நம் முன்னோர்கள் சொன்னது என்று எத்தனையோ விஷயங்களை நாம் அடி பிசகாமல் பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடித்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது திருமண பந்தத்தில் ஆணை விடப் பெண் இளையவளாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் இல்லை. ஆணாதிக்கத்தின் அடிப்படையில்தான் இத்தகைய நடைமுறையைப் பழக்கியிருக்கிறார்கள். ஏனெனில் ஆண் வயதான பின்னர் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, முகம் சுளிக்காது தன்னைக் கவனித்துக் கொள்ள, சம்பளம் எதுவும் கேட்காத ஒரு ஜீவன் வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இத்தகைய வழக்கத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஆண் வயதாக ஆக வலுவாகிறான் என்றும், பெண் வயது ஏறும் போது வலுவிழந்து விடுகிறாள் என்றும் ஒரு ‘சப்பைக்கட்டு’ கட்டி, அதனால்தான் இந்த வயது வித்தியாசம் என்றும் சொல்கிறார்கள். வலுவில்லாமல் பெண் இருந்தாலும் அவள் வலுவான(?) ஆணுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஆணுக்கு சேவை செய்யவே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை மறைமுகமாக உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
உடல் ரீதியான கலவிக்கு ஏதுவாகத்தான் இந்த வயது வித்தியாசம் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆணுக்கு அதிக வயது இருந்தால்தான் வயது குறைவான பெண்ணைப் பக்குவமாகக் கையாளுவான் என்று விளக்கம் வேறு. ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அடிப்படைக் காரணம் என்னவென்றால் பெண்ணுக்கு அதிக வயது இருந்தால் அந்த ஆணால் அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்கிற மூடநம்பிக்கையால்தான் இத்தகைய பத்தாம் பசலித்தனமான வழக்கங்கள் காலங்காலமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. கலாச்சாரம் என்கிற பெயரில் இத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துகள் மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டியே நமது சட்ட வரைவுகளும் எழுதப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், பார்சி திருணம் மற்றும் விவாகரத்து சட்டம், முஸ்லிம் திருமணச் சட்டம் என எல்லா சட்டங்களிலும் திருமணம் செய்துகொள்ள குறைந்தபட்சமாக ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்படுகிறது.
திருமண வயது பெண்ணுக்குக் குறைவாக இருந்தால்தான் மனதளவிலும், உடலளவிலும் பலவீனமான (?) அவளை ஆண் தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு இத்தகையதொரு வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். வயது சமமாக இருந்தால் எல்லாவற்றிலும் சமத்துவத்தை எதிர்பார்ப்பார்கள் என்பதுதான் ஆணுக்கு உறுத்தியிருக்கும். இதனால் பெண்களைக் கலாச்சாரம், பண்பாடு என்கிற பெயரில் பயமுறுத்தி, அவர்களின் சுய மரியாதையை இழக்க வைத்து, ஆளுமையின்றி சொன்னதைச் செய்யும் அடிமைகளாக மாற்ற இத்தகைய உத்தியைக் கடைபிடித்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாகக் கடைபிடித்து வருவதால் இதை அனைவரும் சரி என்று ஒப்புக் கொள்ள இயலாது. இந்தக் கருத்தை வலியுறுத்தவே வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு விடும் என்று ஆண்களைப் பயமுறுத்தி (?) வைத்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்தப் போலிச் சோதிடர்கள் வேறு ஜாதகத்தில் கட்டம், சதுரம், வட்டம் சரியில்லை என்று பெற்றோரைப் பீதியில் ஆழ்த்துகிறார்கள். கணவனைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று பெண்ணுக்கு இருக்கும் நிர்ப்பந்தம், நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கணவர் பராமரிக்க வேண்டும் என்று சிறிதும் ஆண்களுக்குப் போதிப்பதில்லை. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும் பூமியைப் போல, அவள் தன்னையும் தானே கவனித்துக் கொண்டு, கணவனையும் கவனித்துக் கொள்ள வற்புறுத்தப்படுகிறாள்.
கணவனுக்கு வயது குறைவாகவும், மனைவிக்கு வயது அதிகமாகவும் இருப்பதை மே – டிசம்பர் ரிலேஷன்ஷிப் என்று சொல்கிறார்கள். பெண் மிகவும் இளமையாக இருப்பதை மே என்கிற வார்த்தையும், ஆண் மிகவும் வயதானவராக இருப்பதை டிசம்பர் என்கிற வார்த்தையும் குறிக்கிறது. மே என்பது வசந்தத்தையும், இளமையை, புதிய தொடக்கத்தையும் உணர்த்துகிறது. டிசம்பர் என்பது குளிர்காலத்தையும், அதிக வயது, முதிர்ச்சி போன்றவற்றையும் குறிப்பிடுகிறது. இவ்வகை உறவு பொதுவாக இருபது முதல் முப்பது வரை உள்ள வயது வித்தியாசத்தைக் குறிக்கிறது. இந்த உறவு வெற்றி பெறுவது தனிப்பட்ட நபர்கள் அவர்களின் விருப்புநிலை, உறவில் வரும் சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
வயது அதிகமான கணவர், வயது குறைந்த மனைவி இவர்களுக்கிடையே இருக்கும் இயல்பான உறவு போலவே குறைந்த வயது கணவர், அதிக வயது மனைவியின் உறவு நிலையும் இருக்கும். மன மகிழ்ச்சி, உணர்வு ரீதியான பகிர்தல்கள், சந்தோஷமான உறவு போன்றவைதான் திருமண வாழ்வை நீடித்து வைத்திருக்கும் காரணிகள். அவரவர் உடலையும் , மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமே இது சாத்தியம். வேறு காரணங்கள் இல்லை. ஓர் அறுபது வயது ஆண், இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதை இயல்பாகப் பார்க்கும் நம் இந்தியச் சமூகம் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிடப் பத்து வயது குறைந்த நிக் ஜோன்ஸைத் திருமணம் செய்து கொண்டது அதிகம் விமர்சிக்கப்பட்டது. அருவருப்பான மீம்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். சமூகத்தின் மூளை எவ்வளவு துருப்பிடித்திருக்கிறது.
சாணக்ய நீதியின்படி, கணவன் மனைவி உறவு மிகவும் புனிதமானது. இந்தப் பிணைப்பைத் தக்கவைக்க, ஒருவர் மற்றவரின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மனைவி தன் கணவனின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. கணவன் மனைவிக்கிடையே அன்பு எப்போதும் இருக்க வேண்டும். எனவே, இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. நான் கேட்பது என்னவென்றால் இந்தப் புனிதமான (?) உறவில், இருவருக்குமிடையே பிணைப்பைத் தக்க வைத்துக் கொள்ள மனைவி மட்டுமேதான் கணவனின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டுமா? பொருளாதார ரீதியாகப் பெண்கள் முன்னேறி விடக் கூடாது என்றுதான் நிறைய ஆண்கள் பெண்களை வேலைக்குச் செல்லவோ, சொந்தத் தொழில் புரியவோ தடைபோடுகின்றனர். அப்படி இருக்கும்போது உழைக்க அனுமதிக்கப்படாத பெண்ணின் தேவைகளை அந்த ஆண் தானே நிறைவேற்ற வேண்டும்?. இதில் என்ன பெரிய தியாக உணர்வு வந்து விடப்போகிறது?. மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது எத்தனை கணவர்கள் அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர்?. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகமாக இருப்பதற்கு வயது வித்தியாசம் அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு என்ன காரணம்? வயது என்பது ஒருவர் மீதான அன்பையும் ஆசையையும் அதிகரித்து விடாது. அது நாம் நம் இணையிடம் நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்துதான் இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு தம்பதிக்கிடையே வயது வித்தியாசம் கிட்டத்தட்ட இருபது வருடங்கள். அவர்களிடையே புரிந்து கொள்ளலும், கருத்தொருமித்தலும் இல்லவே இல்லை. எந்நேரமும் வாக்குவாதமும், அடக்குமுறையும், சண்டை சச்சரவுகளுமாகவே அவர்களது திருமண வாழ்க்கை கழிந்தது. இன்னொரு தம்பதியரிடையே வயது வித்தியாசம் மிகவும் குறைவு. அதாவது இருவருக்கும் ஒன்றரை வருடங்கள்தான் வித்தியாசம். இவர்களுக்கும் இடையே சச்சரவுகளுக்குக் குறைச்சல் இல்லை. திருமண பந்தம் என்பது ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்துவது அல்ல. ஒருவருக்கு இன்னொருவர் தோழமையுடன் இன்பம், துன்பம், கனவு, உணர்வுகள், கண்ணீர், எதிர்காலம் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு செல்லும் ஓர் அழகான பயணம். ஆனால் இதை எத்தனை தம்பதியர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
திருமண உறவு நிலைக்க மன முதிர்ச்சிதான் முக்கியக் காரணம். வயது அதிகம் இருந்தும் முதிர்ச்சியில்லாத இணையரால் யாருக்குமே துன்பங்கள்தான் அதிகம். வயது என்பது வெறும் எண்கள்தான். ஒருவரை இன்னொருவர் நன்கு புரிந்து, ஒருவருக்கு இன்னொருவர் விட்டுக் கொடுத்து இணைந்து பயணிக்கும் வாழ்வில் வயதுப் பொருத்தத்தைவிட மனப் பொருத்தம்தான் மிக முக்கியமானது. காதலுக்குக் கண் மட்டும் இல்லை. வயதும் பொருட்டாக இருப்பதில்லை.
படைப்பாளர்:
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.