“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார்.
அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே இருந்தால் குணமாகிவிடுவேன் என்று எனக்குத் தோன்றவில்லை, அதனால் நீங்கள் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும்” என்றேன்.
“அடி செல்லம், நம் வாடகை முடிய இன்னும் மூன்று வாரங்கள் இருக்கிறது. அதற்கு முன்பு இங்கிருந்து எப்படிச் செல்வது? அங்கே நம் வீட்டின் பழுதுபார்ப்பு வேலைகளும் இன்னும் முடிவடையவில்லை. இப்போது நான் நகரத்தை விட்டுச் செல்லவும் முடியாது. நீ உண்மையில் ஆபத்தில் இருந்தால், நான் கண்டிப்பாக உன்னைக் கூட்டிப்போயிருப்பேன். ஆனால் நீ நல்லபடியாக குணமடைந்து கொண்டிருக்கிறாய். உனக்குத் தெரியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. நான் ஒரு மருத்துவர், எனக்குத் தெரியும். உன் உடல் நிறமும் மேம்பட்டுள்ளது. உன் பசியும் அதிகரித்துள்ளது. உன்னைப் பற்றி நான் இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்” என்றார்.
நான் சொன்னேன், “என் எடை கொஞ்சம்கூட ஏறவில்லை. ஒருவேளை குறைந்திருக்கலாம். நீங்கள் இருக்கும் மாலை நேரத்தில் மட்டும் எனக்குப் பசி இருக்கும். ஆனால் காலையில் நீங்கள் இல்லாதபோது அது குறைந்து விடுகிறது” என்றேன்.
“என் குட்டிமா!” என்று அவர் என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு சொன்னார், “நீ விரும்பினால் அப்படியே நினைச்சுக்கோ. ஆனால் இப்போது இந்த அழகிய நேரத்தைத் தூங்குவதற்காகப் பயன்படுத்துவோம். காலையில் மிச்சத்தைப் பேசிக்கொள்ளலாம்” என்றார்.
“அப்படியென்றால் நீங்கள் என்னைக் கூட்டிப்போக மாட்டீர்களா?” என்று வருத்தத்துடன் கேட்டேன்.
“எப்படிப் போக முடியும்? இன்னும் மூன்று வாரங்கள் மட்டும்தான் இருக்கிறது. அதன் பிறகு ஜென்னி, வீட்டைத் தயார் செய்யும் வரை சில நாட்களுக்கு நாம் ஒரு உல்லாசப் பயணம் செல்வோம். உண்மையில் நீ குணமாகிக்கொண்டு வருகிறாய்.”
“உடலில் மட்டும் நல்லபடியாக இருக்கலாம்” என்று நான் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் நிறுத்திக் கொண்டேன். அவர் நேராக உட்கார்ந்து என்னைப் பார்த்த விதம் மிகவும் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருந்ததால் நான் இன்னொரு வார்த்தைப் பேச முடியவில்லை.
“என் அன்பே, உன்னுடைய நலனுக்காகவும், நம் குழந்தைக்காகவும், எனக்காகவும் அந்த எண்ணம் ஒரு நொடிகூட உன் மனதில் வர அனுமதிக்காதே என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
“உன் போன்ற இயல்புடையவர்களுக்கு இதுபோன்ற எண்ணங்கள் சகஜமாக வரத்தான் செய்யும். ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை. அது ஒரு தவறான, முட்டாள்தனமான கற்பனை மட்டுமே. ஒரு மருத்துவராக நான் சொல்வதை உன்னால் நம்ப முடியாதா?”
அப்படி அவர் சொன்னதனால், அந்த விஷயத்தைப் பற்றி நான் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் நாங்கள் தூங்கச் சென்றோம். அவர் முதலில் நான் தூங்கிவிட்டேன் என்று நினைத்தார். ஆனால் நான் தூங்கவில்லை. அந்த முன்புற வடிவமும் பின்னாலுள்ள வடிவமும் ஒன்றாக நகருகிறதா அல்லது தனித்தனியாக நகருகிறதா என்று முடிவு செய்ய பல மணி நேரம் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியொரு வடிவத்தைப் பகலில் பார்த்தால் அதில் எந்த ஒழுங்கும் இல்லை. எந்த விதியையும் மதிக்காதது போல் குழப்பமாக உள்ளது. அது ஓர் இயல்பான மனதில் கடுப்பை உண்டாக்குகிறது. அதன் நிறம் மிகவும் அருவருப்பாக உள்ளது. நம்ப முடியாத அளவுக்கு, ஒரே மாதிரி இல்லாமல் விதவிதமாக அந்த நிறம் காட்சியளிப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அதைவிட அந்த வடிவமே மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது.
ஒரு கட்டத்தில் அதைப் புரிந்துகொண்டேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அதைக் கவனமாகப் பின்தொடர ஆரம்பித்தவுடன் அது திடீரெனத் தலைகீழாக மாறிவிடும். அது உங்களை முகத்தில் அடிப்பது போலவும், கீழே தள்ளி மிதிப்பது போலவும் இருக்கும். அது ஒரு கெட்ட கனவு போல இருக்கும்.
அதன் வெளிப்புற வடிவம் மிக அலங்காரமுள்ள அரபுக் கலை வடிவத்தைப் போல் இருக்கும். அது ஒரு பூஞ்சைக்காளானை நினைவூட்டுகிறது. ஒரு கொத்துக் காளானைக் கற்பனை செய்ய முடிந்தால், முடிவில்லாமல் தொடரும் காளான்களின் வரிசை போல் தொடர்ந்து முளைத்து வளர்ந்து சுருண்டு கொண்டிருக்கும் வடிவம் போல இருக்கும்.
அதாவது, சில நேரத்தில் அப்படித்தான் தோன்றுகிறது. இந்தக் காகிதத்தில் ஒரு விசித்திரமான தன்மை இருக்கிறது. அதை என்னைத் தவிர யாரும் கவனிக்கவில்லை போலத் தோன்றுகிறது. ஒளி மாறும்போது அது மாறுகிறது.
கிழக்கு ஜன்னல் வழியாக சூரியன் ஒளி வீசும்போது அந்த முதல் நீண்ட நேரடியான ஒளிக்கதிரை நான் எப்போதும் காத்திருந்து பார்க்கிறேன். அது மிகவும் வேகமாக மாறிவிடுகிறது. அதனால் அது நம்ப முடியாதபடி இருக்கும். அதனால்தான் நான் அதை எப்போதும் கூர்ந்து கவனிக்கிறேன். பெளர்ணமி நிலவு இருக்கும் இரவுகளில் முழு இரவும் ஒளி வீசும். அப்போது அது சாதாரணக் காகிதம் போல் தெரியாது.
இரவில் எந்த ஒளியாக இருந்தாலும் மாலையொளி, மெழுகுவர்த்தி ஒளி, விளக்கு ஒளி, குறிப்பாக நிலவொளியில் அது வெறும் கம்பிகள்போலத் தோன்றுகிறது. நான் சொல்வது அந்த வெளிப்புற வடிவம் பற்றி. ஆனால் அந்தச் சமயத்தில் அதன் பின்னால் இருக்கும் பெண் தெளிவாகத் தெரிகிறாள்.
நீண்ட காலமாக அந்த மங்கலான பின்னணி வடிவம் என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது அது ஒரு பெண் என்று எனக்கு நிச்சயம் தெரிகிறது.
பகலில் அவள் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கிறாள். அந்த வடிவம்தான் அவளை அப்படியே அமைதியாக வைத்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது மிகவும் புதிராக இருக்கிறது. அது என்னைப் பல மணி நேரம் அமைதியாக வைத்திருக்கிறது.
இப்போது நான் அடிக்கடி படுத்துக் கொள்கிறேன். ஜான் அதுவே எனக்கு நல்லது என்று சொல்கிறார். முடிந்தவரை தூங்கச் சொல்கிறார். உண்மையில், ஒவ்வோர் உணவுக்குப் பிறகும் ஒரு மணி நேரம் படுத்திருக்கச் செய்து இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் அவர்தான்.
ஆனால் அது ஒரு மோசமான பழக்கம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் தூங்கவே இல்லை. நான் தூங்குவது போல் நடித்து மற்றவர்களை ஏமாற்றுகிறேன். நான் விழித்திருக்கிறேன் என்று அவரிடம் சொல்லவில்லை. நிச்சயமாக முடியாது.
உண்மையில், நான் ஜானைப் பார்த்துக் கொஞ்சம் பயப்பட ஆரம்பித்திருக்கிறேன். சில நேரம் அவர் மிகவும் வித்தியாசமாக நடக்கிறார். ஜென்னியிடமும் விளக்க முடியாத ஒரு பார்வை இருக்கிறது.
சில சமயம் அது ஓர் அனுமானம் போலத் தோன்றுகிறது. இதற்குக் காரணம் அந்தச் சுவர்க் காகிதமோ?
ஜான் என்னைக் கவனிக்காத நேரத்தில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அர்த்தமற்ற சில காரணங்களைச் சொல்லிக்கொண்டு திடீரென அறைக்குள் வந்து பல முறை அவர் அந்தக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஜென்னியும் அப்படித்தான். ஒருமுறை அவள் அந்தக் காகிதத்தைக் கையால் தொட்டபடி இருந்ததைப் பார்த்தேன்.
நான் அறைக்குள்தான் இருக்கிறேன் என்று அவள் அறியவில்லை. நான் அமைதியான தாழ்ந்த குரலில், “நீ அந்தக் காகிதத்தில அப்படி என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டபோது, அவள் திருடும்போது பிடிபட்டவரைப் போல திடுக்கிட்டுத் திரும்பினாள். மிகவும் கோபமாகவும் தோன்றினாள். “நீ ஏன் என்னை இப்படிப் பயமுறுத்துகிறாய்?” என்று கேட்டாள்.
பின்னர், ‘அந்தக் காகிதம் தொடும் எல்லாவற்றையும் மஞ்சளாகக் கறைபடுத்துகிறது” என்று சொன்னாள். என் உடைகளிலும் ஜானின் உடைகளிலும் மஞ்சள் கறைகள் இருப்பதைக் கண்டதாகவும், நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அவள் உண்மையாகச் சொன்னது போல் தோன்றினாலும் அவள் அந்த வடிவத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை நான் அறிவேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் கண்டறியக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.
இப்போது வாழ்க்கை முன்பைவிட மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. எனக்கு எதிர்பார்க்க ஒன்றும் இருக்கிறது, கவனிக்க ஒன்றும் இருக்கிறது. உண்மையில் நான் இப்போது நன்றாகச் சாப்பிடுகிறேன். முன்பைவிட அமைதியாகவும் இருக்கிறேன். நான் மேம்பட்டு வருகிறேன் என்று நினைத்து ஜான் மிகவும் மகிழ்கிறார்.
மற்றொரு நாள் அவர் சிரித்தபடி, “இந்தச் சுவர்க் காகிதம் இருந்தாலும் நீ நல்லபடி தேறி வருகிறாய் போல இருக்கிறது!” என்றார்.
நான் சிரித்தபடி பேச்சை மாற்றிவிட்டேன். அது அந்தக் காகிதம் காரணமாகத்தான் என்று என்னால் சொல்ல முடியாது. அவர் என்னைக் கிண்டல் செய்வார். ஒருவேளை என்னை இங்கிருந்து கூட்டிச் செல்லவும் நினைப்பார்.
ஆனால் நான் இப்போது செல்ல விரும்பவில்லை. நான் இதன் ரகசியத்தைக் கண்டறியும் வரை இங்கிருந்து போக மாட்டேன். இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அது போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இரவில் நான் அதிகமாகத் தூங்குவதில்லை. ஏனெனில் அது எப்படி மாறுகிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் பகலில் நான் நிறைய தூங்குகிறேன். பகலில் அது சலிப்பாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.
அந்தக் காளான் போன்ற வடிவத்தில் எப்போதும் புதிய கிளைகள் முளைக்கின்றன. மேலும் எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறத்தின் புதிய நிழல்கள் தோன்றுகின்றன. அவற்றை எண்ணிப் பார்க்க முயன்றாலும் என்னால் கணக்கில் வைத்திருக்க முடியவில்லை.
அந்தச் சுவர்க் காகிதத்தின் மஞ்சள் நிறம் மிகவும் விசித்திரமானது. நான் பார்த்த எல்லா மஞ்சள் நிறப் பொருள்களையும் அது நினைவூட்டுகிறது. ஆனால் பட்டர்கப் (கிண்ண வடிவப் பூ) பூக்களைப் போல அழகான மஞ்சள் நிறத்தை அல்ல. பழையதும் அழுக்கானதும் அருவருப்பான மஞ்சள் நிறப் பொருட்களையே இந்த மஞ்சள் நிறம் நினைவூட்டுகிறது.
ஆனால் அந்தக் காகிதத்தில் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது. அதன் வாசனை. நாங்கள் அறைக்குள் முதலில் வந்தபோதே அதை கவனித்தேன். அப்போது காற்றும் சூரிய ஒளியும் இருந்ததால் அதிகமாக அந்த வாசனை இல்லை. ஆனால் இப்போது ஒரு வாரமாக மழையும் மூடுபனியுமாக இருக்கிறது. ஜன்னல்கள் திறந்திருந்தாலும் இல்லையென்றாலும் அந்த வாசனை இங்கே இருக்கிறது.
அந்த வாசனை வீடு முழுவதும் பரவி வருகிறது. அது சமையலறையில் மிதந்து கொண்டிருப்பதைப் போலவும், மாடியறையில் ஒளிந்து கொண்டிருப்பதைப் போலவும், நடைபாதையில் மறைந்து இருப்பதைப் போலவும், படிக்கட்டில் எனக்காகக் காத்திருப்பது போலவும் எனக்குத் தோன்றுகிறது.
அது என் முடிக்குள்கூடப் புகுந்துவிடுகிறது. நான் வெளியே வண்டியில் சவாரி செய்யச் சென்றாலும், திடீரென்று தலை திருப்பினால் அந்த வாசனை அங்கேயும் இருக்கும்.
அது மிகவும் விசித்திரமான வாசனை. என்ன வாசனை அது என்று கண்டறிய நான் பல மணி நேரம் முயன்றிருக்கிறேன்.
முதலில் அது மோசமாக இல்லை. மிகவும் மெல்லிய வாசனையாக இருந்தது. ஆனால் நான் இதுவரை சந்தித்ததிலே மிகவும் நுண்ணியமானதும் நீண்ட நேரம் நிலைக்கும் வாசனையும் அதுதான்.
இந்த ஈரமான காலநிலையில் அது மிகவும் மோசமாகி இருக்கிறது. இரவில் விழித்தால் அந்த வாசனை என்னைச் சுற்றி தொங்கிக்கொண்டிருப்பதைப் போல் உணர்கிறேன்.
முதலில் அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அந்த வாசனையை அகற்றுவதற்காக வீட்டையே எரித்துவிடலாமா என்றுகூட நான் தீவிரமாக யோசித்தேன். ஆனால் இப்போது நான் அதற்குப் பழகிவிட்டேன். அது எதைப் போன்றது என்று நான் நினைத்தால் எனக்குத் தோன்றும் ஒரே எண்ணம் அது அந்தக் காகிதத்தின் நிறம் போன்ற ஒரு வாசனை. ஒரு மஞ்சள் வாசனை!
இந்தச் சுவரின் கீழே, தரையின் அருகில், ஒரு விசித்திரமான குறி இருக்கிறது. அறையைச் சுற்றிச் செல்லும் ஒரு நீண்ட தடம். அது படுக்கையைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களின் பின்னாலும் செல்கிறது. மீண்டும் மீண்டும் உரசியதுபோல் நீண்டு நேராக இருக்கும் ஒரு தடம்.
அது எப்படி ஏற்பட்டது? யார் செய்தது? ஏன் செய்தார்கள்? என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
திரும்பத் திரும்ப தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கும் அந்தத் தடத்தைப் பார்க்கும்போது எனக்குத் தலைசுற்றுகிறது.
இப்போது நான் இறுதியாக ஒன்றைக் கண்டறிந்துவிட்டேன். இரவில் அது இவ்வளவு மாறுவதைக் கவனித்துப் பார்த்த பின் நான் உணர்ந்த விஷயம், அந்த முன்புற வடிவம் உண்மையிலேயே நகர்கிறது. அது நகர்வதற்குக் காரணம் அதன் பின்னால் இருக்கும் பெண் அதை அசைக்கிறாள்.
சில நேரத்தில் அந்த வடிவத்தின் பின்னால் பல பெண்கள் இருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது. சில நேரத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருப்பது போலவும் தோன்றுகிறது. அவள் வேகமாக ஊர்ந்து செல்கிறாள். அவள் ஊர்ந்து செல்லும் போது அந்த முழு வடிவமும் அசைகிறது.
மிக வெளிச்சமான இடங்களில் அவள் அமைதியாக இருப்பாள். ஆனால் மிகவும் இருண்ட இடங்களில் அவள் அந்தக் கம்பிகளைப் பிடித்து வலுவாக அசைக்கிறாள்.
அவள் எப்போதும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்கிறாள். ஆனால் அந்த வடிவத்தின் வழியாக யாராலும் வெளிவர முடியாது. அது மிகவும் குறுகலாக இருப்பதால் கழுத்தை நெரிக்கவும் வாய்ப்புண்டு. அதனால்தான் அதில் இவ்வளவு தலைகள் இருப்பதாக நினைக்கிறேன்.
அந்தத் தலைகள் வெளியே வர முயற்சிக்கின்றன. ஆனால் அந்த வடிவம் அவற்றை நெரித்துத் தலைகீழாகத் தொங்கவிடுகிறது. அவர்களின் கண்கள் வெண்மையாகிவிடுகின்றன.
அந்தத் தலைகள் மறைக்கப்பட்டாலோ, அகற்றப்பட்டாலோ அந்த வடிவம் இவ்வளவு மோசமாக இருக்காது. அந்தப் பெண் பகலில் வெளியே வருகிறாள் என்று நான் நினைக்கிறேன். ஏன் என்று நான் சொல்கிறேன், ரகசியமாக நான் அவளை பார்த்திருக்கிறேன்.
என் ஜன்னல்களில் ஒவ்வொன்றிலிருந்தும் என்னால் அவளைப் பார்க்க முடிகிறது. அதே பெண்தான் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் எப்போதும் ஊர்ந்து செல்கிறாள். ஆனால் பெரும்பாலும் பெண்கள் பகலில் இப்படி ஊர்ந்து செல்ல மாட்டார்கள்.
அந்த நீண்ட நிழல் நிறைந்த பாதையில் அவள் மேலும் கீழும் ஊர்ந்து செல்வதை நான் பார்க்கிறேன். திராட்சைத் தோட்டங்களின் கீழ் அவள், தோட்டத்தைச் சுற்றி ஊர்ந்து செல்வதைப் பார்க்கிறேன்.
மரங்களின் கீழே உள்ள அந்த நீண்ட சாலையிலும் அவள் ஊர்ந்து செல்கிறாள். ஒரு வண்டி வந்தால், அவள் புகையைப்போல கொடிகளின் கீழ் மறைந்து விடுகிறாள்.
அவளை நான் குற்றம் சொல்ல மாட்டேன். பகலில் ஊர்ந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டால், அது மிகவும் அவமானமாக இருக்கும்.
நான் பகலில் ஊர்ந்து செல்லும்போது எப்போதும் கதவைப் பூட்டிக்கொள்வேன். இரவில் அதைச் செய்ய முடியாது. ஜான் சந்தேகப்படுவார்.
இப்போது ஜான் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார். நான் அவரைக் கோபப்படுத்த விரும்பவில்லை. அவர் வேறு ஓர் அறைக்கு மாறினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும், அந்தப் பெண்ணை இரவில் யாரும் வெளியே கொண்டு வரக்கூடாது என்னைத் தவிர. சில சமயம் நான் யோசிப்பேன், எல்லா ஜன்னல்களிலிருந்தும் ஒரே நேரத்தில் அவளைப் பார்க்க முடியுமா என்று.
நான் எவ்வளவு வேகமாகத் திரும்பினாலும், ஒரே நேரத்தில் ஒரு ஜன்னலின் வழியாக மட்டுமே வெளிஉலகைப் பார்க்க முடிகிறது.
நான் எப்போதும் அவளையே தேடுகிறேன். ஆனால் நான் திரும்புவதற்குள் அவள் இன்னும் வேகமாக ஊர்ந்து சென்றுவிடுகிறாள்.
சில சமயம் அவளைத் தொலைவில், திறந்த வெளியில் பார்த்திருக்கிறேன். பலமான காற்றில் மேகத்தின் நிழல் விரைவாக நகர்வதைப் போல அவள் ஊர்ந்து செல்கிறாள்.
அந்த மேலிருக்கும் வடிவத்தைக் கீழே இருக்கும் வடிவத்திலிருந்து பிரித்தெடுக்க முடிந்தால் எவ்வளவு நல்லது. அதை மெதுவாக, சிறிது சிறிதாக முயற்சி செய்து பார்க்க நினைக்கிறேன்.
நான் இன்னும் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கண்டறிந்துள்ளேன். ஆனால் அதை இப்போது சொல்லமாட்டேன். மனிதர்களை அதிகமாக நம்புவது நல்லதல்ல.
இந்தக் காகிதத்தை அகற்ற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. ஜான் ஏதோ கவனிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று எனக்குப் புரிகிறது. அவரது கண்களில் இருக்கும் அந்தப் பார்வை எனக்குப் பிடித்தமானதாக இல்லை.
அவர் ஜென்னியிடம் என்னைப் பற்றி மருத்துவம் சார்ந்த பல கேள்விகளைக் கேட்டதை நான் கேட்டேன். ஜென்னி அவருக்கு என்னைப் பற்றிய நிறைய தகவல்களைக் கொடுத்தாள்.
நான் பகலில் நிறைய தூங்குகிறேன் என்று அவள் சொன்னாள். நான் இரவில் நன்றாகத் தூங்கவில்லை என்பதை ஜான் அறிவார். ஆனாலும் நான் அமைதியாக இருப்பதால் அவர் எதுவும் சொல்லவில்லை.
அவர் என்னிடமும் பல கேள்விகளை கேட்டார். மிகவும் அன்பாகவும் கருணையுடனும் இருப்பதைப் போல காட்டிக்கொண்டார். ஆனால் என்னால் அவரின் நடிப்பைப் புரிந்துகொள்ள முடியாதா என்ன?
அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. மூன்று மாதங்களாக இந்தக் காகிதத்தின் கீழ் தூங்கியதால், அவரும் இப்படித்தான் இருப்பார்.
எனக்கு இந்தக் காகிதம் வெறும் குறுகுறுப்பை மட்டுமே தருகிறது. ஆனால் ஜானும் ஜென்னியும் இதனால் ரகசியமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அப்பாடா இது கடைசி நாள், ஆனால் அது போதும்.
ஜான் இன்று இரவு நகரத்தில் தங்கப் போகிறார். அவர் மாலை வரை வீட்டிற்கு வரமாட்டார்.
ஜென்னி என்னுடன் தூங்க விரும்பினாள் அந்தச் சூழ்ச்சிக்காரி. ஆனால் நான் ஒரே ஓர் இரவாவது தனியாக இருந்தால்தான் நன்றாக ஓய்வெடுக்க முடியும் என்று கேட்டுக்கொண்டேன். ஜென்னியும் ஒப்புக்கொண்டாள். அது புத்திசாலித்தனமான யோசனை. ஆனால் உண்மையில் நான் தனியாக இல்லை.
நிலவொளி வந்ததும் அந்த ஏழைப் பெண் ஊர்ந்து கொண்டு வடிவத்தை அசைக்கத் தொடங்கினாள். உடனே நான் எழுந்து அவளுக்கு உதவ ஓடினேன்.
நான் கிழித்தேன்; அவள் அசைத்தாள். நான் அசைத்தேன்; அவள் இழுத்தாள். விடியற்காலைக்கு முன் நாங்கள் பல அடிகள் அளவுக்கு அந்தக் காகிதத்தைக் கிழித்துவிட்டோம்.
என் தலை உயரம் வரை இருக்கும் ஒரு நீளமான துண்டு, அறையின் பாதி அளவிற்குத் தொங்கியது.
பிறகு சூரியன் உதித்ததும் அந்த அருவருப்பான வடிவம் என்னைக் கிண்டல் செய்வது போலத் தோன்றியது. அதனால் இன்று அதை முழுவதும் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நாளை நாங்கள் இங்கிருந்து செல்லப் போகிறோம். அறையை முன்பிருந்தபடி வைக்க என் பொருட்களை எல்லாம் கீழே கொண்டு போகிறார்கள்.
ஜென்னி சுவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். நான் சிரித்தபடி, ‘அந்த மோசமான காகிதத்தின் மீது கோபமாக இருந்ததால் இப்படிச் செய்தேன்’ என்று சொன்னேன்.
அவள் சிரித்தாள். தானும் அதைச் செய்ய விரும்புவதாகச் சொன்னாள். ‘ஆனால் இப்படியான செயல்களில் ஈடுபடுவதால் நான் சோர்வடைந்துவிடக் கூடும்’ என்று கூறினாள்.
அந்த நேரத்தில் அவள் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டாள். ஆனால் நான் இங்கே இருக்கும் வரை இந்தக் காகிதத்தை என்னைத் தவிர உயிருடன் இருக்கும் வேறு யாரும் தொட முடியாது.
அவள் என்னை அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றாள். அது மிகவும் வெளிப்படையாக இருந்தது.
ஆனால் நான் ‘அறை இப்போது அமைதியாகவும் காலியாகவும் சுத்தமாகவும் இருப்பதால் மீண்டும் படுத்துத் தூங்கப் போகிறேன்’ என்று சொன்னேன். ‘நானாக எழுந்து வரும் வரை, இரவு உணவுக்காகக்கூட என்னை எழுப்ப வேண்டாம் எனவும் தூங்கி எழுந்தால் நானே அவளை அழைப்பேன்’ எனவும் அவளிடம் சொன்னேன்.
இப்போது அவள் போய்விட்டாள். வேலைக்காரர்களும் போய்விட்டார்கள். பொருட்களெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
இங்கே எதுவும் இல்லை. தரையில் அடித்துப் பதித்த பெரிய படுக்கையும் அதில் இருந்த கேன்வாஸ் மெத்தையையும் தவிர. இன்று இரவு நாங்கள் கீழ்தளத்தில் தூங்குவோம். நாளை படகில் வீட்டிற்குத் திரும்புவோம்.
இப்போது இந்த அறை மீண்டும் காலியாக இருப்பதால் எனக்குப் பிடித்தமாகிவிட்டது. அந்தக் குழந்தைகள் இங்கே எவ்வளவு ஓடியாடி விளையாடியிருப்பார்கள். இந்தப் படுக்கையின் மரத்தையே அவர்கள் கடித்துவிட்டார்கள் போல.
ஆனால் நான் இப்போது வேலை செய்ய வேண்டும். நான் கதவைப் பூட்டிவிட்டு சாவியை வெளியே இருக்கும் பாதையில் எறிந்துவிட்டேன். ஜான் வரும்வரை நான் வெளியே போக விரும்பவில்லை. யாரும் உள்ளே வரவும் விரும்பவில்லை. அவரை நான் ஆச்சரியப்படுத்த வேண்டும்.
இங்கே நான் ஒரு கயிறையும் மறைத்து வைத்திருக்கிறேன். அது ஜென்னிக்குக்கூடத் தெரியாது. அந்தப் பெண் வெளியே வந்தால், தப்பிச் செல்ல முயன்றால், நான் அவளைக் கட்டிப்போட இக்கயிறு உதவும்.
ஆனால் ஒரு விஷயம் மறந்து போய்விட்டது. மேலே ஏறுவதற்கு ஏதுவும் இல்லாமல் உயரத்தில் இருக்கும் மிச்ச காகிதத்தை என்னால் கிழிக்க முடியாது. இந்தப் படுக்கையையும் நகர்த்த முடியவில்லை. எனவே அதைத் தூக்கவும் தள்ளவும் முயற்சி செய்து மிகவும் சோர்ந்துவிட்டேன். கோபத்தில் அதன் ஒரு மூலையை நான் கடித்துவிட்டேன், அதனால் என் பற்கள் வலித்தன.
பின்னர் தரையில் நின்றபடி எனக்கு எட்டிய அளவு காகிதத்தை எல்லாம் கிழித்தேன். அது மிகவும் ஏடாகூடமாக ஒட்டியிருக்கிறது. அந்த வடிவம் அதை ரசிப்பது போலத் தோன்றுகிறது.
நெரித்துக் கொண்டிருக்கும் தலைகள், வீங்கிய கண்கள், பூஞ்சைக் காளான் போல வளரும் வடிவங்கள் எல்லாம் என்னைக் கிண்டலடிப்பதுபோல கத்துகின்றன.
நான் மிகவும் கோபமாகி விட்டேன். ஏதாவது தீவிரமான செயல் செய்யத் தோன்றுகிறது. ஜன்னலிலிருந்து குதித்து விட வேண்டும் போலவும் தோன்றுகிறது.
ஜன்னலிலிருந்து குதிப்பது நல்ல உடற்பயிற்சி போல இருக்கும். ஆனால் அந்தக் கம்பிகள் மிகவும் வலுவாக உள்ளன. முயற்சி செய்வதற்கே முடியாது.
மேலும், நான் அப்படிச் செய்ய மாட்டேன். நிச்சயமாக இல்லை. அந்த மாதிரி செயல் சரியல்ல என்றும் அது தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.
ஜன்னலுக்கு வெளியே பார்க்கவும் எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே நிறைய ஊர்ந்து செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வேகமாக ஊர்ந்து செல்கிறார்கள்.
அவர்கள் எல்லாரும் அந்த சுவர்க் காகிதத்திலிருந்து என்னைப் போலவே வெளியே வந்தவர்களா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால் இப்போது இதுவரை யாருக்கும் தெரியாமல் நான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் என்னை நானே கட்டிக்கொண்டேன். இனி என்னை உங்களால் வெளியே உள்ள அந்தச் சாலைக்குக் கொண்டு செல்ல முடியாது.
இரவு வந்தால் மீண்டும் அந்த வடிவத்தின் பின்னால் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் போலத் தோன்றுகிறது. அது மிகவும் கடினமாக இருக்கும். இந்தப் பெரிய அறையில் விரும்பியபடி ஊர்ந்து செல்லுவது மிகவும் இனிமையாக இருக்கிறது.
நான் வெளியே செல்ல விரும்பவில்லை. ஜென்னி கேட்டாலும் நான் போக மாட்டேன். ஏனெனில் வெளியே தரையில் ஊர்ந்து செல்ல வேண்டும். அங்கே எல்லாமே மஞ்சள் அல்ல, பச்சையாக இருக்கிறது.
ஆனால் இங்கே நான் தரையில் மெதுவாக ஊர்ந்து செல்ல முடிகிறது. சுவரைச் சுற்றி இருக்கும் அந்த நீண்ட தடத்தில் என் தோள் சரியாக பொருந்துகிறது. அதனால் நான் வழி தவற மாட்டேன்.
ஆஹா! கதவின் அருகே ஜான் நிற்கிறார்.
அதனால் பிரயோஜனமில்லை, இளைஞரே! நீங்கள் அதைத் திறக்க முடியாது.
அவர் கதவை ஏன் இப்படி வேகமாகத் தட்டுகிறார்? இப்போது அவர் கோடாரியை வேறு கொண்டு வரச் சொல்லுகிறார். அந்த அழகான கதவை உடைப்பது வெட்கக்கேடான விஷயம்.
“ஜான் அன்பே” என்று நான் மிகவும் மென்மையான குரலில் சொன்னேன், “சாவி முன் படிக்கட்டின் அருகே, ஒரு வாழை இலையின் கீழே இருக்கிறது!”
அது அவரைச் சில நொடிகள் அமைதியாக்கியது.
பின்னர் அவர் மிகவும் அமைதியாக, “என் அன்பே, கதவைத் திற” என்றார்.
“என்னால் முடியாது,” என்றேன். “சாவி முன் கதவின் அருகே, ஒரு வாழை இலையின் கீழே இருக்கிறது.”
அதை நான் மீண்டும் மீண்டும் மிகவும் மெதுவாகவும் மென்மையாகவும் சொன்னேன். பலமுறை சொன்னதால் அவர் சென்று பார்த்தார். அவர் சாவியைக் கண்டுடறிந்து கதவைத் திறந்து உள்ளே வந்தார்.
அவர் கதவின் அருகே வந்து திடீரென நின்றார்.
“என்ன ஆயிற்று?” என்று அவர் கத்தினார். “ஐயோ கடவுளே! நீ என்ன செய்கிறாய்?”
நான் தொடர்ந்து ஊர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் என் தோளுக்கு மேலாக அவரைப் பார்த்தேன்.
“நான் ஒரு வழியா வெளியே வந்துவிட்டேன்” என்றேன், “நீங்களும் ஜென்னியும் இருந்தாலும் நான் அந்தக் காகிதத்தின் பெரும்பகுதியைக் கிழித்துவிட்டேன். அதனால் என்னை மீண்டும் அதற்குள் அடைக்க முடியாது!”
அந்த மனிதன் ஏன் மயங்கி விழுந்தார்?
ஆனால் அவர் உண்மையிலே மயங்கி விழுந்துவிட்டார். என் பாதையின் நடுவே, சுவரின் அருகே. அதனால் நான் ஒவ்வொரு முறையும் ஊர்ந்து செல்லும்போது அவரைத் தாண்டி செல்ல வேண்டியிருந்தது.
*
படைப்பாளர்
ஸ்ரீதேவி மோகன்
ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெண் படைப்பாளிகளைச் சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.


