Site icon Her Stories

அராபியக் கதைகளின் ராணி

Smiling girl with flowers in her hair. Vector cartoon illustration.

அராபியக் கதைகளின் ராணி

ஆயிரம் அறைகள் கொண்ட 

அலுவலகம் அது

ஒவ்வோர் அறையிலும்

இலட்சம் கோடி பெட்டகங்கள்

ஒவ்வோர் பெட்டகத்திற்கும் ஒரு திறப்பு

திறப்பை மாற்றித் திறந்தால்

அலுவலகமே அலறும்

அதனுடையதால் திறந்தால்

ஒவ்வொன்றிலும்

ஒரு கண்ணீர் கதை

மனிதர்கள் பாதி கல்லாக மாறிய கதை

ஒவ்வொரு கதையிலும் நூறாயிரம் புதிர்கள்

பாசி அடர் குளங்களின் தாமரை வேர்களில் 

அமிழ்ந்து விடாமல்

அவள் ஒவ்வொரு புதிரையும் விடுவிக்கப் போராடினாள்

ஒவ்வொரு விடுவிப்பும் ஒரு பரிசு

மனிதர்கள் முழுக்க கல்லாகி விடல்

அல்லது பறவையாகி விடல்

அலுவலக விதிகள் கறாரானவை

இரகசியங்கள் காக்கப்பட வேண்டும் 

தனக்குள்ளாகக் கூட உரக்கச் சொல்லிவிடலாகாது  

அதிசீக்கிரம் வந்த ஒருநாளில்

அவளறையின் புதிர் விநோதமாக இருந்தது

அது அவளது அறையல்ல என்று உணர்வதற்குள்

கதவு சாத்திக்கொண்டது

ஏன் திறந்தது

எதனால் ஈர்க்கப்பட்டாளென அறியவில்லை

கனத்த இரும்புக் கதவுகளின் இருளுக்குள் தொலைந்து போனாள்

கரும் பச்சை வனாந்திரத்தில் கண் விழித்தாள்

கண்ணுக்குத் தெரியாத பறவைகளின் கீச்சொலிகள்

அவளால் விடுவிக்கப் பட்டிருந்த 

பறவையொன்றும்

உலவிக் கொண்டிருந்தது

அது அவளிடம் பேசியது போலிருந்தது

‘இரகசியங்களைச் சுமக்காதே, அப்படியே காற்றில் விடு’

அவள் ‘கடலலைகள் உறங்காததன் இரகசியத்தையா 

உயிர்கள் சாகாத இரகசியத்தையா’ என்று கேட்க…

கேட்கும்போதே

கால்கள் பூமியில் வேர்விடுவதைப் பார்த்தாள்

கைகளெல்லாம் இலைகள் முளைத்தன

தலையெல்லாம் பூக்கள்

அராபியக் கதைகளின் ராணியும்

ஒரு புதிராக உறையத் தொடங்கினாள்

அவளோடு அவளது அறையின்

இலட்சம் கோடிப் பெட்டகங்களின் புதிர்களும்

கல்லாக இறுகத் தொடங்கின

சில யுகங்கள் கழிய

அன்றுதான் அலுவலகத்திற்குப் புதிதாக வந்த ஒருத்தி 

முதல் காலடியை அந்த அறையுள் வைத்தாள்

புதிர்கள் விழித்துக் கொண்டன

சவப் பெட்டியை விட 
நீளமாய் வளர்ந்த கால்கள்
உயரமாய் இருந்தபோது 
அதற்கென
அளவான செருப்புகள் 
ஒருபோதும் கிடைத்ததில்லை

கூட்டங்களில்
சினிமா தியேட்டர்களில்
தலை மறைக்காமல்  
அமர்ந்ததில்லை

பேருந்து, இரயில் பயண இருக்கைகளின் அளவிலிருந்து
எல்லாவற்றிலும் அவை சமரசம் 
செய்து கொள்ள வேண்டி இருந்தது

இந்த உலகம்
பெரும்பாலானவர்களுக்கானது

சவப் பெட்டியை விட 
நீளமாய் வளர்ந்த கால்கள்
உயரமாய் இருந்தபோது 
அவற்றிற்கென
அளவான செருப்புகள் கூட கிடைக்காதபோது
கிடைத்த சவப்பெட்டியில் 
அவை தம் வாழ்வைக் குறுக்கிக் கொள்ள
இவ்வுலகம் பணித்தது

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.

Exit mobile version