Site icon Her Stories

நான் எப்படி வந்தேன் அம்மா?

Elegant woman in a autumn park. Family near house. Mother sitting on a plaid with her little son.

குழந்தைகள் வளர வளர அவர்கள் கேட்கும் கேள்விகள் எண்ணிலடங்காதவை. அதுவும் அவர்களின் கேள்விகள் உடல் உறுப்புகள் பற்றிய புரிதலில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் புரிதல் 4 வயது குழந்தைகளிடமிருந்தே ஆரம்பமாகிறது!

பெற்றோர்கள் நினைப்பது 4 வயது குழந்தைக்கு என்ன தெரியும்? இதை வேற நாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அதுவும் இந்த வயசுல இது எல்லாம் தேவையில்லாதது. படிக்கும்போது பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார். இல்லையென்றால் காலப்போக்கில் அவர்களே தெரிந்துகொள்வார்கள். நமக்கு எல்லாம் யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இல்லை, இதைப் பற்றி நாம் அம்மா, அப்பாவிடம் கேட்டோமா என்ன என்கிற ஆழ்மனதின் கேள்விகள் வரிசையாக எனக்குள்ளும் பலமுறை வந்து சென்றதுண்டு.

எந்த வயதில் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்று ஒரு வரைமுறை இல்லை என்று நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் இந்தக் காலத்தில் இதற்கான அவசியமே இல்லை. கண்ணைத் திறந்து பார்த்தால் உலகத்தையே ஒரு நொடியில் காட்டி விடுகிறது இணையம். தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் மட்டுமே போதும். இணையமே குழந்தைகளின் விரல் நுனியைப் பிடித்துக் கொண்டு அது சம்பந்தமான அனைத்துத் தகவல்களுடனும் பயணிக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

இணையம் என்பது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அரிய கண்டுபிடிப்பாகவே இருந்தாலும், உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

பாலியல் கல்வி என்பது குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசும் முயற்சி எடுத்து, பள்ளிப் பாடப் புத்தகம் வரை சென்றிருப்பது சிறந்த முயற்சி. இருந்தாலும், பாலியல் கல்வி பெற்றோருக்கு வழங்குவது என்பது கூடுதல் சிறப்பாக அமையும். பள்ளிப் பாடப் புத்தகத்தில் பெயரளவில் இருப்பதைவிடப் பாலியல் கல்வி பற்றிய புரிதலை பெற்றோரின் மூலம் எடுத்துரைப்பது குழந்தைகளுக்கு நடைமுறையில் நல்ல புரிதலை ஏற்படுத்த முடியும்.

பாலியல் கல்வி பற்றிய புரிதலை வீட்டில் இருந்தே குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் எளிதாகக் கற்றுக் கொடுக்க முடியும். மதியும் செழியனும் விளையாடும் போது நான் அம்மா, நீ அப்பா என்று

பேசி சில நேரம் விளையாடுவார்கள். அப்பொழுது செழியன் என் வயிற்றில் பாப்பா இருக்கிறது என்பான். அதற்கேற்றார் போல ஒரு துணியை வயிற்றில் கட்டி பெரிதாக்கிக்கொள்வான். இந்த மாதிரி நிகழ்வுகள் கிட்டத்தட்ட நடக்காத வீடுகளே இருக்காது.

இரவு தூங்கும் நேரத்தில் இதைப் பற்றி உரையாடல்களை ஆரம்பிப்பது சிறந்தது. “நீங்க ரெண்டு பேரும் விளையாடும் போது அம்மா, அப்பா வச்சி விளையாடுனீங்க என்று ஆரம்பித்தால் மீதிக் கதையை அவர்களே முடிப்பார்கள். அந்த நேரத்தில் உங்களுடைய கருத்துகளை குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லாம்.குழந்தைகளைப் பெண்களால் மட்டுமே பெற்று எடுக்க முடியும். ஆண்களோட வயிற்றில் குழந்தைகள் பிறக்க முடியாது, ஏனென்றால்? பெண்களிடம் மட்டும்தான் ஒரு பை இருக்கும். அதன் பெயர் கருப்பை. இந்தப் பை ஆண்களுக்கு கிடையாது” என்று எளிதாகப் புரிய வைப்பேன்.

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போதே செழியன், “அம்மா, நான் உன் வயித்துல இருந்து எப்படி வெளிய வந்தேன்?” என்று கேட்டான். பெரும்பாலான பெற்றோர் உனக்கு வேற வேலை இல்லை, இதெல்லாம் நீ கேட்கக் கூடாது என்று சொல்லிவிடுவார்கள்.

இந்தக் கோபத்திற்கான காரணம் இது தப்பான விஷயம், இதை எதற்கு இவன் கேட்கிறான் என்று நினைக்கும் பெற்றோர் ஒருவகை. இதை எப்படிச் சொல்ல முடியும், இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய வயசா இது என்று நினைக்கும் பெற்றோர் இன்னொரு வகை. மற்றொன்று இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லி இவனுக்குப் புரிய வைப்பது என்கிற குழப்பத்துடன் இருக்கும் மற்றொரு வகை.

பெற்றோர் குழந்தைகளைச் சமாளிப்பது என்று ஆகிவிட்டால், அதற்கான சரியான பதிலைக் கொடுப்பதே சிறந்தது. அதை விட்டுவிட்டு, “நான் நீதான் வேணும்னு சாமி கிட்ட கேட்டேன். அந்தச் சாமி கொண்டு வந்து என்னோட கைல கொடுத்துடுச்சு” என்று தேவையில்லாத கதைகளைக் கதைப்பது ஏற்புடையதல்ல. பதிலைச் சரியாகவும் சுவாரசியமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும். “தம்பி, நீ என் வயிற்றில் இருக்கும்போது குட்டி குழந்தையா இருந்த. அம்மா சாப்பிட சாப்பிட நீ கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து உனக்கான உறுப்புகள் எல்லாம் வளர்ச்சி அடைய பத்து மாதங்களாச்சு. பிறகு இந்த உலகத்தைப் பார்க்க தயாராகி விட்டாய்! வயிற்றுக்குள் நீ இருக்கும் போது உன்னுடைய அசைவு என்னுடைய வயிற்றில் வெளிப்பகுதியின் மூலம் நான் பார்த்திருக்கிறேன். அம்மாவோட ரெண்டு கால்களுக்கு

இடையே உள்ள ஒரு பகுதியின் மூலம் நீ வெளியே வந்த, நீ வயித்துக்குள்ள இருக்கும்போது நீ வளர வளர அம்மாவோட கர்ப்பப்பையும் விரிவடைந்து பெரிதாகி இருந்தது அதனாலதான் அம்மா வயிறு பெரிசா இருந்துச்சு. நீ வெளியே வந்த உடனே கர்ப்பப்பை சுருங்கி பழையபடி ஆகிடுச்சு” என்று கூறலாம்.

குழந்தைகளுக்கு இதைக் கண்முன்னே காட்டுவதற்கு இணையத்தைப் பயன்படுத்தலாம். இணையத்தின் காட்சிகள் அவர்கள் மனதில் நல்ல புரிதலை ஏற்படுத்தும். குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் பதில்கள் சுவாரசியமானதாகவும் அதே நேரத்தில் சரியான பதிலாகவும் இருந்தால் குழந்தைகளுக்குப் பெற்றோர் மீது, ‘நம்ம அம்மா, அப்பா என்ன கேள்வி கேட்டாலும் நமக்கான பதில்களைத் தரத் தயாராக உள்ளனர்’என்பதை அறிந்து கொள்ளும். அதுமட்டுமில்லாமல் இந்த பண்பானது நாளடைவில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும்.

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.

Exit mobile version