சுய பரிவு. இது சற்றுப் பரிச்சயம் இல்லாத, அதிகமாக வழக்கில் இல்லாத வார்த்தை. ஏன் பலரின் வாழ்க்கையில்கூட இல்லாத விஷயம். அன்னை தெரசா அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு மற்ற உயிர்களின் மீதும் மனிதர்களின் மீதும் நமக்குப் பரிவு இயற்கையாகவே உண்டு.
பறவைகளுக்கு பால்கனியில் தண்ணீர் வைப்பது, தெருவோர நாய்க்கு பிஸ்கெட் கொடுப்பது, தடுமாறும் முதியோருக்கு உதவி செய்வது, வெயிலில் அலைந்து வீட்டிற்கு வரும் தெரிந்த, சில நேரம் தெரியாத டெலிவரி ஆட்களுக்குகூட நீரோ மோரோ தருவது, வீட்டு வேலையில் உதவிக்கு வரும் பெண்ணின் துயரம் உணர்ந்து அவள் கேட்கும் போது வசைபாடமல் விடுமுறையோ, முடிந்த முன் பணமோ தருவது என நாம் அனைவரும் பரிவு காட்டுகிறோம். என்ன செய்கிறோம் என்பது ஆளாளுக்கு வேறு பட்டாலும், ஏதோ ஒன்றை நாம் அனைவரும் செய்வோம்.
இதற்கு முக்கியக் காரணம், நம்மால் அடுத்தவர்கள் இடத்தில் இருந்து பார்த்து அவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிவதுதான். அவர்கள் துன்பம் புரியும்போதுதான் அதற்கான ஆறுதலாக நாம் ஏதாவது செய்ய முயல்கிறோம். அது எத்தனை சிறிய செயலாக இருந்தாலும் அது அந்த உயிருக்கு இதமான அனுபவம். வாழ்க்கை மேல் நம்பிக்கை தரும் இதம்.
இப்படி மற்றவர் மேல் இயல்பாய் வரும் பரிவு நம் மீது நமக்குண்டா?
உடல் சோர்ந்து ஓய்வுக்கு ஏங்கும்போது, தொடர் தோல்வியில் மனம் துவளும்போது, ஒரு தவறிழைத்து அதற்காக வருந்தும் போது, ஏதோ ஒன்றைக் கற்கவோ சாதிக்கவோ முயன்று வெற்றி பெற இயலாத போது நம்மை நாம் பரிவுடன் அணுகுகிறோமா என்றால், இல்லை.
நாம் மிகவும் நேசிப்பவர், ‘தனது உடல் பருமனால் நம்பிக்கை தளர்ந்திருந்தால் நாம் அவரிடம் உன்னால் முடியாதது இல்லை இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. மேலும் நீ இப்போதே அழகுதான், ஆரோக்கியத்திற்காகக் கொஞ்சம் இளைப்பது நல்லது, சிறிது இடைவெளி கொடுத்து புதிய மலர்ந்த மன நிலையோடு பயிற்சி தொடங்கு எனப் பரிவோடு அவருக்கு நம்பிக்கை ஊட்டுவோம்.’
அதே நாம் அந்த நிலையில் இருந்தால், எனக்கு எதுவுமே சரியாக வராது, நான் எதற்கும் லாயக்கில்லை என்று நம்மை நாமே நோகடித்துக் கொள்வோம். ஏன்? அதே அறிவுரையை நமக்கு நாமே சொல்லிக்கொண்டு மீண்டும் முயற்சியைத் தொடங்கும் போது சுய பரிவு சாத்தியமாகிறது.
சுய பரிவென்பது இப்போதுள்ள வலியோ குறையோ உள்ள நிலையை ஏற்றுக்கொண்டு அதற்காக நம்மை வருத்திக்கொள்ளாமல், நம்மைப் பற்றிய எதிர்மறையான முன் முடிவுக்கு வராமல் தவறுவதோ தோல்வியடைவதோ தவறில்லை. ஆனால், இதனாலெல்லாம் என் மீது எனக்குள்ள நேசமும் நம்பிக்கையும் குறையாது என்கிற முடிவும் நம்மீதான அக்கறையும்தான்.
சுய நேசிப்பும் சுய பரிவும் உள்ள ஒருவர் எந்நிலையிலும் இலக்கை அடைவது சாத்தியம். ஏனெனில் அவர்கள் சோர்ந்து போவதில்லை. தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக்கொண்டு தேவைப்படும் போது ஓய்வெடுத்து, இலக்கை எய்துகிறார்கள்.
உயர்ந்த சுய மதிப்பீடு சுய பரிவுக்குத் தடையாயிருத்தல் கூடாது. ஆம், நான் திறமையானவள், என் இலக்கை அடையத் தேவையான எல்லாத் தகுதியும் எனக்குண்டு. அதே நேரம் எனக்கும் இடைவெளி தேவை, ஓய்வு தேவை, தவறிழைத்தல் மனிதப் பண்பு, நான் தவறிலிருந்து கற்று இன்னும் மெருகேறுவேன் என்கிற எண்ணமே சுய பரிவு, உயர்ந்த சுய மதிப்பீடு.
சுய பரிவை எப்படிச் செயல்படுத்துவது?
நம் உற்ற தோழமையோ காதலுக்குரிய இணையரோ பிள்ளைகளோ இதே நிலையில் இருந்தால் அவர்களுக்குச் சொல்வதைச் செய்வதை உங்களுக்கும் சொல்லுங்கள், செய்யுங்கள்.
அதே நேரம் சுய இரக்கத்திலேயோ, சுய இடைக்கால இன்பத்திலேயோ தொலைந்து போகாதீர்கள். எனக்கு இருக்கும் இந்தப் பிரச்னை எவருக்கும் நேரக்கூடியது, வெளிவருவது என் கையில் என வாழ்க்கையைக் கையிலெடுத்தால் அது சுய பரிவு.
மாறாக இந்த நிலை எனக்கு மட்டுமே என்றென்னும் போது, உலகத்தோடு தொடர்பு அற்றுப் போகிறது. நம் நிலையை மட்டும் எண்ணி எண்ணி இரக்கப்பட்டு செயலற்றுப் போவது சுய இரக்கம்.
வேலைப் பளு உடலை வாட்டுகிறது, எனில் உடலுக்குத் தேவையான ஓய்வெடுத்தல், வேறொரு பிடித்த செயலைச் செய்தால் அது சுய பரிவு. மாறாக ஓய்வெடுக்கும் நேரத்தை முழுக்கத் தொலைக்காட்சியின் முன் அமருவதோ உடலுக்கு ஒவ்வாத உணவு, குடி பழக்கத்தை மேற்கொள்வதோ சுய இடைக்கால இன்பம். இடைக்கால இன்பம் அளவோடு இருக்கும் போது அதனால் பெரிய பாதிப்பில்லை. நேர விரயம், சில பல உடல் நலக்கேடு மட்டுமே உண்டாகும், அதே பழக்கமானால் நாம் அதன் பிடியில். சுய பரிவை எங்கிருந்து தொடங்க?
எப்போதெல்லாம் மனமும் உடலும் சோர்ந்து செயல்பட முடியாமல் முடங்குகிறதோ,
- முதல் வேலையாக அனைத்தையும் ஒதுக்கி ஓய்வெடுங்கள். ஓய்வு நேர விரயமல்ல இன்னும் வேகமாக செயல்பட உடலுக்கும் மனதுக்கும் ஊக்க மருந்து.
- ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான பொழுது போக்கில் கவனம் செலுத்துங்கள். இசை, நடைப் பயிற்சி, தோழமைகளுடன் சிறிய பயணம், உங்கள் மனதிற்குகந்த பொழுதுபோக்கு எதுவாயினும் அதைச் செய்யுங்கள்.
- உங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள். எந்த விஷயம் உங்களை வாட்டுகிறதோ அது உங்கள் அன்பிற்கினியவர்களுக்கு நடந்தால் அதை எப்படி மூன்றாம் மனிதரின் பார்வையோடு அலசுவீர்களோ, ஆலோசனை கூறுவீர்களோ அதை உங்களுக்கு எழுதுங்கள். எழுதுவதும் அதைத் திரும்பத் திரும்ப படிப்பதும் மிகுந்த தெளிவைத் தரும்.
- ஒரு சிறிய ஓய்வின் பின் செய்ய வேண்டியதைத் திட்டமிடுங்கள்.
- தியானமும் உடற்பயிற்சியும் சுய பரிவின் இன்றியமையாத அம்சங்கள்.
வாருங்கள் தோழமைகளே சுய பரிவோடு வாழ்வை வெல்வோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.