மீண்டும் அடுக்களை டூ ஐ.நா. – 2
“ம்மா… ம்மா… சீக்கிரம் வாங்க. உங்களுக்கு ஐ.நா.விலிருந்து மெயில் வந்திருக்கு” என்று மெயில் செக் பண்ணிக்கொண்டிருந்த மகள் பூஷிதா அலற, பொங்கல் தினச் சிறப்பு நிகழ்ச்சியாக 998வது முறையாக ஒளிபரப்பான ‘பஞ்ச தந்திரம்’ படத்தை ரசிச்சிட்டு இருந்தவள், கமலை விட்டுட்டு ஓடினேன். ஐ.நா.விலிருந்தே மெயிலா… கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை. திடீரென்று இப்படி வந்தால் பதற்றமாகுதில்லை? பிரிண்ட அவுட் எடுத்து கசங்காமல் மடியில் வைத்து, நிதானமாக மெயிலை வாசித்தேன். UN WOMEN என்கிற லெட்டர் பேடில் சிவில் சொசைட்டியின் தலைவர் லோப்பா பேனர்ஜியின் கையெழுத்தோடு வந்திருந்தது. இந்த UN WOMEN பற்றி போனமுறை ஐ.நா. போகும் போது கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.
பாலினச் சமத்துவம், பெண்களை வலிமையாக்கல் (பெண்களுக்கு அதிகாரமளித்தல்) ஆகிய இரு நோக்கங்களுக்காக இயங்கக்கூடிய ஐ.நா.வின் ஓர் உள் அமைப்பு தான் ‘ஐ.நா. பெண்கள்’. ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இரு வாரங்களுக்கு ஐ.நா. பெண்கள் அவை, ஐ.நா. தலைமையகத்தில் கூடுகிறது. அதில் கலந்துகொள்ளத்தான் இந்த அழைப்பு.
ஐ.நா. உருவான நேரத்திலிருந்தே, சமூகத்தில் அதள பாதாளத்தில் கிடந்த பெண்களைத் கைதூக்கி விடுவதற்காகப் பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும் சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படாமல், போட்ட திட்டங்களெல்லாம் பெட்டிக்குள் சுருண்டு போக, 2010 ஜனவரியில் நடந்த ஐ.நா.வின் பொது அவையில், பொதுச் செயலாளர் பான் கி மூன் பெண்களுக்கான ஒரு வலிமையான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் ( 63/311) கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக ஐ.நா.வின் உறுப்பு நாடுகளோடு ஆலோசித்து, சிவில் சொசைட்டியின் ஒப்புதலோடு 2010 ஜூலை 2ஆம் தேதி ஐ.நா. பெண்கள் (UN WOMEN) என்ற அமைப்பு உருவானது. ஏற்கெனவே பெண்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருந்த நான்கு அமைப்புகளைச் (DAW, INSTRAW, OSAGI, UNIFEM) சேர்த்து தான் ஐ.நா.வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைப்பாக UN WOMEN உருவானது. அமைப்பை தொடங்கி வைத்த அன்று பான் கி மூன், “உலகப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக இது போன்ற அமைப்பை உருவாக்க கைகோத்த உலக நாடுகளுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கண்ணீரோடு கைகூப்பி உருக, “உலகத்தில எந்த பொண்ணுக்கு எதிராக அநியாயம் நடந்தாலும் நாங்க இருக்கோம் கேக்குறதுக்கு” என்று உலக நாடுகள் எல்லாம் முஷ்டி மடக்கி உறுதிகூற, பின்னால் பேக்கிரவுண்ட் மியூசிக் ஓட டி.வி சீன் தான்! (பங்கேற்பாளர்கள் அழுதால், ஆங்கர்ஸ் ஆறுதல் சொல்வார்கள். அந்த ஆங்கர்ஸே அழுதால், யார் ஆறுதல் சொல்வது?)
சிலி நாட்டின் முன்னாள் தலைவர் மிச்செல் பேச்லெட் (Michelle Bachelet) தான் இந்த ஐ.நா. பெண்கள் அமைப்புக்கு முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐ.நா. பொதுச்செயலாளருக்குக் கீழ் இந்த அமைப்பு இயங்கினாலும், 2011இல் கனடாவைச் சேர்ந்த ஜான் ஹென்ராவும் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமிபுரியும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட எண்பது வருடங்களாக உலக நாடுகள் அனைத்துமே பாலினச் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சி எடுத்தும், இன்னும்கூடப் பெண்களுக்கான ‘விடியல்’ கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல்நீராகத் தான் தெரிகிறது என்றால், இது போன்ற உலகளாவிய முன்னெடுப்புகள் இல்லையென்றால் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
உலகக் கல்வி அமைப்பு தான் 2015 மார்ச் 9 முதல் 20 வரை ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் பெண்கள் அவையில் கலந்துகொள்ள என்னைத் தேர்வு செய்து முன்பதிவு செய்திருக்கிறதாகவும், அதை நான் உறுதி செய்ய வேண்டுமெனவும் அந்த மெயில் விடு தூது கூறியது. கூடவே பின்குறிப்பாக, ஐ.நா. தலைமையகத்துக்குள் எவையெல்லாம் கொண்டு வரக் கூடாது, என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று நீளமான ஒரு லிஸ்ட். லெட்டர்ஹெட்டில் அனுப்பின தேதி நவம்பர் 14, 2014. அப்படியென்றால் செப்டம்பரில் பொது அவையில் நான் கலந்துகொண்ட உடனே முடிவு செய்து, தேர்ந்தெடுத்துவிட்டனர்.
ஜனவரி 17 ஆகிவிட்டது. பிப்ரவரி ஒரு மாதத்துக்குள் தயாராக வேண்டும். அமெரிக்க விசா பத்து ஆண்டுகளுக்கு இருக்கிறது. அதனால் விசா பிரச்னை இந்த முறை இல்லை. ஆனால், துறை அனுமதி என்ற பெரிய மலையைக் கடக்க வேண்டுமே! அரசாங்கத்தின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி அவசர அவசரமாகத் தயார் செய்துவிட்டேன்.
விசா பிரச்னை இல்லாவிட்டாலும் இந்த முறை போலீஸ் ஸ்டேஷனில் நோ க்ரைம் சர்டிபிகேட் வாங்குவதற்கு பெரும்பாடாகிவிட்டது. “டெய்லி ஸ்டேஷனுக்குப் போனா குடும்ப கௌரவம் என்னாவறது?” என்று வீட்டுக்குள் பாலிடிக்ஸ் ஓட, “ரமாவுக்கு ஏதோ பிரச்னை, அவளை ஸ்டேஷன்ல பார்த்தேன்” என்று ஊர் முழுவதும் குற்றவாளி அளவுக்குப் புறணி பரவ, ஜென் நிலையில் கருமமே ரமாவாக நான் இருந்தேன்.
’நாளை வாங்க, நாளை வாங்க’ என்று இழுத்தடித்ததில் தினமும் கையெழுத்துப் போட வருகிற குற்றவாளிகள் எல்லாம் நமக்கு நண்பர்களாகிவிட்டனர்! “டீச்சர், நீங்க கையெழுத்துப் போட்டீங்களா?” என்று அக்கறையுடன் விசாரிப்பு வேறு! இறுதியில் நோ க்ரைம் சர்டிபிகேட் கைக்கு வந்தது.
க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு பணியில் இருக்கும் அரசு அலுவலர்களுக்கு இந்த நடைமுறை?
போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்தை முடித்ததும், டாக்டர் ராஜலட்சுமியிடம் கையெழுத்தை வாங்கிவிட்டேன். இனி வழக்கம் போல பேப்பர்ஸை மேசை மேசையாக நகர்த்தி, சென்னைக்குக் கொண்டு போக வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலகத்துக்குப் போனால் ஆபீசே காலியாக இருந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தனியார் பள்ளி இன்ஸ்பெக்ஷனுக்காக விருதுநகரில் பத்து நாள் கேம்ப். மாவட்ட கல்வி அலுவலர்களோ ப்ளஸ் டூ பப்ளிக் ப்ராடிகல் எக்ஸாம் டியூட்டி ரவுண்ட்ஸ் போயிருந்தனர். கடிதம் டைப் செய்து தர வேண்டிய கிளர்க் எல்லாம் வேற வேற பணியில் வெளியில் இருந்தனர். இவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தாலே வேலை முடிய மாசக்கணக்காகும். இதில் ஆளுக்கொரு திசையில் இருந்தா? சரி, சரி, இந்த ரிஸ்க் எல்லாம் நமக்கு ஸ்பாஞ்ச் கேக் சாப்பிடற மாதிரி என்று நினைத்து, பதினைந்து நாள் லீவு போட்டு, கந்தகபூமியின் ‘குளுகுளு’ வெயிலில் சாத்தூர், விருதுநகர் அருப்புக்கோட்டை, சிவகாசி என்று இரு சக்கர வாகனத்திலேயே சுத்தி சுத்தி வந்தேன். ஒருவழியாக வேலை முடிந்தது. இனி சென்னையில் அனுமதி வாங்கும் வேலையை, சங்கம் பார்த்துக்கொள்ளும். ஆம், தங்கம் செய்யாததைக்கூடச் சங்கம் செய்யும். That is the power of UNION.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!