Site icon Her Stories

தண்ணீர் எடுத்தது உண்டா?

pinterest

நாலு கட்டு வீடு; நடுவில் நிலா முற்றம்; அதனருகில் ஒரு பெரிய குட்டுவத்தில் தண்ணீர். வீட்டிற்குள் வருபவர்கள் (பெரும்பாலும் ஆண்கள்) அதிலிருந்து தண்ணீரை எடுத்து கால், கை கழுவிவிட்டு வீட்டிற்குள்
வருவார்கள். எத்தனை சினிமாக்களில் பார்த்திருப்போம்? அவ்வாறு தண்ணீர் சேகரித்து வைப்பதற்கு, நமது அம்மாக்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என நமக்குத் தெரியாது.

எங்களின் ஒரு நாளின் அனைத்து வேலைகளையும் தீர்மானித்தது தண்ணீர் தான்.

பொதுவாகவே மழை தமிழ்நாட்டில் கிராமங்களில் கொண்டாடப்படும் ஒன்று தான். முதல் மழை வரும்போது வரும் மண் வாசனை அனைவரையும் பரவசமடைய வைக்கும். மழையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வரவேற்பார்கள்.

அக்காலத்தில், பல வீடுகளில் நான்கு நாள்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால், தரையில் நீரூற்று அடிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் சாணி மெழுகும் தரையாக இருந்தால் அவ்வளவு தான். படுக்கக்கூட முடியாது. குழந்தைகளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மேசையிலும் பெஞ்ச்சிலும் உட்கார்ந்திருந்தே தூங்கும் வீடுகளும் உண்டு. பல வீடுகளில் சாக்குகள் ஒன்றின் மேல் விரித்து அதன்மேல் விடிய விடிய உட்கார்ந்திருப்பார்கள். வீட்டின் கதவைக் கழற்றிப்போட்டு அதன்மேல் உட்காரும் வீடுகளும் உண்டு.

அப்போதெல்லாம் விறகு அடுப்பு தான்; அதுவும் பல வீடுகளில் அடுப்பு ஒரு ஓலைப் பிறையில் வெளியில் தான் இருக்கும். மழை பெய்தால், அந்தப் பிறை ஒழுகும். அதனால் மழை நாளில் வீட்டுக்குள் ஒரு அடுப்பு வைத்து தான் சமையல் நடைபெறும். மழை வருவதற்கு முன்பே கட்டிலுக்குக் கீழே விறகைச் சேமித்து வைக்க வேண்டும். தீ பற்றவைப்பதற்குக் கூட மிகவும் சிரமப்படுவார்கள். யாராவது ஒரு வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தால், அந்த வீட்டில் இருந்து அகப்பையில் தீக்கங்குகளை எடுத்து வந்து தங்கள் வீடுகளில் தீப்பற்ற வைப்பதுண்டு.

மண்ணெண்ணெய் அடுப்பு சில வீடுகளில் தான் உண்டு. அவ்வாறு இருப்பவர்கள் கூட முழு சமையலுக்கும் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். காபி போடுவது போன்ற சிறு வேலைகளுக்குத் தான் பயன்படுத்துவார்கள். பல வீடுகளில் குடை என்பதே கிடையாது. மாணவர்கள் புத்தகப் பைகளை தலையில் வைத்து வீடு செல்வார்கள். பெரியவர்கள் சுளவு ஒன்றைத் தலைக்கு மேல் வைத்து கொண்டு நடப்பார்கள்.

திண்டுக்கல் தனபாலன்

இவ்வளவு சிரமங்கள் இருந்தால்கூட, யாருமே மழை வருகிறதே என்று சலித்துக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், மழை இல்லை என்றால் அந்த ஆண்டு முழுதும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது.

Rain rain go away. This is our washing day, Come again another day

Rain rain go away. Little Tommy wants to play, Come again another day, என்றெல்லாம் பாடமுடியாது!

மழை வந்தால் நாங்கள் வீட்டில் உள்ள போர்வை எல்லாம் துவைப்போம். பிள்ளைகளும் மழையில் விளையாடுவார்கள். மழை வந்தால், சிறுவர்கள் வீட்டின் முன் ஓடும் நீரில் விளையாடுவார்கள். காகிதத்தில் கப்பல் செய்து விடுவார்கள். நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது ஊரில் ஓட்டு வீடு தான் அதிகம். மொட்டை மாடி வீடுகள் மிகவும் குறைவு. அந்த வீடுகளில் மேலிருந்து தண்ணீர் விழும். அதில் தலைவைத்துக் குளித்து விளையாடுவோம்.

ஊரின் தென் எல்லையில் உள்ள மலைக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மழை வந்தால் மலைக்குப் போவார்கள். மலையில் சிறு சிறு மேடு பள்ளங்கள் இருக்கும் பள்ளத்தின் வழியே தண்ணீர் பாயும். அதில் படுத்தால் நம் மேல் தண்ணீர் ஏறி ஓடும்… அது ரொம்ப சுகமான அனுபவம். பெரியவர்கள் தொட்டி, சட்டி, பானை எல்லாம் தண்ணீர் பிடித்து சேமித்து வைப்பார்கள். மருந்து குடிக்கிற சங்கில் கூட தண்ணீர் பிடித்து வைப்போம் என அப்பா கிண்டல் பண்ணுவார்கள். மலையின் அடிவாரத்தில் படிகள் இருக்கும் இடத்திலும் மழை நேரத்தில் 5-6 படிகள் மூழ்குமளவிற்கு தண்ணீர் தேங்கும். அந்த தண்ணீர் மக்கள் குளிக்கப்பயன்படும்.

சுனை, wikipedia

மலையின் தென்பகுதியில் ஒரு சுனை உள்ளது. மழை காலம் முடிந்தும் ஓரிரு மாதங்கள் தண்ணீர் வரும். கோடை மழை வந்தாலும் ஓரிரு வாரங்கள் தண்ணீர் வரும். அந்த தண்ணீர் கீழ்நோக்கி வழிந்து வரும் பாதையில், சமதளமான இடத்தில் ஒரு கப் மூழ்கும் அளவிற்கு, ஒரு சிறு தேக்கம் உள்ளது. காட்டில் ஆடு மாடு மேய்ப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், தங்களது தேவைக்காக வெட்டிய தேக்கம் அது. நாங்கள் சென்று வாளியில் தண்ணீர் சேகரித்து அதில் குளிப்பதுமுண்டு.

மலையில் அடிவாரத்தில் கிழக்குப் பக்கம் ஒரு சிறு குளம் உண்டு. மழைக் காலம் முடிந்து சில மாதங்கள் குளங்களில் தண்ணீர் இருக்கும். அவற்றில் போய் குளிப்பதுண்டு. அவ்வாறு தண்ணீர் இருக்கும் நேரத்தில் மலைக் கிணற்றில் மிகவும் மேலே தண்ணீர் இருக்கும். இது தான் சிறுவர்கள் பெரும்பாலும் போகும் குளம். ஏனென்றால், இந்த குளம் சிறியது. ஊருக்கு அருகாமையில் இருப்பதால், பெரியவர்கள் துணையின்றி செல்லலாம்.

ஊருக்கு வெளியே வடமேற்கு திசையில் ஒரு பெரிய குளம் உண்டு. அதன் தண்ணீர் கால்வாய் வழியே ஊரின் கிழக்கே இருந்த வயல் வெளியின் பாசனத்திற்குப் பயன்படும். அவ்வாறு வாய்க்காலில் தண்ணீர் போகும் போது மக்கள் அதில் சென்று குளிப்பார்கள். ஊருக்கு வெளியே தென்மேற்கு திசையில் இருந்து வரும் மழை நீர், ஊரின் தென்கிழக்கில் உள்ள குளத்தில் சேகரமாகும். அங்கும் வயல் உண்டு. ஊரினுள் உள்ள தண்ணீர் ஊரின் வடகிழக்கு பகுதியில் உள்ள குளத்தில் சேகரமாகும். ஊரின் வடகிழக்கு பகுதியில் ஒரு குளம், மற்றும் ஊருணி உள்ளது. அது காமராஜ் பள்ளிக்கு மிக அருகாமையில் இருப்பதால், அங்கு படித்த எனது தோழிகள், மதிய உணவு வேளையில், அங்கு சென்று குளிப்பார்கள் எனச் சொல்லுவார்கள்.

அனைத்து குளங்களும் ஓடைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. அதனால் குளம் நிரம்பி விட்டால், உபரி நீர் அடுத்தடுத்த குளங்களைச் சென்றடையும். குளத்தின் தாழ்வான பகுதிகளில் மதகு எனப்படும், நீரை பாசனத்திற்குத் திறந்து விடும் அமைப்பும், மேடான பகுதியில் கலுங்கு எனப்படும், உபரி நீரை வெளியேற்றும் அமைப்பும் இருக்கும். குளம் நிரம்பி நீர் வெளியேறினால், கலுங்கு தட்டி தண்ணீர் போகிறது என ஊரே மகிழ்ச்சியடையும். இது பழங்கால நீர் மேலாண்மையின் சிறப்பு.

பழந்தமிழ் நீர் மேலாண்மை, நன்றி: சிவகங்கை தமிழன்

சில கிணறுகளில் குளத்தில் தண்ணீர் இருக்கும் வரை மட்டுமே தண்ணீர்
இருக்கும். அதனால் ஊர் மக்களின் குடிநீர் தேவைக்கு கூட மறைமுகமாக
குளங்கள் உதவி செய்து இருக்கின்றன. குளங்கள் வற்றியபின் அனைவரும் ஏதாவது தோட்டத்தில் போய் தான் குளிக்கவேண்டும். இதனால் குளியல் பெரும்பாலும் தோட்டங்களில் தான். தோட்டத்தில் நாம் நினைத்த நேரம் போய் குளிக்க முடியாது. மின்சார வாரியம் விடும் மின்சாரத்தில் மூன்று லைன் கரண்ட், இரண்டு லைன் கரண்ட் என இரு வகை உண்டு. மூன்று லைன் கரண்ட் இருந்தால் மட்டுமே தோட்டத்தில் இருக்கும் மோட்டார் ஓடும்.

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டும் தான் மூன்று லைன் கரண்ட்
இருக்கும். அதைக் கணக்கிட்டு குளிக்கச் செல்ல வேண்டும். காலை ஆறிலிருந்து மதியம் இரண்டு மணி வரை, இரண்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை, பத்து மணியிலிருந்து காலை ஆறு மணி வரை என ஒவ்வொரு வாரமும் மின்சாரம் விடும் நேரம் மாறும். அதைப்பொறுத்தே எங்கள் குளியல் இருக்கும்.

நன்றி: உஷோதயா என்டர்பிரைசஸ்

சிலர் தோட்டத்தில் மிளகாய் போட்டிருக்கிறோம்; அதனால் சோப்பு பயன்படுத்தக்கூடாது என்பார்கள். சிலர், வேகவேகமாக, குளிக்க மற்ற ஆள்கள் வருமுன் வெளியேறி விடுவார்கள். சிலர், பாதி வழி வந்து விட்டாலும் திரும்ப வந்து மோட்டார் போட்டு, குளிக்கத் தண்ணீர் தருவார்கள். இவ்வாறு பல வகையான தோட்ட முதலாளிகள் உண்டு. அந்த காலகட்டத்தில் தோட்டம் வைத்திருப்பவர்கள் செல்வந்தர்களாகக் கருதப்பட்டார்கள். ‘காணி நிலம் உண்டா? கலப்பை உழ பூமி உண்டா?’ என்று தோட்டம் இல்லாதவர்கள் குறைபட்டுக் கொள்வார்கள்.

பொதுவாக குளங்கள் ஊரை ஒட்டி தான் இருக்கும்; ஊருக்குள் இருக்காது. அதனால், கிணறுகள் குடியிருப்புகளுக்கு அருகில் வீட்டுத் தேவைக்காக வெட்டப்பட்டன. அன்றைய பொதுக்கிணறுகள் இன்றைய Whatsapp களாக இருந்தன. கிணறுகளின் வடிவம், இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. வட்ட வடிவம் மண் சரிவிற்கு எதிரானது என சொல்லப் படுகிறது. அதனால் தானோ என்னவோ பொதுவாக வீடுகளில் உள்ள கிணறுகள் வட்ட வடிவமாக உள்ளன. இவற்றில் ஒரு பக்கம் கப்பி அமைத்திருப்பார்கள். எங்கள் பள்ளியில் ஒரு கிணறு உண்டு. அதில் கமலை வைத்துத் தண்ணீர் இறைப்பார்கள்.

எங்கள் ஊரில் கிணறுகள் பொதுவாக சதுரமாக, செவ்வகமாக இருக்கும். பூமிக்குள் இருக்கும் பாறைகளை உடைத்து கிணறுகளைத் தோண்டுவதால் சதுரக்கிணறு அமைப்பதாகச் சொல்கிறார்கள். பாறைகளின் இடைவெளி வழியே மழைத்தண்ணீர் விரைவில் கிணற்றுக்குள் இறங்கும். தண்ணீர் மட்டம் மிக விரைவாக உயரும். மறைமுக மழைநீர் சேமிப்பு!

ஆற்றங்கரை, கடற்கரையில் தண்ணீர் மட்டம் மிக உயரத்தில் இருக்கும். அதனால் அதனருகேயுள்ள கிணறுகளின் ஆழம் குறைவாக இருக்கும். அவை சிமெண்ட் உறைகளை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி அமைக்கப்பட்டன. அவற்றில் ஏற்றம் (துலா) வைத்து தண்ணீர் இறைப்பார்கள்.

கிணறு தோண்டுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

அவை மிகப் பெரிய செலவும் மனித உழைப்பும் கொண்டு உருவானவை. பல கிணறுகள் தோண்டும்போது இறப்புகள் கூட நேர்ந்திருக்கின்றன. இவ்வாறு உருவான கிணறுகளை இன்று நாம் மிக எளிதாக குப்பை கொண்டு நிரப்பி மூடிவிடுகிறோம். ஒரே நாளில் பல குடம் தண்ணீர் எடுக்கும்போது கயிறு தண்ணீரில் நனைந்து கனமாகவும், இழுப்பதற்கு சிரமமாகவும் இருக்கும். முகமெல்லாம் வேர்த்து வடியும். அப்போது கயிற்றில் தங்கி முகத்தில் தெறிக்கும் தண்ணீர் சுகம். குடம் நிறைந்த பின் மீதி தண்ணீரை வைத்து முகம் கை காலை கழுவும் போது அது பெரும் சுகம்.

வசதியானவர்கள் வீடு கட்டினால் முதலில் கிணற்றை தோண்டி விட்டுதான் வீடே கட்டியிருக்கிறார்கள். எங்கள் ஊரில் எந்த வீட்டிலும் அவர்களுக்கென தனி கிணறு இருந்ததாகத் தெரியவில்லை. எங்கள் ஊரில் பல கிணறுகள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் தண்ணீர் மிகவும் ஆழத்தில் தான் இருக்கும். இரவில் ஊறிய தண்ணீர் சேகரமாகி, விடியற்காலையில் ஓரளவு தண்ணீர் கிணற்றில் இருக்கும். நேரமாக ஆக பட்டை/ டப்பா கூட நிறையாது. ஒரு பட்டை அல்லது டப்பா மூழ்குமளவிற்கே பெரும்பாலும் தண்ணீர் இருக்கும். கிணற்றைச் சுற்றி பலரும் நின்று தங்களது பட்டைகளை வீசுவார்கள். ஒரு பட்டை மட்டுமே மூழ்கி தண்ணீரை எடுக்கும். மற்றவர் அனைவரும் தங்களது பட்டைகளை மீண்டும் மேலே எடுத்து தான் கிணற்றிற்குள் வீச வேண்டும்.

தண்ணீர் நிறைய இருந்தாலும், வாளி உடனே தண்ணீரை சேகரித்துக் (மொண்டு) கொள்ளாது. இரண்டு மூன்று முறை மேலும் கீழும் வாளியை ஆட்டி மேலே இழுக்கவேண்டும். மேலே வரும்போது முழு வாளி தண்ணீர் வராது. அனுபவம் உள்ளவர்களே முக்கால்வாசி டப்பா தண்ணீர் தான் இறைக்க முடியும். தண்ணீர் இறைக்க, பனை ஓலையிலான பட்டை (தோண்டி) அல்லது அமெரிக்காவிலிருந்து வரும் எண்ணெய் டப்பாவில் வளையம் சேர்த்து பயன்படுத்தப்பட்டது.

பொதுக்கிணறு, நியூஸ்18

சில வீடுகளில் பாதாள கரண்டி எனப்படும் பல வளையங்கள் இணைந்த ஒரு கொத்து இருக்கும். கிணற்றிற்குள் கை தவறி விழுந்து விடும் அல்லது கயிறு அறுந்துவிழும் வாளியை எடுக்க அது பயன்படும். ஒரு வாளி எடுக்கப் போனால் ஒன்பது வாளி கிடைக்கும்! அவற்றில் பல, நாட்கள், தண்ணீரில் கிடந்ததால், இற்றுப்பயனற்றுப் போய்விடும். அவற்றைக் கொடுத்து குச்சிக்கிழங்கு வாங்குவார்கள். தண்ணீர் மிகவும் சுவையானது என்பதால், செப்பு குடம் கொண்டு சென்று புளிவைத்து தேய்த்து எடுப்போம். அப்போது தான் எவர் சில்வர் குடம் பிரபலமாகத் தொடங்கியது. ஆனாலும் செப்பு குடம் வீட்டில் புழக்கத்தில் இருந்தது.

தோண்டி, நன்றி: இந்து தமிழ்

திருமண வீடுகளில் சூடான குழம்பை அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் இருந்து மொண்டு எடுப்பதற்கு பட்டையைப் பயன்படுத்துவார்கள். பனை ஓலையை வெட்டி சமமாக ஓரிரு நாள் வைத்து, பட்டை, கடவம் பெட்டி , சுளவு (முறம்), நார்பெட்டி, தட்டு பெட்டி, சிறு பெட்டி போன்றவை செய்யலாம். என் அப்பம்மா அழகாக எல்லாம் செய்வார்கள். தாயம் போடுவதற்கு சிறு பெட்டி செய்து தருவார்கள்.

ஊரின் கிழக்கிலும் மேற்கே மேலூரிலும் கிணறுகள் உண்டு. இரண்டு கிணறுகளின் தண்ணீரை வீடுகளுக்கு குழாய் மூலம் அனுப்பித் தருவார்கள். ஆனால் அது ஆண்டில் பாதி நாள் கூட வராது. வந்தாலும் முழு குடும்ப செலவிற்கும் போதாது. அவற்றின் தண்ணீர் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் தெருக்குழாயில் விடப்படும். ஊருக்குள் ஆங்காங்கே அடி பம்புகள் (ஆழ்துளை கிணறு) போடப்பட்டன. அவற்றில் எல்லாம் நீண்ட வரிசை இருக்கும். ஓய்வில்லாமல் இரவு பகல் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும்.

பிற்காலத்தில், பல ஆண்கள் சைக்கிள்களில் தண்ணீர் எடுத்து வந்து வீட்டு வேலைகளில் உதவினர். அதுவரை முழுக்க முழுக்க பெண்களின் வேலையாகவே இருந்தது. அதுவும் வீட்டில் மாடு இருந்தால் அவ்வளவு தான். அதனால் எங்கள் அம்மாக்கள் பாத்திரம் கழுவது கூட, துடைத்து எடுப்பது போல சிக்கனமாகக் கழுவுவார்கள். துணி அலசிய தண்ணீரை கழிவறையில் ஊற்றுவதற்காக சேமித்து வைப்பார்கள். இவ்வாறு பலவிதமான சிக்கன முயற்சிகள் செய்து தான் குடும்பத்தை நடத்தினார்கள்.

பழங்காலப் பெருமை பேசுவதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தண்ணீர் உள்ள ஊர் என்றாலும், தண்ணீர் எடுப்பது சிரமம் தான். தண்ணீர் எடுத்தவர்களுக்கு தான் அதன் சிரமம் புரியும்.

கட்டுரையாளரின் பிற படைப்பு:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version