மழை பெய்துகொண்டிருந்த இரவு. அனன்யா கைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதே எண்ணிலிருந்து மீண்டும் ஒரு செய்தி வந்தது.
“நீ பேசலனா… அது வெளியே போயிரும்.”
அவளின் இதயம் ஒரு கணம் நின்றது போலிருந்தது.
‘அது…’
அவள் மறக்க நினைத்த வாழ்க்கையின் ஒரு பகுதி.
அவள் ஒருகாலத்தில் காதலித்த தருணுடன் இருந்த தனிப்பட்ட தருணங்களின் வீடியோ. தருண் இப்போது அவளின் வாழ்க்கையில் இல்லை. ஆனால், அவன் நினைவு மட்டும் ஒவ்வொரு நாளும் அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.
ஓர் ஆண்டு பழகிய பிறகு, அவனை முழுமையாக நம்பும் அளவிற்கு அவனுடன் நெருக்கமானாள். அந்த நம்பிக்கைக்குப் பிறகுதான் அவனின் இன்னொரு முகம் அவளுக்குத் தெரிய வந்தது. அமைதியாக விலகிவிட்டாள். ஆனால் தருண் அவளை விடவில்லை. அடிக்கடி தொந்தரவு செய்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்ட ஆரம்பித்தான்.
அனன்யாவிற்கு மீண்டும் அவனுடன் பழக வேண்டும் என்கிற எண்ணமே அருவருப்பாக இருந்தது. ’இவ்வளவு கீழ்த்தரமான ஒருவனிடமா நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்? எப்படி இவ்வளவு நம்பினேன்?’ என்று தன்னைத்தானே குற்றம் சொல்லிக்கொண்டாள்.
ஒருகாலத்தில் பாதுகாப்பாகத் தோன்றிய ஒவ்வொரு நினைவும் இப்போது அவளுக்கு வெறுப்பாக மாறிவிட்டது.
ஆனால்…
அந்த வீடியோ வெளியே வந்துவிட்டால்?
அம்மா…
அப்பா…
தம்பி…
அவர்கள் முகத்தை எப்படிப் பார்ப்பது?
நம்பியது என் குற்றமா? ஒரு தவறான நம்பிக்கைக்காக என் வாழ்க்கையே முடிந்து போக வேண்டுமா? நான் வாழ என்ன தகுதி இருக்கிறது என்று எண்ணி எண்ணித் தனக்குள்ளேயே சிதைந்தாள்.
ஒரு வீடியோவால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே முடிந்து போகலாம் என்று இந்தச் சமூகம் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.
மூன்று நாட்களாக அவளுக்குத் தூக்கமே இல்லை. யாரிடமும் பேசவில்லை. கண்ணாடியில் தன்னையே பார்க்கக்கூட அவளால் முடியவில்லை.
நான் ஏன் அப்படி நம்பினேன்? நான் தவறானவளா? அந்த வீடியோ வெளியே வந்தால் நான் எப்படி வாழ்வேன்? அழுதுகொண்டே தன்னையே குற்றவாளியாக்கிக் கொண்டாள்.
அந்த மெசேஜ்க்குப் பதில் அனுப்பாத ஒவ்வொரு நொடியும், டிக்… டிக்… என்று வெடிக்கக் காத்திருக்கும் டைம்பாம் மீது அமர்ந்திருப்பது போல இருந்தது.
இரவெல்லாம் தூக்கமில்லை.
சிறிது நேரம் அயர்ந்து தூங்கினாலும், வீடியோ வெளியானது… குடும்பம் அவமானப்படுவது… போன்ற கனவுகள் வந்து அலறி எழுந்தாள்.
நான்காவது நாள் காலை…
அவளின் அம்மா அமைதியாக ஒரு காபி கோப்பையை அவள் அருகில் வைத்தார்.
என்ன ஆச்சு என்று கேட்கவில்லை.
அதற்குப் பதிலாக மெதுவாக, “நீ என்ன சிக்கலில் இருக்கேன்னு எனக்குத் தெரியாது… ஆனா, நீ தனியா இல்லை. என்ன நடந்திருந்தாலும் நீ எங்க பொண்ணுதான்” என்றார்.
அந்த ஒரு வாக்கியம்…
பல நாட்களாக அவளை இறுக்கிப் பிடித்திருந்த பாரத்தைக் கொஞ்சம் இறக்கி வைத்தது.
“அம்மா…” என்று கதறியபடியே அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அம்மா மெதுவாக அவள் தலையை வருடினார்.
“நீ நம்பியிருக்கலாம்… நீ அவசரப்பட்டிருக்கலாம்… ஆனால் அதனால் நீ தவறானவள் ஆகிட மாட்டே. நீ ஏன் அவமானப்படணும்? காதலிச்சதுக்கா? நம்பினதுக்கா? ஒருத்தனோட பாதுகாப்பாக இருக்கோம்னு நினைச்சதுக்கா? ஒரு பெண்ணோட நம்பிக்கையை அவனுக்குச் சாதகமா பயன்படுத்துறவன்தானே தவறு செய்தவன்? அப்படியிருக்க… நீ ஏன் அவமானப்பட வேண்டும்?” என்றார்.
அந்த அணைப்பில்… பல நாட்களுக்குப் பிறகு அனன்யா மீண்டும் பாதுகாப்பை உணர்ந்தாள். அன்று இரவு அவள் நிம்மதியாகத் தூங்கினாள்.
அந்த மாலை… முதல் முறையாக அவள் பயத்தைவிடக் கோபத்தை உணர்ந்தாள். பல நாட்களாக அவளை உயிரோடு புதைத்திருந்த பயம்… இப்போது அவளுக்கே சலிப்பாகிவிட்டது.
அந்த எண்ணை அவள் பிளாக் செய்யவில்லை.
ஒரே ஒரு செய்தி அனுப்பினாள்.
“நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கலாம். ஐ டோன்ட் கேர். “
அந்தச் செய்தியை அனுப்பும்போதும் அவள் கைகள் நடுங்கின. ஆனால் இந்த முறை… அது பயத்தால் வந்த நடுக்கமில்லை. இத்தனை நாட்களாக மனதைச் சங்கிலியால் கட்டியிருந்த பயம் உடைந்ததால் வந்த நடுக்கம். அவள் பயந்தது நடந்துவிட்டது.
வீடியோ வெளியானது.
அந்த ஒரு நொடி…
உலகமே நின்றது போல தோன்றியது.
அடுத்த சில வாரங்கள்…
முள் மேல் நடப்பதுபோலக் கொடுமையாக இருந்தது. சில உறவினர்கள் கிசுகிசுத்தார்கள். சிலர் பரிதாபமாகப் பார்த்தார்கள். சில நண்பர்கள் பேசத் தயங்கினர். சமூகம் வழக்கம்போல தீர்ப்பை வழங்க ஆரம்பித்தது.
“பெண்ணுங்கதான் அடக்கமா இருக்கணும்…” என்றார்கள்.
இந்த முறை… அவள் அமைதியாக ஒரே ஒரு கேள்வி கேட்டாள்.
“ஏன் எப்போதும் பெண்கள் மட்டும் அடக்கமாக இருக்க வேண்டும்?”
அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
முன்பு அவள் தன் உடலை வெட்கத்தோடு பார்த்தாள்.
இப்போது… அது தன்னுடைய உடல் என்று உரிமையோடு பார்த்தாள். தன் உடலை ஆயுதமாக மாற்றியது அவள் அல்ல. அதை ஒரு பெண்ணுக்கு எதிரான ஆயுதமாக மாற்றிய சமூகம் என்பதை கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
ஆம்…
பெண்களைத்தான் அனைவரும் கேள்வி கேட்பார்கள். ஆனால் ஒரு பெண் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால்… பலரிடமும் பதில் இருக்காது. முன்பு அவள் தன் கடந்த காலத்திலிருந்து ஓடினாள். இப்போது அதை மறைக்காமல் ஏற்றுக்கொண்டாள்.
ஒருநாள்…
கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்து அமைதியாக சிரித்தாள். ஏனென்றால்… அவளை உடைத்தது அந்த வீடியோ அல்ல.
“இனி நான் வாழ முடியாது” என்கிற நம்பிக்கையின்மையே.
அதைத் தாண்டி வந்த பிறகு… அவளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அன்று முதல்… அனன்யா தனது வாழ்க்கையை மறைக்கவில்லை. அதைத் தன் பெயரில் மீண்டும் எழுத ஆரம்பித்தாள். ஒரு வீடியோ அவளின் வாழ்க்கையை வரையறுக்கவில்லை.
ஒரு தவறான மனிதனும் இல்லை.
இனி…
அவளின் கதையை எழுதப்போவது…
அனன்யாதான்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.


