என்ன செய்தாலும் நாற்பதுக்கு மேல் உடல் எடை குறைவதே இல்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். உடல் எடை குறைவதை விடுங்கள். உடல் பருமன் அதிகமாகும் வாய்ப்பு இந்த வயதில்தான் அதிகம். ஏன் என்று பார்ப்போம்.
இந்தியாவில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மெனோபாஸ் நேரத்தில் உடல் பருமன் பற்றிய கணக்கெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளன. நம் மக்களின் மெனோபாஸ் விழிப்புணர்வு அவ்வளவுதான். 66 கோடி இந்தியப் பெண்கள். அதில் 15 கோடிப்பேர் நாற்பதைத் தாண்டியதாக வைத்துக்கொள்வோம். அதில் உடல் பருமன் மூன்றில் ஒரு பங்கு என்கிறார்கள். அப்படி எனில் குறைந்த பட்சம் ஐந்து கோடி என்றே வைப்போம். இவர்களை மெனோபாஸ் உடல் பருமன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும். இவ்வளவு பெரிய சிக்கல்களுக்கு நம்மிடைய தகவல்கள், ஆராய்ச்சிகள், கணக்கெடுப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஹெல்த் கேர் சிஸ்டம்தான் பெண்களைக் கவனித்துக்கொள்கிறது.
இதனால் நாம்தான் நம்மைக் கவனிக்க வேண்டும். நமக்கான விழிப்புணர்வை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இதே அமெரிக்காவில் தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. நாம் ஆரோக்கிய விஷயத்தில் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். இருப்பினும் அதற்கான சந்தை அதிகரித்து வருவது நம்பிக்கையைத் தருகிறது.
அமெரிக்காவில் பெண்கள் 40 – 65 வயதில் 65%, உடல் எடை கூடியும் அதில் 74% உடல் பருமன் சிக்கலிலும் அவதிப்படுகின்றனர். நாம் அதில் எந்த விதத்திலும் குறைவில்லை. நம் பெண்களை ஒரு கூட்டத்தில் கவனித்துப் பார்த்தாலே எளிதில் சொல்லிவிட முடியும்.
மெனோபாஸ் நேரத்தில் ஏன் உடல் பருமன் ஏற்படுகிறது?
மெனோபாஸ் நேரத்தில் வளர்சிதைமாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படுவதால் உடல் பருமன் ஏற்படும். கொழுப்பு அமிலங்கள் (Free fatty acid) வளர்சிதைமாற்றத்தைப் பாதிக்கிறது.
ஆன்ட்ரோஜன் அதிகமாவதாலும் ஈஸ்ட்ரோஜன் குறைவதாலும் வளர்சிந்தைமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு கூடும். மெனோபாஸ் வரை பெண்களுக்கு இதய நோய் வர வாய்ப்பு ஆண்களைவிடக் குறைவு.
அதைத் தவிர மெனோபாஸ் வளர்சிதைமாற்ற விகிதம், ஆற்றல் வளர்சிதைமாற்றம், உடல் பருமன் தொடர்பு மட்டும் இல்லாமல் ரத்தத்தில் சுற்றும் கொழுப்புகளிலும் சீரற்ற நிலையை உருவாக்கும். அதாவது லிப்போ ப்ரொடின், அபிலொப்ரொடின், HDL, LDL, TGL போன்றவற்றோடும் மெனோபாஸ் தொடர்புடையது.
முன்பு சொன்னதுபோல் மெனோபாஸ் என்பது கருமுட்டை உருவாவதை நிறுத்தக்கூடிய விஷயம். அது தவிர மேலை நாடுகளில் பெண்களின் சராசரி வயது 80 என வைத்தாலும் 50க்கும் பின் முப்பது ஆண்டுகள். அதாவது வாழ்வில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் மெனோபாஸ் ஆன பின்புதான் இருக்கிறது. எனவே மெனொபாஸுக்குப் பின் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியமானது.
கொழுப்பு வளர்சிதைமாற்றத்தில் மாற்றம் ஏற்படுவதால் அடிபோஸ் சதைகால் கரைவது கடினமாகிறது. சில ஆராய்ச்சிகளில் BMI மெனோபாஸ் முன்பும் பின்பும் அதே அளவு இருப்பினும் இடுப்பு அளவு அதிகமாகிறது. முக்கியமாக தொப்பை அதிகமாகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணம்.
ஓர் ஆராய்ச்சியில் மெனோபாஸுக்குப் பின்பு, பெண்களுக்கு வயிறு பகுதியில் இருக்கும் visceral abdominal fat அதிகமாகிறது. இது டெஸ்டிரோன் அதிகமாவதால்கூட இருக்கலாம். அது தவிர எண்டோஜெனொஸ் செக்ஸ் ஹார்மோன்களுக்கும் BMI க்கும் தொடர்பு உண்டு. கொழுப்பு சேர்வது அதிகமாவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஒரு பக்கம் நம் பரம்பரை ஜீன்கள் அதன் ஏற்பிகள் (receptors) உடல் பருமன் அதிகமாவது ஒரு காரணம் எனினும் இங்கு நாம் கவனிக்க வேண்டியது நம் செக்ஸ் ஹார்மோன்கள் அதாவது ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் இவை நம் வயிற்றுப் பகுதியில் சதை விழுவதற்கு முக்கியக் காரணிகள். இதில் ஈஸ்ட்ரோஜன் குறைவது ஆண்ட்ரோஜன் அதிகமாவது என்ற காரணத்தினால் நார்மல் பெண்களைவிட ஐந்து மடங்கு உடல் பருமன் சிக்கலுக்கு ஆளாக வாய்ப்பு மெனோபாஸ் பெண்களுக்கு அதிகம்.
ஓர் அமெரிக்க ஆராய்ச்சியில் மெனோபாஸ் பெண்களுக்கு வயிற்றில் அதிகளவு சதை போடும் வாய்ப்பு அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பலவிதமான கதிரியக்க முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அதிக அளவு உள்-வயிற்றுக் கொழுப்பு இருப்பதாகக் காட்டுகிறது. இது இருதய நோய் அபாயத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது.. Waist hip ratio என்பது கொழுப்பு திரட்சியின் மற்றொரு குறியீடாகும்.
அடிபோகைன்கள், இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோய் மற்றும் மெட்டபாலிசம் சின்ட்ரோம் நோய்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இது மாதவிடாய் நின்ற பிறகும் உடல் கொழுப்பு குவிவதற்குப் பங்களிக்கும். இப்படி எல்லாம் சொன்னால் குழப்பம் வரும். சிம்பிளாக அடி வயிற்றில் சதை போடும வாய்ப்பு அதிகம்.
சரி, வயது ஆகிவிட்டது. இதெல்லாம் கவனிக்க வேண்டுமா என்றால், இதைக் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆம் என்கின்றனர். உடல் பருமன் என்பது பெரும் நோய். அதுவும் 50க்கு மேல் என்றால் மிகக் கடினம். உடல் பருமன் பல நோய்களுக்கு வாயிற்படி. கதவைத் திறந்து வைத்து வெற்றிலை, பாக்கு வைத்து நோய்களை அழைக்கும்.
என்னென்ன நோய்களை உடல் பருமன் அழைத்து வரும்?
- உயர் ரத்த அழுத்த நோய்
- சர்க்கரை நோய்
- மூச்சுத்திணறல்
- மூட்டு வலி
- முதுகு வலி
- மாரடைப்பு
- மார்பகப் புற்றுநோய்
- பித்தப்பை கற்கள்
- குடலிறக்கம்
- உறக்கச் சுவாசத்தடை
- மலட்டுத்தன்மை
- டிப்ரஷன்
ஆன்கசைட்டி - சைக்கோ சொமாடிக் சிக்கல்கள்
(தொடரும்)
படைப்பாளர்:
கிர்த்திகா தரன்
இணையத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வருகிறார். இரண்டு டயட் புத்தகங்கள் உள்பட மூன்று புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பெண்ணியப் பார்வையில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘ஹெப்டா சென்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உணவும் மன நலமும் உட்பட்ட நியூட்ரிஷியன் சைக்காலஜி துறையில் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணியாக ‘அட்கனக்ட்’ என்ற அமைப்பும் ‘வுமன் எண்டர்பிரனர் இந்தியா’ என்ற அமைப்பையும் நண்பர்களுடன் நடத்தி வருகிறார். என் எல் பி பயின்று நான்கு வருடங்களாக zenlp trainer ஆக கார்பரேட் டிரைனிங் செய்கிறார். பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார்.