி வைத்துக் கொடுத்து பராமரிக்க வேண்டும்.. துணி துவைத்துப் போட வேண்டும்’ என்றெல்லாம் சம்பளம் இல்லாத வேலையாளைத் தேடாமல், வாழ்க்கையின் பரிமாணங்களைக் கண்டுணரவும், எதிர்கால வாழ்வில் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டும் (அது வீட்டு வேலையோ, அலுவலகப் பணியோ அல்லது சுய தொழிலோ எதுவாக இருந்தாலும்), தங்கள் உடல்தேவைகளைப் பிரியமாக நிறைவேற்றிக் கொண்டும், சமூகத்துக்கு இயன்ற உதவிகளைச் செய்து கொண்டும், அடுத்த தலைமுறையை வழிநடத்திக் கொண்டும் இருக்கப் பொருத்தமான எண்ண நோட்டம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்ளலாம். அல்லது திருமணமே வேண்டாம் என்று இருக்கலாம். இதைவிட இன்னொரு சிறப்பான வழி இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு ஆணும் பெண்ணும் தனியாகச் சென்று வாழ்வைத் தொடங்குவது. இதனால் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையே இணக்கம் அதிகரிக்கும். சிறிது இடைவெளி விட்டு வாழ்வதும், பழகுவதும் உறவுகளைக் காக்க நல்ல விஷயம்தானே?.

பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் போது, ஆணும் சென்றால்தான் முதல் பிரச்னையே எழாது. இருவரும் வீட்டு வேலைகள் முதற்கொண்டு பகிர்ந்து கொள்ளலாம். இருவரும் பணிக்குச் சென்று பொருளீட்டலாம். இருவருமே இணைந்து குழந்தைகளை வளர்க்கலாம். அதாவது பால் குடிக்கும் காலம் வரை பெண்கள் வளர்க்க வேண்டும். அதன் பின் பள்ளிக்குச் சேர்க்கும் வரை ஆண்கள் வளர்க்கலாம். இதில் தவறொன்றும் இல்லை. “உன் வளர்ப்புதானே?” என்று யாரையும் விரல் நீட்டத் தேவையில்லை. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பும் தருவது போல ஆண்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுப்பு தரவேண்டும் என்று தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் ஆண்கள் கோரிக்கை வைக்கலாம். ஒருவர் இருவராகலாம். இருவர் நூற்றுக்கணக்கானவர்களாகலாம்.. அப்போது ஆண்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுப்பு தர அரசாங்கம் சட்டம்கூட இயற்றலாம். ஆனால் அதற்கான முதல் அடியை யாராவது எடுத்து வைக்கத்தான் வேண்டும். 

வாழ்க்கை என்பது அழகான சுருதியாக இருக்கும் போதுதான் இனிக்கும். தேவையற்ற பிரச்னைகள் சுருதிபேதமாக இடையூறு செய்ய நாம் அனுமதிக்கவே கூடாது. ஏற்கெனவே திருமணம் என்கிற அமைப்பு ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் இத்தகைய பிரச்னைகள் அந்த அமைப்பைக் காணாமல் போக்கிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. கண்ணகி  திரைப்படத்தில், “எதுக்குக் கல்யாணம் பண்ணணும்னு ஒரு ரீசன். ஒரே ஒரு ரீசன் சொல்லு..” என்று ஒரு பெண் கதாபாத்திரம் ஆணிடம் கேட்கும். அதை நாமே சமூகத்திடம் கேட்க வேண்டிய சூழ்நிலை இப்போது வந்துவிட்டது என்பதை மறுக்கவும் கூடாது. மறக்கவும் கூடாது.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

Exit mobile version