அன்புள்ள அண்ணா,
திருமணமான போது ஒல்லியாகத்தான் இருந்தேன். பத்தாண்டுகள் ஆன நிலையில் எனக்கு மார்பும் தொப்பையும் கொஞ்சம் சரிந்து விட்டன. அதனை என் மனைவி குத்திக் காண்பித்துக்கொண்டே இருக்கிறார்.
டிஷர்ட் அணியும் போது அசிங்கமாகத் துருத்திக் கொண்டு தெரிகின்றன என்று பனியன் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். வெயிலில் மிகவும் கஷ்டமாக உள்ளது.
இதனால் எங்களுக்குள் சண்டை மட்டுமல்ல எனக்கு மனவுளைச்சல் கடுமையாக இருக்கிறது. தாங்கள்தான் ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.
நரசிம்,
நாகர்கோவில்
அன்புள்ள நரசிம்,
இந்தக் காலத்து ஆண்களே இப்படித்தான். திருமணத்துக்கு முன்பு நல்ல மனைவி வேண்டும் என்று விரதமிருக்கிறீர்கள், கோயிலுக்கு நடையாக நடக்கிறீர்கள், மாமனார் மெச்சும் மருமகனாக இருக்க வேண்டுமென்று வீட்டு வேலைகள் செய்து பழகுகிறீர்கள். திருமணம் என்று ஒன்று நடந்து மனைவியும் கொஞ்சம் நல்லவளாக அமைந்து விட்டால் போதும். அவரது அன்பிலும் செல்லத்திலும் அப்படியே மயங்கிச் சோம்பேறியாகி விடுகிறீர்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வையுங்கள். வீட்டில் சும்மா இருக்கும்போது கண்டதைத் தின்னாமல் நாக்கைக் கட்டுப்படுத்துங்கள். ‘அன்னம் குறைத்தல் ஆடவர்க்கு அழகு’ என்று பழமொழியே உள்ளது.
பியூட்டி பார்லருக்குச் சென்று தோற்றத்தைப் பொலிவாக்கிக் கொள்ளுங்கள்.
திருமணத்தில் மகிழ்ச்சி மலர்வது ஓர் ஆணின் கையில்தான் உள்ளது.
உங்கள் மனைவியின் அன்பை மீண்டும் பெற வாழ்த்துகள்.
அன்புடன்,
அண்ணா
அன்புள்ள அண்ணா!
வெயில் காலத்தில் சமையற்கட்டில் நிற்கவே முடியவில்லை. என் மனைவி என் கஷ்டத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, கிச்சனிலேயே ஒரு ஃபேனும் பொருத்தித் தந்துள்ளார். இருந்தாலும் வெயிலால் கழுத்து முழுவதும் எரிந்து வியர்க்குரு அதிகமாகியுள்ளது. வியர்வை நாற்றமும் உடலில் அதிகமாக இருப்பதாக மனைவி முகம் சுளிக்கிறார். உதவி ப்ளீஸ்.
மதன்,
மதுரை
அன்புள்ள மதன்,
வெயில் காலத்தில் ஆண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கவே செய்யும். நல்ல நறுமண சோப்பிட்டு இரண்டு மூன்று முறை கட்டாயம் குளிக்கவும்.
அதிகாலையிலேயே எழுந்து வெயில் வருவதற்குள் சமையலைச் சீக்கிரம் முடித்துவிடுவது நலமாக இருக்கும்.
சப்பாத்தி சுடுவதென்றால் இண்டக்ஷன் ஸ்டவ் இருந்தால் ஹாலில் வைத்துக் கொண்டு சுட்டெடுக்கலாம்.
நிறைய மோர் தயார் செய்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்கவும். உங்கள் உடல்நலம் மட்டுமல்ல வீட்டின் நலமே ஆணின் கையில் தான் உள்ளது.
அன்புடன்,
அண்ணா
அன்புள்ள அண்ணா,
நான் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்தாலும் சில நாள் காலையில் சமையல் முடிய நேரமாகி விடுகிறது. இதனால் என் மனைவி சாப்பிடாமலே சென்று விடுகிறார். வீட்டில் மாமனார் மாமியாரும் திட்டுகிறார்கள். உதவி ப்ளீஸ்!
சுந்தரம்,
சூளைமேடு
அன்புள்ள சுந்தரம்,
காலையில் இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்திருக்கப் பழகுங்கள். முந்தைய நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
புளியைக் கரைத்து ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
சின்ன வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி சனி, ஞாயிறு சிரமம் பார்க்காமல் உரித்து வைத்துக்கொள்ளுங்கள். மனைவி வெளியில் போயிருக்கும் போது இதைச் செய்யுங்கள். கண் எரிகிறது என்று கோபித்துக்கொள்ளப் போகிறார்.
சப்பாத்தி மாவுகளைப் பிசைந்து ஈரத்துணியில் சுற்றி ஃப்ரிஜ்ஜில் வைத்து விடலாம்.
உங்கள் மாமனாரிடம் அமர்ந்து ஆலோசனைகள் கேட்கலாம். இது வீட்டில் உறவும் மேம்பட வழிவகுக்கும்.
பழகப் பழக லகுவாகவும் வேகமாகவும் செய்யத் தொடங்கி விடுவீர்கள். மனதைத் தளரவிட வேண்டாம்.
அன்புடன்,
அண்ணா
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.