Site icon Her Stories

நோபல் ராணி!

போலந்தில் உள்ள வார்சாவில் ஆசிரியர்களாக இருந்த பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார் மரியா ஸ்லொடஸ்கா என்ற மேரி. அவருடைய அம்மாவுக்குக் காச நோய் என்பதால் தாயின் அன்பு சற்றுத் தூரத்தில் இருந்தே கிடைத்தது. கல்வி மட்டுமின்றி அம்மாவின் அன்பையும் சேர்த்துக் கொடுத்தார் அப்பா. பத்து வயதில் மேரியின் அம்மா இறந்து போனார். போலந்து அப்போது ரஷ்ய ஜார் மன்னரின் ஆட்சியில் கீழ் இருந்தது. ரஷ்ய மொழியைத்தான் பள்ளியில் கற்பிக்க வேண்டும் என்று சட்டம். தேசப்பற்று கொண்ட மேரியின் அப்பா குழந்தைகளுக்கு ரகசியமாக போலிஷ் மொழியையும் கற்பித்தார்; தேசப்பற்றையும் போதித்தார். போலந்து விடுதலைக்கு கல்வி மிக அவசியம் என்று உணர்ந்த மேரியும் சகோதரிகளும் ஏழை எளிய மக்களுக்கு போலிஷ் மொழியைக் கற்றுக்கொடுத்து, தேசப்பற்றை ஊட்டினர்.

சிறுமியாக மேரி படம்: விக்கிமீடியா காமன்ஸ்

15 வயதில் மேரி தங்கப் பதக்கத்துடன் பள்ளிக் கல்வியை முடித்தார். அப்போது பெண்கள் உயர்கல்வி கற்க போலந்தில் அனுமதி இல்லை. வெளிநாடுகளுக்குத்தான் செல்லவேண்டும். அந்த நேரத்தில் மேரியின் தந்தை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். நிலைமையை உணர்ந்த குழந்தைகள், அப்பாவுக்கு உதவ முன்வந்தார்கள். எல்லோரும் கிடைத்த வேலையைச் செய்து பணம் கொண்டு வந்தனர். ஆனால் உயர்கல்வி படிக்கும் அளவுக்கு அந்த வருமானம் இல்லை. 

அப்பா, சகோதரிகளுடன் மேரி படம்: விக்கிமீடியா காமன்ஸ்

மேரி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். “புரோன்யா, நீ பாரிஸில் 5 ஆண்டுகள் மருத்துவம் படி. நான் இங்கே வேலை செய்து பணம் அனுப்புகிறேன். பிறகு நீ வேலை செய்து, என்னைப் படிக்க வை’ என்றார். புரோன்யாவுக்கும் வேறு வழி தெரியவில்லை. தங்கையின் முடிவை ஏற்று, பாரிஸ் சென்றார். 

வசதியான வீட்டில் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தரும் வேலை மேரிக்குக் கிடைத்தது. அந்த வீட்டு மனிதர்கள் மேரியை ஒரு மனிதப் பிறவியாகக் கூட நடத்தவில்லை. படிப்பு என்ற லட்சியத்துக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார் மேரி. விரைவில் அவருக்கு வேறொரு வீட்டில் இதே வேலை கிடைத்தது. அங்கிருந்த இளைஞர் ஒருவருக்கு மேரியின் மீது காதல். மேரிக்கும் அவரைப் பிடித்திருந்தது. ஆனால் ஒரு வேலைக்காரியை மருமகளாக ஏற்கும் பக்குவம் அந்த இளைஞரின் பெற்றோருக்கு இல்லை. காதல் முறிந்தாலும் வருமானத்துக்காக அங்கே தொடர்ந்து வேலை செய்தார் மேரி. 

ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் பாரிஸுக்கு வருமாறு புரோன்யா கடிதம் எழுதியிருந்தார். மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் பாரிஸ் வந்தார் மேரி. புரோன்யா தன்னுடன் படித்த மருத்துவரை திருமணம் செய்திருந்தார். கல்லூரிக்கும் புரோன்யா வீட்டுக்கும் தூரம் அதிகம் என்பதால், கல்லூரி அருகில் குடிபோனார் மேரி. படிப்பு. படிப்பு. அதைத் தவிர அவருக்கு வேறு சிந்தனை இல்லை. சத்தான உணவில்லை. குளிரில் இருந்து தப்பிக்க போதுமான வசதிகள் இல்லை. ஒருநாள் சுயநினைவை இழந்தார் மேரி. புரோன்யா நல்ல உணவு கொடுத்து மேரியை மீட்டெடுத்தார். இயற்பியல், கணிதம் இரண்டிலும் முதுநிலைப் பட்டம் பெற்றார் மேரி. 

அக்கா புரோன்யாவுடன் மேரி படம்: விக்கிமீடியா காமன்ஸ்

அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேரிக்கு இன்னோர் ஆராய்ச்சியாளரான பியரி க்யூரியின் நட்பு கிடைத்தது. நல்ல நண்பர்கள் விரைவில் நல்ல துணைவர்களானார்கள். அன்பு, அறிவியல், ஆராய்ச்சி என்று திருமண வாழ்க்கை தித்திப்பாகக் கழிந்தது. இரண்டு ஆண்டுகளில் இருவரின் வாழ்க்கையை மேலும் அழகாக்க ஐரின் பிறந்தாள். திருமணமோ, குழந்தையோ மேரி-பியரின் ஆராய்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்துவிடவில்லை. வீட்டு வேலை, அறிவியல் ஆராய்ச்சி, குழந்தையைக் கவனித்தல் என்று சகலத்தையும்  இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.  

பியரி கியூரியுடன் ஆராய்ச்சிக்கூடத்தில் மேரி படம்: விக்கிமீடியா காமன்ஸ்

மேரி டாக்டர் பட்டம் பெற விரும்பினார். யுரேனிய சேர்மத்தில் உள்ள கதிரியக்கம் பற்றி ஆய்வு செய்யச் சொல்லி, தகவல்களை எடுத்துக் கொடுத்தார் பியரி. மேரி ஆய்வில் தீவிரமாக இறங்க, தான்  செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டார் பியரி. வசதிகள் இல்லாத அந்தச் சிறிய ஆய்வுக்கூடத்தில் இருவரும் சேர்ந்து கடினமாக உழைத்தார்கள். இறுதியில் பொலோனியம், ரேடியம் என்ற தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1903-ம் ஆண்டு ஹென்றி பெக்வாரலுடன் பியரிக்கும் மேரிக்கும் சேர்த்து இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

பியரி, மேரிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு படம்: விக்கிமீடியா காமன்ஸ்

நோபல் பரிசு வாங்கிவிட்டாலும் கூட மேரி-பியரியின் வாழ்க்கையில் பொருளாதாரம் கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருந்தது. ரேடியத்துக்கான காப்புரிமை பெற்றால், ஏராளமாகச் சம்பாதிக்கலாம் என்றார்கள் நண்பர்கள்.’மனித குலத்துக்கு ஒப்பற்ற மருந்தாகப் பயன்படக்கூடிய ரேடியத்துக்குக் காப்புரிமை பெற மாட்டோம்’ என்று இருவரும் சொல்லிவிட்டார்கள். ரேடியம் பற்றிய உண்மைகளை உலகம் முழுவதும் அனுப்பி வைத்தனர். மேரி-பியரியின் புகழ் பரவ ஆரம்பித்தது. இரண்டாவது மகள் ஈவ் பிறந்தாள். 

மகள் ஐரினுடன் பியரி, மேரி

சில ஆண்டுகளில் அந்தத் துயரம் நிகழ்ந்தது. சாலை விபத்தில் பியரி இறந்துபோனார். குடும்பம், ஆராய்ச்சி என்று அனைத்திலும் துணை நின்ற கணவரின் இழப்பு மேரியை நிலைகுலைய வைத்தது. ‘மேரி, நம் இருவரில் யார் இறந்தாலும், மற்றவர் ஆராய்ச்சியைத் தொடரவேண்டும்’ என்று பியரி சொன்னது மேரியின் நினைவுக்கு வந்தது. பியரியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதுதான், அற்புதமான மனிதருக்குத் தான் செலுத்தும் மரியாதை என்று உணர்ந்து, தன்னைத் தேற்றிக்கொண்டார் மேரி. 

பியரி வேலை செய்த சார்போன் பல்கலைக்கழகத்தில் மேரிக்கு வேலை கிடைத்தது. ஒரு பெண்ணை அங்கு வேலைக்குச் சேர்த்தது அதுவே முதல் முறை. பியரி விட்ட இடத்தில் இருந்து பாடத்தை நடத்த ஆரம்பித்த மேரியைப் பார்த்து, விஞ்ஞானிகளும் மேதைகளும் பிரமித்தனர்.

குழந்தைகளை வளர்த்தார். புத்தகங்கள் எழுதினார். பியரியின் ஆய்வுகளைத் தொகுத்து புத்தகங்களாக்கினார். ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.

வேதியியலுக்கான இரண்டாவது நோபல் பரிசு

1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மேரிக்கு வழங்கப்பட்டது. மேரிக்கு செல்வாக்குடன் செல்வமும் சேரத் தொடங்கியது. பியரியின் பெயரில் ஓர் ஆராய்ச்சிக் கூடம் அமைத்து, ஏழை மாணவர்களுக்கு உதவினார். மகள்களை அழைத்துக்கொண்டு பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மேரி

முதல் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு ரேடியம் சிகிச்சையளித்து, பல உயிர்களைக் காப்பாற்றினார். பிரான்ஸ் போர் நிதிக்கு தன்னிடமிருந்த பணம், பதக்கங்கள், விருதுகளை அளித்தார். அதில் அவர் பெற்ற நோபல் பதங்கங்களும் இருந்தன! அதைக் கண்டு அதிர்ந்தவர்களிடம், “விலை மதிப்பில்லாத மனித உயிர்கள்  மடிந்துகொண்டிருக்கும்போது, இந்தப் பதக்கங்களை வைத்து நான் என்ன செய்ய முடியும்’ என்றார்!

போர் முடிந்தது. மேரியின் தாய்நாடு  போலந்து விடுதலை பெற்றது. நோபல் பரிசை விட தாய் நாட்டு விடுதலையின்போது அதிக மகிழ்ச்சிகொண்டார் மேரி. 

தொடர்ந்து ரேடியம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அவர் கண்டுபிடித்த ரேடியத்தில் பாதிப்பாலேயே அவர் உடல் நலம் கெட்டது. 66 வயதில் தன்னுடைய லட்சியத்தையும் பியரியின் லட்சியத்தையும் நிறைவேற்றிய திருப்தியில் மேரியின் உயிர் பிரிந்தது. 

சமூக ஆர்வலர், சிறந்த குடிமகள், அன்பான மனைவி, பொறுப்பான அம்மா, தன்னிகரில்லா விஞ்ஞானி, சமூகத்தை முன்னேற்றியவர் என்று மேரியின் ஒவ்வொரு முகமும் வசீகரமானது. உத்வேகம் ஊட்டக்கூடியது.   

சால்வே மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே பெண் விஞ்ஞானி மேரி கியூரி


· 2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.

· நோபல் பரிசு வென்ற முதல் பெண், வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசுகளைப் பெற்றவர், பியரி, மேரி, ஐரின், ஐரினின் கணவர் உள்பட  ஒரு குடும்பத்தில் அதிக நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் என்ற பெருமை மேரியின் குடும்பத்துக்கு இருக்கிறது.

· 1911-ம் ஆண்டு நடைபெற்ற உலக விஞ்ஞானிகளின் சால்வே மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே பெண் விஞ்ஞானி மேரி. · போலந்தில் பிறந்து, பிரான்ஸ் நாட்டு மருமகளான மேரியை இரண்டு நாடுகளும் பெருமையில் பங்குபோட்டுக்கொள்கின்றன.   

படைப்பாளரின் மற்ற கட்டுரை:

நான் ஆன் ஃப்ராங்க்

சஹானா

எழுத்தாளர், பத்திரிகையாளர்.

Exit mobile version