சிறுநீரகச் செயலிழப்பு பற்றித் தெரிந்துகொள்ளுமுன் அந்த உறுப்பு பற்றியும் அது செய்யும் பணிகள் பற்றியும் சுருக்கமாகவேனும் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அது செயலிழக்கும் போது, நம் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
சிறுநீரகத்தின் முக்கியப் பணிகள்:
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் – உடலில் உப்பு, நீர் ஆகியவற்றின் அளவைச் சமநிலையில் வைத்து ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.
- எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
- இது ரத்தச் சிவப்பணுக்கள் உருவாக உதவும் ஹார்மோனான எரித்ரோப்பொயிட்டினை (Erythropoietin) உற்பத்தி செய்கிறது. எனவே சிறுநீரகம் செயலிழந்தால் ரத்தச்சோகை (Anemia) ஏற்படும்.
- தாது உப்புகள், நீர் ஆகியவற்றின் சமநிலையைப் பராமரிக்கிறது – ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், தண்ணீரும் சரியான அளவில் இருக்க உதவுகிறது.
- அமிலம் (acid) காரம் (alkaline) ஆகியவற்றின் சமநிலையைப் பேணுகிறது – அதிக அமிலம் சேர்ந்தால் அதை வெளியேற்றி உடலின் pH அளவைச் சீராக வைக்கிறது.
- நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது – யூரியா, கிரியாட்டினின் (Creatinine) போன்ற கழிவுப் பொருட்களை ரத்தத்திலிருந்து வடிகட்டிச் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. எனவே கிரியாட்டினின் அளவு சிறுநீரகச் செயல்பாட்டைக் காட்டும் மிக முக்கியமான குறியீடு. (கிரியாட்டினின் அளவு வயது, பாலினம், உடல் தசையளவு ஆகியவற்றைப் பொறுத்து மாறும்).
கிரியாட்டின் அளவு அதிகரிக்கத் தொடங்கினால், சிறுநீரகம் ரத்தத்தைச் சரியாக வடிகட்டவில்லை; சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்று நாம் யூகிக்கலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இதர காரணங்களாலும் இதன் அளவு அதிகரிக்கலாம். மருத்துவரிடம் சென்று சோதனை செய்வது அவசியம்.
- திரவத்தை வடிகட்டுகிறது – சிறுநீரகம் ஒரு நாளில் சுமார் 180 லிட்டர் திரவத்தை வடிகட்டுகிறது. அதில் பெரும்பாலான அளவு மீண்டும் உறிஞ்சப்பட்டு, சுமார் 1.5–2 லிட்டர் மட்டுமே சிறுநீராக வெளியேறுகிறது.
- சர்க்கரை, உப்பு கட்டுப்பாடு – சாதாரணமாக, வடிகட்டப்பட்ட சர்க்கரை மீண்டும் உடலில் உறிஞ்சப்படும். ஆனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் (எ.கா- நீரிழிவு), அது சிறுநீரில் வெளியேறும். அதேபோல், அதிக உப்பும் வெளியேறும்.
- மனித உடலில் நீர்ச்சத்து குறையும் போதும், உடற்பயிற்சியின் போதும், அதிக வியர்வை வெளியேறுவதால் உடலுக்குத் தேவையான நீர் வெளியேறாமல் ஒரு ஹார்மோன் தடுத்து நிறுத்துகிறது.
- பசியின்போது சக்தி சமநிலை – நீண்ட நேரம் உணவு இல்லாத சமயத்தில் சிறுநீரகம் குளுகோனியோஜெனெசிஸ் (Gluconeogenesis) என்கிற செயல்முறையின் மூலம் குறைந்த அளவு குளுக்கோஸ் தயாரிக்க உதவுகிறது.
அடேயப்பா! சிறுநீரகம் இத்தனை வேலைகளைச் செய்கிறதா என வியக்கிறீர்கள்தானே? 90 சதவீத சிறுநீரகம் பாதிப்படையும் வரையிலும்கூட, எவ்வித அறிகுறிகளோ பிரச்னைகளோ வெளியில் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு என்று ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?
2001ஆம் ஆண்டில் என் கணவருக்குக் கால் கட்டை விரல், அவ்வப்போது வீங்குவதும், பின் தானாகவே சரியாகப் போவதுமாயிருந்தது. “எங்கேயோ இடித்துக்கொண்டேன் போலிருக்கிறது; வீங்கிக்கொண்டு வலிக்கிறது” என்று சொல்லிவிட்டுத் தைலம் தடவுவார். பின்னால் வரப்போகிற பெரிய வியாதிக்கு அது முன் அறிகுறி என அப்போது எங்கள் யாருக்கும் தெரியாது. இதயம், சிறுநீரகம் இரண்டில் எதில் பிரச்சினையென்றாலும், பாதங்கள் வீங்கத் தொடங்கும் என்பது பின்னாளில் நான் தெரிந்து கொண்ட செய்தி.
இதை வாசிக்கும் அன்பர்கள் கால் கட்டை விரல் வீங்கினாலே, ஆபத்து எனப் பயப்பட வேண்டாம். காயம் ஏதுமன்றி அடிக்கடி கால் பாதங்கள் வீங்குவதும், தானாகவே சரியாவதுமாக இருந்தால், டாக்டரிடம் சென்று, உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.
மேலும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகியிருந்தால், சிறுநீரில் ரத்தமும் புரதமும் வெளியேறும். பரிசோதனையில் தொடர்ச்சியாக இவை வெளியாவது தெரிந்தால், மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது.
(தொடரும்)
படைப்பாளர்:
ஞா.கலையரசி
புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.


