–
கும்பளங்கி நைட்…
பயணங்கள் எப்போதுமே புத்துணர்ச்சி ஏற்படுத்துபவை. புதிய இடங்களை, மனிதர்களை, உணவுகளை, அனுபவங்களை உண்டாக்குபவை. பயணம் போவது என்பது நம் சமூகத்தில் ஆண்களுக்கு மட்டுமே இதுவரை எழுதி வைத்திருந்த ஒன்று. ஆனால் இன்று பெண்களும் ஆண்கள் துணையின்றிப் பயணிப்பது அதிகரித்து வருகிறது. அவை வெறும் பொழுதுபோக்குப் பயணங்களாக மட்டுமே இருப்பதில்லை. தன்னம்பிக்கை மற்றும் விடுதலையின் அடையாளமாக இருப்பவை. இத்தகைய தனிப் பயணங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல் பயணத்தின்போது செல்லும் இடங்கள், வழிகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களை நாமே முடிவுசெய்வது மிகச் சிறந்த தன்னம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தும்.
அன்றாட வாழ்வின் அழுத்தங்கள் மற்றும் ஒரே மாதிரியான இயக்கங்களில் இருந்து சிறிதேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள தோழியின் மகள் ஒரு கேர்ள்ஸ் ட்ரிப்பை ஏற்பாடு செய்வதாகச் சொன்ன நொடியில் இருந்தே மனசுக்குள் பரபரப்பு பற்றிக் கொண்டது. பொதுவாகத் திட்டம் போடுவோம். அப்புறம் அது பிசுபிசுத்துப் போய் கிடப்பில் போடப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த முறை தனிப்பயணம் சென்றே ஆக வேண்டும் என்கிற ஒரு ஆவேசம் மனதை ஆட்கொண்டது.
நான், மகள், என் அம்மா, தோழி, அவர் மகள், தோழியின் நாத்தனார் என்று ஆறுபேர் கேரளாவுக்குப் பயணிக்க முடிவானது. தோழியின் மகள் முதலிலேயே பொதுப் போக்குவரத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமென்று தெளிவாகச் சொல்லிவிட்டார். இதுவரை பாதுகாப்பு வளையத்துக்குள் மட்டும்தான் பயணம் செய்து கொண்டிருந்தோம் என்பதால் முதலில் கொஞ்சம் ‘கெதக்’ என்றுதான் இருந்தது. ஆனாலும் சவால்களை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ள முதல்படி பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியே வருவதுதான் என்பதால் எல்லோரும் ஒருமனதாக அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டோம். அதனால் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
அவர்கள் மூவரும் சென்னையிலிருந்தும், நாங்கள் அதே ரயிலில் கோவையிலிருந்தும் எர்ணாகுளம் வரையிலும் பயணிப்பதாக ஏற்பாடு. கடைசி நிமிடம் வரை எங்களுக்குப் பயணச் சீட்டு உறுதி செய்யப்படவில்லை என்பதால் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. இரவு எட்டு ஐம்பத்தி ஐந்துக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விடிகாலை மூன்றே முக்காலுக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இரண்டு நிமிடங்கள் மட்டுமே அங்கு ரயில் நிற்கும் என்கிற தகவல் எங்களுக்கு இன்னும் படபடப்பை அதிகரித்தது. முன்தினம் இரவு தூக்கமே வரவில்லை. ரயில் நிலையத்துக்கு ஒருமணி நேரம் முன்னதாகவே சென்று விட்டோம். ப்ரியா போன் செய்துவிட்டு பெட்டியில் இருந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும்தான் மூச்சே வந்தது. மூவரும் ஏறி விட்டோம். பயணச் சீட்டு பரிசோதகரைச் சமாளித்து விட்டு (ப்ரியாவின் கைங்கரியம் தான்) கொஞ்ச நேரம் அரட்டையடித்துவிட்டு ஆளுக்கொரு பெர்த்தில் ஐக்கியமானோம்.
சிறிது நேரம் தூங்கி எழுந்து மீண்டும் அரட்டைக் கச்சேரி. காலை எட்டே முக்காலுக்கு ரயில் எர்ணாகுளம் சந்திப்பை வந்தடைந்தது. அருகிலேயே இருந்த ஓர் உணவகத்தில் இட்லி, வடை என்று காலை உணவை முடித்துக் கொண்டோம். பயணத் திட்டத்தில் முதல்நாள் கும்பளங்கி செல்வதாக இருந்ததால் அங்கே அருகில் தங்கிக் கொள்ளும் இடத்தை ஆன்லைனிலேயே ப்ரியா ‘புக்’ செய்திருந்தார். அனைவரும் ஒன்றாக டாக்சியில் செல்ல கட்டணம் கேட்டால் மிக அதிகமாக இருந்தது. ஆட்டோ கட்டணம் மூன்றில் ஒன்றுதான் என்பதால் இரண்டு ஆட்டோக்களில் ஏறிக் கொண்டு புறப்பட்டோம். அங்கு ஆட்டோக்கள் மிக மலிவாக இருக்கின்றன. நம்மூர் ஆட்டோக்களைவிட நன்றாக வைத்திருக்கிறார்கள். கட்டணமும் குறைவு. மூன்று பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை என்று ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.
ஜேசி டென்வில்லா என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ரிசார்ட்க்கு வழித்தடம் மிக மோசமாக மேடு பள்ளமாக இருந்தது. சற்று நீண்ட பயணத்துக்குப் பிறகு ரிசார்ட்டை அடைந்தோம். உள்ளே அழகழகான மலர்ச் செடிகள் காற்றில் ஆடி எங்களை வரவேற்றன. இரண்டே இரண்டு தங்குமிடங்கள்தான் இருந்தன. இரண்டு சிறிய படுக்கையறைகள், குளியலறை கொண்டதாக ஒவ்வொரு வீடும் இருந்தது. அந்த முழு இடமும் நமக்கு மட்டும்தான் என்று ப்ரியா கூறினார். ஒரு சமையலறை சற்றுத் தள்ளி இருந்தது. சாப்பிடும் இடம் தனியாக இருந்தது. வெளியில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து நாமே சமைத்துக் கொள்ளலாம். சில நாட்கள் ஓய்வுக்கு வந்து தங்குபவர்களுக்கு ஏற்ற இடம். கடற்கரையின் அருகில் அந்த இடம் இருந்ததால் காற்று நன்றாக வீசியது. ஒரு சிறிய படகில் படுக்கை வசதி செய்து, மின்விசிறி சிறியதாக அமைத்திருந்தார்கள். மிக அருமையாக இருந்தது. ஆனால் ஒருவர் மட்டுமே படுக்க முடியும் என்பதால் பார்த்து ரசித்ததோடு நிறுத்திக் கொண்டோம். இரவு சரியாகத் தூங்காததால் எல்லோரும் சிறிது நேரம் தூங்க முடிவானது.
தூங்கி மூன்று மணிக்கு எழுந்தோம். அங்கே உணவு வசதிகள் இல்லை என்று முன்பே சொல்லியிருந்தார்கள். காபி/தேநீர் போட்டுக் குடித்துக் கொள்ளலாம். மறுநாள் காலை உணவு மட்டுமே வழங்கப்படும். அதனால் ஸ்விகியில் ஆர்டர் போட்டுவிட்டு, குளித்து தயாராகி வந்தோம். எல்லோரும் ஒன்றாகப் பேசிச் சிரித்து உணவுவைப் பகிர்ந்து கொண்டு உண்டோம்.
மாலையில் நடக்கத் தொடங்கினோம். பத்தடிக்கும் குறைவான சாலை. வீடுகள் அழகாக இருந்தன. எல்லா வீடுகளிலும் மாமரம் கட்டாயமாக இருக்கிறது. ஒரு வீட்டில் செந்தூரா மாங்காய்கள் கொத்தாகத் தொங்கிக் கொண்டு இருந்தன. இன்னொரு வீட்டில் பலாமரம். அதுவும் மரத்தின் தண்டில் கொத்துக்கொத்தாகக் காய்த்து இருந்தது. செம்பருத்தி செடிகளில் பூக்கள் ரத்தச் சிவப்பாக பூத்திருந்தன. பேசிக் கொண்டே நடந்து போய்விட்டுத் திரும்பினோம். மீண்டும் ரிசார்ட் வந்து தேநீர் குடித்துவிட்டு ஒளிப்படங்கள், வீடியோக்கள் எடுத்தோம்.
இரவு உணவு ‘வரம்பு ரெஸ்டாரெண்ட் ‘ என்னுமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ப்ரியா சொன்னார். அங்கே படகில்தான் செல்ல முடியும் என்பதால் இரண்டு ஆட்டோக்களில் பயணித்து படகு இருக்குமிடம் வந்தோம். ஃப்ரெடி என்னும் சகோதரர்தான் முதலில் வந்தார். அவரது தம்பி ஃபெபின் என்பவரை அழைத்தார். படகுத் துறையில் இறக்கி விட்டுவிட்டு அவர்கள் உடனே போகவில்லை. நாங்கள் பெண்கள் மட்டும் இருந்ததால் புது இடம் என்று படகு வரும் வரை உடன் இருந்தனர். படகு வந்ததும் அதிகம் அதில் பயணிக்காத எங்களைப் படகில் ஏற உதவி செய்து விட்டுப் பின்னர்தான் புறப்பட்டனர். சாப்பிட்டுவிட்டு மீண்டும் இங்கேயே வரும்போது அழைத்தால் வந்து விடுவோம் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றனர்.
இரவு ஒன்பது மணிக்குப் படகில் செல்லும் அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது. சுற்றிலும் தண்ணீர் இருந்தது. படகில் பத்து நிமிடங்கள் பயணம். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. வரம்பு சென்று உணவு வகைகளை சொல்லிவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். குறைவான உணவு வகைகளே இருந்தன. சுடுநீர் கிடைக்கவில்லை. சப்பாத்திகள், இறால் தொக்கு, பீஃப் கிரேவி, புட்டு என்று ஆர்டர் செய்தோம். சாப்பிட்டு முடித்துவிட்டு ஆட்டோ சகோதரருக்கு போன் செய்து விட்டு மீண்டும் படகு சவாரி. ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்து வருவதும், கொண்டு விடுவதும் அவர்கள் பொறுப்பாக இருந்தது. அதற்கென்று தனிக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
வந்து நின்று பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எங்களுடன் உணவகத்திலிருந்து வந்த மற்றவர்கள் காரில் ஏறிச் சென்றுவிட்டார்கள். நாங்கள் ஆறு பேர் மட்டுமே அந்த அத்துவான பிரதேசத்தில் தனியாக நின்று கொண்டிருந்தோம். அப்போது நேரம் 11:30 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தென்னை மரங்கள், வீசியடிக்கும் காற்று, இரவு, எதிரே பரந்து விரிந்த நீர்ப்பரப்பு, அதில் ஆங்காங்கே வெளிச்சப் புள்ளிகளோடு மீன்பிடி படகுகள் என்று தனியாக நின்றிருந்தோம். ஆட்டோ வருவதற்கான எந்த அறிகுறியுமே தெரியவில்லை. ஆட்டோக்காரருக்கு போன் செய்யலாம் என்று பார்த்தால் அங்கே டவரும் சரிவரக் கிடைக்கவில்லை. ஆனாலும் மனதில் நம்பிக்கை இருந்தது. காரணம் அவர்கள் எங்களிடம் சொல்லிச் சென்ற விதம்.
சிறிது நேரம் கழித்து தொலைவில் ஒரு ஆட்டோ வரும் சத்தம் கேட்டது. எல்லோரும் புறப்படத் தயாராக நின்றிருந்தோம். ஒரு ஆட்டோவில் சகோதரர்கள் இருவரும் வந்தார்கள். இன்னொரு ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது என்று சொன்னதும் எங்களுக்குப் பகீரென்று இருந்தது. ஃப்ரெடி மலையாளத்தில், “பயப்பட வேண்டாம் சகோதரிகளே. நான் உங்களில் நால்வரை ஏற்றிச் சென்று ‘கவரு’வில் இறக்கி விட்டு வந்து இருவரை அழைத்துச் செல்கிறேன். அதுவரை என் தம்பி ஃபெபின் இங்கே துணையாக இருப்பார்” என்று சொன்னார். நாங்கள் ஒருவரை இன்னொருவர் பார்த்துக் கொண்டோம். முடிவை நாங்கள்தான் எடுத்தாக வேண்டும் என்பதால் சட்டென்று ஒப்புக்கொண்டோம். நானும், தோழியின் நாத்தனார் எலிசபெத் அக்காவும் அங்கேயே நின்று கொள்ள மற்றவர்களை ஏற்றிக்கொண்டு ஃப்ரெடி புறப்பட்டார்.
ஃபெபினுடன் சுமாரான மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்தோம். அவர் இத்தாலியில் ஓர் உணவகத்தில் வேலை செய்வதாகவும், இங்கே விடுமுறையில் வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டதாகவும், தன் அண்ணனுக்குத் துணையாக தானும் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், தன் மனைவிக்குச் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறினார். நான் ஓர் எழுத்தாளர் என்று சொன்னதும் ஆச்சரியப்பட்டார். சுமார் அரைமணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு ஃப்ரெடி வந்து எங்கள் மூவரையும் ஏற்றிச் சென்றார்.
கும்பளாங்கியில் மிகப் பிரபலமான இடம் இந்த கவரு (Kavaru). தென்னை மரங்கள் தலைவணங்கி வரவேற்க, காயல் காற்றின் ஈரப்பதம் முகத்தில் படர, நிலப்பரப்பும், நீர்ப்பரப்பும் கைகோக்கும் அந்த இடத்தில் நாங்கள் இறங்கியதும் மனம் உற்சாகத்தில் துள்ளியது. கவரு அதன் இயற்கை அழகுக்காக மட்டுமன்றி அங்கு நடைபெறும் பயோலூமினிசென்ஸ் (Bioluminescence) நிகழ்வுக்காகவும் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. இங்கு கயாக்கிங் மற்றும் படகு சவாரி என்று இரண்டு விதமாக இந்த உப்பங்கழியில் பயணிக்கலாம். இது இரவு நேரப் பயணம் மட்டுமே. தண்ணீரில் அலைகள் எழும்பும்போது, அல்லது நாம் தண்ணீரைக் கைகளால் துளாவும் போது, அல்லது படகில் துடுப்பு போடும்போது இந்தக் காயலில் (Backwaters) காணப்படும் டைனோஃபிளாஜலேட்டுகள் (Dinoflagellates) என்னும் ஒரு செல் கொண்ட மிதவை நுண்ணுயிரிகளால் (phytoplankton) ஒருவிதமான ஒளிரும் நீலநிற ஒளி உண்டாகிறது. குறிப்பாக Noctiluca scintillans என்கிற வகை உயிரினம் கும்பளங்கி பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இவை கடலோரப் பகுதிகளில் உள்ள உப்பு நீரில் வாழக்கூடியவை.
இந்த நுண்ணுயிரிகள் தங்களுக்குள் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒளியை வெளியிடுகின்றன. இதிலுள்ள இரண்டு முக்கியக் கூறுகள் லூசிஃபெரின் (Luciferin) என்னும் ஒளியை உமிழும் ஒரு புரதமாகும். மற்றொன்று லூசிஃபெரேஸ் (Luciferase) என்னும் வேதிவினையைத் தூண்டும் ஒரு என்சைம் (Enzyme) ஆகும். தண்ணீரில் அலைகளாலோ அல்லது படகு நகர்வதாலோ இந்த நுண்ணுயிரிகள் அதிர்வுக்கு உள்ளாகும் போது லூசிஃபெரின் ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. லூசிஃபெரேஸ் இந்த வினையை வேகப்படுத்துகிறது. இதன் விளைவாக ஒளி ஆற்றல் வெளியாகிறது. கடல்நீரில் நீலநிற ஒளிதான் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது. பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் இந்த நீலநிறத்தை மட்டுமே உணரும் திறன் கொண்டவை. இந்த நுண்ணுயிரிகள் வெளியிடும் ஒளியின் அலைநீளம் (wavelength) நீல நிறத் தட்டில் அமைவதால் நம் கண்களுக்கு இன்னும் பிரகாசமாகத் தெரிகிறது. இது பார்ப்பதற்குத் தண்ணீரில் நட்சத்திரங்கள் கொட்டியது போலவும், நீலநிற நியான் விளக்குகள் போலவும் ஒளிர்கிறது.
ஒளியால் ஈர்க்கப்படும் சிறிய மீன்கள் நுண்ணுயிரிகளை உண்ண வரும் போது பெரிய மீன்களுக்கு இரையாகின்றன. இது திருடன் விளைவு (Burglar Alarm) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெற நீரின் உப்புத்தன்மையும், வெப்பநிலையும் சரியாக இருக்க வேண்டும். கோடைக்காலத்தில் நீர் ஆவியாவதால் உப்புத்தன்மை அதிகரிக்கிறது. அப்போது இந்த நுண்ணுயிரிகள் வேகமாகப் பெருக்கமடையும். மழை பெய்து காயல் நீரில் நன்னீர் கலக்கும்போது, உப்புத்தன்மை குறைந்து இவை மறைந்து விடுகின்றன.
தோழி ஸ்ரீதேவியும் எலிசபெத்தும் ஒன்றாகவும், ப்ரியா தனியாகவும் கயாக்கிங் சென்றார்கள். நாங்கள் மூவரும் படகில் ஏறிக் கொண்டோம். அங்கே மிக மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. அப்போதுதான் தண்ணீர் ஒளிர்வது நன்றாகத் தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு போல. படகை ஓட்டியவர் துடுப்பால் நீரில் துளாவியவுடன் சிதறிய ஒளிச் சிதறல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. சுற்றிலும் நான்கைந்து பேர் இருவர் இருவராக கயாக்கிங் செய்து கொண்டிருந்தார்கள். கறுப்பான நீரில் சிதறும் நீல வெளிச்சம், மிதக்கும் படகு, கடிக்கும் கொசு, மேலே வானம், சிறியதாக நிலா, மேகக் கூட்டம் என்று சூழ்நிலை மிக அற்புதமாக, ரம்மியமாக இருந்தது. வருடம் முழுவதும் இந்த நிகழ்வு நடப்பதில்லை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே இது அதிகமாக நிகழ்கிறது என்று படகு ஓட்டி கூறினார். பௌர்ணமி நாளில் அதிகமாக ஒளிரும் என்றார். இது இறால் மற்றும் மீன் வளர்க்குமிடம் என்றும், இந்த நீரில் காணப்படும் ஒருவிதமான உப்புத் தன்மையால்தான் இந்த பயோலூமினிசென்ஸ் நிகழ்வு ஏற்படுகிறது என்றும், மழைக் காலத்தில் நீரின் உப்புத்தன்மை குறைவதால் இது ஒளிர்வதில்லை என்றும் கூறினார்.
இரவில் கயாக்கிங் செய்யும்போது துடுப்பு படும் இடமெல்லாம் நீல நிறமாக மின்னுவது ஒரு மாயாஜாலம் போன்றிருந்தது. 2019இல் வெளியான மலையாளத் திரைப்படமான ’கும்பளங்கி நைட்ஸ்’ படத்துக்குப் பிறகுதான் இந்த இடம் அதிகம் பேருக்குத் தெரியவந்தது. ‘இந்தியாவின் முதல் மாடல் சுற்றுச் சூழல் கிராமம்’ (Model Eco- tourism village) என்கிற பெருமை கும்பளங்கிக்கு உண்டு. இந்த நீலநிற ஒளி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் , நீரின் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதையும், சில சமயங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதையும் இது காட்டுகிறது. இதனால் மீன்பிடித் தொழில் செய்பவர்கள் இந்த நேரத்தில் மீன்வரத்து குறைவாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
வழக்கமாக இருபது நிமிடங்கள் மட்டுமே அங்கு காயலில் சவாரி செய்யலாம். நாங்கள் சென்றது வாரநாள் என்பதால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கவருவை ரசிக்கச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் முக்கால் மணி நேரமாக ரசித்தோம். பின்னர் ஒவ்வொருவராக இறங்கிவிட்டோம். இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை நான்கு மணிவரைதான் அங்கு படகு சவாரிக்கு அனுமதி. இந்தப் புதிய அனுபவத்தை எங்களுக்குக் கொடுத்த ப்ரியாவுக்கு உளப்பூர்வமாக நன்றி சொன்னோம். மீண்டும் ஆட்டோ பயணம். அதே சகோதரர்கள் ஒரு ஆட்டோவுடன் இன்னொன்றை இணைத்து அதில் இருவரை அமர வைத்து, எங்கள் நால்வரை ஃப்ரெடியின் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர். முக்கியச் சாலையிலிருந்து கிளைச் சாலை வழியாக ஜேசி டென்வில்லா ரிசார்ட்டுக்குச் செல்ல வேண்டும். அதனால் கோளாறான ஆட்டோவை நிறுத்தி விட்டு மற்ற நால்வரை மட்டும் முதலில் அழைத்துச் சென்றார். வழக்கம் போல நானும், எலிசபெத் அக்காவும் ஃபெபினுடன் நின்றிருந்தோம். விரைவில் வந்து எங்களையும் ஃப்ரெடி மீட்டுச் சென்றார். அத்தனை நேரம் காத்திருந்து, எங்களை அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்து விட்டதற்கு அவர்கள் வாங்கிய கட்டணம் மிகவும் குறைவு. மனதார நன்றி சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து தூக்கத்திற்குத் தயாரானோம். அப்போது நேரம் அதிகாலை இரண்டரை.
(தொடரும்)
படைப்பாளர்
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.


