Site icon Her Stories

ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும்… டும்… டும்…

Asian woman wearing Vietnam culture traditional in strawberry garden on Doi Ang Khang , Chiang Mai, Thailand.

மக்கள் தாங்கள் வாழ இனி வழியேயில்லை என்று உணர்கிறார்களோ அன்று புரட்சி வெடிக்கும். அந்த மக்கள் பிரளயத்திற்கு முன்னால் அதிகார வர்க்கம் சிதறிப்போகும் – புரட்சியாளர் லெனின்

அழகைக் கொட்டி உருவாக்கப்பட்ட குட்டி தேசம் இலங்கை. நான்கு பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் என மிகச் செழுமையான நாடு. நீண்ட மானுடவியல் வரலாற்றை மட்டுமல்ல, செழிப்புமிக்க நீண்ட பொருளாதார வரலாற்றினையும் கொண்ட நாடு. உருவில் சிறிதாக இருந்தாலும் முழு உலகத்திலும் அதற்கு பெரும் மதிப்பும் வரவேற்பும் இருந்ததற்கு, அதன் கடலமைப்பு ஒரு காரணம். மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருகை தந்த வணிகர்களும் நாடுகளைக் கண்டறியும் பயணிகளும் இந்நிலப்பரப்பிலேயே சந்தித்துக்கொண்டனர். தன்னுடைய புவியியல் அமைப்பால், அவர்களுக்கான அரசியல் பேசவும் வணிகத்தை மேற்கொள்ளவும் ஓய்வு எடுக்கவுமான மகிழ்விடமாகத் திகழ்ந்தது இலங்கை.

ஆதி இலங்கையில் ஒன்பது வகையான ரத்தினங்கள், யானைத்தந்தம், முத்துகள் எனச் செழிப்பிற்குக் குறைவில்லை. கறுவா, தேயிலை, இரப்பர், தென்னை போன்ற வர்த்தகப்பயிர்கள் தான் குடியேற்றக்காரர்களை இலங்கை நோக்கிக் கப்பலைத் திருப்பச் செய்தது. 1970இல் பெருந்தோட்டப்பயிர்கள் 93 சதவீதம் ஏற்றுமதி கண்டு வர்த்தக உலகில் கெத்தாக நடைபோட்டது. நேற்றுவரை நீங்களும் நானுமாக உலக மக்கள் அனைவரும் அருந்திக்கொண்டிருந்த தேநீருக்கான தேயிலையில் 50 சதவீதம் இலங்கையில் விளைந்ததே. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 52 சதவீதமாக இருந்தன ஆயத்த ஆடைகள். இப்படிச் சீரும் சிறப்புமாக தான் இருந்தது இலங்கையின் பொருளாதாரம். 2001இல் முதல் முறையாக ஒரு பொருளாதார ஒடுக்கத்தைச் சந்தித்த போதிலும்கூட, 2001இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை அரசாங்கம் – விடுதலைப்புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரச் சரிவிலிருந்து உடனடியாக மீண்டு வந்தது. 2003இல் கொழும்பு பங்குச் சந்தை ஆசியாவிலேயே ஆகக்கூடிய வளர்ச்சியைப் பெற்றது. தெற்காசியாவில் அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடாகவும் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் படிப்படியாகக் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மைனஸ் 16.3 சதவீதமாக அதள பாதாளம் நோக்கிப்பாய, இன்று உலகின் வாய்க்கு அவலாகி அல்லோகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் பல கிலோமீட்டர் நீளத்துக்குச் சோறு, தண்ணி மறந்து காத்திருக்கிறது. கூட்டத்தைச் சமாளிக்க ராணுவம் வருகிறது. விலைவாசி உயர்வு விண்ணைத் தாண்டி அடுத்த கிரகத்தை நோக்கிச் சென்றுவிட்டது. வலைத்தளங்களில் உலாவரும் ஹோட்டல் பில் ஆச்சரியமூட்டுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேர மின்தடைகள். மாதச் சம்பளக்காரார்களின் ஊதியத்தில் 10 நாள்கள்கூடச் சமாளிக்க முடியவில்லை. நாள்கூலி வேலை செய்பவர்களுக்கோ எங்குமே வேலையில்லை. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல எரிபொருள் இல்லை. எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன; பல்பொருள் அங்காடிகள் பொருள்களில்லாமல் வெறிச்சோடிக்கிடக்கின்றன. அர்சுப் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதில் சிக்கல். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும் 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒரு வேளைக்குமாகப் பழகிவிட்டனர். பல குடும்பங்களும் அகதிகளாக வெளியேற பெட்டிப்படுக்கைகளைக் கட்டிவிட்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கின்றன. இந்த நிலை நீடித்தால் இலங்கை மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கும் அபாயம் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இலங்கையின் தற்போதைய நிலை பொருளாதார நெருக்கடி என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடி என்ற நிலையை எட்டிவிட்டது. இலங்கை அரசிடம் இப்போது கையிருப்பில் உள்ள பணம் ஒரு சில ஹாலிவுட் நடிகைகளின் தனிச்சொத்தைவிடக் குறைவு என்றெல்லாம் ஒப்பீடு செய்யப்படுகிறது. சீனாவின் கடைக்கண் பார்வை இலங்கைக் காதலியை விட்டு வேறு பக்கம் திரும்பிவிட, இப்போது உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையத்தின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கிறது இலங்கை.

இந்த நிலை ஒரே நாளில் ஏற்பட்ட விபத்தல்ல. அரசை, அரசின்மூலம் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜபக்சே குடும்பம், அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வையும் நசுக்க ரூம் போட்டு யோசித்தது போல. படிப்படியாக அத்தனையும் செய்தது. 2014 முதலே சர்வதேசக்கடன் அதிகரித்து வருகிறது. அதைப் பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல், மேலும் மேலும் சீன ஈட்டிக்காரனிடம் கடன் பெற்று நாட்டையே அடகு வைத்தாகிவிட்டாது. உள்நாட்டில் அதிகமான பணத்தை அச்சடிக்க, பண மதிப்பு எங்கோ கண்ணுக்குத் தெரியாத தொலைவில் கண்ணாமூச்சி காட்டுகிறது. ‘உலகிலேயே இயற்கைவழி, பாரம்பரிய விவசாயத்திற்குத் திரும்பும் ஒரே நாடு இலங்கை’ என்று ஒரே நாளில் எடுத்த துக்ளக் அறிவிப்பால் உர இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட தேயிலை, நெல் உள்ளிட்ட உள்ளூர் விளைபொருள்களும் நாசமாக, விவசாயமும் போயே போச்சு. ராணுவத்திற்கான அபரிதமான செலவுகள், வரி விகிதம் குறைப்பு, விவசாயிகளுக்கு மானியங்கள் என அடுத்தடுத்து செய்த குளறுபடிகளின் விளைவாகப் பொருளாதாரத்தைக் குழிதோண்டி பத்திரமாகப் புதைத்துவிட்டு, அதன்மீது ஊழல் சிம்மாசனத்தில் அமர்ந்து எக்காளமிட்டுச் சிரித்தது ராஜபக்சே குடும்பம்.

2019 ஈஸ்டர் அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தாம் இந்தச் சீரழிவுத் தொடரின் முதல் கண்ணி. தொடர்ந்து, இயற்கை தன் பங்குக்கு நுண்ணுயிர் தாக்குதலை அவிழ்த்துவிட, ஏற்கெனவே தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த சுற்றுலாத் துறை, அந்த கோவிட் அலையில் மரண அடி வாங்கி குற்றுயுரும், குலையுயிருமாகிப் போனது. ஏனெனில் இலங்கையின் 10 சதவீதம் ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலமே கிடைத்து வந்தது. கொரோனாவால் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் இலங்கையையும் தாக்கியது. “குன்று தங்கம் இருந்தாலும் குந்தித் தின்றால் தாங்காது” என்பதைப் புரிந்துகொள்ளாமல்… வளர்ச்சிக்கு வழி தேடாமல், இலங்கை அரசு கைவசம் இருந்த அந்நியச் செலாவணியைக் கரைத்துத் தீர்த்தது. ஆரோக்கியமான வளர்ச்சிப் பொருளாதாரத்திலிருந்து விலகி, அதீதமான சலுகைப்பொருளாதாரம் என்ற பாதையில் பயணித்தது.

திவாலாகும் கடன்காரனைப் பார்த்து கிளுகிளுக்கும் ஈட்டிக்காரனாக இந்தச் சந்தர்ப்பத்திற்காக, ஆவலுடன் காத்திருந்த சீனா, ஹம்பன் தோட்டத் துறைமுக மேம்பாட்டுக்காகத் தன்னிடம் பெற்ற 1400 கோடி கடனுக்காக, 99 ஆண்டுகளுக்கு அந்தத் துறைமுகத்தையே குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. ஹம்பந்தோட்டா விமான நிலையம், தெற்கு விரைவுச்சாலை, அனல்மின்நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைபெறும் சாலைகளின் பெயர்ப்பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலத்தோடு இப்போது சீன மொழியும் சிரித்துக்கொண்டிருக்கிறது. “யுகாண்டாவை மூழ்கடித்த சீனக் கடன்பொறி, இலங்கையையும் குறிவைத்து மூழ்கடித்துவிட்டது” என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. (கடந்த நவம்பர் மாதம் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திரும்பச் செலுத்த முடியாததால் உகாண்டாவின் ஒரே பிரதான நுழைவாயிலான சர்வதேச விமானநிலையமும் சீனாவின் கையில் உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன).

சீனாவின் அடிமைகளாகவே மாறிப்போயிருந்த ராஜ பக்க்ஷேக்களால் இனிமேல் சீனாவிற்கு எந்தப் பலனும் இல்லை எனப் புரிந்துகொண்டு, இலங்கையைக் கைகழுவி விட்டு அடுத்த நாட்டிற்கான பொறியைத் தயார் செய்யப்போய்விட்டது சீனா. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் உதவிசெய்ய முன்வந்தாலும்கூட, இந்த உதவியெல்லாம், இலங்கையின் கடன் யானைக்கு சோளப்பொறிதான். இப்போது, சீனாவின் கொள்ளிக்குத் தப்பி, உலக வங்கியின் அக்னிக்குண்டத்திற்குத் தன்னைத் தாரை வார்க்க தயாராகிவிட்டது இலங்கை. ஆனால், இப்போதும்கூட ‘கடன்பெற்றான் நெஞ்சம் போல அந்த இலங்கை வேந்தர்கள் கலங்கிடவில்லை’. மர்மப்புன்னகையுடன் கதிரையில் ஃபெவிகுயிக் போட்டு ஒட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர். சர்வதேச நாணய நிதியம் உதவினால்கூட, இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்னையிலிருந்து ஓரளவு மீள முடியுமேயன்றி முழுமையாக மீள முடியாது என்பதே யதார்த்தம்.

இலங்கையில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொருளாதார அவசரநிலை பிரகடனத்தை ஜனாதிபதி பிறப்பிக்க, அதன் தொடர்ச்சியாக நாடெங்கும் தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள். அதிகார மையங்கள் தகர்க்கப்படுகின்றன. உணவுத்தட்டுப்பாடால், தெருவுக்கு வந்த மக்கள், தங்கள் எதிர்காலத்தைப் பறிகொடுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரை அடித்தே கொல்லுமளவிற்கு மாறியுள்ளனர். அறத்தின் வெப்பம் நெருப்பாக இன்று பற்றி எரிகிறது. ஆகச்சிறந்த தலைவர்களாக, நாட்டின் ராஜாவாக, தமிழர்களை அழித்து சிங்கள மக்களைக் காப்பாற்றிய கடவுளாக எந்த மக்களை நம்பவைத்து, தங்களைக் கொண்டாட வைத்தார்களோ அதே மக்கள்தாம், இன்று அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்துவிட்டு, வீட்டைத் தீக்கு இரையாகக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிறார், ஆம், ராஜா வேஷம் கலைந்து போய்விட பக்‌க்ஷேக்கள் இன்று உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வரலாறு தன்னைச் சற்றே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. ஹிட்லர், இடிஅமீன், முசோலினி, வரிசையில் ராஜபக்க்ஷேக்கள் இன்று வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். முடிவை வரலாறு எழுதும்.

ஈழ மக்கள் அன்பானவர்கள், அதே நேரம் வைராக்கியமானவர்கள். யுத்தம் இழைத்த துயரமும் கோபமும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. இந்த நெருப்புகளுக்கூடாக, 1981ஆம் ஆண்டில் சுமார் 97,000 நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த நிகழ்வுகள் தமிழர்களின் மனக்கண்ணில் நிழலாடாமல் இல்லை. இந்தக் கலவரங்களுக்கூடாக 1983 , கறுப்பு ஜூலை கலவரங்கள் நினைவில் தட்டுப்படத்தான் செய்கின்றன. இந்தப் போராட்டங்களின் ஊடாக 2009 மே மாதம் நினைவில் வந்து நெஞ்சை அறுக்காமல் இல்லை.

ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. அமைதியாக நிலைமையை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், கடந்த காலங்களில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் இழப்புக்களையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எவரையும் நம்ப வேண்டாம் என அனுபவம் அவர்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த அரசியல் சீர்கேடுகள் இனவாதமாக மடைமாற்றப்பட்டுவிடக்கூடாதென்ற கவலையும் அவர்களுக்கு இருக்கிறது. 30 வருட யுத்த வாழ்வில், எமர்ஜென்சியும் ஊரடங்கும் பஞ்சமும் பதுங்குகுழி வாழ்வும் பழக்கமாகிப்போனது மற்றுமொரு காரணமாக இருக்கலாம்.

இந்தப் போராட்டங்கள் புதிய இலங்கை தேசத்தினை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகத் தென்படுகிறது. படித்த மத்தியதர வர்க்கம், ஆண், பெண் பேதமற்ற இளைய சமுதாயம், விவசாயிகள், தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரசு அதிகாரிகள், பலகலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தன்னெழுச்சியாகக் களத்தில் இறங்க தீப்பிழம்பாகப் புரட்சி பரவியது. இப்படி அனைவரையும் உள்வாங்கும் போராட்டங்கள் இலங்கை வரலாற்றில் புதிய ஆரம்பம்.

“மக்கள் நினைத்தால், ஆகாய விமானங்களைக் கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள், டாங்கிகளைக் கைகளால் புரட்டிப்போட்டுவார்கள்” என்ற ஃபிடல்காஸ்ட்ரேவின் வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருத்தமானவை என்பதை கண்முன் காண்கிறோம். சர்வதேச அரசியலால், ஆதாயத்தால், மேற்குலகின் அழுத்தத்தால் இத்தீப்பிழம்புகள் தணிந்து போகலாம் அல்லது தற்காலிகமாகத் தணிக்கப்படலாம். ஆனால், தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த துயரம் எந்தச் சமூகத்திற்கும் வேண்டாம், இலங்கையில் புரட்சி வெல்லட்டும், அமைதி திரும்பட்டும். மனிதம் காக்க ஒன்றிணைவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.

Exit mobile version