Site icon Her Stories

அவள்… அவன்… அவர்கள்…

Hindu wedding couple walks along the ocean shore

|நீரோட்டம்

முன்கதைச் சுருக்கம்:

மதியின் அக்கா மாதவிக்குத் திருமணம் பேசி இருக்கிறார்கள் தாய் நிர்மலாவும் தந்தை அருணகிரியும். மதிக்கு அந்தச் சம்பந்தத்தில் சற்று உறுத்தல். கல்லூரி விட்டு வீட்டுக்குச் செல்கையில் தாய்தந்தையின் முகத்தில் கலக்கம் காண்கிறாள் மதி. பிறகு என்ன நடந்தது என்பதை மதி சொல்லக் கேட்போம்…

இனி…

அன்று அப்பா அம்மா இருவரின் முகத்திலும் கலக்கத்தைக் கண்டதும், என்ன ஆயிற்று என்றேன். ஒன்றுமில்லை என்றார் அம்மா.

இல்லை, ஏதோ நடந்திருக்கிறது. என்ன பிரச்னை, ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று பலமுறை கேட்டும் பதிலில்லை. ஓர் அரை மணி நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அவரவர் வேலையைப் பார்த்தனர். அம்மாவின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். எனக்குக் கோபம் தலைக்கேறவே சொல்லப்போகிறீர்களா இல்லையா கத்திவிட்டேன்.

“மதி திருமணத்தில கொஞ்சம் பிரச்னை.”

என்ன பிரச்னை என்ற என் கேள்விக்கு அம்மாவிடமிருந்து பதிலில்லை.

“அது ஒன்னுமில்லேடா, கொஞ்சம் பணப் பிரச்னை. அப்பா பாத்துப்பேன், நீ போய்ப் படி” என்று ஆறுதலாகச் சொன்னார் அப்பா.

பணப் பிரச்னையா? என் சந்தேகம் உறுதியானது.

“இல்ல, பொண்ணு பாக்க வரும்போது எதிர்பார்ப்பு எதுவும் இல்லன்னு சொன்னாங்க. நீங்க போடறது உங்க விருப்பம் அப்படின்னு சொன்னாங்க. இப்போ 50 பவுன் நகையும் ஒரு காரும் வேணுங்கறாங்க. அதான் என்ன செய்யறதுன்னு தெரியல. நம்ம வீட்ல உனக்கும் அவளுக்கும் சேர்த்து கைவசம் கொஞ்ச நகை சேர்த்திருக்கோம். ஆனா, அதுக்கும் மேலயும் நகை, அதுபோக கல்யாணச் செலவு, நிச்சயதார்த்தம் அப்படின்னு ஏகப்பட்டது இருக்கு. என்ன செய்ய? உன் படிப்புக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு, எல்லாத்தையும் அவளுக்கே செய்துட்டா நீ?” என்று அம்மாவும் அப்பாவும் புலம்பினர்.

“அப்பா, இவ்வளவு கஷ்டப்பட்டு மாதுவுக்குத் திருமணம் செய்யணுமா?” நான் முடித்த மறுநொடி பளார் என்று கன்னத்தில் எனக்கு விழுந்ததே ஓர் அறை அம்மாவிடமிருந்து.

“என்ன வார்த்தை சொல்லிட்ட? மதி ஒரு வார்த்தை பேசாதே இனி” என என்னை அடக்க முயன்றார்.

“அம்மா வேறு மாப்பிளையே கிடைக்காதா? இப்படிப் பணம் பின்னால் செல்லும் குடும்பத்தில் மாது எப்படி நிம்மதியா இருப்பா? கல்யாணத்த நிறுத்திவிட்டு வேற மாப்பிள்ளை பாருங்க.” நிறுத்தி நிதானமாக ஆழமாக உரைத்தேன். அவர்கள் ஒன்றும் பேசாது நகர்ந்தனர்.

இல்லை இது பற்றி மாதுவிடம் பேசியாக வேண்டும். அவளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் ஆறு மணிக்கு வருபவள் அன்றென்று என்னைச் சோதிக்கவே ஒன்பது மணிக்கு வந்தாள். அவளிடம் நான் பேசவேண்டும் என்று கூற அவளும் தானும் பேசவேண்டுமாகக் கூறினாள். இரண்டு நிமிடங்களில் அவளும் நானும் மொட்டை மாடியில்.

“ஏன் லேட்டுன்னு கேட்க மாட்டியா? இல்லை, அம்மா முன்னாடியே சொல்லிட்டாங்களா? நான் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருந்தேனே?” உண்மையில் அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவே இல்லை.

“மாது, நான் உங்கிட்ட பேசிடறேன். அப்புறம் நீ என்ன வேணும்னாலும் சொல்” என்றேன்.

“ஏன், என்னாச்சு? கல்லூரியில் ஏதாவது பிரச்னையா? ஏன் ஒரு மாதிரி இருக்கே?” அப்பொழுதுதான் என் முகத்தைக் கவனித்தவள் போலப் படபடவெனக் கேட்டாள்.

“மாது, இந்தத் திருமணத்தை நிறுத்தணும்.” அவ்வளவுதான் பளார்! அவளும் என்னை அறைந்து விட்டாள்.

“மதி, என்ன பேசறே? யோசிச்சு சொல். அவரை எனக்குப் பிடிச்சிருக்கு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. இப்பகூட நாங்க ரெண்டு பேரும் இரவு உணவுக்கு வெளியில் போயிட்டு வந்தோம். உனக்கு வாய் அதிகமாகிவிட்டது” என்று பொறிந்துவிட்டாள்.

“அக்கா, மாப்பிளை வீட்டார் பற்றி உனக்குத் தெரியலை. நகை அதிகமா கேட்கறாங்க. அம்மாவும் அப்பாவும் என்ன செய்வாங்க?”

“அது அவங்க பிரச்னை. அவங்க கடமை. அதை அவங்க பார்த்துப்பாங்க. நீ உன் வேலையைப் பார்.”

வாயடைத்துவிட்டேன்.

உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவதே இல்லை என்ற போலிக்குள் தன்னைச் சுருக்கிவிட்டது. கேட்பது ஒருபுறம் இருக்க, தானாகக் கொடுக்க வைக்கும் நீரோட்டத்தில் கலந்துவிட்டது. எத்தனை எத்தனையோ பெண் மீதான அடக்குமுறைகளை யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகிறது.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் பலனில்லை. அவர்கள் என்னை எதிரிபோல் பார்த்தார்கள். நிச்சயதார்த்தம் திருமணம் எதிலும் நான் உடன்படவில்லை. எப்படிப் பணம் புரட்டினார்கள்? எதுவும் தெரியவில்லை. என் கேள்விக்கும் பதில் இல்லை. அப்பா சொன்ன ஒரே விஷயம், எல்லாம் அவளுக்குக் கொடுத்துவிட்டு உன்னைவிட்டு விடுவேன் என்று கவலைப்படாதே. நீயும் எங்கள் பொறுப்பு. என்ன சொல்கிறோம் என்பதே புரியாமல் பேசும் இவர்களிடம் என்ன பேச முடியும்? வாயடைப்பதைத் தவிர வேறுவழி?

நாள்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. அக்கா அந்தச் சீர், இந்தச் சீர் என்று பலமுறை வந்து சென்றுவிட்டாள். அவள் அங்கு வேலைக்குச் செல்வதாயும் தெரியவில்லை. நானும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. என் வாழ்விற்கான தேடலில் தொலைய முயற்சி செய்தேன்.

அன்று நான் பெரும் கலக்கத்தில் இருந்தேன். ஆம், சென்னை செல்கிறேன் என் பணிக்காக. ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை. பயிற்சி ஒரு வருடம். பின் நிரந்தரப் பணி. மனதில் இருவேறு உணர்வுகள் ஏக காலத்தில் ஆதிக்கம் செய்தன. வீட்டை விட்டுச் செல்ல வேண்டும். புது மனிதர்கள், புது இடம், ஒன்றும் புரியாத பயம். இரண்டாவது சம்பாதிக்கப் போகிறேன். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கை கொடுக்கப் போகிறேன். அவர்கள் சொல்லாவிட்டாலும் ஏகப்பட்ட கடனில் தத்தளிக்கின்றனர் என்பது புரியாமலா இருக்கும்! இருவரின் முகத்திலும் இயல்பான சிரிப்பைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. அவர்கள் முகத்தில் புன்னகை காணவே மனம் விழைந்தது.

(அடுத்தது என்ன? அவளது அவன் வருகையாக இருக்குமோ? பொறுத்திருப்போம்.)

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’  

Exit mobile version