Site icon Her Stories

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

எனது முதல் பயணம் எனில் எதைச் சொல்லாம்? எனது அகராதிப்படி தினசரி நடைமுறை வாழ்வில் இருந்து மாற்றிப் பயணிப்பதைச் சொல்லலாம். அப்படிப் பார்க்கையில் சட்டென நினைவில் வந்தது எனது முதல் வகுப்பில் ஒரு நாள் உள்ளூர்ப் பயணம் சென்றதே.

அந்தப் பயணத்தில் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நான் 4 வயது முதல் 6 வயது வரை ஒரே வகுப்பு ஆசிரியரிடம்தான் படித்தேன். அவர் மோட்ச மேரி டீச்சர், தமிழ் ரைம்ஸ் சொல்லி கொடுக்கும் அழகே தனிதான். பள்ளியில் இருந்து சுற்றுப் பயணம் எனில் என் பெற்றோர் தடையேதும் சொல்லாமல் அனுமதிப்பார்கள். அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.

அந்த நாளும் வந்தது. எனக்கோ ஒரே சந்தோஷம். தினமும் பத்துப் பைசா கொடுக்கும் அப்பா அன்று 50 பைசா கொடுத்தார். மதிய உணவு பார்சலும் கொடுத்து அனுப்பினார். அம்மாவுக்கு வேலைப்பளு அதிகம் என்பதால் இருவரும் சேர்ந்துதான் சமைப்பார்கள். பள்ளி செல்லும் வழியில் மிட்டாய், அப்பளம் எல்லாம் வாங்கிக்கொண்டேன் அக்கா உதவியுடன்.

பள்ளி தொடங்கியதும் 1A, 1B, 1C மாணவர்களை வரிசையில் இருவராகக் கைபிடித்து நடக்கணும், தெருவில் நடக்கும் போது சத்தம் போடக் கூடாது, விளையாடக் கூடாது, கவனமாகப் பார்த்து நடக்கணும் எனப் பல கட்டுப்பாடுகளுடன் நடைப் பயணத்தைத் தொடங்கினோம். முதலில் சிஎஸ்ஐ பள்ளிக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு பெரிய மைதானம் இருந்தது. அருகே சர்ச் இருந்தது. சிறிது நேரம் விளையாடிவிட்டு, அடுத்து நடந்த போது புதிய காட்சி எனக்குப் பன்றிகள் கூட்டம் கூட்டமாகத் திரிவதைப் பார்க்க முடிந்தது. சாலையோரம் வித்தியாசமான கறிக்கடைகளைப் பார்க்க முடிந்தது. அது பன்றிக்கறி கடை எனத் தெரிந்து கொண்டேன். அடுத்த இடம் கன்னியர்மடம் சென்றோம். அனுமதி கிடைத்து கதவு திறக்கச் சற்றே காத்திருந்தோம். உள்ளே சென்றபோது அமைதியாக இருந்தது. வயதான கன்னிமார்களிடம் ஆசி பெற்று நாங்கள் கொண்டு சென்ற மிட்டாய், அப்பளம் நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு நகர்ந்தோம். மடத்திலிருந்து அடுத்த பள்ளிக்குச் செல்லும் வழி மெயின்ரோடு என்பதால் கொஞ்சம் பயமான உணர்வு. போகும் பாதையில் மஞ்சள் தூள் போல் ஏதோ சாலையில் பரவிக் கிடந்தது. அதைப் பார்த்து டீச்சரிடம் கேட்டபோது, அது மர அரவைக் கடை என்றும் வீடு கட்ட பலகைகள், மரச்சாமான்கள் செய்ய இப்போது மெஷின் வந்திப்பதாகவும் கடைக்காரர் சொன்னார். புதியதைத் தெரிந்து கொண்ட சந்தோஷம்.

அடுத்து செல்ல வேண்டிய பள்ளியில் வளாகத்தில் மதிய உணவை புங்கை மர, வேப்ப மர நிழல்களில் வட்டமாக உட்கார்ந்து ஒருக்கு இன்னொருவர் சாப்பாட்டைப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம். நொறுக்குத் தின்பண்டங்களையும் தின்றோம். அப்பள்ளி அருகே இருந்த சர்ச்சைச் சுற்றிப் பார்த்தோம்.

இன்றும் என் தோழிகள் நவமணி, தீபா சரவணன், கிளமண்ட் தொடர்பில் இருப்பதும் மகிழ்ச்சியே. இன்னும் பல நண்பர்கள் அடுத்தடுத்த வகுப்புகளில் இணைந்தார்கள். இன்றும் பெற்றோர் பள்ளி சுற்றுலா அனுப்பத் தயங்குவதைப் பார்க்க முடிகிறது. குழந்தைகளைப் பள்ளிக்கால சுற்றுலாக்களை அனுபவிக்க விடுங்கள். வாழட்டும் அவர்கள் வாழ்வை!

படைப்பாளர்:

ஆர். சங்கீதா

அப்பாவின் உயரிய எண்ணமான மக்கள் சேவையைச் செய்ய, கிராமத்தின் முதல் மருத்துவராக ஆன இவர் ஒரு பயணக்காதலி. ரயிலும் பேருந்தும் இவரின் நெருங்கிய தோழர்கள். அந்த தோழர்கள் தந்த தோழமைகளோ ஏராளம். ஊரின் முதல் முனைவரான அம்மாவைப் பார்த்து எழுத ஆரம்பித்தார். பயணம் வாயிலாகத் தன்னையும் தேடிக் கண்டுபிடித்தார். அப்படிப் பல ஊர்கள் தரும் அனுபவங்களை her stories வழியாக வாசகர்களுக்கு சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறார் ஆர். சங்கீதா.

Exit mobile version