–
அழகு என்பது வெள்ளை நிறத்தின்பால் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட சமூகத்தில், கட்டுக்கோப்பான உடல் மட்டுமே ஆரோக்கியமான உடல் எனும் மாய பிம்பம் மக்களிடையே நிலவுகிறது. உலகெங்கும் பெண்களின் சாதனைகள் கொண்டாடப்படும் நிலையில், அவர்களின் உடல் சார்ந்த பிரச்னைகள், எதிர்பார்ப்புகள், அதன் உளவியல் சிக்கல்கள் பெரிதாகப் பேசப்படுவதில்லை.
ஒரு நாளில் நீங்கள் சந்திக்கும் அத்தனை மனிதர்களில் குண்டான பெண்கள் எத்தனை பேரைச் சந்திக்கிறீர்கள் என உங்களால் நினைவுகூர முடியுமா? முடியாது. அந்தளவுக்கு உங்கள் அலுவலகத்தில், வீட்டின் அருகில், சந்தையில், ஷாப்பிங் மாலில், தியேட்டர்களில் நீங்கள் நிறைய பருமனான பெண்களைப் பார்க்க முடிகிறது. சமகாலங்களில் நீங்கள் சந்திக்கும் நூறு பேரில் பத்துப் பேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
உலகில் 150 கோடிக்கும் அதிகமானவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 30 கோடிப் பேர் பெண்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு 2014இல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 91 சதவீத பெண்கள் தங்களது உடலமைப்பு குறித்து வருத்தப்படுகிறார்கள்.
பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.
வெளியில் செல்லும் இடமெங்கும் பார்க்கும் ஏளனப்பார்வை, தீண்டத்தகாதவர் போலத் தன்னை ஒதுக்கும் மக்களின் மனநிலை அவர்களிடையே ஏற்படுத்தும் உளவியல் மாற்றத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. சமூகத்தின் தவறான எண்ணம், ஊடகத்தின் தவறான பிரதிநிதித்துவம் முதல் சுய மதிப்புடனான தனிப்பட்ட போர்கள் வரை அவர்கள் தினமும் எதிர்கொள்ளும் பன்முகச் சவால்களை நாம் பார்க்கிறோம்.
அந்த வகையில் ஜூலியா க்வின் (Julia Quinn) என்கிற எழுத்தாளரின் ‘Bridgerton’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் தயாரிக்கப்பட்ட நெட்ஃபிக்ஸ் தொடரை இங்கு குறிப்பிட வேண்டும்.
ஜீரோ சைஸ் என்று சொல்லக்கூடிய ஒல்லியான பெண்களின் உடற்கட்டைக் கொண்ட நாயகிகள் மட்டுமே திரைப்படங்கள், மியூசிக் வீடியோக்கள் என அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஏற்றவர்கள் என்கிற பெண்கள் மீது கட்டியெழுப்பிய பிம்பத்தை, தகர்த்து எறிந்திருக்கிறது இந்தத் தொடர்.
ஆடம்பரமான ஆடைகள், அரண்மனைகள், சிக்கலான காதல் கதைக்களங்கள், கலையமைப்பிற்காக இந்தத் தொடர் பேசப்பட்டாலும், பருமனான உடல் கொண்ட ’பென்’ எனப்படும் ‘பெனிலோப்’ கதாபாத்திரம் (நிகோலா காஃப்மேன்) வடிவமைத்த விதம் இதில் மிக முக்கியமானது. ஒல்லியான, இறுக்கி அணியும் ஆடைகள் கொண்ட இங்கிலாந்து மன்னர்கள் குடும்பத்தில் ஒரு வாளிப்பான பெண்ணைப் பொருத்துவது என்பது சற்றே வித்தியாசமான சிந்தனை.
bridgerton nicola
தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் தன் பருமனான உடலைக் காரணம் காட்டி அழைக்கழிப்பதன் மூலம் ஏமாற்றமடையும் பென், அவளின் முழு நம்பிக்கையைப் பெற்ற கோலின் மீது பிரியம்கொள்ளத் தொடங்குகிறாள். ஆடைகளற்ற அவளது வாளிப்பான உடலின் அழகை ரசிக்கத் தொடங்குகிறான் கோலின். இதுவரை தன் உடலை கிண்டலாகப் பார்த்த மனிதர்களுக்கு நடுவில், அதிலிருக்கும் அழகைக் காணும் கோலினைக் கண்டு வியப்புறுகிறாள்.
ஆணோ பெண்ணோ தன்னைத்தானே குறைபட்டுக்கொள்ளும் அழகு/உடல்/நிறம்/ பொருளாதார நிலை என ஏதேனும் ஒன்றின் மீதிருக்கும் பயம் என்பது, அதைக் காரணம் காட்டி நம்மை விலக்கி விடுவார்களோ என்கிற தயக்கம்தான். ஒருவேளை அதைப் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் அந்தப் பயத்தை நீக்கும் ஒரு துணை கிடைத்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்!
பருமனான பெண்கள் எதிர்பார்ப்பதெல்லாம் எந்த நிலையில் தான் இருந்தாலும், எவ்விதப் பூச்சுமின்றி தன்னை விரும்பும் கோலின் போன்ற ஒருவனைத்தான். இதனால், இந்தத் தொடர் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல் சார்ந்த ஒடுக்குமுறையைக் கேள்வி கேட்பது மட்டுமன்றி, வாளிப்பான பெண்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளிக்கிறது.
உருவக்கேலி என்பது நம்மூரில் மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையும் பீடித்திருக்கும் நோய். நம்மூரில் இருப்பது போல கறுப்பு, குண்டு, ஒல்லி, வெளிநாட்டினரின் உருவ அமைப்பு (சப்ப மூக்கன்) மீதான பாகுபாடுகள் உலகெங்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னோர் வகையில் அது கோழைத்தனத்தின் குறியீடு.
உங்களால் ஓர் ஏழை மாணவனைப் படிப்பில் வெல்ல முடியவில்லை என்றால், உங்கள் சிந்தனை முதலில் தேடுவது அவன் நிறத்தையும் அவனது பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் தான். அதை வைத்து அவனைக் கேவலப்படுத்தி சந்தோஷப்பட்டுக் கொள்வீர்கள். அதே வகையில் இந்தச் சமூகமும் பெண்கள் மீது கட்டமைத்திருக்கும் கட்டுப்பாடுகளை மீறும் போது ‘ஒழுக்கங்கெட்டவள்’ எனப் பெயர் சூட்டி மீண்டும் அவளை அதே வட்டத்திற்குள் இழுக்கப் பார்க்கிறது.
“இந்த உடம்ப வச்சிக்கிட்டு அவ்ளோ தூரம் எப்படிப் போவ?”, “ஒல்லியா இருக்குற என்னாலயே முடில. உன்னால எப்படி முடியும்?”, “எப்படி சாப்புடுறா பாரு! அளவா சாப்புடு. இல்லைன்னா இன்னும் குண்டாகிடுவ” போன்ற கட்டுப்பாடுகளை உள் திணித்த கேலித்தனங்கள் பெண்கள் மீது மிகச்சுலமாக வீசப்படுகின்றன. குறிப்பாகத் திரைப்படங்களில்…
(தொடரும்)
படைப்பாளர்:
ஜி.ஏ. கௌதம்
காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலைப் படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர். அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.
இவர் படத்தொகுப்பு செய்த ’ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர்.
இவரது சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன், குங்குமம், உயிர்மை, நீலம், அயல் சினிமா, வையம், உதிரிகள், காக்கைச் சிறகினிலே, நிழல், செம்மலர், சொல்வனம், நுட்பம், வாசகசாலை, பொற்றாமறை, கிழக்கு டுடே, ஆவநாழி, புக் டே போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.