தெருவில் போன சைக்கிளின் மணியோசை கேட்டுக் கண் விழித்தாள் காயத்ரி. நேற்றிரவு கணவன் அடித்த இடங்களில் இன்னும் விண்விண்ணென வலித்தது. எழுந்து உட்கார்ந்து கதவைப் பார்த்தாள். அது இன்னும் திறக்கப்படவில்லை. வீட்டின் வாசலில் குளியலறையும் கழிவறையும் கட்டியிருந்தார்கள். அவற்றையொட்டித் தட்டியால் ஒரு மறைப்பு. வெயில் காலத்தில் மாமியார் இங்குதான் படுத்துக் கொள்வார். காயத்ரிக்கும் கணவன் முருகனுக்கும் சண்டை வந்த நாட்களில், அவளை அடித்து வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிடுவான். நேற்றும் அப்படியே செய்தான். முன்பெல்லாம் அவன் அடித்தால் ஒரு வாரம் வரை வலி நிற்கும். இப்போது அப்படியில்லை. குடித்துக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டதால் அடிக்கக்கூடத் தெம்பில்லை போலிருக்கிறது. வலியும் இரண்டு நாளில் ஆறிவிடுகிறது.
எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, வாசலைக் கூட்டிக் கோலம் போட்டாள். பால் வாங்க வேண்டும்; கதவு இன்னும் திறக்கவில்லை. நேற்றுக் கூடுதலாக வேலை செய்ததற்காக சித்ராம்மா கொடுத்த 100 ரூபாய் பிளவுசுக்குள் இருந்தது. அதை வைத்துப் பால் வாங்கிவிட்டு வந்து, மெதுவாகக் கதவைத் தட்டினாள். மாமியார் வந்து திறந்ததும் வேகமாகச் சமைக்க ஆரம்பித்தாள். ஓர் அடுப்பில் டீயும், இன்னொன்றில் உலையும் வைத்துவிட்டுக் காய் நறுக்கினாள். மாமியாருக்கு டீயை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள்.
சாதம் வடித்து, குழம்பு தாளித்து, குழந்தைகளை எழுப்பினாள். நேற்றுக் கழுவாமல் விட்ட பாத்திரங்களைக் கழுவித் துடைத்து வைத்தாள். சாதத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு ஆற வைத்தாள். குழந்தைகள் இருவருக்கும் டீ ஊற்றிக் கொடுத்து, குழம்பை இறக்கிச் சாதத்தில் ஊற்றி, முட்டை வேகவைத்து, அப்பளம் பொரித்தாள். ஒவ்வொரு வேலையின் இடையிலும் கணவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.
அவன் எழுந்துவிட்டால் மறுபடியும் சண்டையைத் தொடங்கிவிடுவான். அதற்குள் வேலையை முடிக்க வேண்டும். மூன்று டப்பாக்களையும் கட்டிவைத்துவிட்டு நிமிர்ந்தாள். முருகன் எழுந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மகள் வந்தாள்.
“அம்மா, இன்னைக்கு எங்களை எட்டு மணிக்குள்ள ஸ்கூலுக்கு வரச் சொன்னாங்க” என்றாள்.
“எல்லாம் ரெடிதான், வந்து சாப்பிடு” என்றாள் காயத்ரி.
கயல் சாதத்தைச் சாப்பிட ஆரம்பித்தாள். சரண், “டிபன் இல்லையா? எப்பவும் சோத்தையே வைக்கிற. எனக்கு வேணாம், நான் ஸ்கூல்ல உப்புமா சாப்பிட்டுக்கிறேன்” என்றான். “சரி, போய்ச் சாப்பிட்டுக்க” என்று தட்டையும் மதிய சாப்பாட்டு டப்பாவையும் எடுத்துக் கொடுத்தாள்.
“ரெண்டு பேரும் ரெடியாகுங்க; நான் ஸ்கூல்ல விடுறேன்” என்றான் முருகன். எழுந்து குளியலறைக்குப் போனவன், முடியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டான். ‘என்னங்க ஆச்சு, முடியலையா’ என்று கேட்க நினைத்தவள், பேசாமல் இருந்துவிட்டாள்.
“இன்னைக்கு உடம்பு சரியில்லை; நீங்க கிளம்புங்க, நான் நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றான். “என்னப்பா, உடம்பு சரியில்லையா? வாப்பா, ஆஸ்பத்திரிக்குப் போவோம்” என்றார் முருகனின் அம்மா.
“ஒண்ணும் வேணாம், நான் நல்லாத்தான் இருக்கேன். நீ வாயை மூடிக்கிட்டு இரு” என்று குளிக்கச் சென்றான். குளித்து வந்தவன், பிள்ளைகள் இல்லாததைக் கண்டதும், காயத்ரியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஒரு தள்ளு தள்ளினான்.
“ஏண்டி, ஆறு மணிக்கு மேல எங்கேயும் போகக் கூடாதுன்னு சொன்னா கேக்க மாட்டியா? யாரோட ஊர் சுத்தப் போன? போனதுதான் போனே, அப்படியே போய்த் தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே? இங்க எதுக்குத் திரும்பி வந்த?” என்று அவளை மிதிக்கக் காலை உயர்த்தினான். அப்போது வாசலில் ஹாரன் ஒலித்தது. தினமும் முருகனை வேலைக்கு அழைத்துச் செல்லும் குமார் வந்துவிட்டான். மிதிப்பதை விட்டுவிட்டு, “இதோ அஞ்சு நிமிஷம்” என்று குமாரிடம் சொல்லிவிட்டு, “அம்மா, சோத்தைப் போட்டுக் குடு” என்றான்.
அவன் அம்மா ஒரு தட்டில் கொஞ்சம் சோறு போட்டு, காரக்குழம்பை ஊற்றி, அப்பளத்தை வைத்துக் கொடுத்தார். தண்ணீர் எடுத்து வருவதற்குள் இரண்டு வாய் விழுங்கினான். அதற்கு மேல் இறங்கவில்லை; வயிறு வலித்தது. அம்மா கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்து, இன்னும் இரண்டு வாய் முயன்றான். முடியவில்லை. “ஏம்மா, இவ்வளவு சோத்தைப் போட்ட?” என்று கையைக் கழுவினான். மதிய உணவை எடுத்துக் கொண்டான்.
“இங்க பாரு, இதுதான் கடைசித் தடவை. இனிமே இப்படி ஊர் மேஞ்சிட்டு லேட்டா வந்தீன்னா, பேசிக்கிட்டு இருக்க மாட்டேன். ஒரே மிதியா மிதிச்சே கொன்னுடுவேன், ஜாக்கிரதை” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் காயத்ரி எழுந்து மணியைப் பார்த்தாள். ஐயோ, எட்டாகிவிட்டது. எட்டேகாலுக்குள் டீச்சர் வீட்டுக்குப் போகாவிட்டால் அவர்கள் சாவியை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். இந்த வழியில்தான் போவார்கள்; ஆனால், வண்டியை நிறுத்திச் சாவியைக் கொடுக்க மாட்டார்கள். போகும்போது வண்டி நிறுத்தக் கூடாதாம், அது என்ன நியாயமோ? சாப்பிட நேரமில்லை, சாப்பாட்டை எடுத்துக் கொண்டே போகலாம் என்று டப்பாவைத் தேடினாள். அது அவள் எடுத்துச் செல்லும் கூடையில் இருந்தது. நேற்று சித்ராம்மா வீட்டில் கொடுத்த வடையும் கேசரியும் அப்படியே கிடந்தன. ஆசையாகக் குழந்தைகளுக்குக் கொண்டு வந்தேன், இப்படி ஆகிவிட்டதே என்று குப்பையில் கொட்டி, டப்பாவைக் கழுவித் துடைத்துச் சாதம் போட்டாள். சிறிய டப்பாவில் குழம்பை ஊற்றி, அதனுள் முட்டையைப் போட்டு மூடினாள். குழம்பில் ஊறிய முட்டை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
போன் ஒலித்தது. டப்பாவை அப்படியே வைத்துவிட்டு ஓடிவந்தாள். அதற்குள் அணைந்துவிட்டது. சார்ஜ் இல்லை. சார்ஜரையும் போனையும் கூடையில் போட்டுக் கொண்டு, “அத்தை, போய்ட்டு வரேன்” என்று சொல்லி வேகமாக நடந்தாள்.
ஓட்டமும் நடையுமாக அவள் டீச்சர் வீட்டை அடைந்த நேரத்தில் அவரும் வாசலுக்கு வந்தார். சாவியைக் காயத்ரியிடம் கொடுத்துவிட்டு, “வெள்ளைத் துணி இருக்கு, பார்த்துத் துவை” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். வராண்டா சாவியையும் வெளி கேட் சாவியையும் இவளிடம் கொடுத்துவிட்டுப் போவார்கள். வராண்டாவில் கழுவ வேண்டிய பாத்திரங்களும் துவைக்க வேண்டிய துணிகளும் இருக்கும். இவள் அவற்றைத் துவைத்து, கழுவி வராண்டாவில் வைத்துப் பூட்டிச் சாவியை எடுத்து வந்துவிடுவாள். மாலை வசந்தி அக்கா வீட்டுக்கு வேலைக்கு வரும்போது சாவியைக் கொடுத்துவிட வேண்டும்.
துணிகளைச் சோப்புத் தூளில் ஊறவைத்து, பாத்திரங்களில் தண்ணீர் தெளித்து வைத்துவிட்டு வந்தாள். பசி அதிகமாக இருந்ததால் சாப்பிடக் கூடையை எடுத்தாள். போனுக்குச் சார்ஜ் போட்டுவிட்டு டப்பாவைத் திறந்தாள். அப்போதுதான் தெரிந்தது, குழம்பு டப்பாவை எடுத்து வரவில்லை. வெறும் சாதத்தை எப்படிச் சாப்பிடுவது? பசியில் தலைவலி வந்துவிட்டது. சித்ராம்மா வீட்டுக்குப் போய்க் குழம்போ தயிரோ கேட்கலாமா? அவர்களாக ஏதாவது கொடுத்தால்தான் உண்டு; நாமே கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார். பூஜாம்மா வீட்டில் அந்த சார் சரியில்லை; எதையும் கொடுக்கவும் விடமாட்டார், பேசவும் விடமாட்டார். துணி துவைத்து, பாத்திரம் கழுவி, வாசலில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.
ஆனால், பூஜா விடுமுறைக்கு வந்தால் கதையே மாறிவிடும். அவள் நன்றாகப் பேசிக் கொண்டே இருப்பாள், எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பாள். அப்பா தடுத்தாலும் கேட்க மாட்டாள். இப்போது அங்கு போனாலும் ஒன்றும் கிடைக்காது. வீட்டுக்குப் போக வேண்டுமானால் பத்து நிமிடம் நடக்க வேண்டிய தூரம். கடையில் தயிரும் ஊறுகாயும் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான்.
காசை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டாள். சித்ராம்மா வீட்டைத் தாண்டித்தான் கடைக்குப் போக வேண்டும். அந்த அம்மா பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தபடியே நடந்தாள். நல்லவேளை பார்க்கவில்லை என்று நினைத்த நொடியில், “காயத்ரி” என்று குரல் வந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்து, “நல்லவேளை சீக்கிரம் வந்த, வா, வந்து வேலையைப் பாரு” என்றார்.
“அக்கா, நான் நேத்து ராத்திரி சாப்பிடல. இப்ப பசியில தலைவலிக்குது. தயிரும் ஊறுகாயும் வாங்கிச் சாப்பிட்டு வரேன்” என்றாள்.
“கொஞ்சம் சீக்கிரம் வா.”
“சரி அக்கா” என்று சொல்லிவிட்டு, ‘சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு டிவி பார்க்க வேண்டும் அவர்களுக்கு’ என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி கடைக்குப் போனாள்.
கடைக்கு எதிரே பூஜா வீடு. வீட்டில் கார் இல்லை, கதவும் பூட்டவில்லை. சார் மட்டும் வெளியே போயிருக்கிறார் போலும். பூஜாவின் அம்மாவிடம் இப்போதுதான் பேச முடியும் என்று உள்ளே போனாள்.
“வா காயத்ரி, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். உனக்குப் போன் பண்ணினேன், கட் ஆகிடுச்சு.”
“ஓ, நீங்கதானா? சார்ஜ் போடாததால கட் ஆகிடுச்சு. என்ன சொல்லுங்கம்மா” என்றாள்.
“அவர் ஃப்ரெண்ட் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போயிருக்கார். வர ராத்திரி ஆகிடும். எனக்குப் பிடிச்ச பூரி பனீர் மசாலா செஞ்சேன். உனக்குக் கொடுக்கத்தான் கூப்பிட்டேன். வா, சாப்பிடலாம்.”
“நீங்க சாப்பிடுங்க, நான் சாதம் எடுத்துட்டு வந்திருக்கேன்.”
“அதை ராத்திரி சாப்பிட்டுக்க; இப்ப பூரி சாப்பிடு” என்று ஐந்து பூரியும் பனீர் மசாலாவும் வைத்துக் கொடுத்தார்.
“என்ன காயத்ரி, முகம் வீங்கி இருக்கு?”
“வழக்கம் போலச் சண்டைதான். நேத்து சித்ராவ பொண்ணு பார்க்க வந்தாங்க; அதனால நெறையப் பாத்திரம் இருக்கு, வந்து தேச்சுட்டுப் போன்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னு சொன்னாலும் கேட்கல. ஏழு மணிக்கு மேல்தான் அவர் வருவார்னு பாத்திரம் தேச்சுட்டுப் போனேன். நேத்துன்னு பார்த்து ஆறரைக்கே வந்துட்டார். வழக்கம் போல அடி உதைதான்.”
“குடிகாரன்னு தெரியாம கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களா?”
“அப்ப அவர் குடிக்க மாட்டாரும்மா. நாங்க விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாலு வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம். அன்பா நல்லாப் பாத்துப்பார். எல்லாப் பொருளும் வாங்கித் தந்து ராணி மாதிரி பார்த்துக்கிட்டார். அவர் ஃப்ரெண்ட் சோமுனு ஒருத்தர் இருந்தார். அவரும் இவரும் நகமும் சதையும் போல இருப்பாங்க. அவர் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினார். அந்தப் பொண்ணு படிச்சவ, வேலைக்குப் போனா. சோமுவுக்குப் பொண்டாட்டி வேலைக்குப் போறது பிடிக்கல. ஆனா, அவங்க கேட்கல. அதுவே அவங்களுக்குள்ள சண்டையா வந்துகிட்டே இருந்துச்சு. பத்தாததுக்குச் சந்தேகம் வந்துடுச்சு; சண்டை அதிகமாச்சு. அதனால தண்ணி சாப்பிட ஆரம்பிச்சார்.
”இவர்தான் சோமுவைத் திட்டுவார், ‘குடும்பத்தைச் சீரழிச்சிடும், இனிமே தண்ணி அடிக்காதே’ன்னு. அவர் கேட்கல. ஒருநாள் குடிச்சிட்டு வேலைக்கு வந்தவர், மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துட்டார். அவரோட இழப்பைத் தாங்க முடியாம இவர் குடிக்க ஆரம்பிச்சார். ஒரு வருஷம் போராடி அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டேன்.
”ஆறு மாசம் நல்லா இருந்தார். சோமுவோட மனைவி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டதும், மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிட்டார். தினமும் அவளைத் திட்டிக்கிட்டே இருப்பார். ஒரு தடவை அவர்கிட்ட, ‘சோமு மனைவி கல்யாணம் செஞ்சது தப்பில்லை’ன்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் என்னையும் வெறுக்க ஆரம்பிச்சிட்டார்.
‘சோமுவோட பொண்டாட்டி, சோமு இருக்கும்போதே வேற ஒருத்தன் கூடத் தொடர்பில் இருந்தா; அது தெரிஞ்சுதான் அவன் குடிச்சு குடிச்சு செத்துப் போனான். நீ அவளுக்கு வக்காலத்து வாங்குற; அப்ப நீயும் எவனோடயாவது ஓடலாம்னு இருக்கியா?’ அப்படின்னு தினமும் சண்டை போட ஆரம்பிச்சிட்டார். போகப் போக இவருக்கும் சந்தேகப் புத்தி வந்துடுச்சு. அசிங்கமாப் பேசுறது, திட்டுறது, அடிக்கிறதுன்னு போகுது அக்கா என் வாழ்க்கை.”
“பூரி வைக்கவா?”
“வேண்டாம், போதும்” என்று சொல்லிவிட்டு, சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் காயத்ரி.
“பூஜா எப்ப வருவாங்க?”
“இந்த வெள்ளிக் கிழமை பரீட்சை முடியுதுல, ஞாயித்துக் கிழமை வந்துருவா.”
“அடுத்த புதன் கிழமை என் தம்பி பொண்ணுக்குக் காது குத்துறாங்க. அதுக்குப் போகணும். மூணு நாள் லீவும் 10,000 ரூபாயும் வேணும். பூஜாகிட்ட சொல்லி வையுங்கம்மா. நான் மாதாமாதம் சம்பளத்துல கழிச்சுக்கிறேன்” என்றாள் காயத்ரி.
“சரி, சொல்றேன். மத்தியானம் ரெண்டு மணிக்குச் சாப்பிட வந்திடு. காளான் பிரியாணியும் சிக்கனும் செய்யப் போறேன். உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான், பாத்திரம் எடுத்துட்டு வந்திடு.”
“ஏம்மா, உங்களுக்குச் சிரமம்.”
“அவர் வீட்ல இல்லாதபோதுதான் நான் எனக்குப் பிடிச்சதைச் சமைச்சுச் சாப்பிடுவேன். அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. ஒரு ஆளுக்குச் செய்யப் பிடிக்கல; உனக்கும் அவர் இருக்கும்போது கொடுக்க முடியாது, அதனால்தான் இப்ப கொடுக்கிறேன். மறக்காம மதியம் வந்திடு” என்றார் காமாட்சி.
அதைச் சொல்லும்போது அவர் முகத்தில் வழக்கமான சிரிப்புதான் இருந்தது. காயத்ரி அதில் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.
“சரிங்கம்மா” என்று கிளம்பினாள். அன்றே எல்லார் வீட்டிலும் லீவு கேட்டுவிட்டாள். டீச்சர் வீட்டில், “மூணு நாள் மட்டும்தான் லீவு; அதுக்கு மேல எடுக்காதே, சரியா? இந்த ஒரு வாரம் மட்டும்தான் எனக்கு லீவு. அடுத்த வாரம் அட்மிஷன்னு கூப்பிடுவாங்க, நான் ஸ்கூலுக்குப் போகணும்” என்றார்.
“சரிம்மா” என்று சொல்லிவிட்டு வந்தாள்.
“லீவு விட்டாப் போதும் ஊருக்குப் போறேன்னு வந்துடுவியே; மூணு நாள்னா மூணு நாள்ள வந்துடணும், லேட் பண்ணக் கூடாது, சரியா?” என்றார் சித்ராம்மா.
“கண்டிப்பா மூணு நாள் மட்டும் போதும்; வெள்ளிக்கிழமை வந்துடுவேன்” என்றாள் காயத்ரி.
“நீ லீவு போட்ட நாளுக்குச் சம்பளம் தரமாட்டேன்.”
“மத்த வீட்லலாம் தந்திருவாங்க. நீங்க மட்டும்தான் தர மாட்டீங்க… உங்க விருப்பம்” என்றாள்.
“என்ன ரொம்பத்தான் அலுத்துக்குற? நீ பாக்குற வேலையெல்லாம் நான்தானே பாக்கணும்; அதுக்கு உனக்கு எதுக்குச் சம்பளம் கொடுக்கணும்?”
“சார் லீவு போட்டா சம்பளம் பிடிக்கவா செய்றாங்க?”
“ஓ, நீ பாக்குற வேலையும் அவர் பாக்குற வேலையும் ஒண்ணா? அவர் லீவு போட்டா வேலையையெல்லாம் சேர்த்துச் செஞ்சுடுவார். நீ அப்படிச் செய்ய முடியுமா? வந்துட்டா நியாயம் கேக்க…”
“சரிம்மா, தப்புதான், மன்னிச்சுக்குங்க. மூணு நாள் சம்பளம் தர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வந்தாள் காயத்ரி.
வசந்தி அக்கா காலையில் சீக்கிரமே வேலைக்குப் போய்விடுவார். மாலை நான்கு மணிக்குத் திரும்புவார். அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியாது. அதிகம் பேச மாட்டார். வேலையும் அதிகமாகச் சொல்ல மாட்டார். அப்படிக் கூடுதலாக ஏதேனும் இருந்தால் உடனே பணம் தந்துவிடுவார். மிக நல்ல மனுஷி. ஆனால், காயத்ரி லீவு எடுத்தால் அந்த நாளில் வேறு ஆள் வந்து வேலை பார்க்க வேண்டும். அதை அவளே ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த ஆளுக்கு வசந்தி அக்காவே சம்பளம் கொடுத்துவிடுவார்; காயத்ரிக்கும் சம்பளம் பிடிக்க மாட்டார்.
கல்பனாவை வசந்தி அக்கா வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, திங்கள் இரவு ஊருக்குப் புறப்பட்டாள் காயத்ரி. வெள்ளிக்கிழமை வேலைக்கு வருவேன் என்று சொல்லிப் போனவள், சனிக்கிழமையும் வரவில்லை.
“பூஜா, பூஜா” என்று வாசலில் நின்று கூப்பிட்டார் சித்ராம்மா. வந்த பூஜா, “வாங்க வாங்க” என்று வரவேற்றாள்.
“வீட்ல வேலை இருக்கு. இந்த காயத்ரி ஏதாவது போன் பண்ணாளா? வெள்ளிக்கிழமையே வருவேன்னு சொல்லிட்டுப் போனா; சனிக்கிழமையும் ஆகிடுச்சு, இன்னைக்கும் வரல. போன் பண்ணினாலும் எடுக்கல. அதான் உங்ககிட்ட எதுவும் சொன்னாளான்னு கேக்க வந்தேன்” என்றார்.
“என்கிட்ட எதுவும் சொல்லல; நானும் போன் பண்ணலயே. பண்ணிப் பாக்கறேன்” என்றாள் பூஜா.
“எடுத்தா சீக்கிரம் வரச் சொல்லும்மா. மூணு நாலுன்னு கேட்கிறது, அஞ்சு நாளானாலும் வரது இல்லை. லீவு கொடுக்கிறதே தப்பு” என்று சொல்லிக் கொண்டே சென்றார்.
‘என்னாச்சு, ஏன் காயத்ரி இன்னும் வரலை, இப்படி வராம இருந்ததே இல்லையே’ என்று நினைத்தபடியே போன் செய்தாள் பூஜா. மணி அடித்துக் கொண்டே இருந்தது; எடுக்கவில்லை.
பூஜாவின் அப்பா கேட்டார், “என்ன, எடுக்கலையா?”
“ஆமாம்பா.”
“எனக்குத் தெரியும், எடுக்க மாட்டான்னு. உங்கிட்ட பணத்தை வாங்கும்போதே நினைச்சேன், திரும்பி வரமாட்டான்னு” என்றார்.
“காயத்ரி அப்படிப்பட்ட பெண் இல்லைப்பா” என்று சொல்லும்போதே போன் ஒலித்தது. காயத்ரிதான் என்று எடுத்தாள்.
“ஹலோ அக்கா.”
“காயத்ரி, எங்க இருக்க?”
“ஊர்லதான் இருக்கேன்.”
“என்ன, ஏதும் பிரச்னையா?”
“ஆமாக்கா, என் வீட்டுக்காரர் இறந்துட்டார் அக்கா.”
“என்ன சொல்ற காயத்ரி, இறந்துட்டாரா? எப்ப?”
“நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு. காலையில்தான் பாடி கொடுத்தாங்க; நாலு மணிக்கு எடுக்கப் போறாங்க அக்கா.”
“இந்த நேரத்துல தொந்தரவு செஞ்சுட்டேன், சாரி. உன்னைத் தேடுவாங்க, நீ போம்மா.”
“ஆமாக்கா, அழு அழுன்னு கட்டாயப்படுத்துறாங்க; எனக்குக் கொஞ்சம்கூட அழுகை வரல. ஒரே வெறுமையா இருக்கு. அடுத்தவங்க அழுறதைப் பார்த்தாலே அழுதுடுவேன்; இன்னைக்கு அழுகை வரவே இல்லை.”
“அந்தளவு உன்னைக் கொடுமைப்படுத்தி இருக்கான்.”
“அதனால்தானான்னு தெரியல, ஆனா அழுகை வரலக்கா. எப்படியும் மூணு மாசத்துக்கு என்னை வெளியே விட மாட்டாங்க; அதனால நான் இனி வேலைக்கு வரலைன்னு சொல்லிடுங்க அக்கா.”
“சரி, செலவுக்குப் பணம் அனுப்பவா?”
“வேண்டாம். அப்பா, அண்ணன் பாத்துப்பாங்க. நானே உங்களுக்குப் பணம் தரணும். எப்படியும் கொடுத்துடுவேன் அக்கா” என்றாள்.
“அந்தப் பணம் நீ தர வேண்டாம். உனக்குத் தேவைப்பட்டா கட்டாயம் என்கிட்ட கேள்.”
“சரிக்கா, உங்களை விட்டா எனக்குக் கடன் கொடுக்க யாரும் இல்லை. தேவைப்பட்டா கட்டாயம் கேக்கறேன்” என்றாள் காயத்ரி.
காயத்ரி சொன்னபடியே இரண்டு மாதம் கழித்து வந்து பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனாள்.
“பூஜா, திருப்பிக் கொடுக்க வேண்டாம்னுதானே சொன்னா, நீ எதுக்குக் கொடுக்கிற?” என்றார் பூஜாவின் அம்மா.
“இல்ல, கடன் வாங்கிட்டுத் தராம இருக்கக் கூடாது. இப்ப இதை வாங்கிக்குங்க. பிறகு தேவைப்பட்டா வாங்கிக்கறேன். இது அவர் வேலை பார்த்த கம்பெனியில 40,000 ரூபாய் தந்தாங்க. அதான் கடனைக் கொடுத்துவிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சொல்லி, “பூஜா அக்காகிட்ட சொல்லிடுங்க” என்று கூறிச் சென்றாள்.
மீண்டும் டிசம்பர் மாதம் வந்தாள் காயத்ரி.
“இப்பதான் இரண்டு மாசமா வேலைக்குப் போறேன் அக்கா. கார்மென்ட் வேலைக்குப் போனா, ஓடி சேர்த்து 10,000 ரூபாதான் கெடைக்குது. வீட்டு வேலைக்குப் போனா, நாலு வீட்ல வேலை பார்த்தாலும் 12,000தான் கிடைக்குது. அம்மா வீட்ல இருக்கிறது சரியாப் படல. தனியா வந்துடணும். அதுக்கு 20,000 சம்பளம் இருந்தாதான் யார் உதவியும் இல்லாம வாழ முடியும். அதனால அவர் வேலை பார்த்த கம்பெனியில என்ன உதவி வேணும்னாலும் கேக்கச் சொல்லியிருந்தாங்க. அதான் கேக்கப் போனேன். இப்ப எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி, வந்த இடத்துல லீவுக்குப் பூஜாக்கா வந்திருப்பாங்க, பார்க்கலாம்னு வந்தேன்” என்றாள்.
“என்ன உதவி கேக்க வந்த?”
“ஆட்டோ வாங்கி ஓட்டலாம்னு நினைச்சேன்” என்று சொல்லும்போது, டமார் என்று சத்தம் கேட்டது. மூவரும் ஓடிப் பார்த்தபோது பூஜாவின் அப்பா தரையில் விழுந்து கிடந்தார். “அப்பா, அப்பா” என்று கூப்பிட்டாள். அசைவில்லை. “அம்மா, நான் கார் எடுக்கிறேன், ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” என்று எழுந்தாள் பூஜா. சிலர் உதவியோடு காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு காயத்ரி வீட்டில் இருந்தாள். இரவு ஏழு மணிக்கு பூஜா போன் செய்து, “அப்பா கொஞ்சம் சீரியஸா இருக்காங்க; அம்மாவ நான் அனுப்பி வைக்கிறேன், பாத்துக்கோ” என்றாள்.
அடுத்த இரண்டு நாளில் அப்பா இறந்துவிட்டார். “அம்மாகிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியல. நீதான் பக்குவமாச் சொல்லு” என்றாள் பூஜா. சரிக்கா என்று சொல்லித் திரும்பினாள் காயத்ரி.
“என்ன, இறந்துட்டாரா?” என்றார் பூஜாவின் அம்மா. ஆமாம்மா என்று காயத்ரி சொன்னவுடன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். பிறகு, “சாமியானா, ஃப்ரீசர் பாக்ஸ், பந்தல், சேர், தண்ணீர்னு எல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டு வா காயத்ரி. வீட்டை ஒழுங்குபடுத்துவோம்” என்றார் பூஜாவின் அம்மா.
காயத்ரிக்கு ஆச்சரியமாக இல்லை.
இரண்டு மணி நேரத்தில் உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. வண்டியில் இருந்து இறங்கிய பூஜா அம்மாவைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள. அவளின் முதுகைத் தடவி அம்மா ஆறுதல் சொன்னார். பிறகு ஊர் மக்கள் வர ஆரம்பித்தார்கள். சித்தி, அத்தை என்று உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டனர். பூஜாவின் அண்ணன் அமெரிக்காவில் இருந்து வந்து சேர்ந்தார்.
வீடு முழுவதும் சாம்பிராணிப் புகையும் பூமாலை வாசனையும் நிறைந்திருந்தது. மாலை ஐந்து மணிக்குச் சாங்கியம் முடித்து, இறுதி ஊர்வல வண்டியில் உடலை ஏற்றும்போது அழுகுரல்கள் ஓங்கி எழுந்தன.
உடலை எடுத்துச் சென்றதும், வீட்டுக்குள் திரும்பிய பெண்கள் அனைவரும் பூஜாவின் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதனர். அவர் மட்டும் அழவில்லை.
பூஜாவின் சித்தி, “அக்கா மனம்விட்டு அழுதுடுக்கா, அப்பதான் துக்கம் தணியும்” என்றார். அத்தையும், “ஆமாம் அண்ணி, அழுதுடுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதுதான் பூஜா கவனித்தாள், அம்மா அழவே இல்லை என்பதை. அருகில் வந்த காயத்ரி, “அழுகை வந்தா அழுவாங்க; சும்மா அழு அழுன்னு ஏன்தான் கட்டாயப்படுத்துறாங்களோ” என்றாள்.
“உன் வீட்டுக்காரர் மாதிரி நெனச்சியா எங்க அப்பாவை? அம்மாவை எவ்வளவு நல்லாப் பாத்துக்கிட்டாங்க தெரியுமா?” என்றாள் பூஜா.
“கிட்டத்தட்ட என் வீட்டுக்காரர் மாதிரிதான் உங்க அப்பாவும். படிச்சவர், அதனால வெளியில தெரியாம வச்சுக்கிட்டார். நீங்களும் ஹாஸ்டல்லயே படிச்சீங்க, அதனால உங்களுக்கு அப்பாவைப் பத்தி அதிகம் தெரியாது” என்றாள் காயத்ரி.
இல்லை என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு அம்மாவைப் பார்த்தாள் பூஜா.
பூஜாவின் அம்மா குளிக்கத் துணியை எடுத்துக் கொண்டு, காயத்ரியைப் பார்த்து, “வீட்டைக் கூட்டிக் கழுவிடு காயத்ரி” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நம்ப முடியாமல் தன்னைப் பார்த்த பூஜாவிடம், காயத்ரி சொன்னாள்:
“எங்கெங்கும் காயத்ரிகள்தான்!”
*
படைப்பாளர்:
பூமா ப்ரியா. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர் எழுதிய சில சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.


