Site icon Her Stories

      மனநலம் காப்போம்

உலக சுகாதார நிறுவனத்தின் 2019 தரவுகளின்படி 8 பேரில் ஒருவருக்கு மனநல பிரச்னை அல்லது குறைபாடு இருப்பதுடன், உலகம் முழுவதும் 97 கோடிக்கு அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியப்படுகிறது. குறிப்பாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் உலக ஜனத்தொகையின் 4% எனக்  கணக்கிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பாலினம், வயது, இனம், சமூகப் பொருளாதாரப் பிரிவுகளைச் சார்ந்த மக்கள் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். பொதுவாக மனநலப் பிரச்னை உள்ளவர்கள், அவர்களின் சிந்தனை, மனநிலை, நடத்தை காரணமாக அன்றாட வாழ்க்கையைச் சமாளிப்பது கடினமாக இருக்கும். இவற்றை மருத்துவம் மூலம் சரிசெய்துகொள்ள முடியும்.

18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஹிஸ்டீரியா என்பது பெண்களை மட்டுமே பாதிக்கும் கோளாறு என்று கருதப்பட்டு வந்தது. அதாவது கர்ப்பப்பை கொண்டவர்களை மட்டுமே இந்நோய் பாதிக்கும் என நம்பப்பட்டது. ’அடக்கம் இல்லாத பெண்கள்’, ’எதிர்ப்பைக் காட்டும் பெண்கள்’ என மிக மோசமாகப் பேசப்பட்டது. அந்தச் சொற்கள்  ஒடுக்குமுறையின் சின்னம் எனப் பெண்ணியவாதிகள் கருதினார்கள்.

பிரபல நரம்பியல் நிபுணர் ஜீன் மார்டின் சார்காட்டிடம் சில காலம் பயிற்சி பெற்ற சிக்மண்ட் ஃப்ராய்ட் இதை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, உளப் பகுப்பாய்வு சிகிச்சை (Psychoanalysis) முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்ததால், ‘உளப்பகுப்பாய்வின் தந்தை’ என்று அவர் அழைக்கப்பட்டார்.1895இல் வெளியான ஃப்ராய்டின் Studies of Hysteria உடல் பிரச்னைகளால் வரும் நோயல்ல, அது மனரீதியான தாக்கம் என்று உறுதிப்படுத்தியது. நவீன மனநலத் துறையில் ஹிஸ்டீரியா என்கிற பதம் நீக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் மனநலம் தொடர்பான நோய்கள், குறைபாடுகள், உடல் நலத்துடனான தொடர்புகள் சம்பந்தமாகப் பல ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இவற்றை நாம் கையில் எடுத்து சக மனிதருக்கு மனநல மதிப்பீடு செய்யும் ஆபத்தான பணிகளை விட்டுவிடுவதே நல்லது.

உளவியல் நிலைமைகளுக்கு மரபியல், மூளை வேதியியல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற உயிரியல் காரணிகள் மட்டும் காரணகர்த்தாவாக இருப்பதில்லை. சுற்றுச்சூழல் காரணிகளான அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், துஷ்பிரயோகம், புறக்கணிப்பு அல்லது வன்முறையின் பின்னரான வெளிப்பாடு ஆகியவை மனநலப் பிரச்சினைகளுக்குப் பங்களிக்கும். நீண்ட காலத் தனிமை, நாள்பட்ட நோய் அல்லது பெரிய வாழ்க்கை மாற்றங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். போதைப்பொருள் அல்லது மதுபான துஷ்பிரயோகம் மனநலப் பிரச்னைகளை அதிகரிக்கலாம் அல்லது தூண்டலாம். ஆக மொத்தத்தில் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உளவியல் ஆரோக்கியத்திற்கு நம் நடத்தைகளும் காரணமாகி விடுகின்றன. அது போல் நமக்கு ஏற்படும் மனப்பிறழ்விற்கும் புறச்சூழல் காரணிகள் பங்களிக்கின்றன. இவற்றை நாம் கையாளும் வழிகளும் சிகிச்சை முறைகளும் பல நாடுகளில் இலவசமாக மருத்துவச் சேவையாக வழங்கப்படுகிறது. இணையதளங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட சேவை அமைப்புகளும் மனநல ஆலோசனைகள் வழங்கி வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மனநலம் தொடர்பான கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளும் போது பல தரவுகளை அவதானிக்க நேர்ந்தது. அவற்றில் உலகிலேயே தற்கொலை வீதம் ஆண்களிலே அதிகம் என்கிற விடயம் மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பரவலாக அனைத்து  நாடுகளிலும் இதே தரவுகள்தான். இலங்கை, பிரித்தானியா என்று எதுவுமே விதிவிலக்காக இல்லை.

பிரித்தானியாவில் வயது அடிப்படையில் 45 – 55  வயதினரும்,  இன அடிப்படையில் வெள்ளை இனத்தவரும் அதிகமாகத் தற்கொலைகள் கொண்ட பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ஆசிய இனத்தவர்களில் (British Asian / Asian, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அல்லாதவர்களில் (other)  தற்கொலைகள் அதிகமாக இருந்தன. ’Other’ என்கிற பிரிவில்தான் இலங்கையர் அடங்குவர்.

இலங்கையிலும் ஆண்கள் தற்கொலை செய்வதே அதிகம். அதிலும் தமிழர்களின் தற்கொலை வீதம் அதிகம். போர்ச்சூழலும் அதன் பின்னர் நிலவிவந்த பொருளாதார நெருக்கடிகளும் இதற்குக் காரணமாக இருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு. மேலும் 15 – 29 வயதினர் அதிகமாகத் தவறாக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். பெண்களின் தற்கொலைகளுக்கு அவர்களின் கணவன் மற்றும் குடும்பத்தினரின் தகராறுகள் பிரதான காரணியாக இருக்கின்றது. அண்மையில் வெளிவந்த தகவல்களில் இலங்கையின் தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிகமாகக் குடும்ப வன்முறைகள் நிகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உளவியல் ரீதியான விழிப்புணர்வை ஆண்களுக்குத் தரப்பட வேண்டிய அவசியத்தைத் தரவுகள் தெளிவாகக் கூறுகின்றன. காலம்காலமாக அழுகை என்பது பெண்களுக்குரிய உணர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆண்கள் அழுவதைப் பலவீனமான, சமூகம் கருதுகிறது. ’ஏன் பெண் பிள்ளை மாதிரி அழுகிறாய்’ எனச் சுற்றியிருப்பவர்கள் ஆண் குழந்தைகளைக் கடிந்து கொள்வதை நானே என் கண்களால் கண்டிருக்கிறேன். பிரித்தானியாவில்கூடத் தமிழ்க் குடும்பங்களில் சர்வசாதாரணமாக இம்மாதிரியான நிகழ்வுகள், ஆண் பிள்ளைகளுக்குத் தைரியம் சொல்லிக் கொடுக்கிறோம் என்கிற பெயரில் இன்றும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆண்கள் மீது இந்தச் சமூகம் வைத்துள்ள அடிப்படைப் பார்வை இன்னும் மாறவில்லை. ஓர் ஆண் என்பவன் பாதுகாவலனாக இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது அவர்கள் பொறுப்பு. ஆண் வலிமையானவனாக இருக்க வேண்டும். பெண்கள் என்றால் அழகாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும் சமூகத்தின் வரலாற்று ரீதியான பிற்போக்கான பார்வைகளில் ஒன்று. ஆண்களுக்கு ஒரு பிரச்னை இருந்தால் அதை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அவருக்கு, ஒரு பெண்ணின் பிரச்னையையும் தீர்க்கும் ‘சர்வ வல்லமை’ இருப்பதாக நம்பப்படுகிறது. ஆண்கள், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக நிற்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் இங்கு அதிகம்தான். அதே நேரத்தில் ஆண்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. ஆனால், அதனை வெளிப்படுத்தினால், எங்குதான் வலிமையற்றவனாகத் தெரிந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் பலரும் இங்கு வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.

அழுகை என்பது பெண்மையின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதால், ஓர் ஆண் அழுவது அவர்களின் ஆண்மைக்கு இழுக்காகப் பார்க்கப்படுகிறது. ஆண், பெண் பேதமின்றி எல்லா மனிதர்களுக்கும் அழுகை என்பது பொதுவானது. மன அழுத்தத்தை குறைந்து, இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு அழுகை என்பது அனைவருக்கும் தேவைப்படுகிறது. சாதாரண அழுகைகூட ஆணுக்கு அழகல்ல போன்ற முட்டாள்தனமான சமூக பிம்பங்கள் உடைத்தெறிந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் இங்கு உண்டு. எல்லா மனிதர்களின் பிறப்பின் முதல் வெளிப்பாடு அழுகைதான். அழுவதை கொச்சைப்படுத்துவது அர்த்தமற்றது, ஆபத்தானது. சரியான விழிப்புணர்வுக்காகக் கொணர்ந்து ஆண்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்போம். ஆண்களின் மனநலம் காப்போம்.

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 

Exit mobile version