Site icon Her Stories

ஓர் ஊரில் ஒரு ராஜா

பொருள் 22 : பெண் ராஜா

பண்டைய காலத்தில் எகிப்து நிலப்பரப்பு இரண்டாகப் பிரிந்திருந்தது. கீழ்ப்புற எகிப்து, மேல்புற எகிப்து. கீழ்ப்புறம் ஒப்பீட்டளவில் சமத்துவமான ஒரு பிரதேசமாக இருந்தது. இங்கிருந்த வீடுகள், கிடங்குகள், கல்லறைகள் ஆகியவற்றின் சிதிலங்களை ஆராய்ந்த பிறகே தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்து சேர்ந்தனர். இதற்கு மாறாக, மேல்புற எகிப்தில் வர்க்க வேறுபாடுகள் காணப்பட்டன. பாலின வேறுபாடும் நிலவியது. ஆண்களின் கல்லறைகளுக்கும் பெண்களின் கல்லறைகளுக்கும் இடையில் வேறுபாடுகள் நிலவின. பெண்களைவிட ஆண்கள் உயர்ந்தவர்கள். ஆனால், ஆண்கள் அனைவரும் சமமானவர்களே.

பிறகு இதுவும் மாறியது. எல்லா ஆண்களும் சமமானவர்கள் அல்லர் என்னும் கருத்து மேலோங்கியது. ஆண்களில் மேலானவர் யார் என்னும் கேள்வி முன்னிறுத்தப்பட்டு மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. வலுவான ஒரு தலைவர் மற்றவர்களை வீழ்த்திவிட்டு புகழ் வெளிச்சத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கே அதிகாரம் கைகூடியது. இப்போது பெண்கள், ஆண்கள், தலைவர் என்பதாகச் சமூகக் கட்டமைப்பு மாற்றம் பெற்றது. தலைவரே அரசராகக் கருதப்பட்டார். அரசர் கடவுளாகவும் போற்றப்பட்டார். பாரோ என்று பெயரிட்டு எகிப்தியர்கள் தங்கள் மன்னர்களை அழைத்தனர். கீழ்ப்புற எகிப்து, மேல்புற எகிப்து போன்ற வேறுபாடுகள் மறைந்து ஒரே சமூக அமைப்பு இரு பகுதிகளிலும் நிலவ ஆரம்பித்தது.

இது நடந்தது பொயுமு 2770 முதல் 2182 வரையிலான காலகட்டத்தில். பழைய ராஜ்ஜியம் என்று இந்தக் காலகட்டத்தை அழைக்கிறார்கள். எகிப்திய மன்னர் தலைமை பூசாரியாகவும் திகழ்ந்தார். அவரிடம் வலுவான ராணுவம் இருந்தது. சோசெர் என்னும் முதல் மன்னர் பிரமிட்டை வடிவமைக்கும் ஆணையைப் பிறப்பித்தார். இந்தப் பணியில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஈடுபடுத்தப்பட்டனர். பாலைவனத்தில், வாட்டியெடுக்கும் வெயிலில் அவர்கள் பிரமிட்டை உயிரைக் கொடுத்து உருவாக்கினார்கள்.

ஆணாதிக்கம் பரவத் தொடங்கிவிட்ட காலம் என்றாலும் பெண்கள்மீது அந்தச் சமூகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது என்கிறார் மெரிலின் ஃபிரெஞ்ச். சொத்து வைத்திருக்கும் உரிமை பெண்களுக்கு இருந்தது. மூதாதையரின் சொத்தில் அவர்களுக்குப் பங்கு கொடுக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகும் ஒரு பெண் தன் சொத்தைத் தனியே நிர்வகித்துக்கொள்ள முடியும். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் போலவே செயல்பட்டது. நான் உனக்கு எல்லா ஆதரவையும் அளிப்பேன்; ஒருவேளை பிரிய வேண்டியிருந்தால் அதற்கான இழப்பீட்டை வழங்க சம்மதிக்கிறேன் என்று ஒவ்வோர் ஆணும் ஒப்புக்கொண்டான்.

ஓர் ஆணுக்கு ஒரு துணை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. மன்னர்களும் பிரபுக்களும் மட்டும் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்துகொள்ள முடியும். பிறக்கும் குழந்தைக்கு அம்மாவே பெயர் சூட்டுவார். மன்னராக ஆணே இருக்கமுடியும் என்றாலும் பெண்கள் பொது காரியங்களில் ஈடுபட்டனர். அரச குடும்பங்களில் ஆட்சி நடத்தும் உரிமை ஆண்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அரசரின் முதல் மனைவி முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரே ராஜ மனைவி. அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கே ஆட்சி அதிகாரம் கிடைத்தது. ராஜ மனைவியின் சகோதரிகள் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்களாகக் கருதப்பட்டதால் அவர்களை மணமுடிக்க அரச குடும்பத்தினர் ஆர்வம் செலுத்தினர்.

மன்னர் பூசாரியாக இருந்ததைப் போல் ராஜ மனைவியும் பூசாரியாகக்s கருதப்பட்டார். ராஜ மனைவிக்குத் தனி மாளிகை இருந்தது. அவருடைய சொத்து கணவரின் சொத்திலிருந்து தனித்திருந்தது. அவருக்குத் தனி பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவருக்கு வகுப்பெடுக்க தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மன்னர் தன் மனைவிகளைக் காண வேண்டுமானால் அவர்களைத் தன்னிடத்துக்கு வரவழைக்கலாம். ஆனால், ராஜ மனைவியை அவர்தான் நேரில் சென்று தரிசிக்க வேண்டும்.

பிறகு மேல் தட்டிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆண் மட்டுமே அரசாள முடியும் என்னும் விதி தளர்த்தப்பட்டு பெண்ணும் ஆளலாம் என்னும் நிலை அனுமதிக்கப்பட்டது. ஆண் அரசனைப் போல் பெண் அரசனும் மக்களால் ஏற்கப்பட்டனர். பாரோக்களின் பட்டியலை ஆராயும்போது சில பெண்கள் அங்குமிங்குமாகத் தென்படுகிறார்கள். அவர்களில் பழைமையானவராக மெரிட்னீத் கருதப்படுகிறார். பொயுமு 3000 வாக்கில் இவர் வாழ்ந்திருக்கலாம். ஜெட் என்பவரின் மனைவி, டென் என்பவரின் தாய் என்று இவர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். முதல் தலைமுறை பாரோக்களின் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மெரிட்னீத்தின் மம்மி மற்ற ஆண் அரசர்களின் மம்மியைப் போன்றே அமைந்துள்ளது. ஆண் மம்மிக்குக் கிடைத்த அரசு மரியாதை மெரிட்னீத்துக்கும் கிடைத்தது. அவருடைய உடலுடன் ஒரு படகும் சேர்த்துப் புதைக்கப்பட்டது. மண்ணுலகில் இருந்து வேறு உலகுக்குச் செல்ல இந்தப் படகு பயன்படும். அரசு முத்திரைகளில் மெரிட்னீத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

கெண்ட்காஸ் என்பவர் மற்றோர் அரசி. அரசரின் தாய் அல்லது கடவுளின் குழந்தை என்று இவர் அழைக்கப்பட்டார். அவருக்குப் பிறந்த ஆண் மகன் ஒருவன் பின்னாள்களில் அரசனாக உயர்ந்தான். ஹெரோடடஸ் குறிப்பிடும் ஓர் எகிப்திய அரசி, நிடோகெர்டி. அவருடைய மம்மி நமக்குக் கிடைக்கவில்லை. தன் சகோதரனின் மரணத்துக்குப் பிறகு இவர் பதவியைக் கைப்பற்றினார் என்றும் அவனுடைய மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து பழிவாங்கினார் என்றும் கூறப்படுகிறது. தண்ணீரில் மூழ்கடித்து தன் எதிரிகளைக் கொன்றொழித்த பிறகு தற்கொலை செய்துகொண்டதாக ஹெரடோடஸ் குறிப்பிடுகிறார்.

நெஃபெருசோபெக் பொயுமு 2000 வாக்கில் வாழ்ந்தவர். கீழ்ப்புற மற்றும் மேல்புற எகிப்தின் ‘அரசன்’ என்று இவர் அழைக்கப்பட்டார். இவருடைய மம்மியை ஆராய்ந்தபோது ஆண் அரசர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் இங்கும் இருந்ததைக் கண்டறிந்தார்கள். ஓர் அரசன் ஆணாக மட்டுமே இருக்கமுடியும் என்பதாலும் பெண் அந்தப் பொறுப்பை ஏற்பது இயல்புக்கு மீறிய நிகழ்வு என்பதாலும் நெஃபெருசோபெக் தன்னையும் ஓர் ஆண் அரசராகவே பாவித்துக்கொண்டிருக்கக்கூடும். ஆண்கள் பயன்படுத்தும் ஆடைகள், பொருள்கள் ஆகியவற்றை அவரும் கையாண்டிருக்கலாம். அல்லது அவர் புதைக்கப்படும்போது இந்தப் பொருள்கள் அவருடன் சேர்க்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு சேர்ப்பது அவருக்கு கூடுதல் மரியாதையைப் பெற்றுத்தரும் என்று அப்போது நினைத்திருக்கலாம்.

ஹட்ஷெப்சுட் என்பரின் மம்மியும் அவரை ஓர் ஆண் அரசர் போலவே காட்டுகிறது. ஆண்களின் ஆடைகளையே அவர் அணிந்திருக்கிறார். அரசன் என்னும் ஆண்பால் பெயரே அவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. பெண்ணாகச் சில ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு ஆண்போல் தன்னை உருமாற்றிக்கொண்டு அவர் ஆட்சியைத் தொடர்ந்திருக்கலாம் என்று சிலர் யூகிக்கிறார்கள். இவர் ராணுவத் தலைமைப் பொறுப்பையும் வகித்திருக்கிறார். மனித உருவமும் சிங்கத்தின் உடலும் கொண்ட ஸ்பிங்க்ஸ் சிலைகள் பல எகிப்தில் காணப்படுகின்றன. ஹட்ஷெப்சுட்டின் உருவமும் அவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் ஒரு விசித்திரம். ஆண் மன்னரைப் போலவே இந்த அரசியும் தாடியுடன் சிலை வடிக்கப்பட்டிருக்கிறார்.

ஹட்ஷெப்சுட் Pic: wikepedia

ஹட்ஷெப்சுட் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தினார் என்று குறிப்பிடுகிறார் மெரிலின் ஃபிரெஞ்ச். எகிப்திய எல்லைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தியதோடு பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அங்கிருந்து பல தாவர வகைகளைக் கொண்டுவந்து எகிப்தில் அறிமுகப்படுத்தினார். பல பழைய கோயில்களைச் செப்பனிட்டதோடு புதிய கட்டுமானங்களையும் உருவாக்கினார். இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தன்னைப் போலவே தன் மகளும் ஓர் அரசியாக மாறவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், குழந்தை இறந்துவிட்டதால் அவருடைய கனவு சாத்தியப்படவில்லை.

நெஃபர்டிட்டி Pic: wikipedia

நெஃபர்டிட்டி, டாஸ்ரெட், கிளியோபாட்ரா என்று பெண் ஆட்சியாளர்களின் பட்டியலில் மேலும் சில பெயர்கள் பளிச்சிடுகின்றன. ஒப்பீட்டளவில் குறைவான பெண்களுக்கே ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டிருந்தாலும் ஆண் மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் அவர்களுக்கும் அளிக்கப்பட்டன. அரசக்குலப் பெண்கள் மட்டுமின்றி சாமானியப் பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் உரிமைகள் பெற்றிருந்தனர். பிறகு, வரலாறு திரும்பியது.

கி ளியோபாட்ரா

பொருள் 23 : ஆணே ராஜா!

டிய் என்றொரு சாமானியப் பெண் இருந்தார். அவர் மூன்றாம் அமென்ஹோடெப் என்னும் அரசரை மணம் செய்துகொண்டார். அத்துடன் நில்லாமல் அவருக்கு ஆலோசனைகள் வழங்கும் அளவுக்கு, ஆட்சியதிகாரத்தில் பங்குபெற்று முடிவுகள் எடுக்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்நிய நாட்டு மன்னர்களுடன் உரையாடல் நிகழ்த்துவது, ஒப்பந்தங்களை மேற்கொள்வது ஆகிய பணிகளை டிய் மேற்கொண்டார். அவருடைய மகன் அகெநாடென் பின்னர் அரசராகப் பதவியேற்றார். நெஃப்ரிடி என்னும் அழகிய பெண்ணையும் அவர் மணந்துகொண்டார். நெஃப்ரிட்டி புத்திக்கூர்மை கொண்டவராக, செல்வாக்கு மிக்கவராக மிளிர்ந்தார். தன் மனைவியுடன் சேர்த்து தன் உருவத்தைப் பொறிக்குமாறு அகெநாடென் உத்தரவிடும் அளவுக்கு இந்த இருவரும் இணைந்து எகிப்து ஆட்சியை நிர்வகித்தார்கள். தன் கணவரின் மரணத்துக்குப் பிறகு நெஃப்ரிடி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவ்வளவுதான். இத்துடன் பெண் ஆட்சியாளர்களின் பட்டியல் முடிவடைந்துவிட்டது. நெஃப்ரிடியின் மகள் தன் அம்மாவைப் போலவே ஆட்சி நடத்த விருப்பப்பட்டு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. பிறகு அந்த விசித்திரம் நிகழ்ந்தது. ஆண்கள் திடீரென்று ஒரு பெரும் அலையாகச் சீறத் தொடங்கினார்கள். பார், இந்தப் பெண்ணுக்கு அரசராக வேண்டுமாம் என்னும் அளவில் பரிகசிக்கத் தொடங்கினார்கள். ஒரு குறிப்பிட்ட பெண்மீதான பரிகாசமாக இன்றி, பெண்கள் மீதான பரிகாசமாக இது வளர்ச்சிபெற்றது. உயர் பதவிகளை வகிக்கும் பெண்கள் ஆண்களால் கிண்டலடிக்கப்பட்டனர். பெண்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்னும் ‘நீதிநெறி’ இந்தக் கிண்டலின் அடிநாதமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஏன் ஓர் ஆண் மட்டுமே பெரும் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். வீரம் ஒரு பிரதானமான குணநலனாக முன்னிறுத்தப்பட்டது. ஆயுதம் வழிபடத்தக்க ஒரு கருவியாக மாற்றப்பட்டது. ஆணின் இயல்பு வரையறுக்கப்பட்டது. ஆண் அஞ்சாதவன். அவன் இயல்பிலேயே வீரன். சண்டையிடுவதிலும் எதிரிகளை வீழ்த்துவதிலும் தன் வீரத்தைப் பறைசாற்றுவதிலும் அவனுக்குத் தீரா வேட்கை இருக்கிறது. ஆண் என்பவன் ராணுவத்தை நேசிப்பவன். பெரும் படைகளை நேசிப்பவன். போர்க்களத்தை நேசிப்பவன். அவனே தலைவன். அவன் மட்டுமே தலைவன்.

இந்தக் கற்பிதங்களை மெய்ப்பிக்க, போர்க் கருவிகளை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது. படைகளைக் கட்டமைக்கும் வேலையும் முடுக்கிவிடப்பட்டது. இந்த வேலைகளில் ஈடுபடுமாறு எகிப்தியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆண்களும் பெண்களும் விவசாயப் பணிகளில் இருந்து இடம்மாற்றப்பட்டு ராணுவக் கட்டுமானப் பணிகளில் திருப்பிவிடப்பட்டனர். எகிப்து வலிமை பெற வேண்டும், எகிப்து உலகை வெல்ல வேண்டும், எகிப்தைக் கண்டு அனைவரும் அஞ்ச வேண்டும் என்று இந்த ஆண்களின் கூட்டம் கூக்குரலிட்டது. இதன் உட்பொருள், பெண்கள் எகிப்தை ஆண்டால் அது பலவீனமடையும் என்பதே. இந்த வழக்கத்தை உடைத்து எகிப்துக்குப் பலமூட்ட வேண்டியது நம் கடமை என்பதாக ஆண்களிடம் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. பெண்கள் அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டனர். அவ்வாறு தடுக்க வேண்டிய அவசியம் ஏன் நிகழ்ந்தது என்பதை அவர்கள் இனிமேலும் விவரிக்க வேண்டியதில்லை. மக்களே புரிந்துகொண்டார்கள். ஆயுதங்களையும் படைகளையும் பெருக்கினால் போதுமா? வலிமையைப் பறைசாற்ற வேண்டாமா? ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாயின. சிரியா, பாலஸ்தீன் என்று தொடங்கி பிற பிரதேசங்களைப் படையெடுத்து தாக்கி, கைப்பற்றத் தொடங்கினார்கள் எகிப்திய ஆட்சியாளர்கள். அப்போது தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்கள் ஆண்களின் வெற்றியாகவே கண்டனர். பெண்களால் இத்தகைய வீர தீரமான பணிகளை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என்று பெருமிதமும் கொண்டனர். உற்சாகத்துடன் ஆசியாவில் உள்ள யூப்ரடிஸ் தொடங்கி ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா வரை எகிப்தியர்கள் படையெடுத்து ஆக்கிரமித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இந்த ஆக்கிரமிப்புகள் எகிப்தை ஒரு வலுவான ராஜ்ஜியமாக உருமாற்றியது. எகிப்தைக் கண்டு எதிரிகள் அஞ்ச வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். இதுவும் நிறைவேறியது. எகிப்தில் வளம் கொழிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். கொள்ளையடித்த தங்கம், ஆபரணங்களால் இதுவும் சாத்தியமானது. படைகளுக்கு உணவளிக்க எதிரிநாடுகளின் தானியக் கிடங்குகள் சூறையாடப்பட்டன.

எதிர்பாராத விதமாக இந்தத் திடீர் வளமும் திடீர் பலமும் சில தொல்லைகளையும் கொண்டுவந்து சேர்த்தது. ஆண்களே ஆட்சியாளர்களாக இருந்தனர் என்பதால் அவர்களுக்குள் போட்டியும் பொறமையும் மூண்டது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகச் சில அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கவிழ்ப்பைத் திட்டமிட்டனர். ஆங்காங்கே கலகங்கள் வெடித்தன. உள்ளுக்குள் இத்தகைய பிரச்னைகள் என்றால் வெளியிலிருந்தும் பல பிரச்னைகள் முளைத்து வந்தன. எகிப்து ஆக்கிரமித்து சேர்த்த செல்வத்தைக் கவர்ந்து செல்ல வேறு சில ஆக்கிரமிப்பாளர்கள் வெளியிலிருந்து முயற்சி செய்யத் தொடங்கினார்கள்.

பெண்களை அப்புறப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, தவறான வழிமுறைகளைக் கையாண்டதால் ஏற்பட்ட விளைவே இது என்பதை எகிப்திய ஆட்சியாளர்கள் உணர மறுத்தனர். மேலும் அதிக பலமானதாக எகிப்தை உருவாக்க வேண்டும். மேலும் படைகளை வளர்க்க வேண்டும். மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளைத் தீவிரமாக்க வேண்டும் என்று அவர்கள் கூடுதல் சீற்றத்துடன் ராணுவப் பாதையைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இதே போர்க்குணத்துடன் பெண்களை அவர்கள் மேலும் தீவிரமாக ஒடுக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சமூக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. ஆட்சியாளர்களாக மின்னிக்கொண்டிருந்த பெண்கள் நாளடைவில் அடிமைகளாகச் சுருங்கிப் போயினர்.

அத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும் ஆண்கள் இதை ஒரு வெற்றியாகக் கருதிக்கொண்டனர். இனி நானே ராஜா, நான் மட்டுமே ராஜா!

(தொடரும்)

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.

Exit mobile version