Site icon Her Stories

மணிப்பூர் மகள்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

வெடித்து எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூரின் ஓலம் கேட்காத காதுகள், இன்று இந்தியாவில் இல்லை என்று நம்புகிறேன். வரலாற்று நிகழ்வுகளிலும் சரி, சமகால நிகழ்வுகளிலும் சரி, திரிபுகளை உருவாக்கி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, உணர்ச்சிவசப்படுத்தி, அரசியல் ஆதாயம் பெறுவது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. இன்றைய நாளில் மணிப்பூர் கலவரம் பற்றிய புரிதல் அவசியம்.

இந்திய ஒன்றியத்தில் மணிப்பூரின் பரப்பளவு 22,327 சதுர கிலோ மீட்டர் மட்டுமே. அதில் 90% நிலப்பரப்பு மலைக்காடுகள். 10% நிலப்பரப்பு சமவெளிப் பகுதியான நகர்ப்புறம்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூரில் 28,55,794 மக்கள் உள்ளனர். அதில் 57.2% மக்கள் விஷ்ணுவை மூலக்கடவுளாகக் கொண்ட வைணவ சமயத்தைச் சேர்ந்த மெய்தி இன மக்கள். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின்படி இந்துக்கள். மீதமுள்ள 42.8% மக்கள் மலைக்காடுகளில் வாழும் பழங்குடியினர். இவர்களில் நாகா மற்றும் குக்கி இனத்தவர்களும் அடங்குவர். குக்கி இன மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள்.

90% மலைக்காட்டுப் பகுதியில் குக்கி பழங்குடி இன மக்கள் வாழ்கிறார்கள். 10% நிலப்பரப்பான நகர்ப்புறங்களில் மெய்தி இன மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தச் சதவீத விகிதாசாரத்தை மேம்போக்காக செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. அதாவது 90% இடத்தை ஆக்கிரமித்துள்ள குக்கி மக்கள் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர் என்றும், 10% இடத்தில் வாழும் மெய்தி மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றும் செய்தித்தாள்கள் செய்திகளைப் பிரசுரிக்கின்றன.

அதன் விளைவாக 90% நிலத்தை ஆக்கிரமித்துள்ள குக்கி இன மக்கள், வசதி வாய்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற தவறான புரிதல் மக்களைச் சென்றடைகிறது.

10% நிலப்பரப்பில் வாழும் மெய்தி இனத்தவர்கள் படிப்பறிவு கொண்டவர்கள். பெரும்பாலும் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் முன்னிலையில் இருப்பவர்கள். இவர்கள் விவசாயிகளாகவோ ஜவுளி மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களாகவோ சமூகத்தில், குக்கி இன மக்களைவிட மேம்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.

90% காட்டுப் பகுதியில் இயற்கையோடு இயைந்து வாழும் குக்கி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் அந்த மலைக்காடுகளை நம்பியிருக்கிறது. அவர்களின் குடியிருப்பு குடிசைகள்தாம்! காலங்காலமாக கல்வியறிவும் அதிகாரமும் மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்.

இந்நிலையில் மெய்தி இன மக்கள் தங்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு வழங்கப்படுவதைப் போல், இட ஒதுக்கீடு தங்களுக்கும் வேண்டுமென்றனர். அதைக் குக்கி இனத்தவர் எதிர்க்கவே வெடித்தது கலவரம்.

வேடிக்கையாக இருக்கிறது. “கேவலம் இட ஒதுக்கீட்டில் படித்தவன்தானே நீ” என்று ஏளனம் செய்த ஆதிக்க சாதி மக்கள் இன்று, இட ஒதுக்கீட்டுக்காக அடித்துக்கொள்ளும் அவலம்.

கூட்டிக் கழித்து கணக்கு போட்டால், உயர்குடிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களின் மணிமுடியில் இன்னும் ஒரு மணிக்கல்கூட, இறங்கிவிடவில்லை. அதிகாரத்தின் பெரும்பாலான இடத்தை அவர்கள்தாம் அலங்கரிக்கின்றனர். என்றாலும் ஏன் இந்த இட ஒதுக்கீட்டுப் பேராசை?

நேற்று வரை மாடு மேய்க்க, கொம்பைப் பிடித்தவனின் மகனும் மகளும் இன்று சிலேட்டையும் குச்சியையும் பிடித்து விட்டதற்காகத்தான் நிகழ்கிறது, இந்த ரத்தம் குடிக்கும் மனித வேட்டை.

76 நாட்களாக நடந்து கொண்டிருக்கும் கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் கொலையுண்டிருக்கிறார்கள். பல தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

சாதி மதம் சாராத கட்சி என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு, தன்னுடைய இந்து மதத்தை மட்டுமே சார்ந்து இயங்கும் ‘பாரதிய ஜனதா கட்சி’ இந்திய ஒன்றியத்தின் மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் ஒருசேர ஆட்சி செய்வதாலோ என்னவோ இதுவரை இந்து மதத்தைச் சார்ந்த மெய்தி இனத்தவர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் கலவரத்தை ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இல்லை… இல்லை… அப்படி மேம்போக்காகச் சொல்லிவிட்டால் எப்படி?

76 நாட்களாக மணிப்பூரின் இணைய இணைப்பைத் துண்டித்திருக்கிறார்கள். இதுவே பெரிய நடவடிக்கை அல்லவா?

நேற்று கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மெய்தி இன ஆண்கள், இரண்டு குக்கி இனப்பெண்களை நிர்வாணமாக இழுத்து வரும் காட்சி வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. ஆண்களின் கூட்டத்துக்கு நடுவே, அவன் அப்பெண்ணின் முலைகளைப் பிடித்து இழுத்து வரும் காட்சியைக் காணொளியில் கண்டு குலை நடுங்கியது. காட்சி ஒளிபரப்பினூடே ஒருவன் அப்பெண்ணின் பிறப்புறுப்பில் கை வைக்கும் காட்சி… இதயம் நின்றிருக்கும் மனிதம் கொண்ட ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும்.

உன் தாயின் முலைகளில் சுரந்த உயிர்ப்பால் ஈரத்தை உணர்ந்து கொண்டாயா கேடுகெட்டவனே? உன் தாயின் கர்ப்ப வாசலில், விழுந்தபோது நுகர்ந்த ரத்த சகதியின் வாடை குமட்டவில்லையா? தணிந்ததா உன் ரத்த தாகம்? உன் சாதி வக்கிரம் மேன்மை அடைந்துவிட்டதா?

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பெண்களுக்கு என்னவாயிற்று என்கிற தகவலும், இந்தச் சம்பவம் அரங்கேறிய தேதி எது என்கிற தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

யுத்தத்தில் வென்றவன், தோற்றவனின் பெண்களைச் சூறையாடும் காட்டுமிராண்டித்தனத்தை நம் மண்ணில் இன்றும் அனுமதிப்பதா?

மனித இனம் பகுத்தறிவை எட்டிவிட்டது என்றும் நாகரிகம் அடைந்துவிட்டது என்றும் கர்வம் கொண்ட அனைவரும் தலைகுனிய வேண்டும்.

ரத்தச் சகதிக்குள் நிகழ்ந்து முடிந்துவிட்ட இந்த வன்புணர்வு சம்பவமும் எதிர்கால வரலாற்றிலிருந்து மறைக்கப்படலாம். இல்லை, மறைத்தேவிடுவார்கள்.

மறைத்துவிட்ட பிறகு, தப்பித் தவறி ஏதாவது ஓர் எழுத்தாளன் இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதிவிட்டாலோ, யாராவது ஒரு கலைஞன் இந்தச் சம்பவத்தைத் திரைப்படமாக்கிவிட்டாலோ, பெரும்பான்மையான மக்களின் மனம் புண்பட்டுவிடும் என்றும் உளமாற நம்புகிறேன்.

ஓர் இனத்தை அவமானப்படுத்த அந்த இனத்தின் பெண்களை அசிங்கப்படுத்தும் யுத்தியைப் போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியுமா? தோற்றுப் போனவனின் பொன்னையும் மணிகளையும் கொள்ளையடிப்பதைப் போல், பெண்களையும் சூறையாடும் இது என்ன மாதிரியான உளவியல்?

பாஞ்சாலியை ஐந்து பேருக்குப் பங்கு போட்டுக் கொடுத்து விட்டு, சீதையைச் சிதையில் ஏற்றிய இவர்களிடம் வேறு என்ன உளவியலை எதிர்பார்க்க முடியும்?

நிர்வாணமாக்குதலையும் வன்புணர்வு செய்தலையும் எந்த நாட்டின் அரசையலமைப்பு சாசனம் தண்டனையாக வரையறை செய்துள்ளது? அப்படியொரு சாசனம் இருக்குமெனில் அது மலத்திற்குச் சமம்.

காணொளி வெளியாகிவிட்டதால் சம்பவத்தை மறைக்க இயலவில்லை. இதோ, 76 நாட்களாக பேசாத பிரதமர், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணத்தில் பொழுதைக் கழித்தவர் வாய் திறந்துவிட்டார்.

“மணிப்பூரின் மகள்களுக்கு அநீதி இழைத்தவர்களை மன்னிக்க மாட்டோம்” என்றொரு அறிக்கை கொடுத்து விட்டார்.

போதாதா என்ன?

இணைய இணைப்பு இல்லாத 76 நாட்களில் மணிப்பூரில் என்ன நிகழ்ந்திருந்தால் யாருக்கென்ன?

இந்த காணொளி வெளியாகிவிட்டதால், இந்த வழக்கு மட்டும் நிச்சயமாக நீதிமன்றத்துக்குச் செல்லும். பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆனாலென்ன? வழக்கை நடத்தி நீதியைக் காப்பாற்றியே தீருவார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். பிறகு ஒரு நன்னாளில் குற்றவாளிகள், அவர்களின் நன்னடைத்தைக்காக விடுதலை செய்யப்படும் போது, இனிப்பும் வழங்குவார்கள்.

அம்மணமாக்கப்பட்ட பாரத மாதாக்களின் அலறல்களுக்கு நடுவே, அழுகி நாற்றமெடுக்கும் ஜனநாயகத்தின் ரத்தச் சகதி சேற்றுக்குள் மலரட்டும் தாமரை.

பி.கு: மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தவறினால், உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறது.

படைப்பாளர்:

சக்தி மீனா

பிரதிலிபி, வைகை தமிழ் ஆகிய இணையதளங்களில் நாவல் எழுதி வருகிறார்.

Exit mobile version