Site icon Her Stories

‘தேவதை’ எப்படிச் ‘சூனியக்காரி’யாக மாற்றப்பட்டார்?

மருதன் எழுதிய ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’ எனும் புத்தகம், ‘Angels Witches Women’ என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது. ஆதியில் நிலவிய பெண் மையச் சமூகம் எவ்வாறு படிப்படியாக ஆண்களின் உலகமாக மாறியது என்ற கேள்விக்கு

விடை காண முயன்றிருக்கின்றார் ஆசிரியர். ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’ என்கிற தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது.

‘லூசி’ என்கிற ‘தின் தினேஷ்’ (நீ அற்புதமானவள்) என்று ஆரம்பிக்கும் முதல் அத்தியாயமே அற்புதம்! 33 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லூசியின் வாழ்க்கை முறையும் அவளைச் சுற்றி இருந்தவர்களின் ஆயுதப் பயன்பாட்டையும் அறிந்தபோது நானே லூசியாக இருந்ததுபோல் பெருமிதம் கொண்டேன். லூசிக்கும் எனக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது.

அடுத்து முதல் பெண்ணியவாதியான ‘லிலித்’ ஆதாமிற்கு அடங்க மறுத்த காரணத்தினால் எவ்வாறு சூனியக்காரியாக மாற்றப்பட்டாள் என்று அறியும் பொழுதுதான், என் சிறுவயதில் வாசித்த தேவதைக் கதைகளில் எல்லாம் ஏன் அத்தனை சூனியக்காரிகள் இருந்தார்கள் என்று புரிகிறது.

என் சிறு வயதில் தேவதைகளைப் பற்றியும் சூனியக்காரிகளைப் பற்றியும் வாசித்தபோது எனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை, அது நிகழ்த்தி இருக்கும் பாதிப்பை, தெளிவாக உணர முடிகிறது. லிலித்தை ‘அழகிய ஆபத்தாகவும்’ ‘சீரும் பாம்பாகவும்’ உருவகப்படுத்தியுள்ளதன் மூலம் பெண்களின் சுயபரிவு வேர் அறுக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. ஆதாம் ஏவாள் கதையின் தன்மை இதுவரை எனக்குப் புரியாமல் இருந்த புதிர்களை அவிழ்த்து இருக்கிறது.

‘சோளக் கடவுள்’, ‘ஐசிஸ்’ ஆகிய கதைகள் பெண்களுக்கு ஆதியில் சமுதாயத்தில் இருந்த மேம்பட்ட நிலையை எடுத்துக் காட்டின. ‘அழிக்கும் மெடியா’, ‘மெடுசாவின் அழகு’ ஆகிய கதைகளில் ஆண் சமுதாயத்திற்கு உபயோகப்படாத வீரம், அழகு, தியாகம் எவ்வாறு தூற்றப்பட்டு கேவலப்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடிந்தது.

எகிப்தில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த Maxim’s of Ptah Hotep இன்னும் நூலில் மனைவியை கணவர் எப்படி நடத்த வேண்டும் அல்லது நடத்தக் கூடாது என்று விளக்கியுள்ளவற்றைப் பார்த்தால், பெண்கள் அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு உயர்வாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.

தொன்மைக் கதைகளின் மூலம் பெண்மை எவ்வாறு உருவாக்கப்பட்டு, ஆண்மையால் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்று புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாறு தொடங்கிய காலம் வரை கிரகம், எகிப்து, ரோமாபுரி, ஆப்பிரிக்கா, பழங்குடி அமெரிக்கா, மத்தியக் கிழக்கு என்று எத்திசையிலும் எவ்விடத்திலும் சிறு சிறு மாற்றங்களுடன் அசாத்திய பெண் கடவுளர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர். இது இயற்கைக்குப் புறம்பானது, ஏனென்றால் கடவுளர்களை உருவாக்கியது ஆண்களே. இரு பாலரும் சமமான உயிர்களே என்பதுதான் இயற்கையின் விதி. இந்தப் புரிதல்தான் பெண்களைச் சிறையில் இருந்து மீட்டு வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.

பெண்கள் ஏன் தேவதைகளாக, சூனியக்காரிகளாக கலகக்காரர்களாக மாறியுள்ளார்கள் என்று விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது. சில கட்டுரைகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. சில கட்டுரைகள் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கலங்க வைத்தாலும் பெருமை கொள்ள வைத்தாலும் இதுவரை பார்த்திராத கண்ணோட்டத்தில் வாசிப்பவரை, ’ ‘பெண் உரிமை’ குறித்து சிந்திக்க வைத்துவிடுகின்றன. சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தால் சிங்கம் தாக்கிவிடும் என்று அச்சம் கொண்ட பெண்ணின் கதை சுவாரசியமாகவும் நிதர்சனத்தைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரிக்கிறது.

இதுவரை நாம் படிக்காத பல விஷயங்களை, பார்க்காத கோணங்களில் சிந்திக்க வைக்கும் இந்த நூல், மிக சுவாரசியமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. யாரும் தவறவிடக் கூடாத மிகச் சிறந்த படைப்பு!

படைப்பாளர்:

எஸ். பானுலஷ்மி, பி.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்.சி. சைகோதெரபி & கவுன்சிலிங் படித்தவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சென்னையில் சிறிது காலம் சைகோதெரபிஸ்டாகவும் கவுன்சிலிங் கொடுப்பவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

Exit mobile version